ராமர் பரதனிடம் பேச ஆரம்பித்தார். தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய். மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் சொல் என்றார். பரதன் பல தடவை பேச ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை காட்டுக்கு அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கி இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீள்வார். சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் காப்பாற்றப்படும்.
சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைப்போல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக்குங்கள். உங்கள் பாதங்களில் வீழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசனானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மறுத்துவிடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்துக்கொண்டான் பரதன்.
பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடம் எள் அளவும் குறைகளை நான் இதுவரை கண்டதில்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும் அவர்களுடைய உரிமை. அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் அயோத்தி திரும்பிவருவேன் என்றார் ராமர்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் நடராஜர் சிலையை அங்கே வைத்து ஆராய்ச்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார் ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்டனர்.
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால் அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள் என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார் உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர். காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன் மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டிவிடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும் இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை. காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில் தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது. இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும். அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன். அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.
ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய தர்பணங்களை முறைப்படி செய்தார்கள். ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமத்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று வசிஷ்டரரும் அவர்களுடன் கிளம்பினார். வழியில் மந்தாகினி ஆற்றங்கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும் வைத்திருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள் அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்றார் வசிஷ்டர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். சுமத்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.
நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுக போகத்துடன் வாழ்ந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தியற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தலையில் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கிப்போனாள். சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாகப் பிறந்து அயோத்திக்கு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடியையில் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை ஒட்டி ஒருவரை ஒருவர் தங்கள் கண்களில் நீர் வழிய அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்
ராஜ குமாரர்கள் பட்டத்து அரசிகள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன் படைகள் அனைத்தும் அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்கணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய வணக்கத்தை செலுத்தினார்கள். வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகின்றார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவது போல் நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன. மற்ற கோள்கள் அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும் அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும் 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள் 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.
கிரகங்கள் 9 ராசி கூட்டங்கள் 12 நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டினால் 9+12+27=48 இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை. இதன் காரணமாகவே தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிட்டால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும் என்பார்கள். மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வழிபாடுகளும் வேண்டுதல்களும் அவர்களின் சிரத்தைக்கு ஏற்ப நிச்சயம் கைகூடும்.
ராமரிடம் பரதன் பேச ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் தகுதியற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அரசனாவேன். தர்மத்தை மீறி சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும். பல தலைமுறைகளாக இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன் கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்ய அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.
ராமர் பேச ஆரம்பித்தார். கேகய நாட்டில் இருக்கும் நீ அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும் யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கறாய் என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். தாயார் மூவரின் நலம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா சொல் இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.
நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். பற்பல வேள்விகளை செய்தவரும் மாவீரராய் திகழ்ந்தவரும் சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரன் வரும் போது நீங்களும் அவனுடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரன் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.
ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் சத்ருக்கனனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் லட்சுமணனும் செய்து முடிக்கவேண்டும். தாங்கள் வருந்தவேண்டாம். நீங்களே எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.
வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யாரல் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது பிராணனைத் தாங்குவது. அதை யார் சமைக்கிறார்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பது முக்கியம். உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
அர்த்த தோஷம்
நிமித்த தோஷம்
ஸ்தான தோஷம்
ஜாதி தோஷம் (இது மனித ஜாதியை குறிப்பது அல்ல. சாத்வீக உணவை குறிக்கும்)
சம்ஸ்கார தோஷம்
அர்த்த தோஷம்
அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும். பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். தவறு செய்து விட்டோமே இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். பணத்தாசை பிடித்து தவறு செய்யும் ஒருவரிடம் உணவு அருந்தினால் வருவது அர்த்த தோஷம் ஆகும்.
நிமித்த தோஷம்
உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதோடு நேர்மையானவராகவும் அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் திரௌபதி நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் அம்பின் வழியாக வெளியேறும் போது நான் பரிசுத்தவனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது என்று கூறினார். தீய எண்ணத்தோடு இருப்பவன் அளிக்கும் உணவு சாப்பிட்டால் தீமையான எண்ணங்களையே உருவாக்கும் இது நிமித்த தோஷம் ஆகும்.
ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும் இது ஸ்தான தோஷம் ஆகும்.
ஜாதி தோஷம்
மனிதனுக்கு சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் என்று மூன்று குணங்கள் உள்ளது. சாத்வீக உணவாக உட்கொள்ள வேண்டும். சாத்வீக உணவு இல்லை என்றால் அது ஜாதி தோஷம் ஆகும்.
சாத்வீக குணம் – உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால் நெய் அரிசி மாவு பருப்பு போன்றவை சாத்வீகமானவை. இதனை சாப்பிட்டால் இறைஉணர்வு. மனஅடக்கம், புலனடக்கம், சகிப்புத் தன்மை, விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு அச்சப்படுதல், தானம், பணிவு, எளிமை ஆகியவை கிடைக்கும். சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.
ரஜோ குணம் – புளிப்பு உரைப்பு உப்பு உள்ளவை ராஜோ குணங்கள் கொண்ட உணவாகும். இந்த உணவை சாப்பிட்டால் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகிய ரஜோ குணங்கள் வரும். ராஜோ உணவு உலகப்பற்று உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.
தாமச குணம் – பூண்டு வெங்காயம் மாமிசம் முட்டை போன்றவை தாமச உணவாகும். இதனை சாப்பிட்டால் சோம்பலும் ராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தாமச உணவு தீய குணத்தை வளர்க்கிறது.
சம்ஸ்கார தோஷம்
தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.
இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். அப்போது தான் மனம் அன்புடனும் தெளிந்த நல்அறிவுடனும் சலனமில்லாமலும் இறை சிந்தனையுடனும் இருக்கும். தானே சமைத்த உணவு தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
ராமர் லட்சுமணனிடம் தொடர்ந்து பேசினார். பரதன் இப்போது இங்கே ஏன் வருகின்றான் என்பதை நான் அறிவேன். பரதன் எள் அளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்கும் தீமை செய்யும் எண்ணம் கூட இது வரை பரதனுக்கு வந்தது இல்லை. ராஜ்யத்தை எனக்கு கொடுத்து விடுவதற்காகவே வந்து கொண்டிருக்கின்றான். கைகேயின் மேல் கோபம் கொண்டும் தந்தையை சமாதானம் செய்தும் என்னை அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றான் பரதன் என்றார் ராமர். பரதனைப்பற்றி நீ கோபமாக பேசியதெல்லாம் அதர்மம் அப்படி பேசக்கூடாது. ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆசை உன்னிடம் இருக்கின்றதா நீ சொல். பரதன் வந்ததும் அவனிடம் சொல்கிறேன். லட்சுமணனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கின்றது. அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிடு என்று சொல்கிறேன். இந்த வார்த்தையை கேட்டவுடன் பரதன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ராஜ்யத்தில் உன்னை அமர வைத்துவிடுவான் என்று ராமர் லட்சுமணனிடம் கூறினார்.
லட்சுமணன் வெட்கத்தில் தலை குனிந்து ராமரின் அருகில் சென்று கைகூப்பிய வண்ணம் அமர்ந்தான். நமது தந்தையார் வந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்றான் லட்சுமணன். ராமர் கூட்டத்தை பார்த்தார். நாம் இந்த காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்று எண்ணி நம்மை அழைத்துப்போக தந்தையாரும் இந்த கூட்டத்தில் வந்திருக்கலாம். ஆனால் சக்கரவர்த்திக்கு உண்டான வெண்கொற்றக் குடையை காணவில்லை. ஆகவே தந்தை வந்திருப்பது சந்தேகமே என்றார் ராமர்.
உறவினர்களையும் படைகளை தூரத்தில் நிறுத்திவிட்டு புகை கிளம்பும் இடத்தில் குடில் ஏதும் இருக்கின்றாதா என்று பார்த்து வருமாறு சில வீரர்களை அனுப்பினான் பரதன். புகை வரும் இடத்தில் குடில் இருப்பதை பரதனிடம் உறுதி செய்தார்கள் வீரர்கள். பரதன் படைகளை அங்கேயே இருக்குமாறு உத்தரவிட்டு சிலருடன் மட்டும் ராமர் இருக்குமிடம் சென்றான். புல் தரையில் அமர்ந்திருந்த ராமரை கண்டதும் பரதன் அண்ணா என்று கதறியபடியே ஓடி வந்து ராமரின் காலடியில் வீழ்ந்தான். அண்ணா என்ற வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விம்மி அழுதான். பரதனின் பின்னே சுமந்திரனும் குகனும் வந்து சேர்ந்தார்கள். தபஸ்விகளுக்கன உடை அணிந்தும் உடல் மெலிந்தும் இருந்த பரதனை தூக்கிய ராமர் பரதனை அணைத்துக் கொண்டார். தம்பி அயோத்தியில் தந்தையை தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகுதூரத்தில் இருக்கும் வனத்திற்கு வரலாமா? ஏன் இது போல் உடல் இளைத்து இருக்கிறாய் என்று கேட்டார். பரதன் பேச்சு வராமல் அழுதபடியே இருந்தான். பரதனை மனநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ராமர் பரதனிடம் பேசினார். நமது ராஜ்யம் எப்படி இருக்கின்றது. தந்தை தசரதர் தாய் மூவர் மற்றும் நமது உறவினர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றார்கள் என்று கேட்டார் ராமர்
முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள். தண்டம் என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து T அல்லது Y வடிவத்தில் இருக்கும். அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்தால் சுவாசம் திசை மாறும். வலது நாசி சுவாசத்தை நிறுத்த வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இது தான் தண்டத்தின் பயன். நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள். சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வேண்டும்? எப்போது தடம் மாற்ற வேண்டும்?
மூச்சுக்காற்று நாசியின் வலது புறம் ஓடுவது சூரிய கலை என்றும் இடது புறம் ஓடுவது சந்திரகலை என்றும் பெயர். சூரியகலையில் மூச்சுக்காற்று ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்றும் சந்திரகலையில் ஓடும் போது என்னென்ன சாதகங்கள் பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்த யோகியர்கள் முனிவர்கள் தங்களது சாதகங்கள் அல்லது யோக முறைகளை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் தண்டத்தை உபயோகித்து மூச்சுக்காற்றை மாற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்வார்கள்.
சாதகங்கள் அல்லது யோக காரியங்களை செய்யும் போது சாதகம் சரியாக கைவரவில்லை என்றால் அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். உடனே தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில் மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும். துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. இதனை செய்ய சூரியகலை சந்திரகலைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
லட்சுமணன் பெரிய மரத்தில் ஏறிப்பார்த்தான். பெரிய படை ஒன்று சித்ரகூட மலையை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தான். மரத்தில் இருந்து ராமருக்கு எச்சரிக்கை செய்தான். அண்ணா தேர்ப்படை யானைப்படை குதிரைப்படை காலாட்படை என்று ஒரு பெரிய படை பட்டாளம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மூட்டிய நெருப்பு புகையை வைத்துக்கொண்டு நம்மை நோக்கி வந்து கொண்டிருகின்றார்கள். உடனே நெருப்பை அணைத்து விட்டு சீதையை மலைக்குகையில் பத்திரமாக வைத்துவிட்டு கவசம் உடுத்திக்கொண்டு வில்லும் அம்பு கத்தி எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாராவோம் என்றான்.
ராமர் லட்சுமணனிடம் வந்து கொண்டிருக்கும் படையில் முதலாவதாக வரும் தேரில் எந்த நாட்டுக்கொடி இருக்கின்றது கவனித்துப் பார் என்றார். கொடியை பார்த்த லட்சுமணன் கோபமடைந்தான். அண்ணா தேரில் இருப்பது திருவாத்திக்கொடி நம்முடைய அயோத்தி நாட்டுக்கொடி. சூழ்ச்சியால் ராஜ்யத்தை பெற்றதோடு மட்டும் இல்லமால் எதிர்காலத்தில் நம்முடைய தொந்தரவு ஏதும் இருக்கக்கூடாது என்று நம்மை எதிர்த்து கொல்லவும் வருகின்றான் பரதன். இன்று கைகேயியின் மகன் பரதன் என் கையில் அகப்படுவான். அவனை நான் விடப்போவது இல்லை. அறநெறியில் இருந்து விலகிய அவனை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை கொல்ல வரும் பகைவனை நாம் கொல்வது பாவமாகாது. இங்கிருந்தே பரதனை எதிர்ப்போமா இல்லை மலை மீது நின்று கொண்டு எதிர்ப்போமா நீங்கள் சொல்லுங்கள். இவன் நமக்கு செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். பரதனை வென்று கைகேயியின் எண்ணத்தை முற்றிலும் அழித்துவிடலாம். இந்த வனத்தில் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்யப் போகின்றேன். வரும் படைகளை நீர்மூலமாக்குவேன். இந்த காட்டில் உள்ள மிருகங்களுக்கு இன்று நிறைய உணவு கிடைக்கப் போகின்றது எனக்கு உத்தரவு தாருங்கள் அனைத்து படைகளையும் அழித்து விடுகின்றேன் என்று தன்னையும் மறந்து கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தான் லட்சுமணன்.
லட்சுமணன் சொன்ன அனைத்தையும் கேட்ட ராமர் புன்சிரிப்புடன் அமைதியாக பேச ஆரம்பித்தார். லட்சுமணா நீ ஒரு வெற்றி வீரனாவாய். பரதனுடைய பெரும் படைகளையும் நிர்மூலமாக்குவாய் இதில் எந்த சந்தேகமும் இல்லை. முதலில் கோபத்தை விட்டு அமைதியாக சிறிது யோசனை செய்து பார். பரதனே நேரில் வருகின்றான் என்கிறாய். பரதனை எதிர்த்து வில்லுக்கும் அம்புக்கும் கத்திக்கும் வேலை ஒன்றும் இல்லை. தந்தையின் ஆணையை அழித்தும் பரதனை கொன்றும் ராஜ்யம் சம்பாதித்து நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது. உடன் பிறந்தவர்களை அழித்துவிட்டு கிடைக்கும் சொத்தானது விஷம் கலந்த உணவைப் போன்றது யாருக்கும் உபயோகப்படாது. யாரை சந்தோசப் படுத்துவதற்காக ராஜ்யத்தை சம்பாதித்து நாமும் சந்தோசமாக இருக்கின்றோமோ அவர்களையே அழித்துவிட்டு அந்த ராஜ்யத்தை அடைவதில் பயன் ஒன்றும் இல்லை. அதர்ம வழியில் கிடைக்கும் ராஜ்யம் நமக்கு வேண்டாம். நீயும் பரதனும் சத்ருக்கணனும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம் என்றார்.