ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 634

கேள்வி: ஐயனே இயலாமையை என்னும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?

எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமாக இருக்கின்றது என்பதின் பொருள் இது. அதீத சினம். அதீத சோர்வு. அதீத வருத்தம். அதீதமான எந்த ஒரு உணர்வு நிலையும் மனதின் பலவீனத்தை காட்டுகிறது. உடல் பலவீனமானால் நோய் வருவது போல எண்ணங்கள் எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமானால் இவ்வாறு உணர்வுகளின் விளிம்பில் மனிதன் நின்று விடுகிறான். ஆனால் இவற்றால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதீத உணர்வு நிலையால் மனிதனின் தேக நலம் பாதிக்கப்படும். அவரின் செயல் திறன் குன்றும். எனவே அதீத சோகமோ துன்பமோ அல்லது சோர்வோ இவைகள் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்றால் என்ன பொருள். இதுபோல் மனம் மிக மிக பலவீனமாக இருக்கிறது என்பது பொருள்.

மனிதனின் எண்ணத்திலே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும். இவ்வாரெல்லாம் நான் செயலை துவங்குகிறேன். அது இவ்வாறெல்லாம் சென்று முடிய வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். ஆனால் நடைமுறையில் அந்த எதிர்பார்ப்பு நடக்காமல் தடை மேல் தடை வந்துவிட்டால் போதும் அப்படியே அமர்ந்து விடுகிறான். எனவே மனிதன் தன் மனதை உறுதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான மனம்தான் மனிதனுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தரும். தேகம் உற்சாகமாக இருக்க வேண்டும். உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டும். எனவே இதற்கு எளிய வழி எளிய முறையில் முதலில் பிரார்த்தனைகளை செய்து விட்டு மனதை சுய ஆய்வு செய்து எப்படி இல்லத்திலே வேண்டாத பொருள்கள் இருந்தால் இல்லம் தேவையற்ற பொருட்களால் நிரம்பி இருந்தால் அந்த இல்லம் எப்படி இருக்குமோ விரும்பத்தகாது இல்லமாக இருப்பது போல உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால் அது விரும்பத்தகாத உள்ளமாகத்தான் இருக்கும் பலவீனமாகி.

எனவே எந்தெந்த பொருட்கள் தேவையில்லை என்று மனிதன் இல்லத்தை சுத்தம் செய்யும் போது முடிவெடுக்கலாம். அதேபோல உள்ளத்தையும் அன்றாடம் ஆய்வு செய்து எந்தெந்த எண்ணங்கள் தேவையில்லையோ அந்த எண்ணங்களை எண்ணுவதை நிறுத்தி தொடர்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டே வந்தால் மனம் உறுதி அடையும். மனம் உறுதி அடைந்து விட்டால் எந்த விதமான நிகழ்வு நடந்தாலும் மனதிற்கு அது குறித்து அச்சமும் குழப்பமோ கவலையோ இருக்காது. அந்த நிலையிலே தொடர்ந்து ஒரு மனிதன் இருந்தால் தொடர்ந்து தேகத்திற்கும் பயிற்சிகளை செய்து கொண்டே வந்தால் கட்டாயம் அதீத மிகு உணர்வு நிலைக்கு ஆளாகாமல் இருக்கலாம். அப்படி அதீத உணர்வு நிலை வரவில்லை என்றால் மனம் சோர்ந்து போகாது. மனம் சோரவில்லே என்றால் உடலும் நன்றாக இருக்கும்.

பார்வதிதேவி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட இந்த சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதிதேவியின் வெண்கலச் சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட் என்ற மியூசியத்தில் தற்போது உள்ளது.

சரஸ்வதி – பென்சைட்டென்

ஜப்பான் நாட்டு வரலாறு மற்றும் புராணங்களின்படி சூரிய குலத்தில் தோன்றிய யமாடோ வம்ச சக்கரவர்த்திகள் ஜப்பானை ஒரே நாடாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவர்கள் காலத்தில் இயற்கை வழிபாடுகள் சடங்குகள் அதிகம் நிறைந்த ஷிண்டோ மதமும் புத்த மதமும் பரவின. இந்த இரண்டு மதங்கள் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்று அந்நாட்டு ஆன்மிக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆறாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சரஸ்வதி வழிபாடு ஜப்பானில் பரவி இருக்கிறது.

ஜப்பானில் வணங்கப்படும் 7 அதிர்ஷ்ட தேவதைகளில் சரஸ்வதியும் ஒருவர். பென்தென் என்பது பிரம்மாவைக் குறிக்கும். பென்சைட்டென் என்ற பெயரில் சரஸ்வதி அழைக்கப்படுகிறாள். பென்சைட்டென் சக்தி மிக்க தெய்வமாகவும் ஜப்பானை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள். ஜப்பான் நீரால் சூழப்பட்ட தீவு நாடாக உள்ளது. நாட்டைக் காப்பதற்கு நீரோடு தொடர்பு கொண்ட சரஸ்வதி துணை நிற்கிறாள். மேலும் இனிமையான குரல் அதிர்ஷ்டம் அழகு மகிழ்ச்சி ஞானம் சக்தியை அருளும் தெய்வமாகவும் அங்கு போற்றப்படுகிறாள். கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய புனித நதிகள் நமது நாட்டில் மதிக்கப்படுவதைப்போல ஜப்பானிலும் நீர்நிலைகள் குளங்கள் ஆகியவற்றை சரஸ்வதியாக பாவித்து வணங்குகிறார்கள். ஜப்பான் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பென்சைட்டனை வணங்கிய பின்னரே புறப்படுகிறார்கள். அங்கு உள்ள பிள்ளையார் ஷோட்டன் எனவும் கருடன் கருரா எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் வாயு வருணன் உள்ளிட்ட தேவர்களுக்கும் ஜப்பானில் சிலைகள் உள்ளன.

சரஸ்வதிதேவி விரித்திரன் என்ற பாம்பு வடிவ அசுரனை அழித்ததாக ரிக் வேதத்தில் தகவல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜப்பானில் பாம்புகள் மற்றும் டிராகன் ஆகியவற்றுடன் தொடர்புடையவராக சரஸ்வதி கருதப்படுகிறார். டோக்கியோ நகரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள எனோஷிமா தீவு உட்பட ஜப்பான் முழுவதும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி கோவில்கள் உள்ளன. நமது நாட்டின் சரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பதை போலவே ஜப்பானிய பென்சைட்டெனும் தந்திகள் கொண்ட இசைக்கருவியை வைத்திருக்கிறாள். அந்த நாட்டு மக்கள் கல்வி கலைகளில் சிறக்கவும் முக்கிய தேர்வுகளில் வெற்றி பெறவும் சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 633

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும். இதை யான் அறிவியல் பூர்வமாகவே எடுத்துரைக்கின்றேன். இந்த ஐப்பசி மாதத்தில் துருவ எனப்படும் நட்சத்திரம் அதைக் கோள் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த நட்சத்திரமானது இவ் பூமியை நெருங்கி இம்மாதத்தில் (ஐப்பசி) பிரகாசிக்கும். சூரியனும் சந்திரனும் கீழ்நோக்கி பயணிக்கும். மேலிருந்து கிடைக்கும் நல் சக்திகளை இக்கோளானது தடுத்துவிடும். மேலிருந்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மை தரக்கூடிய ஒளியை இக்கோளானது உள்வாங்கி தீயதை பிரதிபலிக்கும். இந்த தீய ஒளியானது மனிதர்கள் உடம்பில் படும் பொழுது நோய் நொடிகள் வந்து இறை பலன்கள் கிட்டாமல் போவது போன்ற பலன்கள் ஏற்படும். இவற்றில் இருந்து மனிதர்களை காக்கவே யாம் காவேரி நதியை உருவாக்கினோம். தாமிரபரணி நதியையும் உருவாக்கினோம். இதை யாம் அறிவியல் ரீதியாகவே உருவாக்கியுள்ளோம். இவ்வுலகமானது அழிவை நோக்கியே செல்கின்றது. அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும். மனித குலம் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளாவார்கள்.

நல்லோர்களையாவது யாம் காப்பாற்ற வேண்டியே வாக்குகளாக செப்புகின்றோம். அத்தீய ஒளியில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயமாக காவிரியிலும் தாமிரபரணியும் நீராட வேண்டும். நவகிரகங்களின் ஒளியும் இம்மாதத்தில் கதிர்வீச்சாக அதிகமாக இருக்கும். அதை மனிதர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே யான் நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் யாமே உருவாக்கினோம். மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும். நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் (ஐப்பசி) ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள். இம் மாதத்தை (ஐப்பசி) இதை சனியவனும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். இம்மாதத்தில் (ஐப்பசி) சனியவன் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கும். அவந்தனுடைய சக்திகள் மிகுந்து காணப்படும். சனியவன் என்பவன் நேர்மையுடனும் உண்மையான பக்தியுடன் நல் ஒழுக்கத்தோடு இருப்பவர்களுக்கு வாரி தருவான். தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இம் மாதத்தில் அவந்தன் தக்க தண்டனையும் வழங்குவான். வரும் காலங்கள் அழிவு காலங்கள்.

என்னுடைய ஒவ்வொரு வாக்கிற்கும் அறிவியல் பூர்வமாகவே யாம் நிரூபித்து உருவாக்கியுள்ள பெருமாளின் நவதிருப்பதிகள் ஈசனின் நவகைலாயங்கள் நல்முறையாக நீராடி விட்டு நீராடி விட்டு சென்று சென்று கொண்டே இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இன்னும் என்னுடைய வாக்கு ஒவ்வொன்றும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அறிவியலும் இறைவனும் எப்படி என்பதை நான் ஒவ்வொரு வாக்குகளாக எடுத்துரைப்போம். பக்தர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக வாழுங்கள். இவ்வுலகம் அழிவு நிலையை நோக்கி செல்கின்றது. சித்தர்கள் யாங்கள் நல் மனிதர்களையாவது காப்பாற்ற வேண்டியே வாக்குகள் உரைத்து கொண்டிருக்கின்றோம். இவ்வுலகத்திற்கு மனிதனாலே மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் அக்காலம் வந்துவிட்டது. சித்தர்கள் நாங்கள் ஒவ்வொரு ரூபத்திலும் சென்று ஒவ்வொரு மனிதர்களின் மனதை மாற்றி அந்த அழிவுகளை தடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் சூட்சுமமாகவே யாம் என்னென்ன அறிந்திருக்கிறேனோ அவற்றையெல்லாம் இவ்வுலகத்திற்கு அறிவியல் பூர்வமாகவே தெரிவிக்கும் சமயங்கள் வந்துவிட்டது. நல்லோர்கள் வாழட்டும். ஆசிகள் ஆசிகள் நலமாக நலமாக.

தவளையை காக்கும் பாம்பு

அத்வைதம் தத்துவத்தை பரப்பிய ஆதிசங்கரர் கிபி 788 இல் கேரளாவில் உள்ள காலடியில் பிறந்தார். அவர் அத்வைத சிந்தனையை பரப்ப மடம் அமைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடி சிருங்கேரிக்கு சென்ற போது துங்கபத்ரா நதிக்கரையில் அவரது கவனத்தை ஈர்த்தது ஒரு பாம்பு. சுட்டெரிக்கும் நண்பகல் வெயிலில் பிரசவ வலியில் இருந்த தவளையை காக்க தவளையை வெயில் தாக்காதவாறு நாகப்பாம்பு ஒன்று குடைப்பிடித்த படி படமெடுப்பதை கண்டார். இயற்கையாக பாம்பு தவளையை உணவாக உட்கொள்ளும். ஆனால் இங்கு இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை விட்ட பாம்பு தன் உணவான தவளை பிரசவ வலியில் இருப்பதை கண்டு அதன் மீது அன்பை செலுத்தியது. எதிரிகளுக்கு இடையே அன்பைத் தூண்டும் திறன் கொண்ட அந்த இடத்தின் புனிதத்தால் கவரப்பட்ட அவர் அந்த இடத்தில் தனது முதல் மடத்தை நிறுவினார்.
இடம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ளது கோவில் நகரமான சிருங்கேரி. இங்கு இந்த சிற்பம் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 632

கேள்வி: மங்கல சின்னமாக குங்குமத்தை தவிர வேறு எதனை வைத்துக் கொள்ளலாம்?

குங்குமத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை மங்கலச் சின்னமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடலுக்கு தீங்கை தரும் ரசாயனங்களையெல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் கொள்ளாமல் மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை பொடித்து வைத்துக் கொள்ளலாம். இதுதான் சித்தர்களின் முறையாகும்.

உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 631

எத்தனை தான் ஆரோக்கியமாக சூழலில் வாழ்ந்தாலும் ஒருவனுக்கு பிணி வர வேண்டும் என்ற விதி நிலை வந்து விட்டால் பிணி வந்தே தீருமப்பா. இறைவனை தொடு. உனக்கு சிகிச்சையே தேவையில்லையப்பா. எத்தனையோ வகையான சிகிச்சை முறைகள் காலகாலம் சித்தர்களால் மனிதர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது. மூலிகைகளை ஏற்பது. எந்த உணவையும் ஏற்காமல் விரதத்தோடு இருந்து பிணைகளை நீக்குவது. வெறும் நீரை மட்டும் பருகி சில பிணிகளை நீக்குவது. உடலிலே சில இடங்களில் சில குறிப்பிட்ட அழுத்தங்களை தந்து நோய்களை நீக்குவது. எந்த வகையான அழுத்தங்களையும் தராமல் குறிப்பிட்ட இடத்தை உற்று நோக்கி திருஷ்டி சிகிச்சை என்ற ஒன்று இருக்கிறது. இப்படி எல்லாம் பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பது உண்மை. ஆனால் தெள்ளத் தெளிவாக கற்று உணர்ந்த மனிதர்கள் இன்று குறைவு. எப்பொழுதுமே அரைகுறை அறிவு ஆபத்தை தரும் என்பதை புரிந்து கொண்டு ஒரு துறையில் தெளிவான அறிவு இல்லாத மனிதர்கள் இதுபோன்ற எந்த முயற்சியும் செய்தல் கூடாது.

நரசிம்மர்

விஷ்ணு பகவானின் அவதாரமான யோக நரசிம்மரின் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. நரசிம்மர் நான்கு கைகளுடன் உட்குடியாசனத்தில் அமர்ந்துள்ளார். நரசிம்மருக்கு 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் சக்கரம் மற்றும் மேல் இடது கையில் சங்கு உள்ளது. மீதமுள்ள 2 கைகளும் கால்களும் யோகப்பட்டையுடன் உட்குடிகாசனத்தில் உள்ளது. டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்டது. இடம் ஓடிசா மாநிலம். காலம் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைபட்டது.