சிவ வடிவம் – 44. தட்சயக்ஞஷதமுர்த்தி

உலகை படைக்க உதவியாக தட்சனை பிரம்மா படைத்தார். தட்சன் பிரம்மாவின் மானச புத்திரன். தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் இருந்து பார்வதி தேவியை மகளாக அடைந்தான். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தாட்சாயிணி பெரியவள் ஆனதும் சிவபெருமானைக் கண்டதும் தனது மாயை மறைந்து அவருடன் இணைந்து விட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் ஈசனுடன் இணைந்து விட்டாள் என்ற கோபத்தில் சிவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக் குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான்.

சிவபெரிமானின் துணைவியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணி தனது தந்தையான தட்சனிடம் நியாயம் கேட்டு வந்த போது அவளை மதிக்காமல் தட்சன் பேசவே தாட்சாயணி யாகத் தீயில் வீழ்ந்து யாகத்தை தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமான் கோபத்தில் ருத்திர தாண்டவம் ஆடி தனது அம்சமான வீரபத்திரரை அழைத்து தட்சனை வதம் செய்ய உத்தர விட்டார். வீரபத்திரர் தட்சனை அழிக்க யாக சாலை சென்று அங்கிருந்த தேவர் முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார். வீரபத்திரிரன் பூத கணங்கள் தட்சன் இருப்பிடம் யாகசாலை கோட்டை மதில் என அனைத்தையும் அழித்தனர். தட்சனின் சிரசை தம் கைவாளினால் வெட்டி வீழ்த்தினார் வீரபத்திரர். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கு ஏற்ப மாண்ட அனைவரும் உயிர் பெற்றனர். தட்சனை பிழைக்க வைக்கும்படி பிரமன் வேண்ட உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். தட்சனின் ஆணவம் அகன்று சிவபெருமானை சரணடைந்தான். தட்சன் பார்வதி சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான். சிவனது அம்சமாக இருக்கும் வீரபத்திரருடன் மாண்ட அனைவரையும் பிழைக்க வைத்து அருள் செய்த பார்வதியும் ஆட்டுத் தலையுடன் இருக்கும் தட்சன் ஆகிய மூவரும் இருக்கும் கோலமே தட்சயக்ஞஷத மூர்த்தியாகும்.

தரங்கம்பாடி – செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 607

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இயம்புங்கால் ஒரு மனிதனின் நல்ல எண்ணங்கள் செயல்கள் ஒரு ஆரோக்கியமான அதிர்வலைகளை அவனைச் சுற்றி உண்டாக்கும். கற்றாரை கற்றாரே காமுருவர் என்பது போல நல்லாரை கண்டவுடன் சந்தோசமும் மீண்டும் மீண்டும் இவனுடன் பழக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். நல்ல சிந்தனையற்ற ஒரு மனிதன் நல்லவரோடு பழகப் பழக காந்தமற்ற இரும்பு காந்தத்தோடு சேர்ந்து தானும் காந்தமாவது போல அவனுக்குள் நல்ல எண்ணங்கள் இடம் மாறும். ஒரு தனவானிடம் எவ்வளவு நாள் பழகினாலும் அந்த தனம் இவனிடம் வந்து விடாது. அழகான தோற்றம் உடையவனிடம் அழகற்ற ஒருவன் பல ஆண்டு பழகினாலும் அந்த அழகு இவனை வந்தடையாது.

ஆனால் நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனோடு பழக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த அதிர்வலையின் தாக்கத்தால் மெல்ல மெல்ல இவனிடம் வந்தடையும். எனவே சதா சர்வ காலமும் மனதிலேயே சினமும் வாயிலேயே தகாத வார்த்தைகளும் பிறரை பற்றி குறை கூறுவதுமாக இருந்தால் பிறகு அதுவே இயல்பாகி சமாதானமாகி பிறகு அதுதான் சரி என்றாகி பிறகு மனமும் புத்தியும் வாக்கும் எண்ணமும் செயலும் அமைந்துவிடும் என்பதால் சதாசர்வ காலமும் இறை சிந்தனையில் மனம் லயிக்க பயிற்சி எடுக்க வேண்டும். இதுபோல் நிலையை உயர்த்த உயர்த்த உயர்த்த உயர்த்த மனம் பக்குவமடைந்து பிறகு அரிவை என்ற நிலை தாண்டி சித் என்ற உன்னத நிலை அறிவு அவனுள் மலரிடத் துவங்கும். சித் எனப்படும் அந்த சித்தம் தெளிந்தால்தான் உண்மையான சித்தர்களின் வழி வாக்கு யாம் எதை ஏன் எந்த காலகட்டம் உரைக்கிறோம் என்பது புலப்பட துவங்கும். எனவே பாவத்தை நீக்குவதற்கு போராட வேண்டும். பாவம் செய்யாமல் இருப்பதற்கு போராட வேண்டும்.

நந்தியும் அனுமனும்

சைவத்தில் போற்றப்படும் நந்தி பகவானும் வைணவத்தில் போற்றப்படும் அனுமனும் ஆரத்தழுவி கொள்ளும் சுதை சிற்பம். இடம் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருவரகுணமங்கை கோயில்.

சிவ வடிவம் – 43. அகோர அத்திரமூர்த்தி

சத்ததந்து என்றும் மன்னன் சிவனருளால் பல வரங்களைப் பெற்று தனக்கு நிகர் எவருமில்லை என ஆடம்பரமாகவும் ஆணவத்துடனும் வாழ்த்து வந்தான். சிவனருளால் தான் அனைத்தும் தனக்கு கிடைத்தன என்பதை மறந்து சிவபெருமானை அழைக்காமல் பிரம்மன் முதலிய தேவர்களை அழைத்து யாகத்தை நடத்த தீர்மானித்தான். பிரம்மா இந்திரன் முனிவர்களும் சத்ததந்துவிடம் சென்று சிவபெருமானை வணங்கித்தான் நீ குறைவில்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் பெற்றாய். மேலும் தக்கன் என்பவன் இதுபோல் சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தி அதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானான். ஆகவே நீயும் அதே தவறை செய்யாதே. அவரை கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிவுறை கூறினார்கள். ஆனால் இவர்கள் எனக்கு அறிவுரை கூறலாமா? என்று ஆணவம் கொண்ட சத்ததந்து மிகுந்த கோபம் கொண்டு புத்திமதி கூறியவர்களை தண்டித்தான். தண்டனைகளுக்கு பயந்து தேவர்களும் முனிவர்களும் யாகத்தை செய்ய தொடங்கினார்கள்.

இதனை அறிந்த சிவபெருமான் மண்டலத்தை தேராக்கி உலகை சக்கரமாக்கி அக்னியை வில்லாக்கி சந்திரனை நாணாக்கி வருணனை பாணமாக்கி முருகனை தேரோட்டுபவனாக்கி போர்க் கருவிகளுடன் தன்னருகில் இருந்த வீரபத்திரரை நோக்கி சத்ததந்துவை அழித்து வரும்படி உத்தரவிட்டார். அதற்கு அடிபணிந்த வீரபத்திரர் யாகம் நடைபெறும் இடத்தை அடைந்தார். இச்செய்தி தெரிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தார்கள். வீரபத்திரர் தனது வர்ண அஸ்திரத்தால் வேள்வியை அழித்தார். எதிர்த்து வந்த சத்ததந்துவை அகோர அஸ்திரத்தினால் கொன்றார். பின் சிவபெருமானிடம் சரணடைந்தார். அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து வேள்வியை அழித்துக் கொன்ற வடிவமே அகோர அத்திர மூர்த்தி எனப் பெயர் பெற்றது. இவரது உருவம் திருவெண்காட்டில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 606

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு உரைக்கின்றோமப்பா. இது போல் எந்த மாந்தனாக இருந்தாலும் இயம்புங்கால் இறை வணங்கி அறம் தொடருவதோடு சத்தியமும் கடுமையாக கடைபிடிக்கத்தான் நல்வாழ்வு. அதனைத் தொடர்ந்து முன் ஜென்ம பாவங்கள் குறைவதும் புண்ணியங்கள் சேர்வதுமாக வாழ்வு இருக்குமப்பா. அப்பனே இவையோடு மட்டுமல்லாமல் வெறும் தர்மமும் பூஜையும் சத்தியமும் மட்டுமல்லாமல் ஒரு மனிதன் இவ்வாறெல்லாம் வாழத் தொடங்கும் பொழுது அதுபோல் வழியிலே தடையின்றி செல்லும் பொழுது அந்த மாந்தனுக்கு பல்வேறு ஏளனங்களும் அவமானங்களும் நேரிடும். அது போல காலத்திலேயே அன்னவன் சினம் கொள்ளாமலும் பிறர் இவன் மனதை வருந்தும் வண்ணம் நடக்கும் பொழுது மிக மிகப் பொறுமையோடும் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இது வெறும் வார்த்தை தான் என்று எண்ணி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தைக்கு தான் பொருள் என்று மனித சமுதாயமே ஒரு பொருளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த பொருளை பிடித்துக் கொண்டு இவனும் மன வேதனைப்படுவது என்பது தேவையற்ற ஒன்றாகும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் உயர்வாக எண்ணினாலும் தாழ்வாக எண்ணினாலும் அது அவனுக்கு மன சங்கடத்தை தந்தாலும் அவன் உண்மையிலேயே நல்லவனாக நடந்திருக்கும் பொழுது அவனை வேண்டுமென்றே இடர்படுத்தி அவன் மனம் புண்படும் வண்ணம் பேசும் பொழுதும் அவனோடு வேறு மனிதனையும் பழக விடாமல் தடுக்கும் பொழுதும் அறிய வேண்டும் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் வாழ்விலே சர்வ சாதாரணம் என்று எண்ணி அமைதியாக இருக்க பழக வேண்டும். கர்மா வசப்பட்டு சிக்கித் தவிக்கும் மனிதனானவன் சுய சிந்தனை அறிவு எல்லாம் இழந்து சதா சர்வ காலமும் தன்னுடைய சுகத்தை மட்டும் பிடிவாதமாக வைத்துக் கொள்ளும் பொழுது அது கட்டாயம் ஒருவதலை பட்சமாக தான் இருக்கும்.

தத்தாத்ரேயர்

பிரம்மா விஷ்ணு சிவனின் தலை இணைந்து மூன்று தலைகளும் ஆறு கைகளுடன் அருளுகிறார். பிரம்மாவின் குறியீடாக ஜெபமாலை விஷ்ணுவின் குறியீடாக சங்கு மற்றும் சக்கரம் சிவனின் குறியீடாக திரிசூலம் மற்றும் உடுக்கை ஆகியவை ஆறு கைகளில் வைத்துள்ளார். இவரின் ரூபம் பெரும்பாலும் தனிமையில் வாழும் ஒரு சந்நியாசி போலவும் இவரைச் சுற்றி நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இடம் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல் திருச்சி.

அனுக்கிரக மூர்த்தி

தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் மதுரை மீனாட்சிஅம்மன் கோவில்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 605

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தன் இன்று பகர்ந்தால் நாடு முழு இனம் என்பது கிடையாது. வேறு தேசத்தில் இருந்து இங்கும் இங்கிருந்து வேறு தேசங்களுக்கும் சென்று மனிதர்களோடு மனிதர்களாய் பணியாற்றுவார்கள். இங்கு மனிதனாகப் பிறந்து தன்னுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர்ந்து கொண்ட பிறகு எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். இதுதான் சொந்த இடம் என்று சித்தர்களால் சொல்ல இயலாது. ஒரு சித்தர் என்பவரின் ஆத்மா உயர் நிலையில் இருக்கக் கூடிய ஒரு புண்ணிய ஆத்மாதான். ஆக எப்படிப் பார்த்தாலும் அந்த மேலுலகம் இறை உலகத்திலிருந்து வரக்கூடியவர்கள் தான் சித்தர்கள். போகருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது தெரியுமா? போகர் தான் இயேசுவாகப் பிறந்தார். இப்பொழுது சொல் போகருக்கு சீன தேசமா? இந்திய தேசமா? அல்லது வெளி தேசத்தில் வாழ்ந்த சிலுவைக்காரனா? அல்லது கைலாயமா? பழனியில் தான் போகரை காணலாம் என்று சொன்னால் அது தவறு. பழனியிலும் காணலாம் என்றால் சரி.