சுலோகம் -79

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #32

அர்ஜூனா தர்ம யுத்தம் என்ற இந்த அபூர்வமான நிகழ்வு உனக்கு தானகவே அமைந்துள்ளது. இது போன்ற தர்ம யுத்தங்கள் மோட்சத்தின் கதவுகளை திறக்கவல்லவை ஆகும். இத்தகைய தர்ம யுத்தத்தை பாக்கியமுடைய ஒரு சில க்ஷத்திரர்கள் மட்டுமே பெற முடியும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பேராசைக்காகவோ சுய நலத்திற்காகவோ அல்லது நாட்டையும் அதிலுள்ள சுகங்களையும் அடைந்து புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை பாண்டவர்களாகிய நீங்கள் செய்யவில்லை. தர்மம் நிலை பெற வேண்டும் என்று அதர்மத்திற்கு எதிரான யுத்தம் இது. இந்த யுத்தம் நீ தேடிச் சென்றோ நீ விரும்பியோ வரவில்லை. தானாகவே உனக்கு அமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தில் உன்னைப் போலவே பேராசைக்காகவும் சுய நலத்திற்காகவும் இல்லாமல் தர்மத்திற்காக யுத்தம் செய்து இறந்து போகும் வீரர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய தர்ம யுத்தங்கள் பாக்கியமுடைய க்ஷத்திரர்களுக்கு மட்டுமே அமையும். உனக்கு அதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆகையால் யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

குப்தர் கால விஷ்ணு கோவில் மற்றும் வராக மூர்த்தி

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தில் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஏரான் என்ற இடம். இங்கு விஷ்ணு கோவில் வராக மூர்த்தியுடன் கோவில் உள்ளது. தற்போது சிதிலப்பட்டு காணப்படும் இக்கோவில் கிபி 510 ம் நூற்றாண்டை சேர்ந்த்தாக இந்த கோவில் கருதப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குப்தப் பேரரசின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது. ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மௌரியர்கள் சுங்கர்கள் சாதவாகனர்கள் சாகர்கள் நாகர்கள் குப்தர்கள் ஹூணர்கள் காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோவில் சிதிலமடைந்து விஷ்ணுவின் சிலை உள்ளது. எதிரில் வராக மூர்த்தி சிலை திறந்த வெளியில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சிலை சுமார் 14 அடி நீளம் 5 அடி அகலம் மற்றும் 11 அடி உயரம் கொண்டது. இந்த சிலை இந்தியாவின் மிகப்பெரிய வராக சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சிலை 1185 முனிவர்களின் தலை முதல் கால் வரை முழுமையான உருவங்களை பன்னிரண்டு வரிசைகளில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வரிசை உருவங்கள் யூ வடிவில் வராகத்தின் உடலில் செதுக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு வரிசைகளிலும் இரண்டு ஆயுதம் ஏந்திய முனிவர்களின் உருவங்கள் உள்ளன. மற்றவர்கள் ஒரு கையில் தண்ணீர் பாத்திரத்தையும் மற்றொரு கையில் அபய முத்திரை அல்லது விஸ்மயா முத்திரையுடன் உள்ளார்கள். வராக மூர்த்தியின் வலது தந்தத்தில் பூதேவியின் உருவம் உள்ளது. வராக மூர்த்தியின் முகத்தில் சரஸ்வதி சமபங்க தோரணையில் இடுப்பில் கைகளை ஊன்றியபடி நிற்கிறாள். காதுகளில் வித்யாதரர்கள் உள்ளார்கள். வராக மூர்த்தியின் கழுத்தில் இருபத்தெட்டு வட்டங்கள் கொண்ட மாலை உள்ளது. இருபத்தேழு வட்டங்களுக்குள் ஒரு ஆண் மற்றும் பெண் உருவம் உள்ளது. ஒரு வட்டத்தில் மட்டும் தேள் உருவம் உள்ளது. தொண்டை மற்றும் மார்புப் பகுதியில் நான்கு வரிசையில் ஆண் உருவங்கள் உள்ளது. மொத்தம் தொண்ணூற்றாறு வகையான உருவங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது வரிசைக்கு இடையில் மேலிருந்து நடுவில் தாமரையின் மீது விஷ்ணு நிற்கும் உருவம் உள்ளது. அவர் இரண்டு கைகளுடன் இருந்திருக்கிறார். தற்போது இரண்டு கைகளும் சிதிலமடைந்திருக்கிறது. மார்பின் மூன்றாவது வரிசையில் ஏழு கோள்களைக் குறிக்கும் ஏழு ஆண் உருவங்களும் இடதுபுறம் 2 கோள்களை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் தாமரைகளை கையில் ஏந்தியவாறும் மீதமுள்ளவர்கள் தண்ணீர் பாத்திரத்தை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கின்றனர்.

வராகத்தின் தோள்களில் துருத்திக் கொண்டு இருப்பது போன்ற ஒரு கட்டை உள்ளது. அதன் நான்கு பக்கங்களிலும் மேற்கில் வாசுதேவரும் தெற்கில் சிவனும் வடக்கே பிரம்மாவும் கிழக்கில் விஷ்ணுவும் உள்ளார். வராகத்தின் கால்கள் மற்றும் வால் பகுதியிலும் முன்கால்களில் ஆறு வரிசைகளிலும் பின்னங்கால்களில் மூன்று வரிசைகளிலும் முனிவர்கள் வரிசைகளாக உள்ளார்கள். வராகத்தின் கால்களுக்கு இடையில் பாம்புகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செதுக்கப்பட்டுள்ள கடலின் சித்தரிப்பு உள்ளது. வராகத்தின் கழுத்தின் கீழ் சமஸ்கிருதத்தின் 8 வரிகளில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வராக மூர்த்தி அவதாரம் புனிதர்கள் மற்றும் அறிஞர்களைப் பாதுகாப்பதைக் குறிக்கும் படி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

சுலோகம் -78

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #31

அவ்வாறே தன்னுடைய சுயதர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில் க்ஷத்திரியன் ஒருவனுக்கு தர்மத்தின் வழி நடக்கின்ற போரைக் காட்டிலும் வேறு ஒரு நன்மை தரும் கடமை கிடையாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இப்போது தொடங்கியுள்ள இந்த யுத்தத்தில் உயிர்களை கொல்வது என்பது தவிர்க்க இயலாது. இவ்வாறு கொல்வது அந்த உயிர்களை வதை செய்வது போன்றதாகும் என்று எண்ணி உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நீ விடக்கூடாது. இறப்பவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. ஏனெனில் அவர்கள் இந்த உடலை விட்டாலும் வேறு உடலுக்குள் சென்று விடுவார்கள். உனது வாழ்வில் யுத்த தர்மம் என்பது க்ஷத்திரியனுக்குரிய தர்மமாகும். யுத்த தர்மத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நீ வருந்துவது உனக்கு தகாது. க்ஷத்திரியனுக்கு தர்மத்திற்காக நடைபெறும் யுத்தம் என்பது இயற்கையாகும். இந்த யுத்தங்கள் தர்மத்தை நிலைநாட்டவும் மக்களை காக்கவும் ஆகும். அதன் விளைவாக நாட்டை கைப்பற்றுதல் நிகழ்கிறது. இது தர்மமான செயலே ஆகும். க்ஷத்திரியன் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தர்ம யுத்தத்தை விட வேறு எதுவும் நன்மை தராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 145

கேள்வி: ருத்ராட்ச மாலையை கையாளும் முறை பற்றி:

இந்தக் கேள்வி கேட்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மாலையில் சில மணித்துளிகள் கூட்டு ஜப பிராத்தனை நடந்து இருந்தது.

புற பூஜைகளில் நாங்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. வாய் வழியாக பஞ்சாட்சரத்தை உச்சரித்த போது எத்தனை பேர் மனதிலே அந்த முக்கண்ணனின் (ஈசன்) உருவம் பதிந்து இருந்தது? என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு சிந்தனைகள். இருக்கலாமா? போகலாமா? இருந்தால் என்ன நடக்கும்? எவ்வளவு நாழிகை ஆகும்? பிறகு நடுநிசி (நடுஇரவு) ஆகிவிட்டால் என்ன செய்வது? பிறகு சென்றால் ஏதாவது குற்றமாகிவிடுமா? அல்லது இங்கு இருந்து வாக்கினை(சத்சங்கத்தில் ஜீவநாடி பொதுவாக்கு) கேட்டுவிட்டு செல்லலாமா? என்ன செய்வது? என்ற குழப்பமான மனநிலையில்தான் பலர் உள்ளார்கள். பல்வேறு சிந்தனைகள் பலருக்கும். இவற்றை நாங்கள் குறையாகக் கூறவில்லை. பூஜை செய்வதை நாங்கள் குறையாக சொல்லவில்லை. ஆயினும் முறையாக பூஜை செய்த எத்தனை பேர் இறைவனை அடைந்து இருக்கிறார்கள்? (மிக மிகக்குறைவுதான்). ஏன் என்றால் அங்கு வெறும் முறை மட்டும்தான் இருந்து இருக்கும். மீதி எல்லாம் குறையாக இருக்கும். முறையற்று பூஜை என்றால் என்ன என்றே தெரியாத பாமரத்தனமான பூஜைதான் இறையை கவர்ந்து இருக்கிறது. எனவே இது போன்ற (ருத்ராட்ச மாலையை மேலிருந்து கீழாக உருட்டுவதா? அல்லது கீழிருந்து மேலாக உருட்டுவதா?) விஷயங்களில் அர்த்தமே இல்லை என்று எண்ண வேண்டாம். இதன் மூலம் இரத்த ஓட்டமும் நரம்பு ஓட்டமும் மாறும்.

கேள்வி: ஸ்தல விருட்சம் (மரம்) பற்றி:

விருட்சங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருட்சங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும் பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால் மரங்கள் தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது ஒரு மரமானது எத்தனையோ உயிர்களுக்கு நிழலை காயை கனியை உறைவிடத்தை தருகிறது. பலவற்றை மரம் தருவதால் அதற்கு தரு என்ற ஒரு பெயர் உண்டு. கற்பக விருட்சம் என்று ஒவ்வொரு மரத்தையுமே கூறலாம். அது மட்டுமல்லாது ஒவ்வொ மரமும் மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே மரங்கள் அனைத்துமே போற்றப்பட வேண்டியவை என்பதால்தான் வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஸ்தல விருட்சம் என்று வைத்து ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப்படுகிறது. அந்த விருட்சம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 144

கேள்வி: லலிதா சகஸ்ரநாமம் லலிதா நவரத்ன மாலை பற்றி:

நீ எந்த லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி சொல்லுகிறாய்?

பதில்: நீங்கள் (அகத்திய மாமுனிவர்) ஹயக்ரீவரிடமிருந்து உபதேசமாக பெற்ற லலிதா சஹஸ்ரநாமத்தை பற்றி.

அதை தொடர்ந்து ஓத வேண்டும். படிக்கக் கூடாது. ஓதும் போது இரு கண்களில் இருந்தும் நீர் வர வேண்டும். ஓத ஓதத்தான் இது போன்ற பாடல்கள் தேவார திருவாசகங்களில் உள்ள அற்புதமான விஷயங்கள் தெரியவரும். அவற்றை ஒரு வரியிலோ ஒரு வார்த்தையிலோ கூற இயலாது. ஏனென்றால் அதில் உள்ள பல விஷயங்கள் முரண்பாடாக மனிதனுக்குத் தோன்றும். இறைவன் அருளால் சொல்வது என்னவென்றால் இதனை 1 அல்லது 3 அல்லது 5 மண்டலம் பிராத்தனையாகவோ யாகமாகவோ ஆலயத்திலோ இல்லத்திலோ அதிகாலை துவங்கி பூர்த்தி செய்வது பல்வேறு பிறவிகளில் செய்த பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றும் அப்பா. இது பக்தி வழி.

யோக மார்க்கம் என்று எடுத்துக் கொண்டால் குண்டலினி சக்தியை மேலே எழுப்புவதற்கு சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தி அதிகாலைப் பொழுதில் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து நித்தமும் உச்சரித்து வந்தால் மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பமானது (பாம்பு) எழுவதை உணரலாம். எனவே எல்லா வகை மந்திரங்களும் மனித உடலின் 72000 நாடி நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சரி செய்வதும் அவனின் உள்முக சக்தியையும் தட்டி எழுப்பும் அப்பா.

கேள்வி: பெருமாள் கோவில் (திருநெல்வேலி) தைலக்கிணறு பற்றி:

மருத்துவ குணம் வாய்ந்தது. பல ஆலயங்களிலே மூல விக்ரகங்கள் சந்திரக் காந்தக்கல் சூரிய காந்தக்கல் கந்தகம் இன்னும் பல அபூர்வ வகை கற்களால் செய்யப்பட்டிருப்பதால் அதன் அபிஷேக தீர்த்தம் பால் தேன் ஆகியவற்றை பருகினால் தேகம் ஆரோக்கியம் ஆகும். ஆனால் மூல ஸ்தானத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அபிஷேகம் செல்லும் தாரையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் அசுத்தமாக வைத்து விட்டு அவற்றால் பலன் இல்லை என்றால் அது யார் பொறுப்பு?. இவற்றை எல்லாம் சித்தனா வந்து சுத்தம் செய்ய முடியும்?. எனவே சுத்தமாக வைத்துக் கொண்டு பாரம்பரியமாக செய்யப்படும் வழிமுறைகளை பின்பற்றினால் கட்டாயம் நல்ல பலன் உண்டு.

சுலோகம் -77

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #30

அர்ஜூனா எல்லோருடைய உடலிலும் இருக்கும் ஆத்மா யாராலும் கொல்ல முடியாதவன். ஆகவே இந்த உயிர்களுக்காக நீ வருத்தப்பட வேண்டாம்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஓரிடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு நகன்று செல்லும் உயிரினங்கள் முதல் ஒரே இடத்தில் இருக்கும் தாவரங்கள் வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் இருக்கும் உடல் மற்றும் அதன் உறுப்புகளை அழிக்க முடியுமே தவிர அதற்குள் இருக்கும் ஆத்மாவை அழிக்க முடியாது. இந்த போரில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டாலும் அவற்றின் உடல் தான் அழிகின்றதே தவிர உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவதில்லை. ஆகவே இந்த உயிர்களுக்காக நீ வருத்தப்பட வேண்டாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 143

கேள்வி: பாவம் – தோஷம் பற்றி:

பாவம் என்றால் என்ன? தோஷம் என்றால் என்ன?

அதைப் போலத்தான் இதுவும். ஒன்றைச் செய்யும் போது (எண்ணத்தால் வாக்கால் செயலால்) பிறருக்குத் தீங்கும் கடும் துயரமும் ஏற்படுகின்ற நிகழ்வு எதுவோ அது பாவம். செய்த பிறகு அந்த பாவத்தால் ஏற்படுவது தோஷம். விழிப்புணர்வோடு வாழப் பழகிக் கொண்டால் ஒரு மனிதன் பாவம் செய்ய வேண்டியிருக்காது. ஒரு மனிதனை பாவம் செய்யத்தூண்டுவது எது? ஆசை பேராசை அறியாமை. இது போன்ற குணங்கள்தான். ஒரு மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் ஒரு மனிதன் தெரிந்தே செய்யும் பாவங்களே அதிகம். எதையாவது ஒரு சமாதானத்தை தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். இந்த காரியத்தை இதற்காக செய்தேன் அதற்காக செய்தேன் என்றெல்லாம் கூறிக்கொண்டு அவன் செய்யும் தவறுகள்தான் பாவங்களாக மாறுகின்றன. எனவே பலகீனமான மனிதர்களே பாவங்களை செய்கிறார்கள். மனதை உறுதியாக வைத்து எந்த நிலையிலும் பாவம் செய்ய மாட்டேன் தவறு செய்ய மாட்டேன் என்ற உறுதியோடு இருந்தால் ஒரு மனிதனுக்கு பாவம் செய்யக்கூடிய எண்ணமும் சூழலும் அமையாது. எனவே அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டால் அவனுக்கு தோஷமும் வராது.

பொதுவாக தவறுகள் பல செய்து வாழ்ந்த ஆத்மாக்கள் கடைசி காலத்தில் பிதற்றுவதும் மனம் வருந்துவதும் ஒருபுறமிருக்க பாவம் செய்த ஆன்மாக்களுக்கு அந்திமக்காலம் (கடைசிகாலம்) என்பது கடுமையாகத் தான் இருக்கும். அதே சமயம் நல்ல ஆன்மாக்களுக்கும் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பாவங்களையும் எடுத்துவிட இறைவன் விரும்பினால் அவர்களின் அந்திமக்காலமும் (கடைசி காலமும்) வேதனை தரக் கூடியதாகத்தான் இருக்கும். இந்த இரண்டில் எது? என்பதை இறைவன் தான் தேர்ந்து எடுக்கிறார். எனவே சுகமான மரணம் நிகழ்ந்துவிட்டால் அவன் புண்ணிய ஆத்மா என்றும் மிகக்கொடூரமான மரணம் நடந்தால் அவன் பாவ ஆத்மா என்றும் மனிதன் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. எத்தனையோ சூட்சுமக் கணக்குகள் இறைவனால் வகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டு பகுக்கப்பட்டு பெருக்கப்பட்டு பிறகுதான் கழிக்கப்படுகிறது.

சுலோகம் -76

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #29

பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான். பலரில் ஒருவர் மட்டுமே இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார். பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவைப் பற்றி வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்படி ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

பலரில் ஒருவன் இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான் இதன் கருத்து என்ன?

உலகில் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது அது அழியாதது நித்தியமானது என்று தனது மனம் புத்தி அறிவு ஆகியவற்றால் தேடி சிந்தனை செய்து தெரிந்து கொண்டவர்கள் பலரில் ஒருவனே. தெரிந்து கொண்டதும் அவன் அதனை வியப்பாக பார்க்கிறான். அவனால் ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர ஆத்மாவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆத்மாவனது உணரக்கூடிய பொருள் ஆகும். அறிந்து கொள்ள முடியாதது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

பலரில் ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார் இதன் கருத்து என்ன?

இந்த உலகில் உள்ள எண்ணற்ற மனிதர்களில் ஒருவர் தான் செய்யும் பெரும் தவம் காரணமாக தனது பாவங்களை முழுமையாக தீர்த்து ஞானியின் உயர்ந்த நிலையை அடைந்து ஆத்மாவை காண்கிறார். அந்த ஆத்மாவின் தன்மைகள் இது வரை உலகில் உள்ள பொருட்களின் தன்மைகளையும் தத்துவத்தையும் விட மாறுபட்டதாகவும் இதுவரை காணததாகவும் காண்கிறார். இதனை தனது சீடர்களுக்கோ அல்லது தகுதியானவருக்கோ ஆத்மாவின் தத்துவத்தை போதிக்கும் போது எத்தனை தத்துவங்களை உதாரணம் காட்டி ஆத்மாவின் தத்துவத்தை விளக்கினாலும் பரிபூரணமாக ஆத்மாவின் தத்துவத்தை விளக்கிச் சொல்ல அவரால் முடியாது. ஏனெனில் ஆத்ம தத்துவத்திற்கு இணையான வேறு தத்துவம் எதுவும் உலகில் இல்லை. ஆத்ம தத்துவத்தை சொற்களால் சொல்லி புரியவைக்க முடியாது. ஆகவே ஞானியானவர் எத்தனை உதாரணங்களை காட்டி ஆத்மாவின் தத்துவத்தை போதித்தாலும் அதனை வியப்பாகவே பேசுகிறார். ஆனாலும் அவரால் அதன் தத்துவத்தை முழுமையாக விளக்கிச் சொல்ல முடியாது. ஏனெனில் ஆத்மாவை சொற்களால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆத்மா உணரக்கூடிய பொருள் ஆகும்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?

ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் இதன் கருத்து என்ன?

பலரில் ஒருவன் இது நாள் வரை தான் கண்ணால் கண்ட உடம்பும் அதன் உறுப்புகளுமே நான் என்று தெரிந்து வைத்திருக்கிறான். ஞானியின் போதனைகள் வழியாக ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அவன் தெரிந்து வைத்திருந்த அனைத்தும் அழியக்கூடியது என்றும் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த உடம்பிற்குள் அழியாத பொருளாகிய ஆத்மா என்று ஒன்று உள்ளது அது அழியாதது என்றும் அவன் ஞானியிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது வியப்புடன் கேட்கிறான்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி?

ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான். இதன் கருத்து என்ன?

ஆத்மாவானது பாவங்கள் கர்மங்களை அனைத்தும் தீர்ந்த பிறகு உணரக்கூடிய பொருளாகும். அதனை கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 142

கேள்வி: நீதி பற்றி?

நீதி என்ற ஒன்று இருக்கிறதப்பா. விதுரநீதி ஜனகநீதி மதுரநீதி என்றெல்லாம் இருக்கிறது. இந்த நீதிகள் எல்லாம் உயர்ந்த தத்துவங்களையும் தர்மத்தையும் போதிக்கக் கூடியதாக இருக்கிறது. இதிலே சித்த நீதி என்ற ஒன்றும் இருக்கிறது. அதாவது நீதியை எப்படி பார்க்க வேண்டும்? பொதுநீதி தனிநீதி சிறப்புநீதி நுணுக்கநீதி என்றெல்லாம் பார்க்க வேண்டும். அது எப்படி? நீதி என்றாலே எல்லாமே ஒன்றுதானே? என்று நீ கேட்கலாம். ஆருரையாண்ட (திருவாரூர்) அந்த மன்னன் தன்னுடைய பிள்ளையவன் தேர் ஓட்டும் போது ஒரு பசுவின் கன்று தேர்காலிலே விழுந்து உயிரை விட்டதற்காக தன் பிள்ளையையும் அதே போல் தேர்க்காலிலே இட்டு அந்தத் தாய் பசு உயிர் வாடுவது போல் தானும் வாடினால்தான் என் மனம் சமாதானம் அடையும். அதுதான் நீதி என்று ஒரு புதிய சரித்தரத்தையே எழுதினான். ஆனால் அவன் அப்படி செய்திருக்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் கூறவில்லை.

சாஸ்திரப்படி ஆயிரக்கணக்கான பசுக்களையும் கன்றுகளையும் அவன் தானம் செய்திருந்தால் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு போஜனத்தை(உணவை) தானம் செய்திருந்தால் பல ஏழை பெண்களுக்கு திருமணத்தை நடத்தி இருந்தால் சிவ ஆலயங்களையும் வேறு ஆலயங்களையும் புதுப்பித்து கலச விழா நடத்தியிருந்தால் எல்லாவற்றையும் விட சாஸ்திரத்திலேயே என்ன கூறியிருக்கிறது? என்றால் ஒரு பசுவை அறிந்தோ அறியாமலோ கொன்றுவிட்டால் அப்படி கொன்றவன் 12 ஆண்டு காலம் பசு தொழுவத்திலேயே படுத்து உறங்க வேண்டும். பசுமாடு உறங்கும் போது இவன் உறங்க வேண்டும். பசுமாடு உண்டால் இவன் உண்ண வேண்டும். இல்லையென்றால் இவனும் விரதம் இருக்க வேண்டும். பசுக்களை நல்ல முறையில் குளிப்பாட்டி பராமரித்து அந்த இடத்தை சுத்தமாக வைத்திருந்து பசுக்களோடு பசுக்களாக வாழ்ந்தால் அந்த தோஷம் போகும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது சாஸ்த்திரத்தில்.

நீதி எதற்காக இப்படி நுணுக்கமாக குறிக்கப்பட்டிருக்கிறது? என்றால் ஒவ்வொரு மனிதனின் மனப்பக்குவத்திற்கு ஏற்ப சில நீதிகளை பின்பற்றலாம். ஒருவனின் தோஷத்தை நீக்க லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கு என்றால் வசதியில்லாதவன் முடியாதவன் என்ன செய்வது? லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ அல்லது மீன்களுக்கோ தான் அவனால் தர முடியும். ஆனால் வசதியுடையவன் லகரம் (லட்சம்) ஏழைகளுக்கு அன்னதானம் வழங்காமல் லகரம் (லட்சம்) எறும்புகளுக்கோ மீன்களுக்கோ உணவிட்டு விட்டு இதுவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறதே என்றால் அவனுக்கு அந்த புண்ணியம் கிட்டாது. ஆனால் லகரம் (லட்சம்) மீன்களுக்கு மட்டும் உணவிடக்கூடிய தகுதி இருப்பவன் லகரம் மீன்களுக்கு உணவிட்டால் அவனுக்கு அந்த புண்ணியம் வந்துவிடும். எனவே நீதியையும் தர்மத்தையும் புரிந்து கொள்வது சற்றே கடினம்.

சுலோகம் -75

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #28

இந்த உயிர் என்பது பிறப்பதற்கு முன்னால் தென்படுவதில்லை. இறந்த பின்னரும் தென்படுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தென்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் ஏன் அதனை நினைத்து வருந்த வேண்டும்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தூங்கும் போது கனவில் தோன்றும் உருவம் தூக்கம் கலைந்ததும் போய் விடும். கனவிற்கு முன்பும் அந்த உருவம் இல்லை. கனவிற்கு பின்பும் அந்த உருவம் இல்லை. தூங்கும் காலத்தில் மட்டும் ஒரு விதமான மாயையில் அந்த உருவம் தெரியும். அது போலவே இந்த உலகத்தில் பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உயிரினங்கள் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக பார்க்க முடியாதவர்களாகவும் அறிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் வாழ்வதற்கு உரிய காலம் வந்ததும் அவர்களுக்கு உடல் மற்றும் அவற்றிற்கான உறுப்புகள் அனைத்தும் தோன்றுகிறது. வாழும் காலம் முடிந்ததும் அவர்களின் உடல் அவற்றின் உறுப்புகள் அனைத்தும் அழிந்து போகிறது. அதன் பிறகு அவர்களை பார்க்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வாழும் வாழ்க்கை கனவில் வரும் மாயை போன்றது. இவர்களை நினைத்து நீ வருந்த வேண்டியதில்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.