கந்தபுராணம் பகுதி -23

தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன் இனி யாரையும் நம்பி பயனில்லை. நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச்சிறுவன் முருகனை ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம் செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள் லட்சக்கணக்கான படைகள் தயாராயின. சூரபத்மன் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். யுத்த தொடர்பான வாத்தியங்கள் எழுப்பிய சப்தம் விண்ணைப் பிளந்தது. ஆரவார ஓசைக் கிடையே சூரபத்மன் போர்களத்திற்கு சென்றான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. உலகையே காக்கும் பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது. பாறைகளையும் மரங்களையும் பிடுங்கி அசுரர்கள் மீது வீசி ஏராளமானோரை முருகனின் படையினர் கொன்றனர். சிங்கமுகனின் மகனான அதிசூரன் இதுகண்டு திகைத்தான். இருந்தாலும் மனம் தளராமல் முருகனின் படையை நோக்கி தேரில் விரைந்து சென்றான்.

பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவன் அவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். இப்படியாக இருவரும் கடுமையாக போரிட்டனர். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்துக்கொண்டான். தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து தங்கியது. அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான். தன்னிடமிருந்த வலிமைவாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரன் ஆச்சரியப்பட்டான். அவன் மட்டுமல்ல நாராயண அஸ்திரத்திற்கு மயங்காத உக்கிரனைப் பார்த்து தேவர்களும் ஆச்சரியமடைந்தனர். அங்கு நின்ற பிரம்மாவிடம் படைப்புக் கடவுளே நாராயண அஸ்திரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று. அது யாரையும் அழிக்காமல் விட்டதில்லை. அப்படியிருந்தும் உக்கிரன் எப்படி தப்பித்தான் என கேட்டனர். அதற்கு பிரம்மா யார் ஒருவன் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மனதார வணங்குகிறானோ அவனை எத்தகைய சக்தி உள்ளவர்களாலும் வதைக்க முடியாது. அதன்படியே இவன் தப்பித்தான். இதைத்தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை என்றார்.

இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும் அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன் பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன் அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர். தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டு வைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான். அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான் வீரபாகு.

அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான். இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர். வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவன் இறங்கிய உடனேயே அசுரர்கள் ஆரவாரம் செய்தனர். ஒட்டுமொத்த அசுர வம்சத்துக்கே தலைவனான சூரபத்மன் களத்தில் இறங்கியதால் ஆரவாரத்துடன் முருகனின் படையினர் மீது அசுரர்கள் பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். தன் ஒரு வில்லில் இருந்து லட்சம் பாணங்களை எய்தான். ரத்னகாளி என்ற சக்தியின் வியர்வையிலிருந்து அந்த பாணங்கள் செய்யப்பட்டவை. பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கின. அவர்கள் மயக்கமடைந்து விழுந்தார்கள். இதற்கெல்லாம் கலங்காத நவவீரர்களில் ஒருவரான வீரமார்த்தாண்டன் சூரபத்மன் மீது ஏராளமான பாணங்களை அடித்தான். சூரபத்மன் அவற்றை ஒற்றைக்கையால் நொறுக்கி தள்ளிவிட்டான். மற்றொரு நவவீரனான வீரராட்சஷன் பத்மாசுரன் மீது அம்புகளை எய்தான். அவனுடைய காலைப்பிடித்து தூக்கிய சூரன் விண்ணில் தூக்கி எறிந்தான். அவன் மேலே சென்று வானத்தின் சுவர் வரையில் சென்று முட்டி அதே வேகத்தில் கீழே விழுந்து மயக்கமடைந்தான். வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர். இந்நேரத்தில் வீரபாகு கலங்காத உள்ளத்துடன் சூரபத்மன் முன்னால் வந்து நின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.