வினாயக மூர்த்தி

சத்தீஸ்கரில் உள்ள தோல்கல் மலையில் அடர்ந்த வனத்தின் நடுவில் உள்ள மலையின் மேல் இந்த வினாயக மூர்த்தி அமர்ந்துள்ளார். 1000 ஆண்டுகள் பழமையானவர் இவர்.

சசிவேகாலு விநாயகர்

கர்நாடகாவில் உள்ள ஹேமகுடா மலையின் வழியில் உள்ள ஹம்பியில் மிகப் பெரிய உருவத்தில் விநாயகர் சிலை உள்ளது. இவருக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர். கன்னடத்தில் சசிவ் காலு என்றால் கடுகு விதை என்று பொருள். இது கடுகு விற்பவரால் செதுக்கப்பட்டதால் அந்த சிலைக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர் வந்தது.

விநாயகர் தனது துணையுடன்

திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவராக விநாயகர் தனது துணைவியான நீல வாணியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார். வட இந்தியாவில் விநாயகரின் துணைவிகளாக சித்தி புத்தி இருவர் இருப்பார்கள். ஆனால் விநாயகர் துணைவி நீல வாணியை இக்கோயிலை தவிர வேறு எங்கும் காண முடியாது.

வலம்புரி விநாயகர்

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லம் என்ற ஊரில் சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவையாகும். பாறை முகப்பில் காணப்படுகிறார் இந்த விநாயகப் பெருமான்.

விநாயகர் இடக்காலை மடக்கி வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் விரிந்த அழகான காதுகள் திண்டு போன்ற அமைப்பின் மீது வைத்து சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார்.

பத்து கை வினாயகர்

பத்துக் கைகள் கொண்ட நடனம் ஆடும் விநாயகரின் சிதிலமடைந்த இந்த சிற்பம் மத்தியபிரதேசம் கஜுராஹோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கபால விநாயகர்

மண்டை ஓடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் விநாயகரின் 13 ஆம் நூற்றாண்டு சிற்பம். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிங்கோசரி என்ற இந்து கோயிலில் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் லைடன் வோல்கன்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஹேரம்பா கணபதி

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் அங்கீராச முனிவரால் வழிபட்ட இக்கோயில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ளது. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஹேரம்ப கணபதி 11 வது ஸ்வரூபம். பிரதான வலது கையில் அபய முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இடது கையினால் ஐஸ்வர்யத்தை கொடுக்கிறார். மற்ற கைகளில் கயிறு ஜப மணிகள் மாலா (ருத்ராஷகா) கோடாரி சுத்தி அவரது உடைந்த தந்தஆயுதம் மாலை பழம் மற்றும் மோதகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார். வெண்மை நிறத்துடன் சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளார். அசுர குருவான சுக்ராச்சாரியார் தனது பார்வையை மீண்டும் பெறுவதற்காக இங்கு சிவனை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. இடம் வெள்ளீஸ்வரர் கோயில் மயிலாப்பூர் சென்னை.