வசிஷ்டர் விஸ்வாமித்திரர் செல்வதை தடுத்து நிறுத்தி தசரதருக்கு அறிவுறை கூற ஆரம்பித்தார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர் பெற்றவர். வாக்கு கொடுத்து விட்டு அதனை மீறுதல் கூடாது. கொடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால் இது வரைக்கும் தாங்கள் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும். விஸ்வாமித்திரர் பற்றி தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். விஸ்வாமித்திரர் அரசராக இருந்த பொழுது ஐநூறு அஸ்திரங்களை பற்றி முழுமையாக தெரிந்தவர். பரமேஸ்வரனை தவம் செய்து பல அஸ்திரங்களை பெற்றிருக்கிறார். தனக்கு தெரிந்த அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார். தனது யாகத்தை தானே காக்கும் திறமை உள்ளவர் விஸ்வாமித்திரர் ஆனாலும் ராமனை தனது யாகத்துக்கு பணிவிடை செய்ய கேட்கிறார். இதன் வழியாக அரசகுமாரனாக இருக்கும் ராமனுக்கு வாழ்க்கை பயிற்சியை கொடுக்க அவர் முடிவெடுத்திருக்கின்றார். விஷ்வாமித்ரரின் பாதுகாப்பில் இருக்கும் போது ராமனுக்கு ஒரு ஆபத்தும் இல்லை தாங்கள் கவலை கொள்ளவேண்டாம் ராமனை அனுப்பி வையுங்கள் என்று எடுத்து கூறினார்.
வசிஷ்டர் கூறியவுடன் தசரதர் மனம் தெளிந்து ராமனையும் லக்ஷ்மனையும் அழைத்துவர கட்டளையிட்டார். நடந்ததை அறிந்த கௌசலை ராமனையும் லட்சுமனனையும் அழைத்து வந்தாள். ராமனுக்கு புதிதாக வந்த கடமையை தசரதர் எடுத்து விளக்கினார். ராமன் தத்தையின் ஆணையை தலைவணங்கி ஏற்றுக்கொண்டான். தசரதர் ராமர் லட்சுமனனின் கைகளை பிடித்து ராமன் லட்சுமனன் இருவரும் இணைபிரியாதவர்கள். இவர்களை பிள்ளைகளாக பெறுவதற்கு பல ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்து பெற்ற குழந்தைகள் இவர்கள். என் உயிராக இருக்கும் இவர்களை தங்களிடம் ஒப்படைக்கின்றேன். இவர்களை பாதுகாத்து தங்கள் யாகம் முடிந்ததும் என்னிடம் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தழுதழுத்த குரலில் கூறி இரு மகன்களையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார். அப்போது சங்க வாத்தியம் முழங்கியது. வானத்தில் இருந்து புஷ்பமாரி பொழிந்தது. விஸ்வாமித்ரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ராமர் லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்ரரை வணங்கி அவரை பின் தொடர்ந்தார்கள்.
ராமன் எக்காரணத்திற்காக மண்ணுலகிற்கு வந்தானோ அக்காரியத்தை நிறைவேற்ற நல்ல பயிற்சியை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விஸ்வாமித்ரருக்கு இருந்தது. தான் பெற்ற ஞானம் மற்றும் அரிய பெரிய அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராமனை அழைத்து வந்தார். முதல் நாள் இரவை சராயு நதிக்கரையில் கழித்தனர். அப்போது இருவருக்கும் பலம் மற்றும் அதிபலம் என்னும் இரண்டு மந்திரங்களை விஸ்வாமித்திரர் உபதேசித்தார். இந்த மந்திரங்களை ஜபம் செய்வதின் பயனாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பு இருக்காது. பசியையும் தண்ணீர் தாகத்தையும் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். தூங்கும் போது யாரும் தாக்க முடியாது. விஸ்வாமித்ரரிடம் இருந்து இருவரும் கற்ற முதல் உபதேசம் இதுவாகும்.