மேன்மை பொருந்திய பெரியவர்களை கொல்வதை விட இவ்வுலகில் பிட்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பது சிறந்தது அல்லவா? இவர்களை கொன்ற பின்னர் அவர்களுடைய உடமைகள் அனைத்தும் அவர்களின் ரத்தத்தால் நனைந்திருக்கும். அதனை நாம் எவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலேயே நின்று அனுபவிக்க இயலும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சத்திரியர்கள் பிட்சை எடுத்து சாப்பிட்டு உடலை வளர்க்கக் கூடாது என்பது நியதி இவ்வாறு செய்வது இகழ்ச்சியான செயல். மேன்மை பொருந்திய பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய்து அவர்களை கொல்வதை விட சத்திரிய தர்மத்தை விட்டு விட்டு பிட்சை எடுத்து உண்பது மேல் என்றும் யுத்தம் செய்து அவர்களை கொன்ற பிறகு அவர்கள் இருக்கும் இந்த மண்ணில் அவர்களின் ரத்தக் கறை படிந்து இருக்கும். இந்த இடத்தில் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும் என்று அர்ஜூனன் தன் கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறான்.
அர்ஜூனன் கூறுகிறான். பகைவர்களை அழிப்பவனே மதுசூதனா நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும் ஆச்சாரியார் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? அவர்கள் இருவரும் பூஜிக்கத் தக்கவர்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
பூஜிக்கத் தக்க பெரியவர்களை சொல்லால் கூட துச்சமாக நினைத்து பேசுவது பாவம் என்று சொல்லப்படுகின்ற போது அவர்கள் முன் எதிர்த்து நின்று அவர்களின் மீது கூரான அம்புகளை ஏவி எப்படி யுத்தம் புரிவேன்? இந்தப் பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய் என்று எப்படிச் சொல்கிறாய்? இந்த பாவத்தை எப்படி நான் செய்வேன்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.
பார்த்தா பேடித்தனத்தை நீ அடைந்து விடாதே அந்தத் தன்மை உனக்கு பொருத்தம் இல்லை எதிரிகளை பயத்தால் வாட்டுபவனே மிகவும் தாழ்மை விளைவிக்கக் கூடிய இந்த இதயத் தளர்வை நீக்கி எழுந்து நிற்பாயாக.
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணர் அர்ஜூனனை ஏன் பார்த்தா என்று அழைக்கிறார்?
அர்ஜூனனின் தாய் குந்தியின் இயற்பெயர் பிருதை (சிறந்த அழகி என பொருள்) இவளது பெயரை வைத்து பிருதையின் மகனே என்ற பொருளுக்கு பார்த்தனே என்று அர்ஜூனனை அழைப்பார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக குந்தியை கிருஷ்ணர் சந்திக்க சென்ற போது அவரிடம் அர்ஜூனனுக்கு யுத்தத்திற்கான வீரமிக்க வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தாள். அதில் வீரத்தாயின் வீரமகன் என்று ஆரம்பித்து அர்ஜூனனுக்கு வாழ்த்து சொல்லி யுத்ததிற்க்கு அர்ஜூனனை உற்சாகம் ஊட்டியிருந்தாள். அதனை இங்கே சுட்டிக் காட்டி வீரத்தாயின் வீரமகனை என்று அர்ஜூனனுக்கு மன தைரியத்தை கொடுப்பதற்காக கிருஷ்ணர் பார்த்தா என்று குறிப்பிட்டு அழைத்தார்.
அர்ஜூனா இத்தகைய தகாத நேரத்தில் இந்த வருத்தம் உன்னை எந்த காரணத்தினால் பீடித்தது? உனது கருத்து சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது. சொர்கத்தை அளிக்காது மேலும் பெருமைக்கு இழுக்காகி விடும்.
இந்த சுலோகத்தில் சொல்லப்படும் கருத்து என்ன?
முதல் அத்தியாயத்தில் அர்ஜூனன் சொன்னவற்றை கேட்ட கிருஷ்ணர் இப்போது பேச ஆரம்பிக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இருக்கும் இறுதி நேரத்தில் அர்ஜூனன் யுத்தம் செய்ய மறுப்பதால் இந்த நேரத்தை தகாத நேரம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பெரிய மகாரதர்களையும் வெற்றி பெறக்கூடிய அர்ஜூனனுக்கு யுத்தத்தில் இருந்து பின் வாங்கும் இந்த கோழைத்தனம் எப்படி வந்தது என்று கேட்கிறார். இந்த கோழைத்தனத்தினால் உனது கடமையை செய்ய மறுக்கிறாய். கடமையை செய்ய மறுப்பவனுக்கு சொர்க்கம் இல்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். மேலும் அர்ஜூனன் யுத்தத்தில் யாராலும் வெற்றி பெற முடியாதவன் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாக இருக்கிறான். இப்போது யுத்தத்தில் இருந்து பின் வாங்கினால் யுத்தத்திற்கு அர்ஜூனன் பயப்படுகிறான் என்ற அவச்சொல் ஏற்பட்டு அவனது பெருமைகள் அனைத்துப் அழிந்து போகும். யுத்தத்தில் இருந்து பின் வாங்க அர்ஜூனன் சொல்லும் காரணங்கள் அனைத்தும் இதற்கு முன்பாக இருந்த முன்னோர்கள் யாரும் கடைபிடிக்காதவைகள் ஆகும் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார்.
இந்த சுலோகத்தில் சான்றோர் என்ற தமிழ் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற சொல் வருகிறது. அதற்கு பொருள் என்னவென்றால் அறவழியில் நிற்பவனும் ஆசைகளுக்கு அடிபணியாதவனும் பண்பட்ட மனமும் இறைவனை நோக்கிச் செல்லும் சிறந்த வாழ்க்கை முறையை கொண்டவன் எவனோ அவனே ஆரியன் என்றும் தமிழில் சான்றோன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சாங்கிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணிதம் என்று பொருள். கணிதம் என்றால் ஏதோ கணக்கு வாய்ப்பாடு கூட்டல் கழித்தல் என்று பொருள் அல்ல. தர்க சாஸ்திரத்தில் கேள்வி கேட்டு விவாதம் செய்து அதற்கு விளக்கம் சொல்லி புரிய வைப்பது போல அறிவை அகலப்படுத்துவதற்கு கணிதம் செய்தல் என்று பொருளாகும். விஷாத யோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆத்ம தத்துவத்தையும் சுய தர்மத்தையும் கர்ம யோகத்தின் சொரூபத்தையும் இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். மற்ற அத்தியாயங்களை விட இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்துவ உபதேசங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இந்த அத்தியாயம் சாங்கிய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் 72 சுலோகங்கள் உள்ளது.
பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #1
சஞ்சயன் கூறினான். இப்படி மனம் முழுவதும் இரக்கம் நிறைந்தவனாக கண்களில் நீர் பெருகிக் கலங்கிய கண்களும் நிலைகுலைந்த உள்ளமும் உடையவனாக அர்ஜூனன் நின்றான். அவனைப் பார்த்து மதுசூதனன் பேசத் துவங்கினார்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சஞ்சயன் கிருஷ்ணரை ஏன் மதுசூதனன் என்று குறிப்பிட்டு கூறுகிறார்?
மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவர் மதுசூதனன் என்று பெயர் பெற்றார். மது என்னும் அரக்கனை கொன்றது போல உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மேல் உள்ள இரக்கத்தினாலும் கருணையினாலும் யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜூனனின் கவலைகளையும் அவனது குழப்பங்களையும் கொன்று அர்ஜூனனின் மனதை தெளிவிக்கப்போகிறார் கிருஷ்ணர். அதன்பின் உனது மகன்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக மதுசூதனன் என்ற பெயரை சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்.
இந்தப் போரில் ஆயுதம் ஏந்தாமல் எதிர்த்துப் போரிடாமல் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.
இந்த சுலோகத்தில் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?
இந்த யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நான் போரிடப் போவதில்லை. அப்போது கௌரவர்களின் தரப்பில் யார் என்னை கொன்றாலும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வேன். அப்படி நான் கொல்லப்பட்டால் மேலே சொல்லப்பட்ட சில சுலோகங்களில் உள்ள பாவங்கள் நடைபெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். ஆகையால் என்னை அவர்கள் கொல்வது எனக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #47
சஞ்சயன் சொல்கிறான். இப்படியாக சொல்லிய அர்ஜூனன் போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனதுடன் தன்னுடைய அம்புகளையும் ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு தேரில் அமர்ந்து விட்டான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். அர்ஜூனன் தர்மத்திற்கு பயப்படுகிறான். தன் குருக்கள் உறவினர்கள் நண்பர்கள் மீது வைத்திருந்த கருணையினாலும் அன்பினாலும் பாசத்தினாலும் மனக்கலக்கத்தினாலும் அர்ஜூனன் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கவலையுடன் தேரில் அமர்ந்து விட்டான்.
ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?
வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45
ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.
இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?
மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.
இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால் தொன்று தொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: ஜாதி தர்மங்கள் என்று எதனை குறிப்பிடுகிறது?
சுலோகம் -41 இல் குறிப்பட்டுள்ள குலம் என்று அழைக்கப் படுபவர்களின் அனைத்து பிரிவுகளை இங்கு ஜாதி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மரவேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். நகை வேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். இருவரது குலம் வேறு வேறு என்றாலும் இருவரும் தச்சர் வேலை செய்பவர்களே இது போல் தச்சர் தொழில் செய்யும் பல பிரிவுகளில் இருப்பவர்களை மொத்தமாக குறிப்பிடும் போது ஜாதி என்ற வார்த்தை இங்கு வருகிறது.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணக் கலப்பு குற்றம் என்றும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்று சொல்வதன் காரணம் என்ன?
ஒருவர் தங்களது வர்ணத்தை விட்டு வேறு வர்ணத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது வர்ணக் கலப்பு ஏற்படுகிறது. இதில் பெண் ஆணின் குல தர்மத்தையோ அல்லது ஆண் பெண்ணின் குல தர்மத்தையோ தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இருவரில் ஒருவர் தங்களுடைய குல தர்மங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி ஆகிறது. இப்படி சில தலை முறைகள் சென்ற பிறகு பார்த்தால் ஒரு குலத்தின் தர்மங்கள் (குலத்தின் தர்மத்திற்கான விளக்கம் சுலோகம்- 40 இல் உள்ளது) அனைத்தும் அழிந்து போயிருக்கும் இதற்கு முக்கிய காராணமாக இருப்பது வர்ணக்கலப்பு ஆகும் இதனையே இந்த சுலோகம் சுட்டிக் காட்டுகிறது.
இந்த குழப்பத்தால் அந்த குலத்தார்களும் அந்த குலத்தை அழித்தவர்களும் நரகம் செல்வார்கள். இவர்களின் பித்ருக்கள் பிதுர் பண்டங்களும் நீரும் இல்லாமல் வீழ்ச்சி பெறுவார்கள்.
இந்த சுலோகத்தின் கருத்து:
வர்ணங்கள் மாறி குலங்கள் மாறி திருமணம் செய்வதால் சில தலை முறைகளுக்கு பின் வருபவர்களுக்கு தங்களின் குலத்தின் பெயரும் அதன் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் தெரியாமல் போகின்றது. குலத்தில் ஒற்றுமை மறைந்து இறுதியில் அந்தக் குலமே இல்லாமல் போகின்றது. இதனால் அந்தக் குலத்தில் வழிவழியாக முதாதையர்களுக்கு கொடுத்த வந்த தர்ப்பத்தையும் பிதுர் கடனையும் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஒழுக்க முறைகள் மாறிவிடுகின்ற படியால் தர்மத்தின் படி நடக்க முடியாமல் போகின்றது. பித்ருக்கள் நீரும் பிதுர் பண்டங்களும் இல்லாமல் தங்கள் குலத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் அனைவரையும் அதர்மம் சூழ்ந்து பாவம் செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள்.
கிருஷ்ணா அதர்மம் அதிகமாக பெருகுவதால் குலப்பெண்களின் நடத்தை கெடுகிறது வர்ணங்களில் கலப்பு உண்டாகிறது.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலப் பெண்கள் என்று இந்த சுலோகத்தில் சொல்லப்படுவது யார்?
ஒருவர் ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி அவரின் வாரிசுகள் அந்த தொழிலை சிறுவயதில் இருந்தே அவருடன் இருந்து கற்றுக் கொண்டு அதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசுகள் என்று தலை முறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்து வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தொழிலை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்பவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் தங்களின் தொழிலுக்கு எற்றபடி ஒரு தர்மத்தை அமைத்துக் கொண்டு அதன்படி ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டு முறைகளையும் ஒழுக்க முறைகளையும் கடைபிடித்து வருவார்கள். இவர்களின் மூதாதையர்களின் பெயரை இந்த குழுவுக்கு பெயராக சூட்டி இந்த குலத்தின் வழியாக வந்த தர்மங்களையும் தொழில்களையும் கடைபிடித்துக் கொண்டு குழுவாக செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். தங்களின் குழுக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயது வந்ததும் தங்கள் குலத்தைப் போன்றே தொழில் செய்து வரும் வேறு குழுக்களில் உள்ளவர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் செய்து வைப்பார்கள். இவர்களது தலைமுறை வளர்வதற்கு காரணமான திருமணமான பெண்கள் குலப் பெண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணங்கள் என்றால் என்ன?
பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் சரியான விளக்கம்
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.
ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியனுடைய தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்க் கலையில் சிறந்து விளங்கி எதிரிகளிடமிருந்து தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.
வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.
சூத்திரர்கள் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற வேண்டிய உணவு உற்பத்திக்கு பாடுபடுபவர்கள். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.
தற்போது சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்யான விளக்கம்
பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான் பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான் பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான் பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: குலப்பெண்களின் நடத்தை என்று சொல்லப்படுவது என்ன?
ஒரு குறிப்பட்ட தொழிலை செய்யும் குலத்தில் வளரும் பெண்கள் அந்த தொழிலை செய்யும் குலத்திற்கு என்று இருக்கும் தொழில் மற்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்க முறைகள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். வேறு தொழிலை செய்யும் குலத்தில் உள்ளவர்களின் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் அவர்களுக்குத் தெரியாது.
உதாரணத்திற்கு ஒருவர் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு என்று இருக்கும் குலத்தில் வழி வழியாக வந்த தொழில் முறைகளையும் தர்மங்களையும் வழிபாட்டு முறைகளையும் மட்டுமே தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். விவசாயம் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலத்தில் விவசாயத்திற்கு உதவி செய்வார்கள். விவசாயத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். விவசாயத்திற்கு ஏற்ற சூரிய வழிபாட்டு முறைகளும் தங்களின் தொழிலுக்கு உதவி செய்யும் காளைமாடு போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பதும் அவற்றை தெய்வங்களாக வழிபடுவது பற்றியும் மட்டுமே தெரியும்.
வேறு ஒருவர் வாணிபம் செய்து வருகிறார். அவர் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்வார். அவர் வியாபாரம் செய்ய பல ஊர்களுக்கு செல்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார். வாணிபத்திற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைத்திருப்பார். அதனை பாதுகாப்பது பற்றி அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அவரின் தொழிலுக்கு பொதி சுமக்க உதவி செய்யும் குதிரைகள் கழுதைகள் போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும்.
இப்போது இந்த இரண்டு வர்ணங்களில் உள்ள பெண்கள் வர்ணம் மாறி வேறு ஒரு தொழில் செய்யும் குலத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் புதிதாக அவர்களது வீட்டிற்கு செல்லும் பெண் அந்த வீட்டில் உள்ள தொழில் முறைகள் ஒழுக்க முறைகள் பற்றி ஒன்றும் தெரியாது. வீட்டிற்கு வந்த பெண் தொழிலுக்கு ஏற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணுக்கு இருக்கும். இதனை செய்ய அந்தப் பெண் முயற்சி செய்தாலும் கற்றுக் கொள்ள நாட்கள் ஆகும். வேலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டையிட நேரிடும். கணவனுடன் சண்டையிட நேரிடும். இதற்கு ஆணும் தானை காரணம் என்று பலர் கேட்கலாம். ஆனால் இங்கு ஆண் இருக்கும் வீட்டிற்கே பெண் வருகிறாள். இந்த ஆண் தனக்கு உண்டான வேலையை சரியாக இங்கு செய்து விடுகிறான். ஆனால் வந்திருக்கும் பெண்ணால் சரியாகச் செய்ய முடியவில்லை எனவே சண்டை ஏற்படுகிறது. புகுந்த வீட்டில் சண்டை ஏற்பட காரணமான பெண்ணிற்கு அங்கே நடத்தை சரியில்லை என்ற பேச்சு அங்கே உருவாகிறது. அனைத்திற்கும் மூல காரணம் வர்ணம் மாறி திருமணம் செய்ததே ஆகும். இவற்றையே இந்த சுலோகம் சொல்கிறது.
குறிப்பு: இந்த சுலோகத்தில் சொல்லப்பட்ட பல கருத்துக்களுக்கான விளக்கங்கள் பின் வரும் தலைப்புகளில் உள்ள சுலோகங்களில் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.