சுலோகம் -5

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #5

திருஷ்டகேது சேகிதானன் வீரியமுடைய காசிராஜன் புருஜித் குந்திபோஜன் சிறந்த மனிதனாகிய சைப்யனும்

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டகேது என்பவன் யார்?

சிசுபாலனின் மகன். சேதி நாட்டு அரசன். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சேகிதானன் என்பவன் யார்?

விருஷ்ணி வம்சத்தை சேர்ந்தவர். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். பாண்டவர்களின் ஏழு அக்ரோணிப் படைகளுக்குரிய ஏழு தளபதிகளில் இவரும் ஒருவர். இவர் மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: காசிராஜன் என்பவன் யார்?

காசி நாட்டு அரசன். மகாரதர் தனி ஒருவராக நின்று ஒரே சமயத்தில் பதினோராயிரம் தேர்வீரர்களோடு போரிடும் வல்லமை பொருந்தியவர். மகாபாரதத்தில் சேனாபிந்து என்றும் க்ரோதஹந்தா என்றும் அபிபூ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: புருஜித் குந்திபோஜன் என்ற இருவரும் யார்?

இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள். பாண்டவர்களுக்கு தாய் மாமன் ஆவார்கள். இருவரும் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்கள்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: சைப்யனும் என்பவன் யார்?

இவரது பெண் தேவிகாவை யுதிஷ்டிரர் திருமணம் செய்திருக்கிறார். யுதிஷ்டிரனின் மாமனார் ஆவார். மனிதர்களில் சிறந்தவர். மிகப்பெரிய யுத்த வீரர் அதனால் இவர் நரபுங்கவர் என்று அழைக்கப்படுவார்.

சுலோகம் -4

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #4

இங்கு (பாண்டவ படையில்) சூரர்களும் மிகப்பெரிய வில்வித்தை வீரர்களான பீமன் அர்ஜூனனுக்கு இணையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். யுயுதானன் விராடன் மகாரதனாகிய துருபதன்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுயுதானன் என்பவன் யார்?

சினி என்பவருடைய மகன் யுயுதானன். யாதவ குலத்து அரசன். கிருஷ்ணரைச் சார்ந்தவன். அர்ஜூனனின் சீடன். சாத்யகிக்கு யுயுதானன் என்ற பெயரும் உண்டு. பலம் மிகுந்தவன். இவன் மகாபாரத யுத்தத்தில் இறக்கவில்லை. ரிஷியின் சாபத்தினால் யாதவர்களுக்குள் ஏற்பட்ட யுத்தத்தில் அடிபட்டு இறந்தான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: விராடன் என்பவன் யார்?

மத்சிய நாட்டு அரசன் விராடன். பாண்டவர்கள் தங்களின் 1 வருட அஞ்ஞாத வாசத்தை இவரது நாட்டில் மறைந்து வாழ்ந்தார்கள். இவருடைய பெண் உத்தரையை அர்ஜூனனுடைய மகன் அபிமன்யு மணந்தான். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: துருபதன் என்பவன் யார்?

புருஷத் என்பவரின் மகன் துருபதன். பாஞ்சால தேசத்து அரசர். துரோணரைக் கொல்ல வேண்டும் என்று யாஜர் உபயாஜர் என்ற இரண்டு ரிஷிகளை வைத்து யாகம் செய்தார். யாகத்தில் தோன்றியவர்கள் பாண்டவர்களின் சேனாதிபதியான திருஷ்டத்யும்னனும் பாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்த திரௌபதியும் ஆவார்கள். இவர் மகாபாரத யுத்தத்தில் துரோணரின் கையால் இறந்தார்.

சுலோகம் -3

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #3

குரு துரோணரே பாண்டவர்களின் படைகளைப் பாருங்கள். துருபதனின் மகனும் உங்களது புத்திசாலி மாணவனுமாகிய திருஷ்டத்யும்னன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களின் மிகப்பெரிய படைக்கு தலைமையேற்று அணிவகுத்து நிற்கின்றான் பாருங்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: திருஷ்டத்யும்னனை ஏன் துருபதனின் மகன் என்றும் புத்திசாலி மாணவன் என்றும் துரியோதனன் கூறுகின்றான்.

பதில்: அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியசாலி துரியோதனன். திருஷ்டத்யும்னன் துரோணரிடம் மாணவனாக சேர்ந்து வித்தைகளை கற்றுக் கொண்டு அவருக்கு எதிராகவே யுத்தம் செய்ய வந்திருக்கிறான் அவனது புத்திசாலித்தனத்தை பாருங்கள். உங்களை திணறடிப்பது போல் அழகான அணிவகுப்பை செய்திருக்கிறான் பாருங்கள் என்று தனது அரசியல் சூழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியமான வார்த்தைகளினால் துரோணருக்கு கோபத்தை உண்டு செய்கிறான் துரியோதனன். துரோணரை கொல்வதற்காக யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றான் துருபதன். அவனை பாண்டவர்கள் தங்கள் படைக்கு தலைமை சேனாதிபதியாக்கினார்கள். துருபதனின் மேல் ஆரம்பத்தில் துரோணருக்கு இருந்த கோபம் திருஷ்டத்யும்னனின் மேலும் வர வேண்டும் என்பதற்காகவும் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் துரியோதனன் அவ்வாறு கூறினான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பாண்டவ படைகளின் எண்ணிக்கை ஏழு அக்ரோணி படைகள். கௌரவ படைகளின் எண்ணிக்கை பதினோரு அக்ரோணி படைகள். கௌரவர்களின் படைகளை விட பாண்டவர்களின் படைகளுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது துரியோதனன் ஏன் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.

பதில்: பாண்டவர்களின் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வஜ்ர வியூக அமைப்பில் இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக தெரியும். அடுத்து பாண்டவர்களின் படைகளை மிகவும் சக்தி வாய்ந்த படைகளாக துரியோதனன் எண்ணினான். அதனால் பாண்டவர்களின் படைகளை வெற்றி பெறுவதற்கான வழிகளை துரோணர் ஆராய்ந்து சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாண்டவர்களின் படையை மிகப்பெரிய படைகள் என்று கூறினான்.

சுலோகம் -2

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #2

சஞ்ஜயன் திருதராஷ்டிரனிடம் பதில் கூறுகிறார். பாண்டவர்களின் அணிவகுத்து நின்ற படைகளை பார்த்ததும் துரியோதன ராஜா தனது குருவாகிய துரோணாச்சாரியாரிடம் சென்று பேச ஆரம்பிக்கின்றான்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருக்கும் போது சஞ்ஜயன் ஏன் துரியோதனனை ராஜா என்று அழைக்கிறார்.

பதில்: நாட்டின் அரசனாக திருதராஷ்டிரர் இருந்தாலும் அவரின் ஆளுகைக்குட்பட்ட ஒரு நாட்டிற்கு துரியோதனனும் ராஜாவாகவே உள்ளான். தன்னுடைய மகன் ராஜா என்ற அடைமொழியுடன் மரியாதையாக குறிப்பிட்டு அழைக்கப்படுவதை எண்ணி திருதராஷ்டிரர் மகிழ்ச்சி அடைவார் என்று சஞ்ஜயன் அவ்வாறு அழைக்கிறார்.

இந்த சுலோகத்தின் 2 வது கேள்வி: பாண்டவர்களின் படைகளை கண்ட துரியோதனன் ஏன் துரோணரிடம் சென்றான்.

பதில்: பாண்டவர்களின் படைகள் கௌரவர்களின் படைகளை விட சிறிது குறைவாக இருந்தாலும் அவர்களின் அணிவகுப்பு விசித்திரமான முறையில் இருந்தது. இதனைப் பார்த்த துரியோதனன் வியப்படைந்தான். தனூர்வேதத்தில் சிறந்த அறிவு படைத்த துரோணரிடம் இதனைப் பற்றி கூறினால் அவர் படைத்தளபதியான பீஷ்மரிடம் இதனைப் பற்றி சொல்லி கௌரவர்களின் படைகளை இன்னும் சிறப்பாக அணிவகுக்க செய்வார் என்ற எண்ணத்தில் துரோணரிடம் துரியோதனன் சென்றான்.

இந்த சுலோகத்தின் 3 வது கேள்வி: ராஜாவான துரியோதனன் துரோணரை தான் இருக்குமிடம் வரவழைத்து செய்தியை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இருக்குமிடத்திற்கு ஏன் துரியோதனன் சென்றான்.

பதில்: கௌரவப்படைகளுக்கு பிரதான படைத்தலைவராக பீஷ்மர் இருந்தாலும் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் ஒரு உப தலைவர் இருப்பார். துரோணரும் ஒரு படைப்பிரிவுக்கு தலைவராகவே இருக்கிறார். படைகள் அணிவகுத்து நின்ற பிறகு அந்தந்த படைகளின் தலைவருக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இருந்து அவரை அழைத்தாலும் அகற்றினாலும் அந்த படையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு துரோணரின் உதவி அவசியம் தேவை என்பது துரியோதனனுக்கு தெரியும் அவரின் அன்பைப் பெறுவதற்கும் பிறர் முன்பாக அவரை பெருமைப் படுத்துவதற்காகவும் அவர் இருக்குமிடம் துரியோதனன் சென்றான்.

சுலோகம் -1

  1. அர்ஜூன விஷாத யோகம் முன்னுரை

மகாபாரதம் குருசேத்திர யுத்தம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்றது. யுத்தம் ஆரம்பிக்கும் முன் அஸ்தினாபுரத்தின் அரசனான பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் அரண்மனையில் இருந்தபடியே யுத்தக் களத்தில் நடைபெறுவதை தெரிந்து கொள்வதற்காக சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமித்தார். வேதவியாசரால் ஞானதிருஷ்டியை பெற்ற சஞ்ஜயன் யுத்தக் களத்தில் நடந்தவைகளையும் கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் நடைபெற்ற உரையாடலையும் தன் ஞானதிருஷ்டி வழியாக பார்த்து திருதராஷ்டிரருக்கு தெரிவித்தார். முதல் அத்தியாயத்தில் திருதராஷ்டிரன் சஞ்ஜயனிடம் கேள்வி கேட்பதும் அதற்கு சஞ்ஜயன் பதில் கொடுப்பதும் அர்ஜூனன் தன் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளாக வந்ததை எண்ணி கவலையில் முழ்கி யுத்தம் செய்ய மாட்டேன் என்று கிருஷ்ணரிடம் சொல்லி தன் காண்டிப வில்லை கீழே வைத்து விட்டு யுத்த களத்தில் அமர்ந்து விடுவதும் இந்த தலைப்பில் உள்ளது. அர்ஜூன விஷாத யோகம் முதல் அத்தியாயத்தில் மொத்தம் 47 சுலோகங்கள் உள்ளது.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #1

சஞ்ஜயனிடம் திருதராஷ்டிரன் கேள்வி கேட்கிறார். தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளத்திற்கு யுத்தம் செய்ய வந்த கௌரவர்களான எனது மகன்களும் பாண்டவர்களான எனது தம்பி மகன்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்த களத்தை திருதராஷ்டிரன் தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளம் என்று ஏன் சொல்கிறார்.

பதில்: மகாபாரதம் வனபருவம் 83 வது அத்தியாத்திலும் சல்லியபருவம் 53 வது அத்தியாயத்திலும் குரு சேத்திர யுத்தகளத்தின் பெருமை சொல்லப்படுகிறது. சதபதப்ராஹ்மணம் என்னும் பழமையான நூலில் இதற்கான குறிப்பு உள்ளது. இந்த இடத்திற்கு சமந்த பஞ்சகம் என்ற பெயரும் உண்டு. இங்கு பிரம்மா இந்திரன் அக்னி முதலிய தேவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். குருமகாராஜன் என்பவர் கடுமையான உயர்ந்த தவத்தை செய்திருக்கிறார். இங்கே இறப்பவர்கள் உத்தம கதியைப் பெறுவார்கள். இதனால் இந்த இடத்தை திருதராஷ்டிரன் தர்மமும் புண்ணியமும் நிறைந்த குரு சேத்திர யுத்தகளம் என்று சொல்கிறார்.

வனபருவம் 83 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே பழமையான நூல்களில் சொல்லப்படுகிறது. அங்கே இருக்கும் புனிதம் நிறைந்த பிரம்மசேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் சாரணர்களும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் யட்சர்களும் நாகர்களும் அடிக்கடி வருவார்கள். குருசேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் தர்ம சிந்தனையுடன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பக்தியுடைய மனதுடன் குருசேத்திரத்திற்குச் செல்பவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். நான் குருசேத்திரத்தில் வாழ்வேன் என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டு வரப்பட்ட குருசேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை அடுத்த பிறவியில் அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.

சல்லியபருவம் 53 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் பாடிய ஒரு பாடலில் குருசேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீயசெயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும் என்று பாடியுள்ளான். தேவர்களில் முதன்மையானவர்களும் பிராமணர்களில் முதன்மையானவர்களும் நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையான பலரும் விலை மதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து தங்கள் உடல்களை விட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.

பகவத் கீதை முன்னுரை

பகவத் கீதை என்னும் ஞான அமுதத்தை தேரோட்டும் சாரதியாக வந்த கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்ததின் வழியாக இந்த உலகத்திற்கு வழங்கினார். மகாபாரதம் என்னும் இதிகாசத்தின் ஒரு பகுதி பகவத் கீதையாகும். கீதையை படிப்பவர்களும் அதன் உபதேசங்களைக் கேட்பவர்களும் தன்னை அர்ஜுனனாகவே உணர்ந்து கிருஷ்ணரை சரணடைந்து படிக்கும் போதும் கேட்கும் போதும் கீதையில் வரும் செய்திகள் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளாகவும் பொருளாகவும் இருந்தால் கிருஷ்ணரே அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து அவனுக்கு ஞானத்தை அருளி புரிய வைத்தது போல் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கிருஷ்ணரே கற்பக விருட்சமாக வந்து ஞானத்தை அருளி அதனுடைய பொருளை புரிந்துகொள்ள வைப்பார்.

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் யாருடன் சண்டையிடப் போகிறோம் என்பதை தெரிந்தகொள்ள விரும்பிய அர்ஜூனன் எதிரணியை சென்று பார்வையிட்டான். எதிரணியில் இருப்பவர்கள் அனைவரும் தன்னுடைய குரு ஆசிரியர் உறவினர்கள் நண்பர்கள் இருந்தார்கள். இதனால் பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜூனன் போரிட மறுத்தார். இதைக் கண்ட கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவு முறைகளை பார்த்து பாசத்திற்கு கட்டுப்படக்கூடாது என்று விளக்கினார். அவரது விளக்கத்தில் தத்துவங்கள் யோகங்கள் போன்ற பலவற்றை பற்றியும் விளக்கியுள்ளார். பாசத்திற்கு கட்டுப்பட்ட அர்ஜுனன் கேட்ட கேள்வியும் அதற்கு கிருஷ்ணர் கொடுத்த பதில்களும் பகவத் கீதையாகும். இதில் கர்மயோகம் பக்தியோகம் ஞானயோகம் என மூன்று விதமான யோகத்தை அர்ஜூனனுக்கு விவரித்து அருளியிருக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இரண்டு தரப்புகளில் இருந்தும் சங்கு நாதம் செய்தால் மட்டுமே யுத்தம் ஆரம்பிக்கும் என்ற யுத்த தர்மப்படி பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்வதற்கு முன்பாக இந்த பகவத் கீதை அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்தார். கிருஷ்ணரின் உபதேசத்தைக் கேட்ட பின் அர்ஜூனன் யுத்தத்திற்கு தாயாரானான். அதன் பின்பாகவே பாண்டவர்களின் பக்கம் இருந்து சங்கு நாதம் செய்து நாங்களும் யுத்தத்திற்கு தயார் என்று அறிவிக்கப்பட்ட பின்பு யுத்தம் துவக்கப்பட்டது.

பகவத் கீதை18 அத்தியாயங்கள் கொண்டதாக உள்ளது. பகவத்கீதையில் புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளும் உண்டு. மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கப்படும் பகுதிகளும் உண்டு. பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் ராமானுஜர் மத்வர் போன்ற மகான்கள் வடமொழியில் உரை எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த நிம்பர்க்கர் வல்லபர் ஞானேசுவரர் போன்றவர்கள் விளக்கங்கள் எழுதியுள்ளனர். இவர்களின் பின்னால் வந்த இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்தா பக்திவேதாந்த சுவாமி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சுவாமி சிவானந்தர் சுவாமி அரவிந்தர் மகாத்மா காந்தி வினோபா பாவே அன்னி பெசண்ட் அம்மையார் சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் உரைகளை எழுதியிருக்கின்றனர். பாரதியார் சமஸ்க்ருதத்தில் புலமை மிக்கவர். பகவத்கீதையின் சுலோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார்.

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பகவத்கீதை ஆங்கிலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. அம்மொழி பெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்தார். அதில் அவர் இங்கிலாந்து பின் வரும் காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும் என்று குறிப்பிட்டிருந்தார். பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பு 1788 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.

பகவத்கீதையை முழுவதும் படித்து உணர்ந்து அதில் சொல்லும் தர்மத்தை கடைபிடிப்பவன் தனது பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று பிறவி இல்லாத நிலையை அடைவான்.