சிவ வடிவம் – 3.முகலிங்கமூர்த்தி

சிவலிங்கத்தில் முகம் இருந்தால் அந்த லிங்கம் முகலிங்கம் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம் அநாட்யம் சுரேட்டியம் சர்வசமம்/சர்வசம் ஆகும்.

  1. ஆட்யம் – 1001 லிங்கங்களை கொண்டது
  2. அநாட்யம் – முகம் இல்லாதது
  3. சுரேட்டியம் – 108 லிங்கங்களை கொண்டது
  4. சர்வசமம்/சர்வசம் – 5 முகம் கொண்டது (ஈசானம் தத்புருடம் அகோரகம் சத்யோஜாதம் வாமம்) இவ்வடிவ வகையில் ஒரு முகம் கொண்ட ஏகமுக லிங்கம். இரு முகம் கொண்ட துவிமுக லிங்கம். மூன்று முகம் கொண்ட திரிமுக லிங்கம். நான்கு முகம் கொண்ட சதுர்முக லிங்கம். ஐந்து முகம் கொண்ட பஞ்சமுக லிங்கம் என்று ஐந்து உள் வகைகள் உள்ளன.

பிரம்மா படைக்கும் தொழிலையும் விஷ்ணு காக்கும் தொழிலையும் உருத்ரன் அழிக்கும் தொழிலையும் மகேஸ்வரன் மறைக்கும் தொழிலையும் சதாசிவன் அருளும் தொழிலையும் செய்கிறார்கள். இந்த ஐவருக்கும் ஆதார சக்தியாக உள்ளவர் பரசிவம் ஆகும். அவனையே நாம் முகலிங்கத்தில் மூலமாக தரிசிக்கலாம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பெரிய நாயகர் சந்நிதிக்குத் தெற்கே நிருதி மூலையில் ஒரு ஏகமுக லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம்பலத்தில் ரகசியத்துக்கு அருகில் ஒரு முகலிங்கம் உள்ளது.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு மேற்காக முகங்கள் அமைவதே துவிமுக லிங்கம் அல்லது இரு முக லிங்கம் எனப்படும். கிழக்கு முகம் தத்புருஷம் என்றும் மேற்கு முகம் சத்யோஜாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

தென்னாற்காடு மாவட்டம் திருவக்கரை திருத்தலத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக திரிமுக லிங்கம் உள்ளது. சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சி கொடுக்கிறார். ஈரோடு மகிமாலீஸ்வரர் ஆலயத்திலும் திரியம்பக லிங்கம் அமைந்துள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் மூன்று முகத்துடன் உள்ளார். இவரின் மூன்று முகங்களைத் தங்கத்தால் செய்து அணிவித்துள்ளனர்.

சிவ லிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கில் தத்புருஷம் மேற்கில் சத்யோஜாதம் வடக்கில் வாம தேவம் தெற்கில் அகோரம் என நான்கு முகங்கள் இருக்கும். திருவானைக்காவல் திருவண்ணாமலை காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆகிய ஆலயங்களிலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன. நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது சதுர்முக லிங்கம். இது மார்பு வரை இரு கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் ஜப மாலையும் மற்றொரு கையில் அமுதக் குடமும் உள்ளது. நான்கு முக லிங்கம் ஆகையால் இக்கோயிலில் நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் உள்ள கோயிலுக்கு தமிழில் நான்முகக் கோயில் என்றும் வடமொழியில் சர்வதோ பத்ராலயம் என்று பெயர்.

நான்கு திசைகளில் நான்கு முகங்களுடன் கிழக்குத் திசையில் அதிகப்படியான ஒரு முகத்துடன் ஐந்து முகங்களுடன் விளங்குகிறது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் அமைந்துள்ள சந்நிதியில் பஞ்ச லிங்கம் உள்ளது. இவ்வகை லிங்கங்கள் வட இந்தியாவில் சில கோயில்களிலும் நேபாளத்திலும் உள்ளது. வட மாநிலங்களில் சமீப காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பஞ்சமுக லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆறுமுக லிங்கம் என்று சொல்லப்படும் லிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளை நோக்கியும் ஐந்தாவது முகம் உச்சியில் வானத்தை நோக்கி ஊர்த்துவ முகம் என்றும் ஆறாவது முகம் கீழ் நோக்கி அதோ முகம் என்றும் அழைக்கப்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 566

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இத்தருணம் முடவன் வாரம் தன்னிலே இவ்விடத்திலே சேர்ந்து வந்து இதுபோல் கலந்தாய்விலே கலந்து கொண்டு இதுபோல் மனம் உவந்து இவையெல்லாம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட செயலும் கொண்ட அனைவருக்கும் என் பரிபூரண நல்லாசிகள்.

இது போல் பல்வேறு விதமான வாக்குகளை பல்வேறு தருணங்களில் எம்மை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை கூறியிருந்தாலும் கூட பலமுறை கூற வேண்டிய தருணம் யாதென்றால் கூறுகின்ற வாக்கியம் தன்மையை கேட்கின்ற மனோபாவத்தை பொருத்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் மனம் மகிழ்வாக ஏதாவது மகிழ்வு என்ற சொல்லாடல் அந்தந்த மனிதனின் மனநிலையை பொறுத்து இங்கே நாங்கள் கையாளுகின்றோம். அப்படியொரு மகிழ்வில் வந்து அமரும் போது நாங்கள் கூறுகின்ற தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் திருப்தியாக ஏற்புடையதாக இருக்கிறது. இறையை நம்புகிறான். எம்மை நம்புகிறான். ஆனால் அவன் எண்ணுகிற நிலையில் வாழ்வு நிலை இல்லை என்ற ஏக்கத்தோடு விரக்தியோடு அதிருப்தியாக எம்முன்னே அமரும் பொழுது நாங்கள் எதைக் கூறினாலும் அதனை அவனால் திருப்தியாக இருக்க இயலாது. இதுபோல் நிலையில் யாம் பல்வேறு தருணங்களில் முன்னுரை என்ற ரீதியிலேயே கூறும்பொழுது வருகின்றவனுக்கு அத்தனையையும் வெட்டவெளிச்சமாக கூறாவிட்டாலும் இலைமறை காயாக கூறுகிறோம். ஆனால் அவன் அதை அவன் புரிந்து கொள்வதில்லை.

சிவ வடிவம் – 2. இலிங்கோத்பவமூர்த்தி

பரசிவத்தின் அருளால் பிரளய காலம் முடிந்து சர்வ சிருஷ்டி ஆரம்பித்தது. அப்போது பிரம்மத்திலிருந்து பிரகிருதி எனப்படும் மாயாதேவியும் அவள் தோன்றிய அதே நேரத்தில் பிரம்மத்தினிடமிருந்து மாயபுருஷனும் தோன்றினார்கள். மாயாதேவியும் மாய புருஷனும் ஒன்று சேர்ந்து தாங்கள் இருவரும் தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் என்னவென்று ஆலோசித்து கொண்டிருந்ததார்கள். அப்போது உங்கள் சந்தேகத்துக்கான விளக்கம் தெரிய வேண்டுமானால் தவம் செய்யுங்கள் என்று ஓர் அசரீரி கேட்டது. அசரீரி வாக்குப்படி இருவரும் கடுமையான தவம் மேற்கொண்டார்கள். வெகு காலம் சென்றது. ஒரு நாள் மாயாதேவியும் மாய புருஷனும் தங்கள் யோக நிஷ்டையிலிருந்து விழித்துக் கொண்டனர். கணக்கற்ற வருடங்கள் தவம் செய்திருப்பதை எண்ணினார்கள். அப்போது அவர்கள் தேகத்திலிருந்து நீர் பெருக்கெடுத்தது. அந்த நீர் பெருக்கு சகல லோகங்களிலும் வியாபித்து எங்கும் ஒரே நீராக நிறைந்து நின்றது. மிகவும் களைப்பில் இருந்த மாயா புருஷன் மாயாதேவியோடு சேர்ந்து அனேக காலம் நீரிலே நித்திரை செய்தார்கள். அப்போது முதல் மாயாபுருஷனுக்கு நாராயணன் என்றும் மாயாதேவிக்கு நாராயணி என்றும் பெயர் பெற்றார்கள். அவர்கள் நீரில் இருந்த இடமே திருப்பாற்கடல் என்று பெயர் பெற்றது.

நாராயணனின் நாபியிலிருந்து அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. எண்ணற்ற இதழ்களோடு கூடியதும் அனேக யோசனை அகலமும் உயரமும் உடையதாயும் நறுமணத்தோடு கூடியதுமான அம்மலரிலிருந்து நான்முகன் அவதரித்தார். மாயை காரணமாகப் பிரம்மதேவனுக்குத் தாம் யார் என்பதும் எங்கிருந்து வந்தோம் என்பதும் என்ன காரியத்துக்காகத் தாம் தோன்றியுள்ளோம் என்பதும் விளங்கவில்லை. எப்படியும் தம்மைத் தோற்றுவித்தவர் யார் என்பதைக் கண்டு கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவர் தாமரை மலரின் அடிப்பாகத்திற்குக் காம்பின் வழியாக இறங்கத் தொடங்கினார். கீழே இறங்கிச் செல்லச் செல்ல முடிவே இல்லாது பயணம் நீண்டது. எத்தனையோ வருட காலம் சென்றது. பிரம்மதேவன் இன்னமும் கீழே இறங்கிச் சென்று கொண்டிருந்தார். அவருக்குக் களைப்பு மேலிட்டது. கீழே செல்வதை நிறுத்தி விட்டு மேல் புறமாக ஏறத் தொடங்கினார். அங்கும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை. இதழ்களுக்கிடையில் சுற்றிச் சுற்றி வந்தது தான் மிச்சம். யாரையும் காணவில்லை. அவர் மிகவும் சோர்வடைந்து மூர்ச்சையாகி விழுந்தார். அப்போது தவம் செய்தாயானால் நீ விரும்பும் காரியம் பூர்த்தியாகும் என்று ஓர் அசரீரி எழுந்தது. பிரம்மதேவன் பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்தார். அப்போது தான் யார் என்றும் படைக்கும் தொழிலுக்காக சிருஷ்டிக்கப்பட்டோம் என்றும் அவருக்கு புரிந்தது.

அப்போது சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் நாராயணன் அவருக்குக் காட்சி தந்தார். அவரைப் பார்த்ததும் நான்முகனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நாராயணனைப் பார்த்து நீ யார்? என்று கேட்டார். அவரோ நான் உனது தந்தை என்றார். நானே படைக்கும் தொழிலை செய்பவன் நான் படைக்காமல் நீ எப்படி வருவாய் என்று கேள்வி கேட்டார். இதனால் யார் பெரியவர் என்று இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பரசிவம் ஜோதி ரூபமாக அடிமுடி காண முடியாதபடி தோன்றி நின்றார். தங்கள் இருவரைத் தவிர புதிதாக ஒரு ஜோதி தோன்றியிருக்கிறது. யார் இது என்று சிந்தித்தார்கள். அப்போது ஜோதியிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும் முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட கிளம்பினார். நாராயணன் வராகமாக மாறி அடியைத் தேட கிளம்பினார். இருவராலும் அடிமுடியைக் காணவில்லை. இருவரும் சரணம் என்று ஜோதியாய் நின்ற பரசிவனை சரணடைந்து பூஜித்தார்கள். அவர்கள் இருவரும் வணங்கி பூஜித்த உருவமே லிங்கோத்பவர் ஆகும். வானுக்கும் பூமிக்குமாக அடிமுடி காண முடியாமல் நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 565

கேள்வி: காசி கயா செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவைகள் என்ன? அந்த தலங்களின் சிறப்பு என்ன?

காசி கயா என்பது மட்டுமல்ல அந்த தலன்களுக்கு சென்றாலும் ஒழுக்கமும் நேர்மையும் பக்தியும் தர்மமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்களால் உடன் வந்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்ய முடியாத நிலையில் தாராளமாக பெற்றோர்கள் சார்பாக அவர்கள் வாரிசுகள் செய்யலாம். வீட்டில் ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில் பெண் பிள்ளைகளும் அதுபோல் செயல்களை செய்யலாம். அஷ்டமி நவமியில் லோகாய தொடர்பான காரியங்களை விலக்கி பொதுவாக சேவைகளையும் இறை தொடர்பான காரியங்களையும் செய்யலாம்.

சிவ வடிவம் – 1. இலிங்க மூர்த்தி

பர சிவத்தை புராணங்களும் வேதங்களும் கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. பரசிவமே அனைத்துமானது. பிறவி இல்லாமல் ஆதியிலிருந்தே இருப்பது. அழிவென்பதே இல்லாதது. ஈரேழு உலகங்களும் தோன்றுவதற்கும் அந்த உலகங்கள் அழிய காரணமாயிருப்பதும் இந்த பரசிவம்தான். உருவமில்லாதது. நிறமில்லாதது. குணம் இல்லாதது. மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. இதுதான் இந்த பர சிவம் என்று சொல்லால் செயலால் குறிப்பால் என்று எதனாலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதது. இன்னதென யாராலும் சுட்டிக்காட்ட இயலாதது. நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தி இந்த பரசிவம் ஆகும். உயிர்கள் உய்வதற்காகவும் அருளுவதற்காகவும் இந்த பர சிவமே லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

பரசிவம் அருவம் உருவம் அருவுருவம் என்னும் மூன்று நிலைகளில் அருவமாக ஜோதிவடிவத்திலும் உருவமாக தலை கை கால் என உறுப்புகளுடனும், அரு உருவத்தில் இலிங்க வடிவிலும் அருளுகிறது. தென்னகத்தில் உள்ள புராண தலங்களில் அதிக பட்சம் சுயம்புவாக தோன்றிய லிங்கமே உள்ளது.

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் லிங்க வடிவைப்பற்றி பல கருத்துக்கள் உள்ளது. அவற்றில் சில

இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும். பரம் பொருளை உயிர்கள் உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருப்பது இலிங்கமே ஆகும். இலிங்கத்தில் பாணம் என்று அழைக்கப்படும் மேல் பகுதியானது பிரபஞ்சத்தோடு எப்போதும் தொடர்பில் இருந்து உலகில் உள்ள தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்றது. இலிங்கத்தில் ஆவுடையார் என்று அழைக்கப்படும் அடிப் பகுதியானது பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தில் பலிபீடம் என்று அழைக்கப்படுகின்ற நடுப் பகுதியானது தம்மை வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும். இலிங்க விடிவில் இறைவனை பூஜித்து இறைவனை அடைவதை மட்டுமே தனது கூறிக்கோளாக கொண்டவர்கள் அதற்கான முறைகளை அறிந்து அந்த முறைப்படி செய்கின்றவர்களுக்கு இறைவனின் அம்சமாகவே சாதகரையும் மாற்றக் கூடியது இலிங்கம் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 564

கேள்வி: பலரின் கேள்விகளுக்கு புரிந்து கொள்ளும்படி பதில் கூறுவது இல்லை? ஏன்

இறைவனின் கருணையை கொண்டு இத்தருணம் கூறுவது யாதெனில் வருகின்ற மனிதன் புரிந்து கொள்ளும்படியாக கூறினால் என்ன? என்றால். அப்படிக் கூறினாலும் கூட புரிந்து கொள்ள மறுப்பதும் அல்லது அந்த நிலை வாக்கை நாங்கள் ஏற்கவில்லை என்ற ரீதியில் விவாதம் செய்வதும் அல்லது அனைத்தையும் தாண்டி இவைகளை போய் என்று கூறுவதும் மனிதனின் இயல்பு. இந்த இயல்பை அறிந்தேதான் யாம் காலாகாலம் இதுபோல் அருள் வாக்கினை கூறி வருகிறோம். இயம்புங்கால் மேலும் இதுபோல் நிலையிலே தெள்ளத் தெளிவாக வெட்ட வெளிச்சமாக எதைக் கூற வேண்டும்? எதைக் கூறக்கூடாது? என்ற இறை கட்டளைக்கேற்பவே கூற வேண்டி இருக்கிறது. உதாரணமாக இப்படி கூறுவதாக வைத்துக் கொண்டால் அதனை ஏற்று அமைதி அடையக்கூடிய பக்குவம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும் என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. இப்படியிருக்கும் பட்சத்தில் முன்னரே பக்குவமின்மையோ விதியோ அல்லது அறியாமையோ துன்பத்தில் வந்து எம்முன்னே வந்து அமருகின்ற மனிதனுக்கு யாமும் ஒரு விதமான வாக்கை கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஒன்று மௌனமாகி விடுகின்றோம். இல்லையென்றால் அவன் திருப்தி அடையும் வண்ணம் கூறி விடுகிறோம். இப்படி கூறுவதால் அடுத்த வினா வரும். சித்தர்கள் பொய் உரைக்கலாமா? என்று ஏற்கனவே நாங்கள் பொய்தான் உரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது போல் நிலையிலேயே பொய்மையும் வாய்மையிடத்து என்ற கருத்தை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

அதுபோல் மெயிலும் மெய்யை நாங்கள் கூற வேண்டும் என்றால் இங்கு வருபவன் மெய்யாக இருக்க வேண்டும் இங்கு வருபவன் யாரும் மெய்யாக இல்லை என்பதே மெய்யிலும் மெய்யான உண்மையாகும் அதாவது எம்மை நாடுவதும் என் மீது பற்று வைப்பதும் பக்தி வைப்பதும் என்பது வேறு ஆனால் நாங்கள் வந்து வாக்கை கூறுகிறோம் என்பதற்காக எல்லா வகை உரிமைகளையும் எடுத்துக் கொண்டு நான் எதிர்பார்க்கின்ற சூழலை அமைத்துத் தந்தால் தான் நம்புவேன் என்ற ரீதியில் வந்தால் இன்றல்ல நாளையல்ல கலப்பக்கூடி காலமானாலும் சித்தர்களும் மனிதர்களும் சரி விகித சமரச உடன்பாடு என்றுமே வராது இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எப்பொழுதும் மேலும் இது போன்ற சிக்கலான தத்துவார்த்த கருத்துக்களை கூறினால் மீண்டும் மீண்டும் குழப்பங்கள் பொருளைத்தான் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும்

அடுத்ததாக இதுபோல் நிலையிலேயே பல்வேறு விதமான சிந்தனைகள் கொண்டவர்கள் இங்கு வருவதும் போவதும் பின்னர் தூற்றுவதும் என்பது இயல்பு. இது காலாகாலம் நடக்கக்கூடிய நிகழ்வு. இதற்காக இதழ் ஓதுபவனோ மற்றவர்களோ விசனம் கொள்வதும் வேதனை கொள்வதும் அறிவுடைமை ஆகாது. ஒருவன் முதலில் இங்கு வருவான். இதை நம்புவான். எம்மை தலையை தூக்கி வைத்துக் கொண்டாடுவான். அடுத்த சில மாதங்களில் கீழே போட்டு மிதிப்பான். இவையும் நடந்து கொண்டுதான் இருக்கும். இது போன்ற மனிதர்களை மனதிலே வைத்து எந்த ஒரு காரியத்தையும் செய்தல் கூடாது. எனவே வருபவர் வரட்டும் செல்பவர் செல்லட்டும் ஒத்துக் கொள்ளக் கூடிய மனித ஒத்துக் கொள்ளட்டும். மறுக்கக்கூடிய மனிதன் மறுக்கட்டும். ஆனாலும் கூட இது போல் நிலையிலேயே இன்னும் எத்தனை கடினங்கள் எத்தனை வேதனைகளை அனுபவித்தாலும் இது போல் நிலையிலேயே தர்மம் சத்தியம் பக்தி இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிப்பேன் என்ற ஒரு வைராக்கியம் இருப்பவனுக்குத்தான் தொடர்ந்து எமது வழிகாட்டுதல் என்பதும் இருக்கும் தொடரும். இன்னொன்று இதுபோல் விபத்தை முன்கூட்டியே உணர்ந்து சிலரை காப்பாற்றுவது போல பலரை ஏன் காப்பாற்றவில்லை? என்ற ஒரு வினா வரும். அடுத்ததாக அப்படியானால் அகத்தியரை வணங்கினால் அல்லது மற்ற சித்தர்களை நம்பினால்தான் காப்பாற்றுவார்களா? நம்பாதவர்கள் எல்லாம் கைவிட்டு விடுவார்களா? என்ற ஒரு சிந்தனை வினா வரும். அப்படியல்ல யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கடுமையான விதியிலிருந்து ஒருவனை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மை பொறுத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான்.

அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூதுவாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலரும் வெறும் லோகாய விஷயங்களை கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ எனப்படுவோ இல்லை. இது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்து கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கே எம்முன்னே அமர்ந்து வாழ்க்கை கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை 100க்கு 100 சரியாக புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதை கேட்டாலும் கேட்கா விட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம். செய்து கொண்டிருக்கிறோம். இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் ஏதும் தீரவில்லை. மறாக கஷ்டங்கள் அதிகமாக இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும் ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கு குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்திலே இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்துப் பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும். எனவே இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுநூறு எம்மை நம்பி என் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் இறையருளால் நல்ல வழி காட்டுவோம். உலகில் ரீதியாக முன்னேற்றம் காட்டினால் தான் ஒருவனுக்கு நாங்கள் அனுகிரகம் செய்கிறோம் என்பது மிகவும் குறைந்தனமான எண்ணம்.

நன்றாக எமது வார்த்தை கவனித்து பொருள் கொள்ள வேண்டும் எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து பலவிதமான வாக்குகளை கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனை விட மேம்பட்ட மனிதனாக இருக்கலாம். புனிதனாக இருக்கலாம். இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கு இட்ட கட்டளை.

ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டுமென்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கம் ஆக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையில் இருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையில் சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து என் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தன் ஆக்கி விடுவோம். சித்தனாக்கிவிட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும். அவன் இறையை கூட நாடத் தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்துப் போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

பலர் எண்ணலாம் உலகில் ரீதியான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே? என்று அதை வாதத்திற்கு ஒப்புக் கொள்ளலாமே தவிர நடைமுறையில் அது சாத்தியம் என்று கூற இயலாது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளோ அல்லது எமது வழிகாட்டுதலோ அல்லது இயற்கையாக மாறிவரும் தசா புத்தியாலோ சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக என்னிடம் வந்து குருதேவா முன்பை விட இப்பொழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாக இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம்? என்று யாராவது கேட்கப் போகிறார்களா? இல்லை. அடுத்தது உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நோக்கித்தான் மனித மனம் செல்லும். எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஒவ்வொரு மனிதன் உலகில் உலகியல் ரீதியாக முன்னேற்றம் சுகம் என்று எண்ணுகிறானோ அது வெறும் மாயை கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி அவன் மனம் சென்று விடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தை இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையோ மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது. இவைகள் வெறும் வாதத்திற்கு தான் உதவும். உண்மை அது அல்ல.

எனவே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாட கடமைகளை செய்வது போல நாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை எல்லாம் விட்டு பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி தானுண்டு. தன் கடமையுண்டு. பக்தியுண்டு. தர்மம் உண்டு. சத்தியம் உண்டு என்று என் வழியில் திடமாக வந்து கொண்டே இருந்தால் காலப்போக்கில் அவன் எதையெல்லாம் பிரச்சனை என்று எண்ணுகிறானோ அவைகள் எல்லாம் தீர்ந்தது கூட அவனுக்கு தெரியாமல் அதை தாண்டி அழைத்து வந்து விடுவோம்.

மீண்டும் மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். சத்தியம் தர்மம் பத்தி இதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டால் எல்லோரும் சுகமாக வாழலாம் ஆசிகள்.

முன்னுரை

சிவனின் 64 வடிவங்கள்

சிவவடிவங்கள் அறுபத்து நான்கு என்பவை இறைவனான சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களாகும். இதனை சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் அழைப்பார்கள். இறைவனுக்கு 5 முகங்கள் உள்ளது. ஈசானம் தத்புருடம் அகோரம் வாமதேவம் சத்யோசாதம் என்ற இந்த ஐந்து முகங்களிலிருந்து முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவை மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை

ஈசானம் – 1. சோமாஸ்கந்தர் 2. நடராஜர் 3. ரிஷபாரூடர் 4. சந்திரசேகரர் 5. கல்யாணசுந்தரர்
தற்புருஷம் – 1. பிட்சாடனர் 2. காமசம்ஹாரர் 3. சலந்தராகரர் 4. கால சம்ஹாரர் 5. திரிபுராந்தகர்
அகோரம் – 1. கஜசம்ஹாரர் 2. வீரபத்திரர் 3. தட்சிணாமூர்த்தி 4. நீலகண்டர் 5. கிராதர்
வாமதேவம் – 1. கங்காளர் 2. கஜாரி 3. ஏகபாதர் 4. சக்ரதானர் 5.சண்டேசர்
சத்யோசாதம் – 1. இலிங்கோத்பவர் 2. சுகாசனர் 3. அர்த்தநாரீஸ்வரர் 4. அரியர்த்த மூர்த்தி 5. உமாமகேஸ்வரர்

இந்த இருபத்தியைந்து மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கஜாரி, கஜமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, ஹரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சம்ஹாரர், யக்ஞேசுவரர், உக்கிரர் என சிவனின் வடிவங்கள் பலவற்றை புராணங்கள் கூறுகிறது.

அஷ்டாஷ்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும் அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்குச் சிவபெருமான் அருளியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈக்காடு இரத்தினவேலு என்பவரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த 64 ரூபங்களைப் பற்றி பாம்பன் சுவாமிகள் அட்டாட்ட விக்கிரக லீலை எனும் பதிகம் செய்துள்ளார். இந்த அறுபத்து நான்கு சிவவடிவங்களும் 1. போக வடிவங்கள் 2. யோக வடிவங்கள் 3. கோப வடிவங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

போக வடிவம்:

  1. உமாமகேஸ்வரர்
  2. சந்திரசேகரர்
  3. ரிஷபாரூடர்
  4. மாதொருபாகர்

யோக வடிவம்:

  1. தட்சிணாமூர்த்தி
  2. ஞான தட்சிணாமூர்த்தி
  3. யோக தட்சிணாமூர்த்தி
  4. வீணா தட்சிணாமூர்த்தி
  5. சுகாசனர்

கோப வடிவம்:

  1. கங்காளர்
  2. வீரபத்திரர்
  3. திரிபுராந்தக மூர்த்தி
  4. கஜயுக்த மூர்த்தி
  5. காலந்தக மூர்த்தி

இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும் பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவ வடிவங்களை உருவம் அருவம் அருவுருவம் என்று மூன்று வகைப்படுத்தலாம்.

உருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் இருக்கின்ற சிலை மூர்த்திகளே உருவம் ஆகும்.

அருவ நிலை: உருவமே இல்லாத ஒளி ஒலி வடிவத்திலுள்ள சிவசக்தியின் நிலையே அருவம் ஆகும்.

அருவுருவ நிலை: தலை உடல் கை கால் என உறுப்புகள் எதுவும் இல்லாமல் சிவலிங்க வடிவத்தில் இருப்பதே அருவுருவ நிலை ஆகும்.

இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 563

கேள்வி: சில தேவாலயங்களில் இறந்தவர்களை புதைத்து வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதனைப்பற்றி:

பொதுவாக இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. போதிக்கவுமில்லை. இவையெல்லாம் தவறான வழிகாட்டுதலால் ஏற்பட்ட விஷயம். இவைகளை குறைத்துக் கொள்வது மனித சமுதாயத்திற்கும் பூமி வளத்திற்கும் நல்லது. நன்றாக கவனிக்க இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. தாவரங்களுக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இரையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப்பெரிய புனிதமான ஆத்மாக்கள் சிலரை வேண்டுமானால் இவ்வாறு செய்யலாம். இருந்த போதிலும் அக்னிகாரியம் என்பதே இந்த இடத்தில் பொருத்தமானதாகும். மற்ற விளக்கங்களை மீண்டும் தக்க காலத்தில் உரைப்போம் ஆசிகள்.

பாபநாசநாதர் திருக்கோயில் 1

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்த பொதிகை மலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் பாபநாசநாதர். லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மாள் உலகம்மை விமலை உலகநாயகி. சுவாமி சன்னதிக்கு வடக்கில் உலகம்மை சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இடம் பாபநாசம் திருநெல்வேலி. புராண பெயர் இந்திரகீழ சேத்திரம். தலவிருட்சம் முக்கிளா மரம். தீர்த்தங்கள் தாமிரபரணி வேத தீர்த்தம் பைரவ தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் முதன்மையான இக்கோயில் முதல் கிரகமான சூரியனுக்கு உரியது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் விமலை சக்தி பீடம் ஆகும். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர் சுப்பிரமணியர் தட்சிணாமூர்த்தி துர்க்கை நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும். அகத்தியர் லோபாமுத்ரையுடன் அருள் பாலிக்கிறார்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம் இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவர் பாபநாசநாதர் என்று பெயர் பெற்றார்.

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்தாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீது பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறி மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிட்டார். இப்பாதகச் செயலைச் செய்தவரை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

நமச்சிவக்கவிராயர் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடையவர் ஆகவே அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து அவருடைய பக்தியை உலகறியச் செய்ய எண்ணி அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர் பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக் கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி அவரை விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன் மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

இத்தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும் பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக் யஜுர் சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும் அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்தது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடித்து இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சம நிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வீரப்ப நாயக்கரால் கிபி1609-23 யாகசாலை கொடிமரம் நடராசர் மண்டபம் கட்டப்பட்டன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 562

கேள்வி: இராஜராஜ சோழன் கருவூரார் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது?

அப்படியென்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ. நாங்களே ஆலோசனைகள் கூறுவதால் இங்கே வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன? அல்லது இதுவரை செய்த பாவத்தை எல்லாம் நிறுத்திவிட்டு மகா முனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிறானா? இந்த இடத்தில் கேட்கும் பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு பிறகு இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இங்கு வருகின்ற இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படித்தான் வாழ்கிறார்கள். அப்படித்தான் கருவூரார் எதைக் கூறினாலும் எது தனக்கு சாதகமோ தன்னால் இயலுமோ அதை ஏற்றுக் கொள்வதும் எது மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ அதை பின்பற்றித்தான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு சிவபெருமான் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி அவன் மதியிடம் அடங்கி இருக்கிறதோ அவன் தான் எமது சொல்லை ஏற்பான்.

புண்ணியம் செய்கின்ற மன்னர்களுக்கு அந்த புண்ணியத்தால் சில அரிய பெரிய சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்வம் எப்படியோ புண்ணியமும் அப்படிதான். மிகப்பெரிய புண்ணியம் ஒரு மனிதனுக்கு பரிபூரண ஞானத்தை மிக இளவயதிலேயே அதாவது எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தி நல்லவனாக மாறுவதுகூட ஆதியில் அவர்களுக்கு பாவம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. பரிபூரண புண்ணியம் என்றால் அவன் சிறிய பாவத்திற்காகவோ அல்லது இறைவன் கட்டளைக்காகவோ மனிதனாக பிறவியெடுக்க நேரிடும். அப்படி பிறவியெடுக்கும்பொழுதே ஒருவன் துறவியாக பிறவியெடுத்தால்தான் அவனுக்கு முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் ஓரளவு ஒப்புக்கொள்வோம். மற்றவர்கள் எல்லாம் புண்ணியத்தால் உலகியல் சுகங்களை நுகர்ந்துகொண்டே பிறகு எனக்கு இறை பக்தி இருக்கிறது. எனக்கு இறையருள் இருக்கிறது. என்னிடம் இந்த அளவு வளம் இருப்பதால் நான் மிகப்பெரிய ஆலயம் கட்டப்போகிறேன் என்று கூறக்கூடிய நிலையில்தான் இருக்கக்கூடியவர்கள். எனவே சராசரி மனிதர்களைப் பார்க்கும்பொழுது ழுது அவன் மிகப்பெரிய புண்ணியவான். அதற்கு முன்பு அதற்கு முன்பும் மிகப்பெரிய சிவபக்தன். சிவனுக்காக தொண்டு செய்து, செய்து. செய்து தன் ஆஸ்திகளையெல்லாம் இழந்தவன். சிவன் மீது மிகப்பெரிய பிரியத்தை வளர்த்தவன். அந்த வழியில் இறைவன் அருளால் மாபெரும் சக்ரவர்த்தியாக பிறவியெடுத்து வழக்கம்போல் சக்ரவர்த்திகள் என்னென்ன தவறுகள் செய்வார்களோ அதையெல்லாம் செய்து வாழ்ந்தவன்தான். என்ன ? ஏனைய சக்ரவர்த்திகள் இறக்கும் தருவாயில் கொஞ்சம் திருந்துவார்கள். இவன் தன் வாழ்வின் ஒரு) பகுதிக்கு மேல் திருந்தி ஒரு துறவிபோல் வாழ முற்பட்டான். அவ்வளவே. ஒரு தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கலாம். அந்த தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்ற அந்த தீபம் முன்வரலாம், அதிலுள்ள சுடரும் முன்வரலாம். ஆனால் இன்னொரு தீபம் அதற்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். என்ன ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்? நல்ல நிலையில் ஒரு திரி இருக்கவேண்டும். அதிலே தூய எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது

தூய நெய் இருக்கவேண்டும். நெய் எப்படி இருக்கவேண்டும்? இளகிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த தீப சுடர் அதில் பற்றும். வெறும் அகல் விளக்கு இருந்தாலும், வெறும் திரி இருந்தாலும் அல்லது திரி இல்லாமல் எண்ணெய் இருந்தாலும் அல்லது எண்ணெயும், திரியும் இருந்து அகல் இல்லாமல் இருந்தாலும் அங்கு பரிபூரண சுடர் பற்றாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பல மன்னர்களும் வாழ்ந்தார்கள். பல மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும், மீண்டும் பிறவி கொடுக்கப்பட்டு, நிறைய பக்குவம் கொடுக்கப்பட்டுதான் இறுதியில்தான் இறைவன் சாயுச்சம், சாரூபம் போன்ற நிலைகளையெல்லாம் காட்டுவார்.

இன்னொரு வினாவை யோசித்துப் பார்த்தாயா? நீ உன் பூஜை தடத்தை அலங்கரிக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து வணங்கவேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ நேர்மையாக உழைத்த தனத்தைக் கொண்டு ஒரு சிற்பியை அழைத்து “எனக்கு இன்ன வகையான சிவலிங்கம் வேண்டும் அல்லது இன்ன வகையான பூஜை பொருள்கள் வேண்டும்” என்று உன் பூஜை இடத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இன்னொருவன் அலங்கரித்து வைத்துள்ள பூஜை தடத்தை மிரட்டி எடுத்து வந்தால் அதற்கு என்ன பெயர்? அதற்கு என்ன பொருள் கூறுவது? இன்னொரு தேசத்தையெல்லாம் போர் என்ற பெயரில் கொள்ளையடித்து அந்த பொருள்களைக் கொண்டு ஆலயம் கட்டினால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா? அது நேர்மையான போராகவே இருக்கட்டும். அங்கு உள்ளவர்கள் தொல்லை கொடுக்கும் மனிதர்களாகவே இருக்கட்டும். ஒரு தேசத்தில் தொல்லை கொடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்களா? நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? போர் என்றால் தீயவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா? அங்குள்ள நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? எனவே போரால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பலகோடி பிறவிகள் எடுத்தாலும் தீராது அப்பொழுதும் அவனுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டது. ”நீ அறிந்தும், அறியாமலும் புகழுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றிருக்கிறாய். அந்த தோஷம் பிறவிதோறும் பற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மிகப்பெரிய சிவாலயம் அமைத்தால் நல்லது’ என்று போதிக்கப்பட்டது. எனவேதான் தன் தோஷம் நீங்கவேண்டும் என்றும், தனக்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றும் அவன் செய்த செயல். ஆனாலும் இப்படியொரு செயலை செய்ததற்கு நாங்கள் அவனை பாராட்டுகிறோம்.

யானைகளை ஏன் பழக்கவேண்டும்? என்பதுதான் எமது கேள்வி. (ஜனகர், தசரதர் போன்ற மன்னர்களிடமும் யானைகள் இருந்தன. அப்படியென்றால் அவர்கள் செய்தது பாவம் இல்லையா). எல்லா பாடங்களிலும் தேர்வு பெறக்கூடிய நிலையில் யாருமே இருந்ததில்லை என்பதேயே இது குறிக்கிறது.

பகவானின் அம்சமாக இராமபிரான் இருந்தாலும் அந்த நிலை என்பது வேறு. அதாவது ஒரு கருடன் மீது மகாவிஷ்ணு ஏறி அமரும்பொழுது கருடனுக்கு அது பாரமாக இருக்குமா? துன்பமாக இருக்குமா? துயரமாக இருக்குமா? சுகமாக இருக்குமா? (சுகமாக இருக்கும்) எனவே பசுவான் செய்யும் செயல்களையெல்லாம் மனிதன் தன் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது. சிறு குழந்தை பெரியவர்கள் செய்கின்ற செயலை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல. இஃதொப்ப நிலையிலே பகவானின் அம்சமான ஸ்ரீ இராமரோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவருடைய ஏக தாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதுதானே? அதே சமயம், சிற்றன்னை (ஸ்ரீ இராமரை) அழைத்து * நாடு வேண்டாம். காடு ஏற்றுக்கொள் என்றவுடன் புன்முறுவலோடு சென்றாரே. அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ள மனித மனம் விரும்பாது. அதே சமயம் மன்னர்கள் தம், தம் படைபலத்தை வளமாக்க, பலமாக்க விலங்குகளை பயன்படுத்துகின்ற முறைகளும் எம்மைப் பொறுத்தவரை ஏற்க முடியாத முறைதான். பகவானே செய்தாலும் நாங்கள் குற்றம் என்றுதான் கூறுவோம்.