சுலோகம் -62

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #15

அர்ஜூனா இப்படிப்பட்ட சுக துக்கங்கள் யார் ஒருவனை பாதிப்பதில்லையோ யார் ஒருவன் இரண்டையும் சரிசமமாக எண்ணுகிறானோ அப்படிப்பட்ட மனிதன் உயர்ந்த மோட்சம் பெறும் தகுதி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -61 ல் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட உபதேசத்தை யார் ஒருவன் உணரந்து ஐந்து புலன்களினால் உண்டாகும் சுகத்தால் துள்ளிக் குதிக்காமலும் துன்பத்தால் வருத்தப்படாமலும் இருக்கிறானோ அவன் ஞானியாகிறான். இதனால் அவன் மோட்சம் பெறும் தகுதியை பெறுகிறான் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -61

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #14

குந்தியின் மைந்தனே புலன்கள் தொடர்பு கொள்ளும் பொருட்கள் மூலமாக வெப்பம் மற்றும் குளிர் போன்றவை உடலுக்கு துன்பம் மற்றும் சுகத்தை அளிக்கின்றன. அவை வந்து போவது இயற்கையாகவே நடக்கிறது. விரைவில் அவை அனைத்தும் அழிந்து விடும் தன்மையுடையவை அநித்யமானவை ஆகவே பாரத நீ அவற்றை பொறுத்துக் கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உடம்பில் உள்ள கண் காது மூக்கு வாய் உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களும் தன்னை சுற்றி உள்ளவற்றோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடனேயே இருக்கிறது. உணர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் வெயில் அதிகமான காலங்களில் ஏற்படும் வெப்பம் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே வெயில் குளிர் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். குளிர் அதிகமான காலங்களில் ஏற்படும் குளிர் உணர்ச்சி மூலமாக உடலுக்கு துன்பத்தை கொடுக்கும். இதே குளிர் வெயில் காலத்தில் உடலுக்கு சுகத்தை கொடுக்கும். சில நாட்களில் அந்த இன்பமும் துன்பமும் மறைந்தும் போகிறது. இது போல் மீதமுள்ள 4 புலன்களின் வழியாகவும் இன்பமும் துன்பமும் ஏற்பட்டாலும் அவை சில மணி நேரத்தில் மறைந்து அழிந்து விடுகிறது. தன்னை சுற்றி உள்ள பொருட்களுடன் ஏதேனும் வகையில் புலன்கள் தொடர்பு கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன. விரைவில் இந்த இன்பமும் துன்பமும் அழிந்தும் போகின்றது. இது இயற்கையானது நிரந்தரமில்லாதது. ஆகவே அர்ஜூனா நீ பார்ப்பவைகள் கேட்பவைகள் நுகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் சிறிது நேரத்தில் அழிந்து போகும் இவற்றை பொறுத்துக் கொள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -60

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #13

ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் எவ்வாறு இளமை வாலிபப்பருவம் பின்பு முதுமை ஏற்பட்டு மரணமடைகிறதோ அப்படியே அதற்கு வேறு உடலும் வந்து சேர்கிறது. இவ்விசயத்தில் தீரன் கலங்கமாட்டான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஜீவாத்மா இருக்கும் இந்த உடல் பிறந்ததும் குழந்தைப் பருவம் அதன் பிறகு இளமைப் பருவம் அதன்பிறகு முதுமைத் தன்மை அடைந்து இந்த உடலில் இருக்கும் உயிர் என்ற மூச்சுக்காற்று நின்று விடுகிறது. அப்போது அந்த உடலில் இருந்த ஜீவாத்மா வெளியே வந்து வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. இப்படியாக ஜீவாத்மா இறைவனுடன் கலக்கும் வரை பல உடல்களை எடுத்துக் கொள்கிறது. ஜீவாத்மா எத்தனை உடல்களை எடுத்தாலும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஜீவாத்மா அழிவதில்லை நித்யமாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட மன உறுதியுள்ளவர்கள் இதனைக் கண்டு கலங்குவதில்லை இந்த கருத்தை கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு விளக்குகிறார்.

சுலோகம் -59

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #12

இவ்விதம் நான் எப்பொழுதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை. நீயும் இருந்ததில்லை. இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை. இனி மேலும் நாம் இருக்கப் போவதில்லை என்பதும் இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார். யுத்தத்தில் யார் அழிந்து விடுவார்கள் என்று நீ நினைக்கிறாயோ அவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல் அழிந்தாலும் அவர்கள் இல்லாமல் போக மாட்டார்கள். அது அவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கானதும்தான். உனக்கும் எனக்கும் இருக்கும் இந்த உடல் அழிந்தாலும் நாமும் இல்லாமல் போக மாட்டோம். எனெனில் இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவற்றது. இந்த உடல் தோன்றுவதற்கு முன்பும் நாம் இருந்தோம். இந்த உடல் அழிந்தாலும் நாம் இருப்போம். ஆகவே யுத்தத்தில் கொல்லப்படுபவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள் என்று நீ வருந்துவது தேவையில்லாதது என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -58

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #11

நீ துக்கப்படத் தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும் பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் யாரை குறிப்பிடுகிறார்?

கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக வந்திருப்பவர்கள் அனைவரும் அதர்மத்திற்கு துணை நிற்பவர்களே. அதர்மத்திற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் தர்மத்தால் அழிக்கப்படுவார்கள். இவர்கள் அழிந்தால் அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இவர்களையே துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் இங்கு குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

அர்ஜூனனை பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய் என்று கிருஷ்ணர் எதனால் கூறுகிறார்?

அர்ஜூனன் முதல் அத்தியாயத்திலும் 2 வது அத்தியாயத்திலும் குலநாசத்தினால் வரும் பெரிய பாவங்களை எடுத்துக் காட்டியும் மேலும் பல விதமான கருத்துக்களை கிருஷ்ணரிடம் சொல்லியும் யுத்தம் செய்வது சரியில்லை என்று பேசினான். அர்ஜூனன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உயர்வான நீதி சாஸ்திரங்களைப் படித்து அவற்றை விளக்கும் பண்டிதர்களின் கருத்துக்களைப் போல இருந்ததால் அவனை பண்டிதர்கள் போல பேசுகிறாய் என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?

உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் ஏன் கூறினார்?

பண்டிதர்களின் பார்வையில் ஆனந்த மயமான பொருள் ஒன்று தான். அது அழியாதது. அதைத் தவிர உலகில் அழியாத வேறு பொருள் எதுவும் இல்லை. அதுவே எல்லாவற்றிற்குள்ளும் இருக்கின்ற சோதி வடிவான ஆத்மா. அதற்கு எந்த விதத்திலும் அழிவு ஏற்படாது என்று நன்கு உணர்ந்தவர்கள் பண்டிதர்கள். மேலும் இந்த உலகிலுள்ள உயிர்கள் தங்களின் ஐந்து புலன்களின் மூலம் பார்ப்பவைகள் கேட்பவைகள் உண்பவைகள் முகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் தவிர்க்க முடியாத கனவு போன்ற மாயையால் ஆகியது என்பதையும் தெரிந்து கொண்டதால் அனைத்தும் இறைவன் செயலே என்று இருப்பார்கள். அதனால் இறந்தவர்களை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள். இருப்பவர்களை நினைத்து வருத்தப்படவும் மாட்டார்கள். இதனை வைத்து பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அதர்மம் செய்பவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் நினைத்து துக்கப்படத் தேவையில்லை. ஏனெனில் அதற்கான தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றும் மேலும் அர்ஜூனன் பண்டிதர்களைப் போல் பேசினாலும் பண்டிதர்களைப் போல் முடிவு எடுக்கவில்லை. ஆகையால் நீ பண்டிதன் அல்ல ஆனால் பண்டிதன் போல் பேசுகிறாய் அவ்வளவு தான் என்று அர்ஜூனனுக்கு உணர்த்தி அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இருந்து பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சுலோகம் -57

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #10

பரத குலத் தென்றலே திருதராஷ்டிரரே கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கு நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனிடம் சிரித்தார் போல் இந்த வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

திருதராஷ்டிரரை பரதகுலத் தென்றல் என்று சஞ்சயன் ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல் படுத்தினார்கள். ஆனால் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் பல முறை மறைமுகமாக எச்சரித்து விட்டான். இந்த யுத்தம் நடந்தால் யுத்தத்தில் கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் புதல்வர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று ஆனாலும் திருதராஷ்டிரர் தனது மகன் துரியோதனன் செய்யும் அதர்மமான செயலுக்கு துணை செல்வது போல் எந்த முடிவும் எடுக்காமல் தென்றல் போல் அமைதியாகவே இருக்கிறார். ஆகவே பரத குலத் தென்றலே என்ற வார்த்தையை சஞ்சயன் குறிப்பிட்டு சொல்கிறான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

மேற்கண்ட சுலோகங்களில் அர்ஜூனன் சொன்னவைகள் அனைத்தையும் கேட்ட கிருஷ்ணர் ஏன் சிரித்தபடியே பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்?

அர்ஜூனன் தர்மத்தை காக்க யுத்தம் செய்து தனது வீரத்தைக் காட்டுவதற்காக யுத்தகளத்திற்கு வந்துவிட்டு வருந்திக் கொண்டிருக்கிறான். என்னை சரணடைந்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டு நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே யுத்தம் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டானே என்று கிருஷ்ணர் தனது மனதிற்குள்ளாக எண்ணி அர்ஜூனனை பார்த்து சிரித்தார்.

சுலோகம் -56

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #9

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் அரசனே எதிரிகளை வெல்பவனும் உறக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜூனன் இவ்வாறு (மேலுள்ள சுலோகங்கள்) கோவிந்தனிடம் சொல்லிவிட்டு நான் போர் புரிய மாட்டேன் என்று மௌனமாகி விட்டான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்லும் போது கிருஷ்ணரை கோவிந்தன் என்று ஏன் அழைக்கிறார்?

கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன் பூமியை தாங்குபவன் என்று பொருளாகும். அர்ஜூனன் தனது மனக் குழப்பத்தில் இருந்து விடுபட கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சரணடைந்து விட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணர் குருவாக நின்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து தெளிவைக் கொடுத்து விடுவார். அர்ஜூனன் தனது மனக் குழப்பங்களில் இருந்து தெளிந்து விடுபட்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு உனது மகன்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக கோவிந்தன் என்ற பெயரை சஞ்சயன் சொல்கிறார்.

சுலோகம் -55

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #8

நான் உன்னை சரணடைந்தது ஏன் என்றால் இந்த உலகில் எதிரிகள் இல்லாத தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசு மற்றும் தேவர்களின் தலைவனான இந்திரனின் பதவியைக் கூட நான் அடையலாம். ஆனால் எனது புலன்கள் அவற்றை அனுபவிக்க இயலாத படி வருத்துகின்ற நிலையை எது போக்கும் என்பதை நான் உணர இயலவில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் முன்பே சொன்னபடி யுத்தம் செய்து வெற்றி பெற்று தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசையும் இந்திரனுக்கு நிகரான பதவியைப் பெற்றாலும் கூட இவை அனைத்தும் என்னுடைய வருத்தத்தை போக்காது. ஆகவே எனது புலன்களை அடக்கி வருத்தத்தை போக்க குருவாய் இருந்து நல்ல வழியை நீங்கள் கூற வேண்டும் அதனால் சரணடைகிறேன் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் சொல்கிறான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

அர்ஜூனன் வருத்தம் என்று எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று வெற்றி பெற்று அதனால் செழிப்பான ராஜ்யம் கிடைத்தாலும் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டோமே என்றும் அவர்கள் தற்போது இல்லையே என்று நினைப்பதையே வருத்தம் அர்ஜூனன் இங்கு கூறிப்பிடுகிறான்.

சுலோகம் -54

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #7

கோழைத்தனத்தினால் சீரழிந்த சுபாவம் கொண்டவனும் தர்ம விஷயத்தில் குழம்பிய மனதுடையவனுமான நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் எந்த செயல் உறுதியாக மேன்மை பயக்கக்கூடுமோ அதனை எனக்குச் சொல்லுங்கள் நான் உங்களுடைய சீடன். உங்களை சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்யலாமா? வேண்டாமா? தர்மத்தின் படி எது சிறந்தது என்ற குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு சரியானது எதுவோ அதனை எனக்கு சொல்லி புரியவையுங்கள். நான் சீடனாக தற்போது நிற்கிறேன் குருவாக வந்து எனக்கு உபதேசியுங்கள். நான் உங்களை சரணடைகிறேன் என்று கிருஷ்ணரை சரணடைந்தான் அர்ஜூனன்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

கிருஷ்ணரும் அர்ஜூனனும் நண்பர்கள் இந்த இடத்தில் ஏன் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு தன்னை சீடன் என்று சொல்கிறான் அர்ஜூனன்?

கிருஷ்ணர் நண்பன் என்ற ஸ்தானத்தில் தர்மம் எது என்று அறிவுரை மட்டும் சொல்லி புரியவைப்பார். ஆனால் குருவாக ஏற்றுக் கொண்டால் குருவானவர் தர்மம் எது என்று அறிவுறை மட்டும் சொல்லாமல் அதனை ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தி புரிய வைப்பார். தான் உணர்ந்தால் மட்டுமே தெளிவுடைய முடியும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சீடனாக சரணடைந்தான் அர்ஜூனன்.

சுலோகம் -53

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #6

நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்று விடுவார்களா? இவற்றுள் எது மேன்மை என்பது விளங்கவில்லை. யாரைக் கொன்று நாம் வாழக்கூட விரும்பவில்லையோ அவர்களே (திருதராஷ்டிர குமாரர்கள்) நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்வது நல்லது அதுவே மேன்மை என்ற முடிவுக்கு வந்து யுத்தம் செய்தால் அதில் நமக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பமடைகிறான் அர்ஜூனன். வெற்றி பெற்றால் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று அதனால் பாவத்தை சேர்க்க வேண்டும் மேலும் அவர்கள் இல்லாத இந்த வாழ்க்கையில் இன்பமும் விரும்பமும் இருக்காது. இது எப்படி மேன்மை ஆகும் என்று எண்ணுகிறான். அது போல் யுத்தத்தில் தோற்று கொல்லப்பட்டால் அதர்மம் வெற்றி பெற்று விடும் அது எப்படி மேன்மை ஆகும் என்ற குழப்பத்தில் அர்ஜூனன் இருக்கிறான்.