சுலோகம் -113

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-6

மனதையும் புலன்களையும் வெற்றி கொள்ளாதவனுக்கு நிச்சயமான புத்தி இருக்காது. உறுதியான புத்தி இல்லாதவனுக்கு மனதில் பாவனையும் தோன்றாது. அவ்வாறே பாவனை இல்லாதவனுக்கு அமைதியும் கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் ஏது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொள்ளாதவனுக்கு நிலையான புத்தி இருக்காது. எந்த செயலை செய்தாலும் நிலையில்லாத புத்தியானது அதனை முதலில் சரி என்று சொல்லும் சிறிது நேரத்தில் இது சரியில்லை என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு புத்தியானது தடுமாறிக் கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களது மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனையும் தியானமும் வராது. இதனால் இவர்களது மனதில் அமைதி என்றும் இருக்காது. அமைதி இல்லாதவனுக்கு வாழ்க்கையில் இன்பம் என்பது இருக்காது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -112

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-65

உள்ளத் தெளிவு ஏற்பட்டு விட்டால் இவனுடைய எல்லா துக்கங்களுக்கும் அழிவு ஏற்பட்டுவிடும். தெளிவடைந்த மனமுடைய கர்ம யோகியின் புத்தி விரைவிலேயே ஏல்லா விஷசங்களில் இருந்தும் விலகிப் பரமாத்மா ஒன்றிலேயே நன்கு நிலை பெற்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு விட்டால் அவனது மனமானது அமைதி அடைந்து இறைவனின் மீது லயித்து கிடக்கும். சதா சர்வ காலமும் இறைவனின் மீது லயித்து இருப்பவனுக்கு உலக ரீதியாகவும் பந்த பாச ரீதியாகவும் ஏற்படும் அனைத்து துக்கங்களும் எரித்து அழிந்து விடுகிறது. அதன் பிறகு அவனுடைய மனமானது உலக விஷசயங்களில் இருந்து விலகி இறைவனிடம் மட்டுமே நிலையாக நின்று விடுகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -111

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-64

தன்வசப்பட்ட மனதுடைய சாதகன் விருப்பு வெறுப்பின்றி தன்னால் வசப்பட்ட புலன்கள் மூலம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவற்றின் மூலம் பாதிக்கப்படாமல் உள்ளத் தெளிவை அடைவான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஐந்து புலன்களையும் அடக்கி தன் வசப்படுத்தி இறைவன் மீது எண்ணத்தை வைத்து தியானம் செய்கின்ற சாதகன் உலகத்தில் அவனைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் தன் புலன்களால் பார்க்கும் போது துன்பம் வந்தால் அதனை வெறுக்காமலும் இன்பம் வந்தால் அதனால் மகிழ்ச்சி அடையாமலும் அனைத்தையும் ஒரே மாதிரி எண்ணத்தில் பார்க்கும் போது அவன் உள்ளத் தெளிவை அடைகிறான்.

சுலோகம் -110

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-63

கோபத்தினால் அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாற்றத்தினால் புத்தி அழிவு ஏற்படுகிறது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதனின் ஆசை மற்றும் அவனது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் கோபத்தினால் அவனுக்கு அறிவு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் அவனது அறிவு தான் செய்வது மட்டுமே சரியானது என்று எண்ணி மனதில் தோன்றியதெல்லாம் செய்து கொண்டு சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தினால் அவனது புத்தி கீழ் நிலைக்கு சென்று அழிய ஆரம்பிக்கின்றது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து கீழான நிலைக்கு செல்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -109

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-62

புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் வருகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இறைவனின் மீது தனது மனதை வைக்காதவனின் சிந்தனையானது உலகத்தில் உள்ள போகப் பொருட்களின் மீது சென்று கொண்டே இருக்கிறது. அந்த பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதினால் அந்தப் பொருட்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று உண்டான பின் அவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆசையை அனுபவித்து விட்டால் இதை விட பெரிய ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று மனமானது மேலும் ஆசைப்படுகிறது. ஆசையை அனுபவிக்க சூழ்நிலை இல்லை என்றாலோ தடங்கல் ஏற்பட்டாலோ அதற்கு காரணமானவர் மீது கோபம் வருகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -108

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-61

அனைத்து புலன்களையும் தன் வசப்படுத்தி ஒரு முகப்படுத்திய சித்தமுடையவன் என்னையே பரகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி உறுதியானதாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தன் அனைத்து புலன்களையும் தனக்குள் உள்ளிழுத்து தன் வசப்படுத்தியவனின் புத்தியானது உறுதியான வைராக்கியத்துடன் இருக்கும். அந்த உறுதியான வைராக்கியத்துடன் தன் மனதை ஒரு முகப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை காண வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்தால் தனக்குள் இருக்கும் இறைவனை கண்டு உணரலாம். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

புத்தி உறுதியாகி தியானத்தில் அமர்பவனுடைய மனம் இறைவனிடம் ஒன்று சேர்கிறது. அப்படி மனதை இறைவனிடம் ஒன்று சேர்த்த சாதகனின் மனமாகிய காற்றும் நெருப்பாகிய இறைவனும் ஒன்று சேர்வதினால் காற்றும் நெருப்பும் சேர்ந்து வைக்கோலை எரிப்பது போல் சாதகனின் மும்மலங்களும் கர்மாக்களும் எரிந்து சாதகன் முக்தி பெறுகிறான்.

சுலோகம் -107

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-60

அர்ஜூனா பற்று அழியாததால் கலக்குபவைகளான புலன்கள் முயற்சியுள்ள புத்தியாலியான மனிதனின் மனதைக் கூட பல வந்தமாக இழுத்துச் சென்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தனது புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் தனக்குள் உள்ளிழுத்து வைத்துக் கொண்டு மன உறுதியுடன் இருந்தாலும் மனதில் இருக்கும் ஆசைகளை அழிக்காவிட்டால் எவ்வளவு புத்திசாலியான மனிதனின் மனதைக் கூட புலன்களானது பலவந்தமாக இழுத்துச் சென்று விடும். ஆகவே மனிதன் தன் புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் உள்ளிழுத்துக் கொண்டதும் தொடர்ந்து தனக்கான யோக சாதனைகளை (எப்படி என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்கிறார்) செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை உணர முயற்சிக்க வேண்டும் இறைவனை கண்டு உணர்ந்தால் அனைத்து ஆசைகளும் அழிந்து விடும் அதன் பிறகு புலன்கள் மனதை இழுக்க முடியாது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -106

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-59

புலன்களின் மூலம் போகப் பொருட்களை ஏற்றுக் கொள்ளாத மனிதனுடைய புலன் நுகர் பொருட்களை மட்டுமே விலகுகின்றன. ஆனால் அவற்றில் தங்கியுள்ள பற்று விலகுவதில்லை. இந்த புத்தி உறுதியானவனுக்கு பரமாத்வை தரிசித்த பிறகு அந்த பற்றும் விலகி விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உலகப் பற்றுகளின் மீது புலன்கள் செல்லாதவாறு தனக்குள் இழுத்துக் கொண்ட உறுதியுடையவனின் புலன்கள் உள்ளிழுக்கப் படுவதால் ஆசைப்படும் பொருளின் மீது மட்டுமே அவனது புலன் விலகுகிறது. ஆனால் பொருளின் மீது இருக்கும் ஆசை அவனிடம் இருந்து விலகுவதில்லை. ஆனால் இந்த புலன்களை உள்ளிழுத்துக் கொண்டதன் பயனாக அவனது மனம் தனக்குள் ஒரு முகப்படுத்தப்பட்டு தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து தரிசிப்பான். இறைவனின் தரிசனத்தை தனக்குள் கண்ட பிறகு அவன் அந்த பொருளின் மீது வைத்திருந்த ஆசையும் அவனை விட்டு விலகி விடுகிறது.

சுலோகம் -105

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-58

சுலோகம் -105

ஆமை எல்லாப் பக்கங்களில் இருந்தும் தனது உறுப்புகளை உள்ளிளுத்துக் கொள்வது போல மனிதன் புலன் நுகர் பொருட்களில் இருந்து புலன்களை உள்ளிழுத்துக் கொள்கிறோனோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆமையானது ஆபத்துக் காலங்களில் தனது உடல் உறுப்புகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மையுடையது. அது போல் மனிதனின் புலன்கள் ஆசைகளின் காரணமாக இந்த உலகப் பற்றுகளின் மீது செல்லும் போது புலன்களை தனக்குள் இழுத்து அடக்கிக் கொள்ள வேண்டும். எந்த மனிதன் இது போல் தன்னுடைய புலன்களை அடக்கிக் கொள்கிறானோ அப்போது அவனுடைய புத்தி உறுதியானது என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -104

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-57

எவன் ஒருவன் அனைத்திலும் பாசம் வைக்காமல் அந்தந்த நல்ல அல்லது கெட்ட பொருளை அடைந்து மகிழ்வதும் இல்லையோ வெறுப்பதும் இல்லையோ அவனுடைய புத்தி உறுதியானது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் இருக்கும் உறவுகளின் மீதோ அல்லது பொருட்களின் மீதோ அது நன்மை கொண்டதாக இருந்தால் இந்த பொருள் கிடைத்ததும் மகிழ்ச்சி அடையாமலும் தீமை கொண்டதாக இருந்தால் வெறுப்படையாமலும் இருப்பவன் எவனோ அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.