அஜைக்க ஏகபாதர்

அஜ என்றால் பிறப்பில்லாதவர் என்றும் ஏகபாதர் என்றால் ஒரு காலுடையவர் என்றும் பொருள். ஒரு கால்களையுடைய இவர் பிறப்பில்லாத நிலையை அடைந்தார். இடம் பிகானேர் அருங்காட்சியகம் ராஜஸ்தான்.

இலகுலீசர்

சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை தோற்றுவித்தவர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் முதன் முதலில் தோற்றுவித்தவர். இவரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இவர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகக் கருதப்படுபவர். இவரது சீடர்கள் கௌசிகர் கார்கி கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபத சைவம் தமிழகத்தில் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வளரத் தொடங்கியது. இந்த சைவத்தை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்து உறங்கி சாம்பலில் நடனமாடி மாலைகளை அணிந்து கொள்வார்கள். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். சிற்பத்தில் லகுலிஷா நிர்வாண யோகியாக உள்ளார். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரிவேணி அருங்காட்சியகத்தில் உள்ளது.

திருநாளைப்போவார்

திருநாளைப்போவார் என அழைக்கப்படும் நந்தனார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச தில்லை நடராஜரின் திருவடிகளில் இரண்டரக் கலந்தார்.

தாய் தெய்வச்சிலை

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு அருகிலிருக்கிறது தாமோட்டூர் கிராமம். இங்குள்ள பசுமை படர்ந்த பயிர் நிலங்களுக்கு நடுவில் கம்பீராக வீற்றிருக்கிறது தாய்தெய்வச்சிலை. கோயில் இல்லை. கோபுரமும் இல்லை. சிலை வழிபாடு நடக்கிறது. 10 அடி உயரம் இருபுறமும் கைகள் போன்ற அமைப்பு வட்டமான தலைப் பகுதியுடன் தாய்தெய்வத்தின் தோற்றம் இருக்கிறது. பெண்களே வளமைக் குரியவர்கள். அதனாலேயே தாய்தெய்வம் என்று சங்க காலத்தில் பெண்களை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தச் சிலை சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையானதொரு பண்டைய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போவதாக சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.

தும்புரு

காசியபர் முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர் தும்புரு. நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும் தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.

ஒரு முறை நாரதர் தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும் மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க பூலோகத்தில் ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர் கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதா வென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து இறுதியில் பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வரமாகப் பெற்றார். அன்று முதல் கோண தீர்த்தம் தும்புருதீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி). இடம்: சக்கரபாணி கோவில் கும்பகோணம்.