ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 630

கேள்வி: இறைவனை அடைய சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டுமா?

மனித ஆத்மாக்கள் கடைத் தேறுவதற்காக சாஸ்திரங்கள் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்து விட்ட பிறகு சாஸ்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.

நவ துர்க்கை

உலகையே துன்புறுத்திக் கொண்டிருந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை எதிர்த்து நின்று அவனை அழித்த துர்கா தேவியின் சக்தியை வழிபடும் நாட்கள்தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியை ஒவ்வொரு அவதாரமாக வழிபடுகிறோம். தீய சக்தியை வென்ற நல்ல சக்தியின் கதைதான் நவராத்திரி அம்பாளின் வழிபாட்டைக் குறிக்கிறது. வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. இவர்களை நவராத்திரி தினத்தில் வழிபட்டு அன்னையின் அருளை பெற்றிடுவோம்.

நவ துர்க்கை அவதாரங்கள்:

1.சைலபுத்ரி
2.பிரம்மச்சாரினி
3.சந்திரகாண்டா
4.குஷ்மந்தா
5.ஸ்கந்தமாதா
6.காத்யாயனி
7.காலராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி

  1. சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. சைலபுத்ரி என்றால் மலைமகள் என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி சதி பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. ஒன்பது சக்கரங்களில் இவள் மூலாதாரத்தில் இருப்பவள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்கி இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இவளின் வாகனம் நந்தி. ஆயுதமாக சூலத்தையும் ஏந்தி நிற்கிறாள்.

  1. பிரம்மசாரிணி

பிரம்ம என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார். பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பேரறிவு பொறுமை மற்றும் ஞானத்தைப் பெறலாம். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவள். ஒன்பது சக்கரங்களில் இவள் சுவாதிஷ்டானத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள்.

  1. சந்திரகாண்டா

நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். சந்திர என்றால் நிலவு. காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர மணி அணிந்து பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் அருளுகின்றார். சந்திரகாண்டா போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது சக்கரங்களில் இவள் மணிபூரக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பார்கள்.

  1. கூஷ்மாண்டா

1.கூ 2. உஷ்மா 3.ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே 1. சிறிய 2. வெப்பமான 3. உருண்டை என்ற பொருள் கொண்டது. கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும். இவர் சூரிய மண்டலத்தை இயக்குவதாகக் கூறப்படுகின்றது. இவரை வணங்குவோர் உடல் மன வலிமை பெறுவர்கள். ஒன்பது சக்கரங்களில் இவள் அனாதக சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் உடல் மன வலிமை பெறுவார்கள்.

  1. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை தேவர்களின் சேனைகளுக்கு தலைவனாக இருக்கும் முருகனின் தாய் ஆவார். இவர் தேவர்கள் மற்றும் மனிதர்களுக்கு பகைவர்களாக விளங்கிய சூரபத்மனை (தாரகாசுரனை) வதம் செய்ய முருகனுக்கு சக்தி கொடுத்தவள். நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையுடனும் ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் மற்றொரு கரத்தின் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார். இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசியும் நமக்கு கிட்டுகின்றது. ஒன்பது சக்கரங்களில் இவள் விசுத்தி சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்ரத்தை அடைவோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி மனமானது தூய்மையான கருத்துக்களால் நிறையும்.

  1. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவளுக்கு காத்யாயனி என்ற பெயர் வந்தது. இவளுக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு. ஒன்பது சக்கரங்களில் இவள் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்கள் முக்காலத்தையும் உணரும் தன்மையை பெறுவார்கள்.

  1. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம். காள என்றால் நேரத்தையும் மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும். இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக் கூடியது. இவளின் நான்கு கைகளின் ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும் மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது. இவளின் பார்வை பட்டாலே துன்பமும் பாவமும் தொலைந்திடும். ஒன்பது சக்கரங்களில் இவள் சகஸ்ரதள சக்கரத்தில் இருப்பவள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் இந்த சக்கரத்தை அடைவார்கள். இந்த சக்கரத்தை அடைந்தவர்களின் மாயை விலகும். இறை காட்சியை காண்பார்கள். தனக்குள்ளே இறைவனை உணர்வார்கள்.

  1. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும் கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவள் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றாள். முற்காலத்தில் மகாகௌரி ஈசனை மணம் செய்து கொள்ள வேண்டி கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அப்போது அவரின் உடலை மண் சூழ்ந்து கருமையாக்கியது. இவளது தவத்தின் பலனால் சிவன் இவரை மணந்து கொள்வதாக கூறினார். அதற்கு முன் இவளை கங்கை நீரில் நீராட இறைவன் பணித்தார். இறைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கங்கையில் நீராடிய தேவியின் உடல் பால் போன்று வெண்மையாக மாறியதால் இவள் மகாகௌரி என அழைக்கப்படுகிறார். நான்கு கரம் கொண்ட மகாகௌரி ஒரு கரத்தில் சூலம் மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு வெண்மையான காளை வாகனமாக இருக்கின்றது. யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கி பிறவியில்லாத நிலையை அடைவார்கள்.

  1. சித்திதாத்ரி

சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றாள் அருள்பவள் அருள்பவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகளான சித்திகள் அணிமா மகிமா கரிமா லஹிமா ப்ராப்தி பிரகாமியம் வாசித்வம் ஈசத்வம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி நான்கு கரங்களில் இடது கரத்தில் கதை சக்கரத்துடனும் வலக் கரத்தில் தாமரை சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். இவள் சிவ பெருமானே வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தேவி புராணம் கூறுகிறது. மோட்சத்தை அருளக் கூடிய சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் தேவர் முனிவர் யட்சர் கிங்கரர் வழிபடுவார்கள். யோகிகள் இவளின் அனுக்கிரகத்தால் அட்டமா சித்திகளை பெறுவார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 629

கேள்வி: மௌனம் பற்றி:

மௌனத்தை குறித்து பேசினாலே மௌனம் பங்கமாகிவிடுமப்பா. இதுபோல் நிலையிலேயே குரு தட்சிணாமூர்த்தியை குருவாரம் சென்று முடிந்த வரையில் வழிபாடுகளை செய்து வந்தாலும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை அன்றாடம் செய்து வந்தாலும் மௌனத்தவம் ஒருவனுக்கு சித்திக்கும்.

சிவ வடிவம் – 64. சிஷ்யபாவமூர்த்தி

தமிழ்க் கடவுள் என போற்றப்படுபவர் முருகபெருமான். இவர் தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தார். முருகன் வேறு சிவசக்தி வேறல்ல. அவரே இவர். இவரே அவர். ஆறு எண்ணிற்கும் ஆறுமுகனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆறுமுகம் கொண்டவர். சரவணபவ என்ற ஆறு எழுத்து கொண்டவர். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். வளர்பிறை 6 ஆம் நாள் வரும் சஷ்டி அவருக்கு உகந்த நாள். இப்படி அனைத்தும் ஆறு மயம் தான். ஒரு முறை கயிலைக்கு பிரம்மன் வந்தார். அப்போது அகந்தை மேலிட முருகரை வணங்காமல் சென்றார். முருகர் பிரம்மனை அழைத்து தாங்கள் யாரென்றும் தாங்கள் செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டார். தனது பெயர் பிரம்மா என்றும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றார். முருகரும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்றார். வேதம் ஓதி செய்வதாகக் கூறினார் பிரம்மன். வேதம் ஓதுக என்றார் முருகர். பிரம்மனும் ஓம் என்று பாடித் தொடங்கினார். உடன் முருகர் பிரம்மனை நோக்கி இப்பொழுது நீர் கூறிய பிரணவத்தின் பொருள் கூறுக என்றார். பிரம்மர் பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க பிரணவத்தின் பொருள் தெரியாத நீயெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய் என்றபடியே பிரம்மனை சிறையில் அடைத்தார் முருகர். இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் முருகனிடம் வந்து முருகா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா? அறிந்திருந்தால் எனக்கு கூறு என்றார். உடன் முருகரும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னார். உடனே சிவபெருமான் சீடராக மாறி கேட்க முருகரோ குருவாக மாறி உபதேசித்தார். தகப்பனுக்கே சுவாமியாக அதாவது குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் முருகருக்கு தகப்பன் சாமி எனப் பெயர் உண்டானது. இம்மூர்த்தி சிஷ்ய பாவ மூர்த்தி ஆகும்.

அதன் பின்னர் பிரம்மன் சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து அவர் மூலமாக முருகப்பெருமான் பொருளுரைக்க பிரம்மன் அறிந்தார். சுவாமிமலை குடந்தையருகே அமைந்துள்ளது. இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. பெரியபுராணம் சிவமகாபுராணம் பாகவதம் ஆகிய நூல்களில் இந்த வடிவத்தைப் பற்றி கூறிப்பிடப்பட்டுள்ளது.

கங்காதர மூர்த்தி

கங்காதர மூர்த்தியின் வலது மேல் கரம் ஜடா முடியைப் பிடித்துக் கொண்டு வெகு வேகமாக வரும் கங்கையைத் தாங்குகிறது. வலது கீழ் கரத்தால் நாகத்தைப் பிடித்துள்ளார். இடது மேல் கரம் ஜடா முடியை அவிழ்ப்பது போல் உள்ளது. மற்றொரு கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்திருக்கிறார். வலது காலைத் தூக்கி முயலகன் தலை மீது வைக்க அவன் பாரம் தாங்காமல் சற்றுச் சாய்வாகப் படுத்து இடக்கையாலும் பாதத்தைத் தாங்குகிறான். அருகில் பகீரதன் இருக்க இறைவனைச் சுற்றி தேவர்களும் இருக்கின்றனர். கிமு 7 ஆம் நூற்றாண்டில் மகேந்திர வர்ம பல்லவனால் கட்டப்பட்ட குடைவரைச் சிற்பம் இது.

இடம்: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னிதியில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னிதி செல்லும் வழியில் இடப் புறம் லலிதங்குரா பல்லவேஸ்வர க்ருஹம் என்ற இடத்தில் ஒரு சிறிய அறை போல் காணப்படும் பகுதியில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 628

கேள்வி: இறைவனை வணங்க சிறப்பான காலம் நேரம் ஏதும் உண்டா?

இறைவனை வணங்க காலம் நாழிகை ஏதும் இல்லைப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம். அது வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

சிவ வடிவம் – 63. இரத்தபிட்சா பிரதானமூர்த்தி

சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்து நானே பெரியவன் என்ற அகந்தையுடன் இருந்தார் பிரம்மா. பிரம்மாவைப் போல் யாரும் அகந்தை கொள்ளக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான் பைரவரின் ரூபத்தை எடுத்து பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை திருகி எடுத்தார். பிரம்மாவின் தலையிலுள்ள மண்டை ஓடு அவரது கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. சிவகணத் தலைவர்களுடன் வனம் சென்ற பைரவர் அங்கிருந்த முனிவர்கள் ரிஷிகள் தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அவர்களின் உடம்பிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். அடுத்து வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் சிவகணங்களுடன் சென்று திருமாலிடம் இரத்தத்தை கேட்டார். திருமால் தனது நகத்தினால் நெற்றியினை கீறி ஒரு ரத்த நரம்பிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார். இவ்வாறு முனிவர் ரிஷிகள் தவசிகள் தேவர்கள் திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்று கபாலத்தில் இருந்த அகந்தையையும் கர்வத்தையும் அழித்தார் பைரவர் ரூபத்தில் இருந்த சிவபெருமான். கபாலத்தில் இருந்த அகந்தை அழிந்தவுடன் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு நீங்கியது. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க இரத்தத்தை பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இந்த மூர்த்தி காசியில் இருக்கிறார்.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்