ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 15

ராமர் தனது படைகளை ராவணன் கோட்டையின் நான்கு பக்கங்களும் இருக்கும் ராட்சசர்களின் வலிமைக்கு ஏற்ப நான்காக பிரித்தார். கிழக்குப் பக்கம் இருக்கும் பிரஹஸ்தனை எதிர்க்க நீலனை நியமித்தார். தெற்கே இருக்கும் மகோதரனையும் மகாபாரிசுவனையும் எதிர்க்க அங்கதனை நியமித்தார். மேற்கே இருக்கும் இந்திரஜித்தை எதிர்க்க அனுமனை நியமித்தார். வடக்கே இருக்கும் ராவணனை நானும் லட்சுமணனும் எதிர்ப்போம். எங்களுடன் சுக்ரீவனும் ஜாம்பவானும் விபீஷணனும் இருக்கட்டும் என்றார். காலையில் சுவேலே மலை மீது ஏறி ராவணனின் கோட்டையை பார்த்த ராமர் அதன் அழகை பார்த்து வியந்தார். திரிகூட மலை மேல் மனதைக் கவரும் அழகுடன் ஜொலித்த நகரம் ஆகாயத்தில் தொங்குவது போல் காட்சி கொடுத்தது. கோட்டையின் மதிலை காவல் காத்து நின்ற ராட்சசர்கள் இன்னோரு மதில் சுவர் போல் காணப்பட்டனர். மாட மாளிகையின் அழகையும் செல்வத்தையும் பார்த்த ராமர் ராவணனை நினைத்து வேதனைப் பட்டார். நற்குலத்தில் பிறந்து அதன் பெருமையை அறிந்த ராவணன் தனது மூர்க்கத்தனத்தால் தானும் அழிந்து தனது குலத்தையும் இவ்வளவு செல்வத்தையும் தனது அகங்காரத்தினால் அழிக்கப் பார்க்கின்றானே என்று வருத்தப்பட்டார். நமது சிந்தனையை ராவணை அழிப்பதில் செலுத்துவோம் தேவையில்லாத சிந்தனை செய்தால் பிறகு குழப்பம் உண்டாகும் என்று தனது சிந்தனையை திருப்பி படைகளுக்கு உத்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

ராமர் அனைத்து படைகளுக்கும் யுத்தத்தில் செய்ய வேண்டியதையும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் சொல்ல ஆரம்பித்தார். ராட்சசர்கள் யுத்தம் நடக்கும் நேரத்தில் பல மாய வேடங்களில் வந்து நம்மை குழப்புவார்கள். ஆகவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராட்சசர்கள் வானர வேடத்தையும் கரடி வேடத்தையும் போட்டு நம்மிடம் வந்து யுத்தம் செய்ய அவர்களின் கர்வம் இடம் தராது. எனவே வேறு பல பயங்கரமான பெரிய வேடங்களில் வந்து நம்மை பயமுறத்துவார்கள். அவர்களின் உருவம் மற்றும் ஆயுதங்கள் வேண்டுமானால் பெரியதாகவும் கொடூரமானதாகவும் இருக்கலாம். ஆனால் நம்முடைய வலிமைக்கு முன்பு அவர்களின் வலிமை மிகவும் குறைவு. அவர்களின் உருவத்தை பார்த்து நாம் பயப்படாமல் யுத்தம் செய்தால் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். இதனை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நமது வானர படைகளும் கரடி படைகளும் தங்களது சொந்த வடிவத்திலேயே யுத்தம் செய்யட்டும் என்று சொல்லி முடித்தார். அனைவரும் அங்கிருந்து கிளம்பி ராவணன் கோட்டையை நோக்கி கிளம்பினார்கள். கடற்கரைக்கு அடுத்த காட்டை வானர படைகள் கடக்கும் போது அங்கிருக்கும் மிருகங்கள் இவர்களின் கூட்டத்தை பார்த்து பயந்து அங்கும் இங்கும் ஓடியது. ராவணனின் கோட்டையை பார்த்த வானர வீரர்களுக்கு யுத்தம் செய்யும் ஆர்வம் மேலோங்கி உற்சாக மிகுதியில் கத்திக்கொண்டே விரைவாக சென்றார்கள்.

ராமரின் பின்னே சென்று கொண்டிருந்த சுக்ரீவன் தனது யுத்த ஆர்வத்தினால் ஒரே தாவலில் ராவணன் இருக்கும் மாளிகையின் உச்சிக்கு சென்று அமர்ந்தான். அங்கே ராவணன் தனது பரிவாரங்களோடு அமர்ந்திருந்தான். ராவணனை கண்ட சுக்ரீவன் ராவணா என்னிடம் நீ இன்று சிக்கினாய் இன்றோடு நீ அழிந்தாய் என்று ராவணனின் மேல் பாய்ந்து ராவணனின் கீரிடத்தை தள்ளி ராவணனை ஓர் அறை அறைந்தான். தன்னை தாக்க யாரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ராவணனுக்கு விழுந்த அடியில் அவனுக்கு சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உடனே சுதாரித்துக் கொண்ட ராவணன் தானும் யுத்தத்திற்கு தயாரானான். இருவருக்கும் இடையே பெரிய மல்யுத்தம் நடந்தது. இருவரும் மல்யுத்தத்தில் வல்லவர்கள். இருவரும் தங்களது வலியையையும் திறமையையும் காட்டி சண்டையிட்டார்கள். சிறிது நேரத்தில் சுக்ரீவனுடன் சண்டையிட ராவணன் மிகவும் கஷ்டப்பட்டான். அதனால் தனது மாய வித்தையை காட்ட ஆரம்பித்தான். இதனை சமாளிக்க முடியாத சுக்ரீவன் உடனே மீண்டும் தாவி ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 14

ராமர் இலங்கைக்குள் பெரும் படையுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ராவணனின் தாய் வழி சொந்தமான மால்யவான் என்னும் வயதான ராட்சசன் ராவணனிடம் சென்று உன்னுடைய நல்ல காலம் முடிந்து விட்டது. நீ செய்து வந்த பாவ காரியங்களினால் உன்னுடைய வலிமை குறைந்து போயிற்று. நீ தவமிருந்து பெற்ற வரங்களை இனி நம்பிக்கொண்டு இருக்காதே. உனது தீய செயல்களினால் உன்னுடைய தவ பயன்கள் அனைத்தும் குறைந்து உன்னை விட்டு சென்று விட்டது. இப்போது அவைகள் உனக்கு பயன் தராது. இலங்கைக்கு வந்திருக்கும் சேனைகளை பார். மனிதர்களுடன் வானரங்களும் பயங்கரமான கரடிகளும் வந்திருக்கிறது. அவர்கள் கட்டிய பாலத்தின் வலிமையையும் அதன் அற்புதத்தையும் பார். மகாவிஷ்ணுவே மனித உருவத்தில் வந்து விட்டார் என்று நான் எண்ணுகிறேன் ராமருடன் சமாதானம் செய்து கொள் என்று மால்யவன் ராவணனிடம் கூறினார். அதற்கு ராவணன் நீங்கள் சொல்லும் சொற்கள் எனக்கு மிகவும் கொடூரமான வார்த்தைகளாக கேட்கிறது. விபீஷணன் போல் நீங்களும் எதிரிகளோடு சேர்ந்து ராட்சச குலத்திற்கு எதிரிகளாகி விட்டீர்கள் என்று எண்ணுகிறேன். ராட்சச குலத்தை எதிர்க்க மனித குலத்திற்கு வலிமை இல்லை. தகப்பனால் காட்டுக்குத் துரத்தப்பட்ட மானிடன் ஒருவனை கண்டு அனைவரும் பயப்படுகிறீர்கள். குரங்குகளையும் கரடிகளை நம்பி ஒரு மனிதன் வந்திருக்கின்றான். அவர்களை கண்டு நீங்கள் பயப்படுகின்றீர்கள். ராட்சச குலத்தில் பிறந்து இத்தனை பயத்தை வைத்திருக்கும் உங்களை பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கின்றது. என் மேல் உங்களுக்கு ஏதேனும் பொறாமையாக இருக்கிறதா ஏன் இப்படி பேசுகிறீர்கள். நான் ராமனை வணங்க முடியாது. என்னுடைய சுபாவத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. ராமரிடம் யுத்தம் செய்து இறந்து போனாலும் போவேன். ஆனால் ராமனிடம் சமாதானமாக போக மாட்டேன் என்று ராவணன் சொல்லி முடித்தான். அதற்கு மால்யவான் யோசித்து செய்ய வேண்டியதை செய்து கொள் என்று சொல்லி விட்டு வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினார்.

ராமர் பெரிய படையுடன் வந்திருப்பதினால் தனது கோட்டைக்கு ராவணன் பெரிய அரண் அமைக்க தனது சபையை கூட்டி ஆலோசனை செய்தான். யுத்தம் ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதால் உலகத்தில் இருக்கும் அனைத்து ராட்சச வீரர்களும் உடனே இலங்கைக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டான். இரண்டு ஒற்றர்களை வரவழைத்த ராவணன் ராமன் தலைமையில் வந்திருப்பவர்கள் எவ்வாறு பாலத்தை கட்டினார்கள். அவர்கள் படைகளின் எண்ணிக்கை அவர்களிடம் உள்ள ஆயுதங்களின் பலம் அவர்களின் வலிமை பற்றியும் அவர்களில் ஒருவராக உருவம் மாறி சென்று அவர்களுடன் கலந்து அனைத்தையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். இலங்கையின் கிழக்கு பக்கத்திற்கு பிரஹஸ்தனையும் தெற்கு பக்கத்திற்கு மகாபாரிசுவன் மகோதரன் இருவரையும் மேற்கு பக்கத்திற்கு தனது மகன் இந்திரஜூத்தையும் அவர்களின் படைகளுடன் காவலுக்கு செல்லுங்கள் என்று உத்தரவிட்ட ராவணன் தான் வடக்கு பக்கத்திற்கு தானே காவல் இருப்பதாக கூறி தனது படைகளை உடனே வரவேண்டும் என்று உத்தரவிட்டான். அனைத்து காரியங்களையும் சரியாக செய்து விட்டோம் இனி யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் ராவணன். அனைவரும் ராவணன் வாழ்க இலங்கை வெல்க என்று கூக்குரலிட்டு ராவணனை சந்தோசப்படுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

ராமரிடம் வந்த விபீஷணன் இலங்கையிலிருந்து வந்த தன்னுடைய ஒற்றர்கள் ராவணன் செய்த செயல்களையும் படை பலத்தையும் பற்றி தெரிந்து கொண்டு வந்த செய்தியை கூறினான். தேவலோகத்தில் குபேரனை ராவணன் எதிர்க்க சென்ற போது இருந்த படைகளை விட இப்போது இருக்கும் படைகள் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனாலும் வெற்றி நமக்கே என்றான் விபீஷணன். ராமரும் சுக்ரீவனும் வீபீஷணனும் யுத்தம் செய்வதை பற்றி கலந்து ஆலோசனை செய்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 13

ராமரிடம் கடலரசன் தொடர்ந்து பேசினான். எனது இயற்கை தன்மை மாறாமல் தாங்கள் உங்கள் வானர படையுடன் இந்த கடலை தாண்டிச் செல்ல ஓர் வழியை உங்களிடம் சொல்கிறேன். அதன் படி செயல்பட்டு நீங்கள் இந்த கடலை தாண்டிச் செல்லலாம். வானரங்களை வைத்து இலங்கை வரைக்கும் கற்பாறைகளையும் மரங்களையும் வைத்து ஒரு பாலம் கட்டுங்கள். அதனை அலைகள் தாக்கி அழிக்காமலும் நீரில் மிதக்கும் படியும் பார்த்துக் கொள்கிறேன். இந்த வானரப்படைகள் கடலை தாண்டிச் செல்லும் வரை பெரிய மீன்கள் முதலைகள் யாரையும் தாக்காமல் பார்த்துக் கொள்கிறேன். எனது தர்மத்தை மீறாமல் இந்த உதவியை மட்டும் செய்கிறேன். தங்களின் வானர படைகளில் நளன் இருக்கிறான். தேவலோக விசுவகர்மாவின் மகனாக அவனிடம் பாலம் கட்டும் பணிகளை ஒப்படையுங்கள் அவன் இந்த அணையை திறமையுடன் கட்டி முடிப்பான் என்று சொல்லி கடலரசன் ராமரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.

ராமர் உடனடியாக நளனை வரவழைத்து பாலம் கட்டும் பணியை ஒப்படைத்தார். வானர வீரர்கள் காடுகளில் சென்று ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிய்த்து எடுத்து வந்து நளன் சொல்லியபடி கடலுக்குள் போட்டார்கள். மரங்கள் கடலில் மிதந்தது. மரங்களின் மேல் பெரிய பாறைகளை அடுக்கி வைத்து பாதை அமைத்தார்கள். அனுமன் அனைத்து பாறைகளிலும் ஸ்ரீ ராம் என்று எழுதினார். பாலம் கட்டும் வேலையினால் எழுந்த பெரிய சத்தம் கடலின் ஓசையை விட பெரியதாக இருந்தது. முதல் நாளில் பதினான்கு யோசனை தூரமும் 2 வது நாளில் இருபது யோசனை தூரமும் 3 வது நாளில் இருபத்தியோரு யோசனை தூரமும் நான்காவது நாளில் இருபத்தியிரண்டு யோசனை தூரமும் ஐந்தாவது நாளில் மீதியுள்ள தூரத்திலும் பாலத்தை கட்டி முடித்து இலங்கை கடலின் கரை வரை பாலத்தை கட்டி முடித்தார்கள். இலங்கை கடற்கரை வரை பாலம் கட்டும் பணி ஐந்து நாட்களில் முடிந்தது. இலங்கையில் உள்ள கடற்கரையில் ராவணனின் ராட்சச வீரர்கள் யாரும் பாலத்தை தகர்த்து சண்டைக்கு வரதாபடி விபீஷணன் தன்னுடன் உள்ள வீரர்களுடன் ஆயுதத்துடன் அனைவருக்கும் பாதுகாப்பாக நின்றான். தேவர்கள் கந்தர்வர்கள் முனிவர்கள் கடலில் கட்டப்பட்ட பாலத்தை கண்டு வியந்தார்கள்.

ராமரிடம் வந்த சுக்ரீவன் பாலம் கட்டப்பட்டு விட்டது. இங்கிருந்து தாங்கள் இலங்கையில் இருக்கும் அக்கரை வரை நடந்து சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் அனுமன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். லட்சுமணன் அங்கதன் மீது அமர்ந்து கொள்ளட்டும். விரைவாக நாம் இலங்கை சென்று விடலாம் என்று ராமரிடம் சுக்ரீவன் கூறினான். ராமரும் லட்சுமணனும் முன்னே செல்ல பின்னால் வானரப் படைகளும் ஜம்பவான் தலைமையில் கரடிப் படைகளும் சென்றது. வானரங்கள் கூச்சலிட்டுக் கொண்டே சிலர் ஆகாயத்தில் தாவியும் சிலர் நீரில் நீந்தியும் சிலர் கருடனைப் போல் பறந்தும் ராமரின் பின்னே பாலத்தை கடந்தார்கள். வானரப்படைகள் எழுப்பிய சத்தம் கடலில் இடி முழக்கம் போல் எதிரொலித்தது. அனைவரும் இலங்கை கடற்கரையை அடைந்தார்கள். ராமர் லட்சுமணனிடம் வந்திருக்கும் அனைவருக்கும் உணவு நீர் கிடைக்கும் காடுகளாக பார்த்து தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடு என்றார். விபீஷணன் உதவியுடன் இலங்கையில் உணவு நீர் இருக்கும் காடுகளாக பார்த்து வானப்படைகள் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டார்கள். ராமரிடம் வந்த தேவர்களும் முனிவர்களும் உங்கள் எதிரியான ராட்சசர்களை வென்று இந்த மண்ணுலத்தில் பல்லாண்டு வாழ்ந்து தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கிச் சென்றார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 12

ராமருக்கு தூதுவனாக வந்த ராட்சசனின் அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்களிடம் என்ன சத்தம் என்று கேட்டார். அதற்கு தூதுவன் என்று சொல்லிக் கொண்டு ராவணனிடம் இருந்து வந்த ஒரு ராட்சசன் சுக்ரீவனின் மனதை கலைக்க பார்த்தான். அவனை நமது வானர வீரர்கள் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த ராட்சசனின் சத்தம் தான் கேட்கிறது என்றார்கள். அதற்கு ராமர் தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தர்மம் இல்லை. எனவே அவனை விட்டு விடுங்கள் என்று உத்தரவிட்டு தனது உபவாசத்தை தொடர்ந்தார். ராமரின் உத்தரவை கேட்ட வானர வீரர்கள் ராட்சசனை விடுவித்தார்கள். விடுதலையான ராட்சசன் வானத்தில் பறந்து சென்று அங்கிருந்து சுக்ரீவனிடம் ராவணன் தங்களுக்கு அனுப்பிய செய்திக்கு தங்களின் பதிலை சொல்லுங்கள். அதனை நான் எனது அரசனான ராவணனிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் துஷ்டனான ராவணனுக்கு நான் தம்பியுமில்லை. அவன் எனக்கு அண்ணனுமில்லை. ராமர் எனக்கு நண்பன். அவருக்கு ராவணன் எதிரியானதால் எனக்கும் ராவணன் எதிரி ஆகிறான். தேவர்கள் கந்தர்வர்கள் என்று யாராலும் இலங்கையை நெருங்க முடியாது என்ற ராவணனின் கர்வத்தை அழித்து அவனையும் அழிக்க விரைவில் நாங்கள் கடலை கடந்து வந்து விடுவோம். நாங்கள் வந்ததும் ராவணன் பிழைக்க மாட்டான். ராவணன் இந்த உலகத்தில் எங்கு ஓடி ஒளிந்தாலும் ராமரின் அம்பில் இருந்து தப்ப மாட்டான் என்று உனது அரசனிடம் போய் சொல். ராமரின் கருணையால் நீ பிழைத்தாய் விரைவாக இங்கிருந்து ஓடி விடு என்று சுக்ரீவன் ராட்சசனை விரட்டி அடித்தான். ராட்சசன் விரைவாக அங்கிருந்து சென்று விட்டான்.

ராமர் உபவாசமிருக்க ஆரம்பித்து 3 நாட்கள் ஆனது. கடலரசன் உதவி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ராமர் உபவாசத்திலிருந்து எழுந்து லட்சுமணனை அழைத்தார். தர்மப்படி கடலரசனின் உதவியை கேட்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் இப்போது அதற்கான காலம் கடந்து விட்டது. இதற்கு மேல் பொறுமையுடன் இருக்க முடியாது. நமது சக்தினால் நமக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம் எனது வில்லையும் அம்பையும் எடுத்து வா என்றார். லட்சுமணன் ராமரின் வில்லையும் அம்பையும் அவரிடம் கொடுக்க ராமர் தனது வில்லில் அம்பை புட்டி இந்த கடலை சிறிது நேரத்தில் வற்றச் செய்கிறேன் என்று சொல்லி அம்பை கடலில் எய்தார். கடலை புரட்டி எடுத்த அம்பு ஆழ்கடலுக்கு சென்று கடலின் இயற்கை தன்மையை மாற்றியது. அலைகளில் கலக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறியது. பேரொளியுடன் கூடிய பெரும் புயல் காற்று கடலை சுழற்றி தனக்குள்ளேயே பொங்கியது. கடல் நீர் ஆகாயம் வரை எழும்பி சுழலத் தொடங்கியது. கடலுக்கு அடியில் இருந்த மலைகளும் பெரும் பாறைகளும் இடம் மாறி தங்களின் தன்மையை மாற்றிக் கொண்டது. கடலின் ஜீவ ராசிகள் அனைத்தும் நடுங்கியது. பூமி அதிர்ந்தது. கடலரசனால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை. அலறிக் கொண்டு தனது தேவதைகளுடன் வெளிப்பட்டு அபயம் அபயம் என்று ராமரை சரணடைந்தான். ராமர் தனது அஸ்திரத்தை மீண்டும் திரும்ப அழைத்துக் கொண்டார். புயல் காற்று நின்று கடல் பழையபடி தனது இயற்கை தன்மைக்கு மாறியது.

ராமரை வணங்கிய கடலரசன் இயற்கை விதிப்படியே நான் நடந்து கொள்ள வேண்டும். இயற்கையாகவே அளவிட முடியாத ஆழமும் அனைவராலும் தாண்ட முடியாதவனாகவும் இருக்கிறேன். நீரின் வேகத்தையும் வசிக்கும் ஜீவராசிகளுக்குமான இடத்தை அளித்து அவர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் செய்து இயற்கைக்கு உட்பட்டு நான் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சக்தியினால் என்னை வற்ற வைத்தால் இயற்கைக்கு எதிராக அனைத்தும் செயல் பட ஆரம்பித்து விடும். இத்தனை படைவீரர்களும் கடலைக் கடக்கும் வரை என்னால் அலைகளை நிறுத்தி வைத்தோ செல்லும் வழிகளில் எல்லாம் நீரின் ஆழத்தை குறைத்தோ இயற்கைக்கு எதிராக நான் செயல்பட முடியாது.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 11

ராமர் கடல் அரசனுக்கு உபவாசத்தை செய்து கொண்டிருக்கும் போது ராவணன் ராமர் எத்தகைய படைகளுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சார்தூலன் என்ற ராட்சசனை அனுப்பி உளவு பார்த்து வருமாறு அனுப்பினான். ராவணனிடம் திரும்பி வந்த ஒற்றன் கடற்கரையில் தான் கண்ட காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு மிகப்பெரிய படைகளுடன் இங்கு வருவதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கையை நோக்கி கணக்கில் அடங்காத வானரங்களும் கரடிகளும் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கிறது. அவர்களை பார்ப்பதற்கு கடற்கரையில் இன்னோரு கடல் இருப்பது போல் யாரும் உள் புக முடியாத அளவிற்கு கூட்டமாக உள்ளார்கள். இந்த படைகள் பத்து யோசனை தூரத்திற்கான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு மிகப்பெரிய படைகளாக இருக்கிறார்கள். விரைவில் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்லி முடித்தான். ஒற்றனின் பேச்சில் ராவணன் மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களின் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும் பேசும் முறைகளையும் சொல்லி தூது செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.

ராமர் லட்சுமணர்கள் உட்பட அனைவரும் ஒன்றாக இருந்ததினால் சுக்ரீவனை தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சுகனுக்கு அதற்கான சமயம் அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பி இருக்கின்றான் என்று பேச ஆரம்பித்தான். ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் அரச பரம்பரையில் பிறந்த ஒரு நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன் இன்னோரு நாட்டின் அரசனோடு நட்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். இதுவே மரபு. ஒரு நாட்டில் இருந்து துரத்தப்பட்ட ராமருடன் நீங்கள் நட்பு கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் காட்டில் வாழும் ராமருடன் நட்பு கொள்வதால் அரசன் என்ற உங்களின் பெரும் மதிப்பு தாழ்ந்து சென்று விடுகிறது. நீங்கள் ராமருக்கு உதவி செய்வதினால் இலங்கை அரசனை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கும் ராவணனுக்கும் இதுவரையிலும் எந்த விதமான பகையும் விரோதமும் இல்லை. தற்போது பகை என்று வந்து விட்டால் இருவரின் படைகளுக்கும் சண்டை ஏற்படும். ராட்சசர்களின் படைகள் மிகவும் வலிமையானது அவர்களை வெற்றி பெறுவது என்பது யாராலும் இயலாத காரியம். இலங்கை நகரத்தை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரை தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் கூட நெருங்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வானர படைகளை வைத்து நீங்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்கள். நீங்கள் ராவணனுக்கு தம்பி போன்றவர். உங்களையும் உங்களது படைகளின் அழிவையும் ராவணன் விரும்பவில்லை. உங்களிடம் நட்புடன் இருக்கவே விரும்புகிறார்.

ராமரின் மனைவி சீதையை ராவணன் தூக்கிச் சென்றதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை. எனவே இது பற்றி நீங்கள் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். விரைவில் உங்கள் படைகளுடன் உங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று விடுங்கள் இதுவே உங்களுக்கு நன்மையை தரும் என்று சொல்லி முடித்தான். ராட்சசன் சுகன் சொன்னதை முழுமையாக கேட்ட சுக்ரீவன் கோபம் மிகவும் அடைந்தான். இந்த ராட்சசனை பிடித்து கட்டுங்கள் என்று தனது வானர படைகளுக்கு சுக்ரீவன் கட்டளையிட்டான். வானர வீரர்கள் பாய்ந்து சென்று பறவை வடிவத்தில் இருந்த ராட்சசனை பிடித்து கட்டி அதனை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 10

ராமர் சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இலங்கையில் இனி இருந்தால் தனக்கு ஆபத்து என்று எண்ணி விபீஷணன் பயந்து இங்கு நம்மை சரணடைய வந்திருக்கலாம். ராவணனை அழித்து நாம் வெற்றி பெறுவோம். இலங்கையை விபீஷணனிடம் ஒப்படைப்போம். ராவணனுடைய ராஜ்யத்தை அனுபவிக்கலாம் என்ற ஆசையில் இங்கு விபீஷணன் வந்திருப்பான் என்ற அனுமனின் வார்த்தையில் உண்மை இருக்கிறது. நாட்டின் நலன் கருதி எடுத்த முடிவாக இருந்தால் இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆபத்துக் காலத்தில் ராவணனை கைவிட்ட விபீஷணன் நம்மையும் கைவிடுவான் என்ற உன்னுடைய வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் நம்மைக் கைவிடுவதற்கு விபீஷணனுக்கு சரியான காரணம் ஒன்றும் இல்லை. நாம் அவர்களை நம்மோடு சேர்த்துக் கொண்ட பிறகு அவர்களை சந்தேகப்படப் போவதில்லை. சரணடைந்தவர்களை அழிக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் நம்மிடம் இல்லை என்பதை விபீஷணன் நன்கு அறிவான். அடுத்து இலங்கையை வெற்றி பெற்ற பிறகு அவர்களின் ராஜ்யத்தின் மீது ஆசை வைக்கப் போவதில்லை. ராஜ்யத்தை அவர்களிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு வந்து விடுவோம். நாம் வெற்றி பெற்றால் மட்டுமே விபீஷணனுக்கு ராஜ்யம் கிடைக்கும். எனவே விபீஷணன் நமது வெற்றிக்கு துணை இருப்பான் என்றே நான் கருதுகிறேன். அடுத்து ஒருவன் என்னை சரணடைகிறேன் என்று வந்து விட்டால் அவன் நல்லவனோ கேட்டவனோ அவனை தள்ளி வைக்க என்னால் முடியாது. இது என்னுடைய பிறவி தர்மம். அதனால் எனக்கு ஏதேனும் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை அதனை நான் பொருட்படுத்த மாட்டேன். எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் நான் கடைபிடிக்கும் தர்மத்தை விட்டுவிட மாட்டேன். ராவணனே என்னிடம் வந்து உங்களை சரணடைகிறேன் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தாலும் அவனை சோதித்து பார்க்காமல் சேர்த்துக் கொள்வேன். அப்படியிருக்க என்னிடம் சரணடைய வந்திருக்கும் ராவணனின் தம்பியை நான் எப்படி தள்ளி வைக்க முடியும். உடனடியாக விபிஷணனை இங்கே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார் ராமர்.

ராமரிடம் சுக்ரீவன் பேசினான். உங்களது பேச்சில் நான் தெளிவடைந்து விட்டேன். எனது சந்தேகங்கள் தீர்ந்தது என்று தனது படை வீரர்களிடம் விபீஷணனை இப்போதே இங்கு அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டான் சுக்ரீவன். ராமர் லட்சுமணனை பார்த்து சிரித்தார். எல்லோரும் பரதனைப் போல் இருப்பார்களா என்று பரதனை நினைத்து ராமர் சிறிது நேரம் கண்ணை முடி பரதனை நினைத்து ஆனந்தப்பட்டார். லட்சுமணனையும் பரதனைப் போன்ற சகோதரர்களை அடைந்த என்னைப் போன்ற பாக்கியவான்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. மேலும் உங்களைப் போன்ற நண்பர்கள் யாருக்கு கிடைப்பார்கள் என்று கண்ணில் நீர் பெருக ஆனந்தத்துடன் அனைவரிடமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் ராமர்.

ராமரிடம் விபீஷணன் அழைத்து வரப்பட்டான். ராமரை வணங்கிய விபீஷணன் உங்களிடம் சரணடைகிறேன். தர்மத்தின் வழி நடக்கும் உங்கள் நட்பை நாடி வந்திருக்கிறேன். என்னுடைய நட்பை ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் தயங்காமல் சொல்லுங்கள். தங்களுக்கு தேவையானதை என்னால் முடிந்த வரை செய்து முடிப்பேன் என்று வணங்கி நின்றான் விபீஷணன். ராவணனை அழிக்காமல் இந்த இடத்தை விட்டு நான் செல்ல மாட்டேன் என்று சபதம் செய்த ராமர் என்னுடைய நட்பை உனக்கு தருகிறேன். இந்த நேரம் முதல் நீ என்னுடைய நண்பன். இன்று முதல் நீ தான் இலங்கையின் அரசன் என்று விபீஷணனுக்கு அங்கேயே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் ராமர். பிறகு அனைவரும் கடலை எப்படி தாண்டலாம் என்று ஆலோசனை செய்தார்கள். முதலில் கடல் ராஜனை வேண்டிக் கொண்டு அவரது உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ராமர் கடற்கரையில் தர்ப்பை புல்லை பரப்பி முறைப்படி அமர்ந்து கடல் ராஜனுக்கான உபவாசத்தை துவக்கினார்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 9

ராமரிடம் அனுமன் தொடர்ந்து பேசினார். எதிரிகள் கூட்டத்தில் இருந்து ராட்சசன் ஒருவன் வந்ததும் அவனை எப்படி நம்புவது என்று பலரும் வந்தவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்கள். சிறிது நாள் அவர்களை சேர்த்துக் கொண்டு கண்காணிக்கலாம் என்றும் அவர்களின் குணத்தை அறிந்து பின்பு சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சரணடைந்தவர்களை சேர்த்து கொண்ட பிறகு அவர்கள் மேல் சந்தேகப்படுகிறோம் என்று தெரிந்தாலே நம் மீதான நம்பிக்கை குறைந்து விடும். முன்பு நம்மிடம் நடந்து கொண்டது போல் விசுவாசமாக அவர்களால் நடந்து கொள்ள முடியாது. இது இயற்கையாக அனைவருக்கும் இருக்கும் சுபாவம். நாம் அவர்களிடம் ஏதோ குற்றத்தை தேடுகிறோம் என்று சுதந்திரமாக இல்லாமல் நம்மிடம் பயத்துடனே இருப்பார்கள். ஒருவன் பொய் பேசினால் அவனது முகம் காட்டிக் கொடுத்து விடும். இது நீதி சாஸ்திரம் சொல்லும் உண்மை. வந்திருக்கும் ராட்சசர்களின் முகத்தையும் பேச்சையும் பார்க்கும் போது அவர்கள் உண்மையை பேசுகின்றார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் மீது எனக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை. ராவணனின் பராக்கிரமத்தை முழுவதுமாக அறிந்தவன் விபீஷணன். ஆனாலும் ராவணன் தங்களிடம் தோல்வி அடைவான் என்பதை தன் அறிவின் மூலம் உணர்ந்து கொண்டான்.

ராமர் யாராலும் வெற்றி பெற முடியாத வாலியை அழித்து சுக்ரிவனிடம் ராஜ்யத்தை கொடுத்தார் என்பதை விபீஷணன் நன்கு அறிவான். அதன்படி ராவணனை நீங்கள் அழித்த பிறகு இலங்கைக்கு விபீஷணனை அரசனாக்கி விடுவீர்கள் என்ற திட்டத்தில் தற்போது உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்பது என்னுடைய கருத்து. விபீஷணன் அவ்வாறு திட்டமிட்டு நடந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இத்திட்டத்தில் அவன் ராவணனுக்கு எதிராக வஞ்சகம் ஒன்றும் செய்யவில்லை. தான் பிறந்த நாடு அழியாமல் பாதுகாக்கும் நன்மை கருதி தர்மத்தின் படியே நடந்து கொள்கிறான். விபீஷணன் உண்மையில் உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே வந்திருக்கும் ராட்சசர்களின் மீது சந்தேகப்படாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து. என்னுடைய புத்திக்கு எட்டிய வரை சொன்னேன். தாங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதன் படியே செய்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார் அனுமன்.

ராமருக்கு அனுமன் சொன்ன கருத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பலரும் பல விதங்களில் ஆலோசனைகளை சொன்னார்கள். அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்ட ராமர் பேச ஆரம்பித்தார். வந்திருக்கும் ராட்சசர்கள் நட்பு நாடி சரணடைய வந்திருப்பதாக சொல்கிறார்கள். சரணம் என்று சொல்லி என்னிடம் வந்தவர்களை ஒதுக்கித் தள்ளக் கூடாது என்பது என்னுடைய தர்மம். எனக்கு நண்பனாக வந்திருந்து எனக்காக இத்தனை வேலைகளை செய்யும் நீங்கள் அனைவரும் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் வந்தவர்கள் வஞ்சகம் செய்து ஏமாற்ற வரவில்லை என்று முழுமையாக தெரிந்து விட்டால் அவர்களிடம் குற்றம் காண கூடாது என்றார். இதனை கேட்ட சுக்ரீவன் சமாதானமடையாமல் தனது வருத்தத்தை ராமரிடம் தெரிவித்து தனது கருத்தை தெரிவித்தான். தங்களது கருத்துப்படி இந்த ராட்சசன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால் தனது சொந்த அண்ணன் ஆபத்தில் சிக்கிய இந்த சமயத்தில் அவனைக் கைவிட்டு நம்மிடம் நட்பு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான். இது போல் நாம் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது நம்மையும் இது போலவே கைவிட்டு செல்வான். இவனை எப்படி நம்புவது அண்ணன் ஆபத்திலிருக்கும் போது கைவிட்டு வந்தவனால் நம்மையும் கைவிட மாட்டான் என்று எப்படி நம்புவது என்றான் சுக்ரீவன்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 8

ராமர் அனைவரின் கருத்தை கேட்டதும் முதலில் அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமரை சரணடைகிறேன் என்று நமது பகைவன் கூட்டத்தில் இருந்து சில ராட்சசர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் தானாக வந்தார்களா இல்லை ராவணனால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டார்களா என்று நமக்கு தெரியாது. இதனை தெரிந்து கொள்ளாமல் இவர்களை அழிப்பது தவறு. இவர்களை சேர்த்துக் கொண்டால் பின்நாளில் நமக்கு ஏதேனும் அபாயம் இவர்களால் வந்தாலும் வரலாம். இவர்களை பற்றி உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது. சில நாள் இவர்கள் இங்கே இருக்கட்டும். இவர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று பார்க்கலாம். இவர்களின் செயல் நல்ல படியாக இருந்தால் நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதன் பிறகு விசாரித்து இவர்கள் வஞ்சகமாக ஏமாற்ற வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அழித்து விடலாம் என்று அங்கதன் பேசி முடித்தான். அதன் பிறகு சபரன் பேச ஆரம்பித்தான். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்வது எனக்கு சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. முதலில் நம்மிடம் இருக்கும் சாமர்த்தியமான ஒற்றர்களை வைத்து இவர்களை சோதித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றான்.

ராமர் ஜாம்பவானைப் பார்த்தார். ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். ராட்சசர்கள் நல்ல எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா வஞ்சக எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா என்று சோதித்து பார்த்து அறிந்து கொள்வது என்பது கடினமான காரியம். ராவணன் நமக்கு மிகப்பெரிய பகைவன். அவனிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இவர்களின் பேச்சு எனக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை எப்படி நாம் நம்புவது. இலங்கை செல்ல இன்னும் நாம் கடலை தாண்டவில்லை. அதற்குள்ளாக ராமரை சரண்டைகிறேன் என்று சொல்கிறார்கள். இதற்குறிய காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ராவணன் ஏற்கனவே வஞ்சகம் செய்து ஏமாற்றியிருக்கிறான். மீண்டும் அது போல் நடக்க விடக்கூடாது. ஆகவே இவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று சொல்லி முடித்தார் ஜாம்பவான். மயிந்தன் பேச ஆரம்பித்தான். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தள்ளி வைப்பது என்பது நல்லவர்கள் செய்யும் சரியான செயல் இல்லை. அவர்களை நம் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை நம் அறிவின் மூலம் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராவணனிடமிருந்து இவர்கள் பிரிந்து வந்தது உண்மையாக கூட இருக்கலாம். இதனை சோதித்து பார்த்து அறிந்து கொள்ளும் திறமையானவர்கள் நமக்குள் இருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான்.

ராமர் அனுமனை பார்த்தார். ராமர் தன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்த அனுமன் பேச ஆரம்பித்தார். தங்களின் யோசனைக்கு முன்பு சிறப்பான யோசனையை யாரால் சொல்ல முடியும். தங்கள் முன்பு யோசனை சொல்லும் வல்லவர்கள் யாரையும் நான் இந்த பூலோகத்தில் காணவில்லை. தாங்கள் என்னிடம் கேட்பதினால் எனக்கு தோன்றியதை இங்கு தெரிவிக்கிறேன். விபீஷணன் வஞ்சகம் செய்து ஏமாற்ற விரும்பி இருந்தால் மறைமுகமாகவே வந்திருக்கலாம். ஆனால் நேரடியாக இங்கு வந்து தைரியத்துடன் அனைவரின் முன்பும் நின்று இலங்கையில் நடந்தவற்றை சொல்லி உங்களை பார்க்க அனுமதி கேட்கிறான். நடந்தவைகள் அனைத்தையும் விபீஷணன் சொன்ன பிறகு ஒற்றர்கள் இவர்களிடம் தனியாக விசாரிக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே இலங்கை சபைக்கு நான் சென்றிருந்த போது அங்கிருக்கும் அனைவரும் ராவணனுக்கு ஆதரவாகவும் தர்மத்திற்கு எதிராகவே பேசினார்கள். அப்போது ராவணனை எதிர்த்து தர்மத்திற்கு ஆதரவாக பேசியவர் இந்த விபீஷணன். இதனை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். தர்மத்திற்கு எதிராக செயல்பட்ட ராவணனுக்கு விபீஷணன் புத்திமதி சொல்லி இருக்கிறான். அதை ராவணன் கேட்காமல் விட்டான். அவனை எதிர்த்து தங்களின் பராக்கிரமத்தை அறிந்து உங்களை விபீஷணன் சரணடைய வந்திருக்கிறான். இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 7

ராமரின் வலிமையை அறியாத உங்களிடம் நான் அவரின் பராக்கிரமத்தை எவ்வளவோ சொல்லியும் நீங்கள் கேட்காமல் இந்த சபையில் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டீர்கள். இனி நான் இங்கிருக்க விரும்பவில்லை. உங்கள் காதுக்கு இனிமையாக பேசுபவர்களின் பேச்சே உங்களுக்கு பிடித்திருக்கிறது. எனது பேச்சு உங்களுக்கு பிடிக்கவில்லை. ஏதேனும் வகையில் ராமரிடமிருந்து உங்களையும் உங்கள் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு துணை நின்று தீயவற்றை செய்வதை விட இங்கிருந்து சென்று தர்மத்தின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன் நான் செல்கிறேன் என்ற விபீஷணன் ராமர் லட்சுமணன் இருக்குமிடம் நோக்கி ஆகாய மார்க்கமாக சென்றான். விபீஷணனுக்கு ஆதரவாக மேலும் நான்கு ராட்சசர்கள் சேர்ந்து கொண்டார்கள். கடலின் கடற்கரையில் இருந்த வானரங்கள் கடலுக்கு மேலிருந்து ஆகாய மார்க்கமாக பெரிய வடிவத்தில் ஐந்து ராட்சசர்கள் வருவதை பார்த்தார்கள். இதனை கண்ட வானரங்கள் சுக்ரீவனிடத்தில் விரைவாக சென்று ராட்சசர்கள் சிலர் ஆகாய மார்க்கமாக வருவதை தெரிவித்தார்கள். இதனைக் கண்ட சுக்ரீவன் கடற்கரைக்கு வந்து வருபவர்கள் ராட்சசர்கள் நம்மைக் கொல்ல ராவணன் அனுப்பியிருப்பான் நம்மை அழிக்க வருகிறார்கள் என்றார். இதனை கேட்ட வானரங்கள் தங்களது ஆயுதங்களுடன் தயாரானார்கள். உத்தரவு கொடுங்கள் இப்போதே அவர்களை அழித்து விடுகிறோம் என்று ஆர்ப்பரித்தனர். வானரங்களின் ஆர்ப்பரிப்பை கேட்ட விபீஷணன் சிறிதும் பயமின்றி அவர்கள் முன்நிலையில் வந்து நின்று பேச ஆரம்பித்தான்.

ராமரிடமிருந்து சீதையை தூக்கிச் சென்ற ராவணனது தம்பி விபீஷணன் நான். ராவணன் செய்த செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு எதிரானது. எனவே சீதையை ராமரிடம் கொடுத்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சரணடையுங்கள் என்று தர்மத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பலமுறை மன்றாடினேன். நான் சொல்வதை கேட்காமல் சபை நடுவில் என்னை மிகவும் அவமானப் படுத்திவிட்டான் ராவணன். எனவே எனது நாடு மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ராமரை சரண்டைய இங்கு வந்து நிற்கிறேன். இந்த செய்தியை ராமரிடம் தெரிவித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லி முடித்தான். அனைத்தையும் கேட்ட சுக்ரீவன் தனது வானரங்களிடம் வந்திருப்பவர்களை தாக்காதிருங்கள் ராமரிடம் உத்தரவு பெற்று விட்டு வருகிறேன் என்று ராமர் இருக்குமிடம் சென்றான்.

ராமரிடம் சென்ற சுக்ரீவன் ராவணனின் தம்பி என்று சொல்லி ஒரு ராட்சசனும் அவனுக்கு துணையாக நான்கு ராட்சசர்களும் தங்களை சரணடைய வந்திருக்கிறார்கள். ராட்சசர்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பக்கூடாது. அவர்களை ஏதோ சதி வேலை செய்யும் நோக்கில் ராவணன் தான் நம்மிடம் அனுப்பியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம்மிடம் புகுந்து நமக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைப்பதற்காக ஏதேனும் சதி வேலை செய்யலாம். அல்லது நாம் அசந்திருக்கும் சமயம் நம்மை கொல்ல முயற்சிக்கலாம். இவன் சரணடைய வந்திருக்கிறேன் என்று சொன்னாலும் இவன் நமது எதிரி ராவணனின் தம்பி என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அவனையும் அவனுடன் வந்திருப்பவர்களையும் அழித்து விடலாம் என்பது என்னுடைய கருத்து. இதைப் பற்றி நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் இப்போதே வந்திருப்பவர்களை அழித்து விடுகிறேன் என்றான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் நீதி சாஸ்திரம் அறிந்த சுக்ரீவன் வந்திருப்பவர்களை பற்றி தனது கருத்தை சொல்லி விட்டார். நெருக்கடியான சமயத்தில் சுற்றத்தார்கள் நண்பர்களது யோசனை மிகவும் முக்கியம் எனவே உங்களது கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று தன்னை சுற்றியிருப்பவர்களின் கருத்தை ராமர் கேட்டார். ஒவ்வொருவராக தங்களின் கருத்தை சொல்ல ஆரம்பித்தார்கள்.

ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 6

ராமருடைய வலிமை சாமர்த்தியம் ஆயுதப்பயிற்சி அவரிடம் உள்ள அஸ்திரங்கள் என அனைத்தையும் விபீஷணன் சபையில் அனைவரின் முன்பும் தைரியமாகச் எடுத்துச் சொன்னான். ராமரிடம் இருந்து நீங்கள் தூக்கிக் கொண்டு வந்த சீதை ஒரு விஷப் பாம்பு. சீதை அமைதியாக இருப்பது போலவே தங்களுக்கு இருக்கும். ஆனால் அவளால் தான் அழிவு உங்களை தேடி வரும். அவளை ஏன் தூக்கி வந்தீர்கள். இப்பொழுது உங்களுடைய முதல் கடமை அவளை ராமரிடம் திருப்பி அனுப்புவது மட்டுமே. இதைச் செய்யாவிட்டால் நாம் அழிந்து போவோம் இது நிச்சயம். இதனை பல முறை இந்த சபையிலும் உங்களிடமும் எடுத்துச் சொல்லி விட்டேன். இதனால் என் மீது நீங்கள் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்வதை சிறிது கேட்டு அதன் பிறகு முடிவெடுங்கள். நீங்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்து உங்களுக்கு வரப்போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி உங்களையும் இந்த ராட்சச குலத்தையும் காப்பாற்ற வேண்டியது எனது என்னுடைய கடமை ஆகும். இப்போதும் உங்களுக்கு சிறிது அதிஷ்டம் இருப்பதினால் தான் ராமர் இன்னும் இங்கு வரவில்லை. ராமர் வருவதற்குள் சீதையை நீங்கள் திருப்பி அனுப்பிவிட்டு ராமரை சரணடைந்தால் நீங்கள் காப்பாற்றப்பட்டு சுகமாக இந்த ராஜ்யத்தை ஆளலாம். எனவே தான் இதனை மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்று அனைவர் பேசியதையும் எதிர்த்து பேசினான் விபீஷணன்.

ராமருக்கு சாதகமாகவே நீங்கள் பேசுகின்றீர்கள் என்று இந்திரஜித் கத்தினான். ராவணனின் தம்பியாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி பேசுவதை கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. நம்முடைய குலத்தின் பெருமையும் சக்தியையும் தெரிந்த நீங்கள் இவ்வாறு பேசுவதை இந்த சபை ஏன் இன்னும் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் உங்கள் குலத்தை மறந்து உங்களின் சிறுமையான குணத்தை காண்பிக்கிறீர்கள். உங்களுடைய பேச்சை ஒரு நாளும் அங்கிகரிக்க முடியாது. இந்திரனையும் அவனது தேவ கணங்களையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றிருக்கிறேன். நம்மைக் கண்டு இந்த உலகம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு மானிடர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? இந்த சபையில் உங்களது பேச்சு எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொல்லி அமர்ந்தான் இந்திரஜித். விபீஷணன் பேச ஆரம்பித்தான்.

ராமர் லட்சுமணன் இருவரும் மானிடர்கள் என்று சொல்லாதே இந்திரஜித். நீ பாலகன் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு உனக்கு அனுபவமும் அறிவும் போதாது. உன் தந்தையின் ராட்சச படைகளை பின்னால் வைத்துக் கொண்டு நீ பெற்ற வெற்றியினால் இப்படி பேசுகிறாய். ராவணனுக்கு மகனாக பிறந்தும் நீ அவரை அழிக்க வந்த சத்ரு என்றே நான் நினைக்கிறேன். ராமர் யுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் அவருக்கு எந்த படையும் தேவையில்லை. ராமரும் அவரது தம்பி லட்சுமணனும் எத்தனை பெரிய படைகள் வந்தாலும் அவர்கள் இருவர் மட்டுமே நின்று அனைத்து படைகளையும் எதிர்த்து அழிக்கும் வல்லமை கொண்டவர்கள். இந்த சபையில் அரசனுக்கு நல்ல யோசனை சொல்லக் கூடியவர்களே இப்போது அவருக்கு அழிவைத் தரும் யோசனையை சொல்கிறார்கள். ஏன் என்று எனக்கு புரியவில்லை. இந்த விசயத்தில் நான் சொல்வதும் எனது முடிவும் ஒன்று மட்டுமே. சீதையை விரைவில் ராமரிடம் அனுப்பி வைத்துவிட்டு நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எனது பேச்சை நீங்கள் அனைவரும் புறக்கணித்தால் பின்பு துன்பப்படுபவர்கள் நீங்களே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசி முடித்தான் விபீஷணன். அனைத்தையும் கேட்ட ராவணனுடைய கோபம் அதிகமானது. எனது தம்பி என்று இது வரை உனது பேச்சை கேட்டுக் கொண்டு பொறுமையாக இருந்தேன். வேறு ஒருவனாக இருந்தால் பேசிய நேரத்தில் இங்கேயே கொன்றிருப்பேன். ராட்சச குலத்தை அவமானப் படுத்துவதற்கு என்றே பிறந்தவன் நீ என்று ராட்சசன் விபீஷணனை திட்டினான்.