சுலோகம் -153

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-34

ஒவ்வோரு புலனுக்குரிய நுகர்ச்சிப் பொருட்களிலும் விருப்பு வெறுப்புகள் மறைந்து இருக்கிறது. மனிதன் அவ்விரண்டு பிடியிலும் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் அவ்விரண்டும்தான் இவனுடைய மேன்மைப் பாதையில் இடையூறு விளைவிக்கும் எதிரிகள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

1.கண் – பார்த்தல் 2.காது- கேட்டல் 3.மூக்கு- நுகர்தல் 4.வாய் – பேசுதல் 5.மெய் – உணர்தல் ஆகிய ஐந்து புலன்களின் வழியே ஆசையும் விருப்பமும் ஏற்படுகின்றன. இவற்றை அனுபவிக்கும் போது அவற்றின் நுகர்ச்சிப் பொருளில் விருப்பங்களும் வெறுப்புக்களும் மறைந்து இருக்கிறது. மனிதன் அவற்றை அனுபவிக்கும் போது சில நேரங்களில் விருப்பங்கள் ஏற்படும். சில நேரங்களில் வெறுப்புக்கள் ஏற்படும். இந்த இரண்டிலும் மனிதன் அகப்பட்டு விடக்கூடாது. ஏனெனில் இறைவனை நோக்கி மேன்மை நிலைக்கு செல்ல விரும்பும் மனிதனுக்கு இவை இரண்டும் மிகப்பெரிய எதிரிகளாக இருக்கின்றன.

சுலோகம் -152

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-33

ஆத்ம ஞானம் உடையவன் கூட தனது இயல்புக்கு ஏற்றபடியே பழகுகிறான். அனைத்து உயிரினங்களும் தங்களின் இயற்கையான இயல்பின்படியே நடக்கின்றன. இவற்றை சாஸ்திரங்கள் என்ன செய்ய இயலும்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனது ஆத்மாவை அறிந்து கொண்டவன் ஆத்மாவின் இயல்புக்கு ஏற்றபடியே செயல்படுகிறான். ஆத்மாவை அறிந்து கொள்ளாத மற்ற உயிரினங்களும் தங்களின் உடலுக்கும் ஆசைக்கும் ஏற்றபடியே செயல்படுகின்றன. இந்த இரண்டு செயல்பாடுகளையும் சாஸ்திரங்கள் கட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் ஆத்மாவை அறிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை. ஆத்மாவை அறியாதவர்கள் தன் கர்மாக்களின் வழியாகவும் ஆசையின் வழியாகவும் செல்வதினால் இவர்கள் சாஸ்திரங்களை கடைபிடிப்பதில்லை.

சுலோகம் -151

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-32

எந்த மனிதர்கள் இந்த கொள்கைகளில் குறை காண்பவர்களாக இந்தக் கருத்துக்களை ஏற்று நடப்பதில்லையோ அவர்கள் தங்களின் அறிவை இழந்து சீரழிந்து போவார்கள் என்பதை அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குறைகளைச் சொல்லி இந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் அதற்கு எதிர் மறையாக நடந்து கொள்பவர்கள் தங்களின் அறிவையும் இழந்து தங்கள் பிறவிக் கர்மங்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் மேலும் பல பிறவிகளை சேர்த்துக் கொண்டு சீரழிந்து போவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -150

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-31

எந்த மனிதர்கள் குற்றங்குறை காணாதவர்களாக சிரத்தை உடையவர்களாக என்னுடைய கொள்கையை பின்பற்றுகிறார்களோ அவர்களும் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து சுலோகங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்களில் குற்றம் குறைகள் சொல்லாமல் சிரத்தையுடன் நம்பிக்கையுடன் பின்பற்றி நடப்பவர்கள் அனைவரும் தங்களது அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -149

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-30

ஒன்றிய மனதுடன் எல்லாக் கர்மங்களையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விட்டு ஆசையற்றவனாக சுயநலம் இல்லாமல் தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்களில் எனக்கு என்று சுயநலமாக சிந்திக்காமலும் என் செயல் என்று ஒன்றும் இல்லை அனைத்தும் இறைவன் செயல் என்றும் மனதை ஒரு நிலையுடன் வைத்து செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்பணித்து மனதில் துக்கம் மகிழ்ச்சி என்று எதுவும் இல்லாமலும் இந்த யுத்தத்தை செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -148

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-29

பிரகிருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறை மதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி பிரகிருதியில் உண்டான மூன்று குணங்களால் ஆத்மாவை அறியாமல் மயங்கி நின்று அந்த குணங்களால் உண்டாகும் செயல்களில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இறைவனை அறிந்து கொண்ட ஞானத்தை பெற்றவர்கள் முழுமையான ஞானத்தை பெறாத இவர்கள் கர்ம யோகத்தின் படி செய்யும் செயல்களை தவறு என்று சொல்லியோ இதனை செய்யக் கூடாது என்று சொல்லியோ கர்ம யோகத்தில் செல்பவர்களை தடுத்து ஞான யோகத்தில் செல்லுங்கள் என்று அவர்களை குழப்பக் கூடாது.

சுலோகம் -147

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-28

சுலோகம் -147

நீண்ட புஜங்களை உடையவனே குணங்களின் பிரிவு கர்மங்களின் பிரிவு இவற்றின் தத்துவம் அறிந்த ஞானயோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்று கொள்ளாமல் இருக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி மூன்று குணங்களையும் அதன் பிரிவுச் செயல்களான கர்மங்களின் பிரிவுகளையும் அவை செயல்படும் விதத்தையும் அறிந்த ஞானத்தை பெற்ற யோகி தான் செய்யும் செயல்களில் பற்றுக்கள் இல்லாமல் செயல்படுவார்.

சுலோகம் -146

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-27

இந்த உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ப்ரகிருதியின் ஸத்வ ரஜோ தமஸ ஆகிய மூன்று குணங்களால் நடைபெறுகின்றன. ஆனால் மனம் முழுவதும் அகங்காரம் நிரம்பிய ஒருவன் இந்த செயல்களை நான் செய்தேன் என்று நினைக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்வ குணம் என்பது அமைதி தர்மச்செயல்கள் மற்றும் தன் செயல்களைப் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விடுவது பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது ஆகியவை ஆகும்.

ரஜோ குணம் என்பது ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல் பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவை ஆகும்.

தமஸ குணம் என்பது காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் இம்சை யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் ஆகியவை ஆகும்.

இந்த மூன்று குணங்களினால் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனிடம் நான் என்ற அகங்காரம் இருப்பதால் மனிதன் தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் நான் செய்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

சுலோகம் -145

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-26

ஆத்ம ஞானம் உள்ளவன் குறைவாக அறிவு கொண்டவர்களிடம் அவர்கள் கர்மம் இயற்றும் போது புத்தி பேதத்தை ஏற்படுத்தக் கூடாது. தானும் கர்மயோகத்தில் ஈடுபட்டு அவர்களையும் ஈடுபட வைத்தல் வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆத்ம ஞானம் பெறாதவர்கள் இங்கு குறைவாக அறிவு கொண்டவர்கள் என்று குறிப்பிடப் படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கான செயலை நம்பிக்கையுடன் செய்யும் போது ஞானம் பெற்றவர்கள் அதனை சரி இல்லை என்றோ அவர்களின் நம்பிக்கையிலோ குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. ஞானம் பெற்றவர்கள் சரியான செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருந்து அதன் வழியாக ஞானம் பெறாதவர்களையும் சரியான வழியில் அவர்களுக்கு உண்டான செயலை செய்ய வைக்க வேண்டும்.

சுலோகம் -144

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-25

பாரத குலத்தில் தோன்றியவனே ஞானம் இல்லாதவர்கள் பற்றுடன் கர்மங்களை செய்வார்கள். அதுபோல ஆத்ம ஞானம் பெற்றவன் பற்றில்லாமல் உலக நன்மையை கருத்தில் கொண்டு கர்மம் இயற்ற வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் ஆத்ம ஞானம் பெறாத அனைவரும் தனக்கு என்று பற்றுடன் ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். ஆத்ம ஞானம் பெற்றவர்கள் தனக்கு என்று பற்றில்லாமல் உலக நன்மைக்கு என்று செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.