பிரம்ம புராணத்தில் ஆபஸ்தம்பரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் சிரார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களை மட்டுமே அவர் அழைப்பது வழக்கம். வேறு யாருக்கும் உணவு கொடுக்க மாட்டார். ஒரு சமயம் சிரார்த்தம் செய்யும் போது உணவு கொடுக்க அவர் எண்ணியபடி ஒரு அந்தணர் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் அந்தணர்களை ஆவாஹனம் செய்து சிரார்த்தம் செய்ய எண்ணினார். கூர்ச்சம் என்பது தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் ஒரு பொருள். தர்ப்பைப் புல்லால் ஆன இந்த பொருளை அந்தணராக பாவித்து அந்த பொருள் மீது உணவை வைத்து தனது சிரார்த்ததை முடிக்க அவர் எண்ணினார். அவரது இந்த எண்ணத்தை மகரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். இந்த பிராமணர் வேதங்களைக் கற்று மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும் அதன் உட்பொருளை உணரவில்லையே என்று அவருக்கு உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். தானே ஒரு அந்தணர் வேடம் பூண்டு பிராமணர் வீட்டுக்கு வந்தார்.
அந்தணரை அமர வைத்து தானே பரிமாறினார் பிராமணர். வந்தவர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று எண்ணி பிராமணரும் கேட்கக் கேட்க உணவை இலையில் வைத்துக் கொண்டே இருந்தார். உணவை வைத்த நொடியில் காலி செய்தார் துறவி. பிராமணரின் மனதில் முதலில் இருந்த கணிவு மறைந்து இப்போது ஏளனம் குடிகொண்டது. அதைத் தன் செயல்களில் காட்டினார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாத துறவி இன்னும் சாப்பாடு போடு இன்னும் போடு என்று கேட்டார். அபரிதமாக சாப்பிட்டும் திருப்தி அடையாதவரைப் பார்த்த பிராமணர் மனதில் இருந்த ஏளனம் மறைந்து தொல்லை கொடுக்கிறாரே என்று வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தார். சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன. இன்னும் வேண்டும் கொண்டு வா என்று துறவி கேட்கவே பிராமணரின் மனதில் இருந்த வெறுப்பு மறைந்து கோபம் தலை தூக்கியது. காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து இலையின் மேல் கவிழ்த்து திருப்தி ஆயிற்றா என்று கேட்டார்.
உணவை தானம் செய்கின்றவர் எப்போதும் சாப்பிட்டு முடித்ததும் திருப்தியா என்று கேட்கவேண்டும். சாப்பிட்டவர் திருப்தி என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் சிரார்த்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று பொருள். துறவி இப்போது ந என்ற ஒரு எழுத்தை சொன்னார். ந என்றால் பூர்ணமாகவில்லை என்று பொருள். பிராமணருக்கு கோபம் தலைக்கேறியது. நீங்கள் கேட்கக் கேட்க உணவை கொண்டுவந்து கொட்டினேனே. மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு பூர்ணமாகவில்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி நான் செய்த சிரார்த்தத்தையும் கெடுத்து விட்டாரே என்று கோபத்துடன் கத்தினார். கோபத்தில் துறவிக்கு சாபம் கொடுக்க கையில் நீரை எடுத்து மந்திரத்தை சொன்ன பிராமணர் வந்தவரின் தலையில் அந்த தண்ணீரை எறிந்தார். வந்தவர் தன் கையை அசைக்க பிராமணர் மந்தரித்து எறிந்த நீரானது அந்தரத்தில் அப்படியே நின்றது. பிராமணர் இதைப் பார்த்து பிரமித்து நின்றார். தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்து சுவாமி நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என்று பயத்தோடு கேட்டார் பிராமணர்.
நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வைகளாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். ஒவ்வொரு முறை நீ சிரார்த்தம் செய்யும் போதும் அந்தணர்களுக்கு மட்டுமே உணவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அது தவறு. உணவு கொடுக்க நினைக்கும் போது யாராக இருந்தாலும் பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து உணவு கொடுப்பதே சிறப்பு. சிரார்த்தத்திற்கு சாப்பிட வருபவர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை சாப்பிட வருபவர்களிடன் வைத்து இறைவன் உன்னிடம் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொள்கிறாய். உனக்குப் புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். சிரார்த்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்ய வேண்டும் அப்போதுதான் சிரார்த்தம் முழுமையாக பித்ருக்களுக்கும் சென்று சேரும். உனக்கும் பலனைத் தரும். அதனை விட்டு கடமைக்காக செய்தால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக உனக்கு பாவம் வந்து சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொள் என்றார். அதற்கு பிராமணர் சுவாமி என் தவறை நான் உணர்ந்து கொண்டேன் மன்னியுங்கள். இனி இம்மாதிரி தவறுகளைச் செய்யமாட்டேன். இப்போது நான் செய்த சிரார்த்தம் பூர்ணமாகவில்லையே அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு முனிவர் நான் ‘ந’ என்று மட்டும்தான் கூறினேன். அப்படி என்றால் சிரார்த்தம் பூர்ணமாகாமல் நிற்கிறது என்று மட்டுமே பொருள். பூர்ணமாகாமல் போய் விட்டது என்று பொருள் அல்ல. ஆகவே அடுத்து உணவிற்கு வருபவர்களை உனது முதாதையராக கருதி சேவை செய்து உணவு கொடு. அப்போது உனது சிரார்த்தம் பூரணமாகும் என்று சொல்லி அங்கிருந்து சென்றார். முனிவர் சொன்னபடியே உடனடியாக உணவு தயாரித்து வந்தவர்களுக்கு சிரத்தையும் உணவு பரிமாறி தனது சிரார்த்தத்தை முடித்தார் பிராமணர்.
நீரை அந்தரத்தில் நிறுத்தியதால் அதிதியாக வந்த முனிவர் ஆபஸ்தம்பர் என்று அழைக்கப்பட்டார். ஆப என்றால் நீர். நீரை அந்தரத்தில் நிற்க வைத்ததினால் அவர் ஆப ஸ்தம்பர் என்ற பெயரைப் பெற்றார். இவர் எழுதிய நூலுக்கு ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் என்று பெயர். இது கிருஷ்ண யசூர் வேதத்தின் தைத்திரியக் கிளையில் அமைந்த மூன்று தர்மசாத்திர நூல்களில் ஒன்றாகும். ஆபஸ்தம்ப தர்மசூத்திர நூலில் ஒரு பகுதியே கௌதம தர்ம சூத்திரம் ஆகும். இந்த நூல் ஆபஸ்தம்ப சிரௌதசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப கிரகாயசூத்திரம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது. தர்ம சாத்திர நூல்களில் ஆபஸ்தம்ப சூத்திரம் தற்போதும் இந்துக்களின் சமயம் மற்றும் திருமணச் சடங்குகளில் நடைமுறையில் உள்ளது.
