சுலோகம் -73

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #26

ஆத்மா பிறக்கிறது ஆத்மா இறக்கிறது என்று நினைக்காதே அப்படி நினைத்தால் வலிமையுடைய தோள்களை உடையவனே அதனை நினைத்து நீ வருத்தப்படாதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உடல் பிறக்கும் போது அதனுடன் புதிதாக ஆத்மாவும் பிறக்கிறது என்று எண்ணினால் அந்த உடல் அழியும் போது ஆத்மாவும் அழிகிறது என்று நினைக்க வேண்டியது வரும். உடல் தான் பிறக்கிறதே தவிர ஆத்மா எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கின்றது அதனால் அது புதிதாக உடலுடன் பிறப்பதில்லை. ஏற்கனவே இறைவனை விட்டுப் பிரிந்து வந்த ஆன்மாவனது புதிதாகக் கிடைத்த உடலுக்குள் புகுகின்றது அவ்வளவே. அதுபோலவே உடல் அழிந்த பிறகும் ஆன்மா அழிவதில்லை அது உடலை விட்டுப் பிரிந்து அடுத்த உடலுக்காக காத்திருக்கின்றது. எனவே ஆன்மா பிறக்கிறது இறக்கிறது என்று தவறாக நீ நினைத்தாலும் அதைப் பற்றி நீ வருத்தப்படத் தேவையில்லை. காரணம் இந்த உடலுக்கு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே உடலுக்கு பிறப்பு இறப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

சுலோகம் -72

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #25

ஆத்மா புலன்கள் மூலம் அறியப்பட இயலாதவன். மனதால் சிந்தித்து அறிய இயலாதவன். எந்த விதமான மாறுதல்களும் இல்லாதவனாக உள்ளான். ஆகவே அர்ஜூனா இப்படி ஆத்மாவை அறிந்து கொண்ட பின்னர் ஆத்மாவைக் குறித்த வருத்தத்தை நீ அடையக் கூடாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐந்து புலன்களால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. இப்படித்தான் இருப்பான் என்று மனதால் சிந்தித்துப் பார்த்து ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. ஆத்மாவானது இறைவனிடம் இருந்து பிரிந்து வந்தபோது எப்படி இருந்ததோ அதேபோல் இறைவனிடம் சென்று சேரும் வரை எப்போதும் மாறாமல் உள்ளது. ஆகவே அர்ஜூனா புலன்களால் சிந்தனையால் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இந்த ஆத்மாவைப் பற்றி நீ வருத்தப்படக் கூடாது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -70 # 71

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #23

ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை. நெருப்பு எரிப்பதில்லை. தண்ணீர் நனைப்பதில்லை. காற்று உலர வைப்பதில்லை.

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #24

ஆத்மாவை ஆயுதங்கள் மூலம் வெட்டிப் பிளந்து அழிக்க முடியாது. எரித்து அழிக்க முடியாது. நீரினால் கரைத்து அழிக்க முடியாது. காற்றின் மூலம் உலர்த்தி அழிக்க முடியாது. நித்தியமானவன் உறுதியுடையவன் அசையாமல் என்றும் இருப்பவன்.

இந்த இரண்டு சுலோகத்தின் கருத்து என்ன?

ஒரு பொருளை அழிக்க வேண்டுமென்றால் அந்த பொருளுக்குள் ஏதேனும் ஒன்றை புகுத்தி அழிக்க வேண்டும். ஆத்மா எதனாலும் புக இயலாதபடி நுண்ணியதாகவும் அசையாததாகவும் அழிக்க இயாலாதபடி உறுதியாகவும் எப்போதும் இருக்கும் நித்தியமானாதாகவும் உள்ளது. ஆகையால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த பொருள்களாலும் எந்த தன்மையாலும் ஆத்மாவை அழிக்க முடியாது. துவைதம் என்ற சித்தாந்த தத்துவத்தை உலகில் நிலைநாட்டிய மத்வர் தனது விளக்கத்தில் பரம்பொருளை எப்படி யாராலும் எதனாலும் எப்போதும் அழிக்க முடியாதோ அதே போல் பரம்பொருளின் பிரதிபிம்பமாகவும் அதன் அம்சமாகவும் இந்த ஆத்மா இருப்பதால் ஆத்மாவை அழிக்க முடியாது என்று கூறிப்பிடுகிறார்.

சுலோகம் -69

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #22

மனிதன் எப்படி நைந்து போன பழைய துணிகளை நீக்கி விட்டு புதிய துணிகளை எடுத்துக் கொள்கிறானோ அது போலவே ஆத்மாவானது பழைய உடலை விட்டு புதிய உடல்களை சென்று அடைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தாயானவள் தன் குழந்தைக்கு பழைய துணிகளை கழற்றிவிட்டு புதிய துணிகளை அணிவிக்கிறாள். அப்போது குழந்தை அழுகிறது. குழந்தை அழுவதைக் கண்டு தாய் கவலைப் படுவதில்லை. புதிய துணிகளை அணிவித்து மகிழ்கிறாள். அதுபோலவே மனிதன் மரணத்தைப் பற்றி பயப்படுவதையும் அழுவதையும் கண்டு கவலைப்படாத இறைவன் ஆத்மா இருக்கும் உடலுக்கான தேவை மறையும் போது ஆத்மாவின் நன்மைக்காக அடுத்த உடலைக் கொடுக்கிறார்.

சுலோகம் -68

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #21

அர்ஜூனா எந்த மனிதன் இந்த ஆத்மா அழிவற்றது நித்தியமானது பிறப்பற்றது மாறுதலற்றது என்று அறிகிறானோ அவன் கொல்வது யாரை? கொல்விப்பது எவனை?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்மவைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டவன் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிய யுத்த களம் சென்று மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து ஆத்ம தத்துவத்துடன் இருக்கும் இன்னொரு உடலை அழிக்கும் போது இங்கு நான் கொல்லவில்லை என்றும் இங்கு யாரும் கொல்லப்படவில்லை என்றும் அழியக்கூடிய உடல் தர்மப்படி அழியக்கூடிய இன்னொரு உடலை அழித்து விட்டது என்று மட்டுமே நினைப்பான். ஆகவே யாருக்காகவும் எதற்காகவும் வருத்தப்படத் தேவையில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -67

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #20

இந்த ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. இந்த ஆத்மா பிறப்பற்றவன் நித்தியமானவன் எக்காலத்திலும் உள்ளவன் பழமையானவன். உடல் கொல்லப்படும் போது இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு பொருளுக்கும் ஆறு விதமான செயல்கள் உண்டு. அவை 1. உருவாகுதல் 2. உண்டான பிறகு அதனது தன்மைக்கு ஏற்ப இருப்பது 3. வளர்வது 4. தன்மைக்கு ஏற்ப உருமாறி அதன் செயல்களை செய்வது. 5. தேய்வது 6. அழிவது. மேற்சொன்ன ஆறு விதமான செயல்களும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மா இறைவனிடம் இருந்து பிரிந்து வந்து பல பிறவிகள் எடுத்து பலவிதமான உடல்களில் வசித்து பின்பு உடல் அழிந்ததும் வேறு ஒரு உடல் எடுக்கின்ற ஆத்மாவனது தனது கர்மங்கள் அனைத்தையும் தீர்த்த பின்பு இறைவனிடமே சென்று சேர்ந்து விடுகிறது. ஆதி காலத்தில் இருந்தே இருக்கின்ற ஆத்மாவானது எப்போதும் நித்தியமாக இருக்கும். உடலில் சிறிது காலம் இருக்கும் இந்த ஆத்மா உடல் கொல்லப்பட்டாலும் அழிவதில்லை.

சுலோகம் -66

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #19

இவன் கொல்வான் என்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்கள். எனெனில் இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இன்னொருவனை கொல்லும் போது அவனது ஆன்மாவை அழித்து விட்டதாக நினைப்பவனும், ஒருவனால் இன்னொருவன் கொல்லப்படும் போது கொல்லப்பட்டவனின் ஆன்மாவும் அழிந்து விட்டதாக நினைப்பவனும் உண்மையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை. ஏன் என்றால் இந்த உடலில் இருக்கும் ஆத்மாவின் பூர்வ ஜென்ம ஆசைகளும் எண்ணங்களுமே இந்த உடலால் செய்யப்படும் செயல்களாக இருக்கிறது.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

இந்த ஆத்மா உண்மையில் யாரையும் கொல்வதுமில்லை. யாராலும் கொல்லப்படுவதுமில்லை என்றால்
கொல்பவன் யார்?

மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் இணைந்து இன்னொரு உடலை அழிக்க வேண்டும் என்று அஞ்ஞானத்தால் எண்ணி அதற்கான செயலில் ஈடுபடும் போது ஒரு உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றால் அந்த செயலில் ஈடுபட்டவனே கொல்பவன் ஆவான். அப்படி கொல்பவன் நான் என்ற எண்ணத்தால் இதனை செய்கின்றதால் அதன் பலனாக வரும் பாவங்களை அவன் அனுபவித்துக் கொள்வான். ஆனால் அறத்தைக் காக்க தர்மத்தின் படி போர் புரிந்து ஒருவனை கொல்பவனை அதன் பலன்கள் அணுகுவதில்லை கர்ம வீரனை அவை பாதிப்பதும் இல்லை.

கொல்லப்படுபவன் யார்?

கொல்பவன் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டியும் கர்மாக்களை தீர்த்துக் கொள்ள வேண்டியும் இன்னொரு மனம் புத்தியுடன் கூடிய உடலுடன் கொண்டவனால் தனது உடலையும் உயிரையும் இழப்பவன் கொல்லப்படுபவன் ஆகிறான்.

சுலோகம் -65

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #18

அழிவற்ற விளக்க முடியாத நித்தியமான ஜீவாத்மாவினுடைய நீ பார்க்கும் அனைத்து உடல்களும் அழியக்கூடியது. ஆகவே பரதகுலத் தோன்றலே அர்ஜூனா நீ போர் புரிவாயாக.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நாம் காணும் இந்த அழியக்கூடிய உடல்கள் அனைத்திலும் காணமுடியாததும் அழிவற்றதும் அறிய இயலாததுமாகிய ஆத்மா தன் கர்மாவை தீர்த்துக் கொள்வதற்காக சில காலம் மட்டுமே தங்குகிறது. நீ தர்மப்படி யுத்தம் செய்து இந்த உடலை மட்டுமே அழிக்கிறாய். ஜீவாத்மாவை அல்ல ஆகவே யுத்தம் செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி?

அர்ஜூனனை பரதகுலத் தோன்றலே என்று கிருஷ்ணர் ஏன் அழைக்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல்படுத்தினார்கள். அந்த குலத்தில் வந்த நீயும் அது போல் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து யுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொல்வதற்காக அர்ஜூனனை கிருஷ்ணர் பரதகுலத் தோன்றலே என்று அழைக்கிறார்.

சுலோகம் -64

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #17

இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவினால் நிறைந்துள்ளன. இந்த ஆத்மா என்பது அழியாமல் உள்ளது என்பதை நீ அறிந்து கொள்வாயாக. அழிவே இல்லாத இந்த ஆத்மாவிற்கு அழிவு என்பதை யாராலும் எற்படுத்த முடியாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட புல் முதல் அனைத்து உயிர்களும் ஆத்மாவினால் நிறைந்துள்ளது. இந்த ஆத்மா அனைத்தும் பரமாத்மாவிடம் சென்று சேரும் வரையில் தனது உடலை மாற்றிக் கொண்டே இருக்குமே தவிர எப்போதும் அழியாமல் இருக்கும். இந்த ஆத்மாவை அழிக்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. இதனை தெரிந்து கொள்வாயாக என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -63

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #16

நிலையாக இல்லாத ஒன்று எப்போதும் உள்ளது என்று கூறுவது பொருந்தாது. நிலையாக இருக்கும் ஒன்று இல்லை என்று கூறுவதும் பொருந்தாது. இந்த இரண்டைப் பற்றியும் ஞானம் உள்ளவர்கள் உள்ளது உள்ளபடியே அறிந்து கொள்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நம்மால் பார்க்கக் கூடிய உணரக்கூடிய மற்றும் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய நிலையில்லாத இந்த உடம்பு மற்றும் ஐந்து புலன்களினால் வரக்கூடிய இன்ப துன்பங்கள் எப்போதும் இருக்கும் இதுவே உண்மை என்று நம்புவது தவறானது. ஏனேனில் இது முன்பு இல்லை. தற்போது அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே உள்ளது. அனுபவம் முடிந்த பின்பு இருக்காது. மறைந்து விடும் தேடினாலும் கிடைக்காது அழிந்துவிடும். இல்லாத ஒன்றிற்காக வருத்தப்படுகிறாய்.

அடுத்தபடியாக மனித ரீதியில் பார்க்க முடியாத உணர முடியாத எப்போதும் அழியாமல் இருக்கும் இறைவன் மற்றும் இறைவனின் பகுதியான இந்த ஜூவாத்மா இல்லை என்று சொல்வதும் தவறானது. ஞானிகள் தங்கள் தவத்தின் வழியாக இந்த ஜூவாத்மாவை அறிந்து கொண்டு பரமாத்மாவிடம் செல்லும் வழியை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் கண்ட உண்மை என்னவெனில் பரமாத்மாவும் அதன் பகுதியான ஜூவாத்மாவும் நிலையாக இருக்கும் எப்போதும் அழியாத ஒன்று. இதனை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். எனவே நிலையானதை ஆராய்ந்து தெரிந்து கொண்டு உனது வருத்தத்தை விட்டுவிடு. ஐந்து புலன்களால் பார்க்கப்படும் உணரப்படும் நிலையில்லாதவைகளின் மேல் வருத்தம் கொள்ளாதே என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.