கௌதம மகரிஷி அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் கிளம்பி மிதிலையை அடைந்தார்கள். மிதிலையில் ஜனகரின் மாளிகை வழியே சென்ற போது சீதை மாளிகையின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள். ராமர் செல்வதை சீதையும் சீதை மாடத்தில் இருப்பதை ராமரும் பார்த்துக்கொண்டார்கள். பார்த்த உடனே சீதை ராமரின் தோளகை கண்டு ஒவியம் போல் திகைத்து நின்றாள். ராமரும் சீதையின் அழகில் மயங்கினார். பார்த்த உடனே ஒருவரை ஒருவர் மனதால் கவரப்பட்டு ராமரின் உள்ளத்தில் சீதையும் சீதையின் உள்ளத்தில் ராமரும் புகுந்தனர். விஸ்வாமித்ரருடன் மாளிகையை கடந்த ராமர் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையைக இருக்கிறதே. இவரை மணந்து இவர் தூணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டாள் சீதை.
மிதிலையில் யாகம் செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. விஸ்வாமித்ரரும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தன் நடத்தும் வேள்வியின் தலைமை புரோகிதரான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தனது ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம் ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்துவிட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போலவே பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே இது வரை குற்றம் செய்யத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.
ஜனக மகாராஜாவின் தலைமை புரோகிதரான சதாநந்தர் வேள்விக்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை பற்றியும் அவரது பண்புகளும் அவரின் வரலாற்றையும் ராமரிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை இருந்தது. எனவே விஸ்வாமித்ரரின் வரலாற்றை ராமரிடம் எடுத்துக்கூற ஆரம்பித்தார் சதாநந்தர்.