காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார். தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா? தைப்பொங்கலா? கார்த்திகை தீபமா? கோகுலாஷ்டமியா? ஆருத்ரா தரிசனமா? எது என்று சொல்லுங்கள் என்றார்.
மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் எனக்குப் பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து? என வியந்தனர். அவர் சொன்னார் ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகள்தான் ஏது? நமது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த சங்கரர் ஜெயந்தி எனக்குப் பிடித்த பண்டிகை என்றார்.
ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .
1. பகவானுடைய நாமத்தை ஜபி. பகவத் கீதையைப் படி
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.
3. நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு.
4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். நீ இப்படி தானம் செய்ய வேண்டும் அப்படி தானம் செய்ய வேண்டும் என்று நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நான்கு விஷயங்களை நம் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் இது மிகவும் உத்தமம் ஆகும். வாழ்க்கை திருப்தியாக வாழ்வதற்கு இதுதான் வழி.
மகா பெரியவர் மூன்றாவதாக சொல்லப்பட்ட உபதேசத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். யார் நல்ல மனிதர்கள் என்று பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவனுக்கு செய்யக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.
ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.
அனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.
எதிர்பார்ப்பு இல்லாத காரணமில்லாத பக்தியை எவன் ஒருவன் இறைவனிடம் வைக்கிறானோ அவனே உண்மையான பக்தன். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். பகவானை பூஜை செய்வது பகவானைப் பற்றி சிந்திப்பது என்பது இன்னொருவன் பாரக்க வேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற திருப்தியுடன் செய்பவனே உண்மையான பக்தன். இதுபோல் பக்தி செலுத்தி இறைவனுடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். உலகியல் ரீதியாக பார்த்தால் அருகில் இருப்பவருடைய குணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. விடுமுறை என்றால் சினிமாவிற்கு செல்லும் நண்பனுடைய நட்பு கிடைத்தால் சினிமாவிற்கே கூப்பிடுவான். கோயிலுக்கு செல்லும் நண்பனின் நட்பு கிடைத்தால் கோயிலுக்கே கூப்பிடுவான். நல்ல சிந்தனையோடு இருப்பவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எல்லோருக்கும் மகா உபதேசங்களை அருளி சனாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கரர். அப்பேர்ப்பட்ட சங்கரரிடம் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதர்களும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜெயந்தியை பெரிய வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாட்சத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று இறைவனை அடையட்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று மகா பெரியவர் நிறைவு செய்தார்.
சித்தர்கள்
ஸ்ரீ முத்து வடுகநாதர்
ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்தவர் முத்து விஜயரகுநாத சேதுபதி. இவரது மகளுக்குப் பிறந்த பூவலத் தேவன் குமாராயி தம்பதிக்கு மகனாக 1737-ம் ஆண்டு ஸ்ரீமுத்து வடுகநாதர் பிறந்தார். 22 ஊர்கள் கொண்ட செம்பிநாடு எனும் பகுதிக்கு பூவலத் தேவன் தலைவராக இருந்தார். 1742 ஆம் ஆண்டு பூவலத்தேவன் திடீரென மரணம் அடைய அவரது வாரிசான ஸ்ரீமுத்து வடுகநாதரை கொன்று விட்டால் ஆட்சி உரிமையை கைப்பற்றி விடலாம் என்று அவரது பங்காளிகள் திட்டமிட்டனர். இந்த சதி பற்றி தெரிய வந்ததும் குமாராயி தன் மகன் முத்து வடுகநாதருடன் அந்த ஊரில் இருந்து தப்பி வெளியேறினார்.
மதுரை மாவட்டம் அழகர்மலை அருகில் உள்ள பாலமேடு எனும் ஊருக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெகநாத பிள்ளை இரக்கம் கொண்டு அவர்களை தம் பண்ணையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். சிறுவனாக இருந்த முத்து வடுகநாதருக்கு ஆடு மாடு மேய்க்கும் வேலை கொடுக்கப் பட்டது. துறுதுறுவென்றிருந்த அவரது சொல்லுக்கு வாயில்லா ஜீவன்களான ஆடு மாடுகள் கட்டுப்பட்டன. அவரால் பராமரிக்கப்பட்ட ஆடு மாடுகள் மற்றவர்களின் தோட்டம் வயல்களில் இறங்கி பயிர்களை மேய்வதில்லை. முத்துவடுகநாதர் எந்த இடத்தில் மேய வேண்டும் என்று உத்தரவிடுகிறாரோ அங்கு மட்டுமே மேய்ந்தன. இதற்கு காரணம் பிறக்கும் போதே முத்து வடுகநாதர் சித்த புருஷராக அவதாரம் எடுத்திருந்ததுதான். ஆனால் அது யாருக்கும் தெரியாது. அவரை ஈன்றெடுத்த தாய்க்கே தெரியாது. அத்தகைய அவர் உத்தரவுக்கு ஏற்ப மாடுகள் கட்டுக் கோப்புடன் இருந்ததைக் கண்டு ஊரே ஆச்சரியப்பட்டது. இதனால் முத்து வடுகநாதரை பணியாளர்களை மேற்பார்வை செய்யும் அந்தஸ்துக்கு ஜெகநாத பிள்ளை உயர்த்தினார். அவர் ஒரு சித்த புருஷர் என்பதை யாருமே உணராமல் இருந்தனர். ஒருநாள் முத்து வடுகநாதர் பணியாட்களுடன் வயலுக்கு சென்றார். அன்று உழவுப் பணி நடந்தது. உழவு நடக்கும் போது 2 எருமை மாடுகள் சகதியில் படுத்து விட்டன. என்னவெல்லாமோ செய்து பார்த்தும் அவற்றை எழுப்ப முடியவில்லை. தூரத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து வடுகநாதர் அங்கு வந்தார்.
மாடுகள் முன்பு நின்று கைக்கூப்பி வணங்கி ஒரு வெண்பா பாடினார்.
எருமை இரண்டு விழுந்ததே படுத்துராமல்
உரிமையனார் மேழி தொட்டு உழாமல்
அவிழ்க்கும்வரை வரச்செய் அம்மே இவ்வூர்
காத்து நிற்கும் காமாட்சி அம்மே
இவ்வாறு பாடி முடித்ததும் மாடுகள் புத்துணர்ச்சியுடன் எழுந்தன. தானாக உழத் தொடங்கின. ஏர்க்கலப்பையை யாரும் பிடிக்காமலே அவை வயலை உழுது முடித்தன. இந்த அதிசயத்தைக் கண்டு விவசாயிகள் மிரண்டு போனார்கள். இதுபற்றி அறிந்த ஜெகநாதபிள்ளை அடுத்த நாள் திடீரென வயலுக்கு வந்தார். விவசாய வேலைகள் மிகக் கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. ஒரு மரத்தடியில் முத்து வடுகநாதர் தியானத்தில் ஆழ்ந்திருக்க அவர் தலைக்கு மேல் ஒரு பெரிய நாகம் ஒன்று படம் எடுத்து குடை பிடிப்பதுப் போன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சிறுவன் சாதாரண மனிதப் பிறவி அல்ல. நிச்சயம் இவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அன்று முதல் அவர் முத்து வடுகநாதரை ஆடு மாடு மேய்க்கவோ அல்லது வயல் வேலைகளை செய்யச் சொல்லவோ இல்லை. தம் சொந்த மகனைப் போல நடத்தத் தொடங்கினார்.
முத்து வடுகநாதர் சிறந்த கல்வி பெற வேண்டும் என்ற ஆசையில் அவரை அங்குள்ள பள்ளியில் ஜெகநாத பிள்ளை சேர்த்து விட்டார். அந்த பள்ளியில் சாமிநாத செட்டியார் என்பவர் ஆசிரியராக இருந்தார். அவர் என்ன பாடம் நடத்தினாலும் முத்து வடுகநாதர் அது பற்றி அறிந்திருந்தார். ஆசிரியருக்கு தெரியாத தகவல்களை எல்லாம் கூறினார். சாமிநாத செட்டியாருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் அவர் உன்னால் இந்த ஊர் விநாயகர் பற்றி ஒரு வெண்பா பாட முடியுமா என்றார். அடுத்த வினாடி முத்து வடுகநாதர் பாடினார்.
பள்ளிக்குள்ளே யான் பயில்வதேன்னே
நீயடியேன் உள்ளத்துள்ளே வாழ்ந்துரும்போது
பிள்ளையாரே சாமிநாத செட்டி என்பாநுண்
முன்னிலேனக் காசா லெனல் பழிப்பேயாம்.
இவ்வாறு அவர் பாடி முடித்ததும் ஆசிரியர் சாமிநாத செட்டியாருக்கு பயம் வந்து விட்டது. இந்த சிறுவனுக்கு எல்லாம் தெரிகிறது. இவனுக்கு என்னால் பாடம் நடத்த இயலாது என்று கூறி ஜெகநாத பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டார். பள்ளிக்கும் செல்லாமல் வயல் வேலைகளுக்கும் செல்லாமல் முத்து வடுகநாதர் வளர்ந்து வந்தார். அச்சமயத்தில் சொக்கநாத பிள்ளைக்கு முதுகில் ராஜபிளவை எனும் நோய் ஏற்பட்டது. வைத்தியர் கொடுத்த மருந்து பலன் அளிக்கவில்லை. அதைக் கண்ட முத்து வடுகநாதர் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறி வைத்தியரை விமர்சித்தார். இதனால் கோபம் அடைந்த வைத்தியர் உன்னால் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று சவால் விட்டார். உடனே முத்து வடுகநாதர் உடைக்கவா துடைக்கவா என்று கேட்டபடி ஜெகநாத பிள்ளையின் முதுகைத் தொட்டார். ராஜபிளவை நோய் எப்படி மறைந்தது என்பது தெரியாமல் மாயமானது. வைத்தியர் உள்பட அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். இந்த தகவல் பாலமேடு சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. இளம் வயதில் சித்தர் ஒருவர் இருப்பதாக கூறி தினமும் நிறைய பேர் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். அந்த கூட்டத்தில் இருந்து முத்து வடுகநாதரை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் ஜெகநாத பிள்ளை திணறினார். இனியும் அவருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த சித்தர் பாலமேடு ஊரில் இருந்து வெளியேறினார்.
ஆத்ம ஞானத்தை முழுமையாகப் பெற அழகர் மலைக்கு சென்றார். அங்கு பாலைய சுவாமிகளை சந்தித்து அவரை தனது குருவாக ஏற்று உபதேசம் பெற்றார். பிறகு மதுரை மேலூர் சாலையில் உள்ள பட்டூர் எனும் ஆலம்பட்டிக்கு சென்றார். அங்குள்ள ஒரு ஆல மரத்தடியில் தவம் இருந்தார். அந்த ஊர் மக்கள் கல்வி அறிவு பெறாமல் மிகவும் பின் தங்கி இருப்பதைப் பார்த்த அவர் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதன் மூலம் நிறைய பேர் படிப்பாளிகளாக மாறினார்கள். இதனால் சித்தரை பலரும் பட்டூர் வாத்தியார் என்று அழைத்தனர். அந்தக் கால கட்டத்தில் பட்டூர் அருகில் உள்ள சிங்கம் புணரியில் பீதாம்பரர்கள் என்ற கொள்ளையர்கள் அடிக்கடி வந்து ஊரையே கொள்ளையடித்து வீட்டுச் செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எதிர்ப்பவர்களை அந்த கொள்ளையர்கள் தங்களது மந்திர சக்தியால் முடக்கிப் போட்டு விடும் சக்தியைப் பெற்றிருந்தனர். பீதாம்பர கொள்ளையர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு சிங்கம்புணரி மக்கள் சென்று சித்தரை அழைத்தனர். அதை ஏற்று பட்டூரில் இருந்து சிங்கம்புணரிக்கு சித்தர் இடம் பெயர்ந்தார்.
ஊர் மக்கள் சொன்னது போலவே ஒருநாள் சிங்கம்புணரிக்குள் பீதாம்பர கொள்ளையர்கள் நுழைந்தனர். சித்தர் அவர்களை எதிர்கொண்டார். பீதாம்பரர்கள் மிக ஏளனமாக என்னென்ன வித்தைகள் உண்டோ அத்தனையையும் பயன்படுத்தினார்கள். ஆனால் சித்தர் முன்பு எந்த வித்தையும் பலிக்கவில்லை. பதிலுக்கு முத்து வடுகநாதர் தான் உடுத்தி இருந்த வேட்டியின் ஒரு ஓரத்தில் கிழித்து வீசினார். அது மிகப்பெரிய நல்ல பாம்பாக மாறி படம் எடுத்தபடி பீதாம்பர கொள்ளையர்களை விரட்டியது. அதன் பிறகு கொள்ளையர்கள் அந்த ஊர் பக்கமே வரவில்லை. இதனால் மகிழ்ச்சி அடைந்த சிங்கம்புணரி மக்கள் சித்தரை தங்கள் ஊரிலேயே தங்கும்படி கூறி இடம் வசதி செய்து கொடுத்தனர். சித்தரும் அதை ஏற்றுக் கொண்டார்.
முத்து வடுகநாதர் மிகச் சிறந்த வராகி பக்தர். தனது வீட்டில் அவர் வராகி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உணவு படைத்து ஆடையின்றி அமர்ந்து வராகியை வழிபட்டார். கூப்பிட்ட குரலுக்கு வராகி அம்மனும் ஓடோடி வந்து உதவி செய்யும் அளவுக்கு சித்தர் ஆற்றல் பெற்றிருந்தார். இது சிங்கம்புணரியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. சித்தரை கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் குடிசை வீட்டில் இருந்து வெளியில் வந்த சித்தரை பிடித்து கை கால்களை கயிற்றால் கட்டி தூக்கிச் சென்றனர். ஒரு குழிக்குள் போட்டு மிளகாய் தூளை கொட்டினார்கள். முள் செடிகளை வெட்டி போட்டனர். பிறகு குழி நிறைய மண் போட்டு மூடி விட்டு சென்று விட்டனர். சித்தர் கதை இன்றோடு முடிந்தது என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். அன்றிரவு ஊர் பெரியவர்கள் சிலர் கனவில் அந்த ஊர் காவல் தெய்வமான சேவுக அய்யனார் வெள்ளைக் குதிரையில் வந்து தோன்றினார். தப்பு செய்து விட்டீர்கள். இந்த ஊரையும் மக்களையும் காப்பாற்றத்தானே முத்து வடுகநாதர் பாடுபட்டு வருகிறார் அவரை குழியில் தள்ளிப் புதைத்து விட்டீர்களே வராகி தாய் அவரைக் காப்பாற்றி விட்டாள். நீங்கள் எல்லோரும் விடிந்ததும் சித்தரிடம் சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள். அவர்தான் இந்த ஊரின் காவல் தெய்வம் என்று அய்யனார் கூறி விட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலை விடிந்ததும் பெரியவர்கள் அனைவரும் தங்கள் கனவில் அய்யனார் வந்து உத்தரவிட்டதை பரபரப்பாக பேசினார்கள். சித்தர் வசித்த குடிசைக்கு திரண்டு சென்றனர்.
சித்தர் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார். அவர் உடம்பில் சிறு காயம் கூட இல்லை. எதிரிகள் விக்கித்து விறைத்துப் போனார்கள். அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு சிங்கம்புணரி ஊரே சித்தரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. சித்தரும் அந்த ஊர் மக்களின் அனைத்துக் குறைகளையும் தீர்த்தார். அவர் கைப்பட திருநீறு பூசினால் நோய்கள் பஞ்சாய் பறந்தன. தம்மைக் காப்பாற்றும் சித்தர் பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க சிங்கம்புணரி மக்கள் ஆசைப்பட்டனர். சித்தரும் அதை ஏற்றுக் கொண்டார். தூரத்து உறவுப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பழனியாண்டி விஜயன் சேவுகபெருமாள் எனும் 3 மகன்களும் குமாராயி எனும் மகளும் பிறந்தனர். திருமணத்துக்குப் பிறகும் அவரது சித்தாடல்கள் குறையவில்லை. அவரைத் தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. தன்னை நம்பி வந்தவர்களின் துன்பங்களை அவர் தீர்த்தார். ஒருநாள் அவர் தான் 1833 ஆம் ஆண்டு சமாதியாகப் போகும் நாளை பக்தர்களிடம் அறிவித்தார். சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் பாலாற்றின் தென்கரையில் ஒரு இடத்தில் சமாதியும் தோண்டச் செய்தார்.
சிங்கம்புணரி ஊருக்கு வடக்கே அந்த காலத்தில் கற்றாழை செடிகள் நிறைந்திருந்தது. ஒருநாள் அதற்குள் அமர்ந்து சித்தர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிற்பி அவரை தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் தாம் யோக நிலையில் இருப்பது போன்று கற்சிலை ஒன்றை வடிக்க உத்தரவிட்டார். அந்த சிற்பியும் சித்தர் யோகத்தில் இருப்பது போல தத்ரூபமாக சிலை செய்து எடுத்து வந்தார். அந்த கற்சிலைக்கு ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரே பூஜைகள் செய்தார். தனது உடலை அச்சிலை மீது பட செய்து தியானத்தில் ஆழ்ந்தார். இதன் காரணமாக தனது அருள் சக்திகள் அனைத்தையும் முத்து வடுகநாதர் அந்த சிலைக்கு மாற்றினார். இதுபற்றி பக்தர்கள் கேட்டபோது தான் ஜீவசமாதி ஆன பிறகு தமது சிலையால் மக்கள் பலன் அடைய வேண்டும் என்றார். அவர் கூறியபடி 1883 ஆம் ஆண்டு ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதியனார். அவர் ஒடுக்கம் பெற்ற இடத்தின் மீது அவரது சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவர் ஜீவ சமாதி ஆகி 185 ஆண்டுகள் ஆகி விட்டது. நான் இங்குதான் இருக்கிறேன் என்று சொல்லாமல் அவர் தன் சிலையில் இருந்து வியர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
புலிப்பாணி சித்தர்
பதினெண் சித்தர்களுள் ஒருவரானவரும் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணிசித்தர்
இடம்: சண்முக நதி கோவில் பழனி.
சாய் பாபா புராண புகைப்படங்கள்
யாக அக்னியில் சாய்பாபா
பிருங்கி முனிவர்
உலகிலேயே மூன்று கால்களை உடைய பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று சக்தியிடம் பிருங்கி முனிவர் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் வழங்கினார். பிருங்கி முனிவரின் சிற்பம் இருக்கும் இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.
கருவூரார்
சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடமும் முனிவர்களிடமும் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். இதற்கு சான்று கருவூராருக்கு கருவான ஞானப்பால் அழித்தபோதே என்ற அகத்தியர் 12000 நூல் விரிவாக கூறுகிறது.
சங்ககால சேர நாட்டு தலைநகர் வஞ்சி எனப்பெறும் கருவூரில் பிறந்தார் கருவூரார். கருவூராரின் தாய் தந்தையார் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் கிடைத்த பொருள் கொண்ட முனிவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கருவூரார் செம்பு பித்தளை உலோகங்களை கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போகரின் சீடர் என்றும் அகத்தியர் 12000 என்னும் பெருநூல் கூறுகிறது. சிறிய வயதிலேயே ஞான நூல்களைக் கற்று அம்பிகையிடம் மாறாத பக்தி கொண்டவர் கருவூரார். இவரது பக்தியை கண்டவர்கள் இவருக்கு இனி பிறவி இல்லை. இனி இவர் எக்கருவிலும் ஊரார் எனவே இவர் கருவூரார் என்று வியந்து கூறினார்கள். இதுவே இவரது பெயர் ஆயிற்று. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்து மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து காய சித்தி மாய சித்தி அதிகம் நிறைந்த மாமுனியாக திகழ்ந்தவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். போகரை கருவூரார் சந்தித்த போது உனக்கு அம்பிகையே சரியாக வழிகாட்டுவாள் என்று ஆசீர்வாதம் செய்தார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்களை அதன் போக்கில் போக விடாமல் உள்ளிழுத்து அகக் கருவியாகிய சித்தத்தினை சமாதியில் இறுத்தி வெற்றி பெற்று அட்டமா சித்தி பெற்ற சித்தர் கருவூரார் ஆவார்.
வசியம் மோகனம் தம்பனம் உச்சாடனம் ஆக்ருசணம் பேதனம் மாரணம் எனும் அஷ்ட கர்ம மந்திரங்கள் அனைத்தையும் கற்று உணர்ந்தார் கருவூரார். ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது கருவூரார் ஆச்சரியத்துடன் அந்த உரையை வாசித்தார். கருவூராரே நீர் உடனே தன்னை வந்து சேரும் என்று இருந்த அந்த ஓலையில் இருந்தது. அந்த ஓலையை அவரது குருவான போகர் எழுதி இருந்தார். தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது அதனைப் போக்கவே அவரை அழைத்து இருந்தார். தஞ்சையில் சோழ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவாலயம் கட்டுகிறான். அற்புதமான அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்று பந்தனம் செய்ய முடியாமல் மருந்தானது வழிந்து கொண்டே இருக்கிறது. சோழ மன்னனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை .இந்த குறை தீர்க்கவே கருவூரார் அழைக்கப்பட்டிருந்தார்.
கோவிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கு அஷ்ட பந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்சசி தடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன் மீது காறி உமிழ்ந்தார். கருவூராரின் வாயில் எச்சில் பட்டு பொசுங்கி கருகியது பிரம்ம ராட்சசி. பக்தர்கள் கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பிரதிஷ்டை செய்யுங்கள் என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும் அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். அதன் பிறகு அவர் அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகம் செய்து வைத்தார். அப்போது கருவூரார் அண்ட ரண்ட மந்திரத்தை உபதேசித்தார். சிவபெருமானின் ஐந்து முகமாகவே ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்பதை அகோரம் எனப்படுவது தான் அண்டரண்டம் மந்திரம்.
தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் ஒருமுறை வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீருக்குள் சிவனின் நாட்டியக் காட்சியை கண்டான். அக்ககாட்சி அவனை பெரும் பரவசப்படுத்தியது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை விட்டு அகல மறுத்தது. எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால் அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான்.
சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து நான் கண்ட காட்சியைக் கூறி நடன சிவன் சிலையை 48 நாட்களுக்குள் வடிக்க வேண்டுமென்றும் அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்றும் உத்தரவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைக்க வேண்டுமென்றால் சிறிதளவு செம்பு சேர்க்க வேண்டும். மன்னனோ எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும் என்ன வித்தை செய்தாவது தூய தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டது. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவார். அவர் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது? சிறையில் அடைத்து விடுவாரே என்று சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைப் பணியை முடித்துக் கொடு என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில் சிற்பிகள் முன்பு நின்றார். சிற்பிகளே உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில் சிலையை நான் தயார் செய்து விடுகிறேன் என்றார். அதற்கு சிற்பிகள் துறவியே நீங்கள் யாரோ எவரோ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து முடிக்க முடியாததை உங்களால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும்? என்று கேட்டார்கள். உங்களுக்கு மாயமந்திரங்கள் தெரியுமா? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துகிறீர்களா? அடியாரான உங்களுக்கு இது அழகா? என கோபமாகக் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை.
கருவூரார் தன்னால் இயலும் என்று தன் வாதத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள்தான் இருந்தபடியால் வேறுவழியில்லாமல் சிற்பிகளும் சம்மதித்தார்கள். கருவூரார் தான் சிலை செய்யும் அறைக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். சொன்னபடி இரண்டு நாழிகையில் அறைக் கதவு திறந்தது. சிற்பிகளே உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது என்றார். சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தார்கள். நடராஜப் பெருமான் ஜொலித்தார். இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும் தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை மிகவும் பாராட்டினான். அந்த நேரத்தில் அமைச்சர் இந்த சிலை தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதா என்று சந்தேகத்தைக் கிளப்பினார்.
மன்னன் தங்கத்தை பரிசோதிக்க அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் அதிகாரி வந்து சோதிக்க கட்டளை இட்டார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம் அரசே இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்றார். அமைச்சர் கொதித்துப் போனார். அரசரிடம் ஓடிவந்தார். மன்னா தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை வேண்டும் என்ற தங்களது உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள் தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். மன்னரின் காலடியில் விழுந்தனர். மன்னா தவறு நடந்து விட்டது. நாங்கள் இதோ நிற்கிறானே இந்தத் துறவியை நம்பி மோசம் போனோம். நடராஜ பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பல நாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் வந்த இவன் சில நாழிகைகளுக்குள் சிலைப் பணியை முடித்து விட்டான். அதுகண்டு நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள் என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.
துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள் என்றான். எல்லாச் சிற்பிகளும் கை கூப்பி தில்லையம்பல நடராஜரை வணங்கி பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் சித்தத்துக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணியராஜன். நான் போக சித்தர் என்ன காரணத்தினால் என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ இப்படிப்பட்ட முட்டாள் தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல் என் சீடனிடம் தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே அவனை உடனே வெளியே அனுப்பு என்றதும் இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சீடர் கருவூராரும் ஒன்றும் சொல்லாமல் சிலையை செய்யவே இப்படி செய்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றான். இப்போதே என் பக்தனை விடுதலை செய் என்று போகர் கூற மன்னன் விடுதலை செய்ய கட்டளையிட்டான். காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர்.
கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன் என்ற போகர் நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை அங்கே உருவாக்கி இதோ நீ விரும்பும் தங்கம் எடுத்துக் கொள் என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பல நடராஜரை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறான். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான் என்று கருவூரா வெளியே வா என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார் குருவே தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன் என்றார். பின்னர் போகர் மன்னனிடம் நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார்.
வேத கோஷம் முழங்க அரங்கனை தரிசிக்க வந்தார் கருவூரார். அரங்கனைக் கண் குளிர தரிசித்து முடித்து வெளியே வந்தார். அப்போது நாட்டியம் ஆடும் அபராஞ்சி என்ற ஒரு தாசி அவரது காலடியில் விழுந்தாள். கருவூரார் என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையில் கேட்டார். சற்று முன் கேட்ட வேத கோஷத்தில் யோக சாதனையில் தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டாள். இப்படியும் ஒரு தாசியா? பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல் அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைத்தார். ரங்கநாதரைப் பார்த்து உன் கழுத்து பவழ மாலையை என்னிடம் கொடு என்று கேட்டார். அடுத்த நிமிடம் அரங்கன் தன் கழுத்தில் இருந்த மாலையை கரூராரிடம் கொடுத்தார். அபரஞ்சி உனது கேள்வியால் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய். ஆகையால் இதை என் பரிசாக வைத்துக் கொள். நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். மறுநாள் காலை கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கனின் பழவ மாலை இருந்ததை கண்டு அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு வைத்தார்கள். கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அபரஞ்சி கூறி கருவூராரை மனதால் வேண்டினாள். கேள்விக்கு விளக்கம் சொல்லி அரங்கனின் மாலையை கொடுத்து விட்டு சென்றீர்கள். திருட்டு பட்டம் வந்து விட்டது என்று அழுகிறாள். கருவூரார் அங்கே மீண்டும் வந்து அரங்கனை சாட்சிக்கு அழைத்தார். அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைத்தார். திருவரங்கக் கோயில் நிர்வாகத்தினர் அபரஞ்சியிடமும் கரூராரிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.
கருவூரார் நெல்லையப்பரிடம் ஒன்றாக கலந்ததற்கு இரண்டு விதமான வரலாறு உள்ளது. முதல் வரலாறு. கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேதியர் ஒருவர் கருவூரார் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பழைய பகை காரணமாக மன்னனிடம் சென்று முறையிட்டனர் . கரூராரை கொன்று விட மன்னர் உத்தரவிட்டார். கருவூரார் பயந்தவர் போல கோயிலை நோக்கி ஓடினார். காவலர்கள் கருவூராரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இரண்டாவது வரலாறு கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள ஆன்மீகப் போலித் தனங்களை அவர் கடுமையாக சாடினார். அதனால் அவர் மேல் வெறுப்பும் பொறாமையும் பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது. குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் போலி வைதீகர்கள் சில பேர் அவர் மேல் அதிக பகைமை கொண்டார்கள். கருவூரார் ஒரு துர்மார்க்க வேத நிபுணர் என்று மன்னனிடம் சொன்னார்கள். அதற்கு சான்றாக அவரது வீட்டில் மது மாமிச படையல் வைக்கிறார் என்று மன்னனிடம் சொல்லி அவரை நம்ப வைத்தார்கள். அதே நேரம் சிலர் அவர் வீட்டில் மது மாமிசம் ஒளித்து வைத்தார்கள். கரூராரின் வீட்டில் மன்னனின் கட்டளைப்படி காவலர்கள் சோதனை செய்த போது மதுவும் மாமிசமும் யாகத் திரவியங்களாக மாறி இருந்தது. இதனால் மன்னனிடம் அந்த போலி வைதீகர்களுக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இதனால் அதிக ஆள் பலத்துடன் சென்று சீடர்கள் யாரும் இல்லாத கருவூராரை எளிதாக அடித்து விடலாம் என்று அந்தப் போலி வைதீகர்கள் கிளம்பினார்கள். கரூரார் சிரித்தபடியே பயந்து ஓடுவது போல் நடித்து கோயிலுக்குள் ஓடினார். கரூராரை தொடர்ந்து அவர்கள் விரட்டினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாகவும் நெல்லையப்பர் கோயிலில் சிற்ப வடிவிலும் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுார் கோவிலின் ராஜகோபுரத்தில் விஜய நகர அரசகால வண்ண ஓவியக் காட்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒரு காட்சியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகரை ஒருவர் அடுக்கு தீபம் காட்டி பூஜை செய்ய மரத்தின் அருகே கோலொன்றினை ஏந்தி நிற்கும் கருவூரார் ஒரு கையை உயர்த்தி சுட்டி காட்ட மீன் மழை பொழியும் காட்சி உள்ளது. அதில் கருவூர்த்தேவர் கூற என்ற தமிழ் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதை போல மருத மரத்தின் கீழ் கருவூரார் புடைமருதுார் லிங்க பெருமானைக் கரம் கூப்பி வணங்கும் திருவுருவம் காணப்படுகிறது. இவ்விரு காட்சிகளிலும் தாடி மீசை சடை முடி ஆகியவை இன்றி இளம் வயது கோலத்துடன் தலையிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை தரித்தவராய் காட்சியளிக்கிறார். இந்த காட்சிகள் 17ம் நுாற்றாண்டில் வரையப்பட்டவை. பின்னர் தஞ்சை பெரிய கோவிலிலும் பிற இடங்களிலும் கருவூர்த் தேவரின் ஓவியங்கள் சிற்பங்களில் அவரை தாடி மீசையுடன் சடாபாரமம் தாங்கியவராய் யோகத்தில் அமர்ந்த நிலையில் காட்டியுள்ளனர்.
கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் கருவூராருக்கு தென்மேற்கு மூலையில் ஒரு தனி சன்னதி உள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. வாத காவியம், வைத்திய யோகம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்பவிதி, முப்பு சூத்திரம், பூரண ஞானம், நொண்டி நாடகம், மூலிகை தைலம், விபரம் கர்ப்ப கூறு, அட்டமாசித்தி, பூசாவிதி இது போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார் கருவூரார். கற்ப மூலிகைகளைப் பற்றி அநேக பாடல்களை பாடியுள்ளார். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவதாக விளங்கும் திருமுறையில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்ற இரண்டிலும் இவரது திருப்பாடல்கள் அமைந்துள்ளது. தில்லை சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை பெரியகோவில், திருவிடைமருதுார் கோவில்களில் இவர் சிவனை போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.
திருவொற்றியூர் வீரராகவ சுவாமிகள்
இவரது பூர்விகம் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு திகம்பரராக திரிந்தவர் இவர். சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும் விரட்டிய போதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் இவர். இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல் துறையினர் ஒருநாள் இவரைப் பிடித்துப் போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இரவு நேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்த போது சுவாமிகளின் உடல் பாகங்கள் தனித் தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது சுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது.
சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது. அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரை சுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவார். வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்த வீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய வேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார். 1964 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதி சதய நட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவை நீக்கிக் கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை, இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம் செய்யவும் பூஜை செய்யவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது. சுவாமிகளை தரிசிக்க திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.
அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் தமிழ் மொழி வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப் போல் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை. கருத்தாழமும் சொல்லழகும் இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவரது பாடல்கள். அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இவருடைய மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷ் ராஜசாகி மாவட்டம் வரேந்திர கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் பிரபுடேவ மன்னன் காலத்தில் இங்கு குடியேறியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடாருக்கும் முத்தம்மைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால் முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் ஓர் ஆண் மகன் வேண்டும் என்று நாள் தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மை செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளால் மூத்த பெண் ஆதிலட்சுமிக்கு நான்கு வயதாக இருக்கும் போது முத்தம்மைக்கு இரண்டாவது ஆண் குழந்தை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்தம்மை. அக்குழந்தைக்கு அருணாச்சலேஸ்வர மலையின் பெயரை வைத்து அருணகிரி என்று பெயரிட்டாள் முத்தம்மை. அருணகிரியின் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருந்தது.
அருணகிரி பிறந்த மகிழ்ச்சியில் காசி யாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. சிறிது நாளில் கடுமையாக நோய் வாய்ப்பட்டாள் முத்தம்மை. தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்து கொண்ட முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்கிய காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியை அழைத்தாள் முத்தம்மை. மகளே ஆதி என்ற உனது பெயரைப் போலவே ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது. நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறிய முத்தம்மை அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதிலட்சுமியின் கரத்தில் வைத்தாள். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன் என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்தம்மையின் முகத்தில் புன்னகை மலர்ந்து முக்தியடைந்தாள்.
அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் ஆதிலட்சுமி. தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தாள் ஆதி. அருணகிரியே சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார் ஆதி. அருணகிரிநாதர் சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இந்த செய்தி தெரிந்தும் ஆதிலட்சுமி அம்மையார் விரைவில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இளமையிலேயே திருமந்திரம் தேவாரம் திருமுருகாற்றுப்படை திருக்குறள் காரிகை ஆகிய தமிழ் நூல்களைப் படித்து அதில் புலமை பெற்றிருந்தார். உலா ஏசல் கலம்பகம் கோவைசிந்து தூது பரணி மடல் மாலை எனப்படும் நூல் வகைகளைப் பயின்றும் காம சாஸ்திர நூல்களை ஆராய்ந்தும் புலமை வாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். உரிய வயதில் திருமணத்தை அவருக்கு செய்து வைத்தார் அவரது சகோதரி ஆதிலட்சுமி. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும் விதி வசத்தால் வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் தனது சொத்தையும் இழந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக சொத்தை இழந்ததோடு பெரும் நோயும் வந்து சேர்ந்தது அருணகிரிக்கு. அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட கட்டிய மனைவியைக் நெருங்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். இதனால் இவர் சகோதரி தன்னை நெருங்குமாறு கோபத்துடனும் வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைத் தடுத்து ஆட்கொண்டார்.
அருணகிரிநாதரை தடுத்தாட் கொண்டது அருணாசலேஸ்வரர் என்றும் முருகக் கடவுள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளது. அந்தப் பெரியவர் அவருக்கு முருகக் கடவுளைப் பற்றிச் சொல்லி சரவணபவ ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி முருகனைப் போற்றிப் தவவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்தோடு இருந்த அருணகிரிநாதர் பெரியவர் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ஒரு பக்கம் பெரியவரின் பேச்சு மறுபக்கம் குழப்பமான மனது. தவத்தினால் மனம் சற்றுத் தெளிவடைகிறது என நினைத்தால் மீண்டும் மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. தவம் வரவில்லை என்ன செய்யலாம்? குழப்பத்திலும் கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்த போது இரு கரங்கள் அவரைத் தாங்கி காப்பாற்றின. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்க முருகர் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில் வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்தார். முருகன் அவரை அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து யோக மார்க்கங்களும் மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. நாதர் என்ற பட்டத்தைப் பெற்ற அருணகிரி அன்று முதல் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.
அருணகிரிநாதர் உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்றதும் முருகனை இரு கரம் கூப்பித் தொழுதார். அப்போது முருகர் அருணகிரிநாதரே இந்தப் பிறவியில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று அருளினார். முருகனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும் பாடல் புனையும் வழி அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். அப்போது முருகர் யாமிருக்க பயமேன் அஞ்சேல் என்று சொல்லி முத்தைத் தரு பத்தித் திருநகை என பாடல் பாடுமாறு ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்து விட்டு முருகர் மறைந்தார். முருகர் வந்து உபதேசம் செய்து சென்ற பின்னர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மௌனமாக தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். சிறிது நாளில் அவரது உடம்பில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்து விட்டது. இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரிநாதரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் நட்பு உண்டானது.
அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் உண்டான நட்பு அரண்மனையின் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானுக்கு பொறாமையை உண்டாக்கியது. தேவியின் பக்தனான சம்பந்தாண்டான் தேவியின் குமாரனனான முருகனை பாடி தொழுது வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் பொறாமை குணம் அதிகமாகி மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான் சம்பந்தாண்டான். அரசரிடம் நேரடியாக சென்றவன் அருணகிரிநாதரைப் பற்றி பேச ஆரம்பித்தான். அரசே நான் உங்கள் நெருங்கிய நண்பன். உங்கள் நன்மையே நாடுபவன். உங்களுக்கு நல்லதேயே செய்ய நினைக்கிறேன். அருணகிரிநாதர் பற்றி நீங்கள் சரிவர தெரியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர்கள். இந்த நட்பு வேண்டாம். பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தவன் அந்த அருணகிரிநாதர். உற்றார் உறவினர்கள் அனைவரும் அவனை கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாய வித்தையால் இப்போது அனைத்து வியாதிகளும் மறைந்திருக்கலாம். சித்து வேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு முருகன் நேரில் வந்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தான் நான் முருகனுக்கு அடிமை என்று சொல்லித் திரிகின்றான். அவன் பேச்சை நம்பவேண்டாம் என்று சொன்னான்.
அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும் அவரின் பக்தியையும் யோக சக்தியையும் அரசர் நன்கு உணர்ந்திருந்தார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும் அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம் பேசிய அரசர் நீங்கள் பெரிய தேவி உபாசகர் என்பதை நான் அறிவேன். அருணகிரிநாதர் பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல் பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான் அரசன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக மன்னா தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதே போல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும் சம்மதமா? என்று சவால் விட்டான். அரசனும் தேவி தரிசனம் ஒருபக்கம் இன்னொரு பக்கம் முருகன் தரிசனம் சம்மதமே என்று சொன்னான் அரசன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன் என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவியது.
அருணகிரிநாதரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய சம்பந்தாண்டான் தன் தவ வலிமையால் தேவியிடம் அருணகிரிநாதரை வெற்றி பெற அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு தேவியோ உனது தவ வலிமை அனைத்தையும் நீ வீணடித்து விட்டாய். ஆகவே இனி உனக்கு எமது காட்சி கிடைக்காது என்று அசீரிரியாக பதில் அளித்தாள். உடனே சம்பந்தாண்டான் தேவியிடம் ஒரு சிறு விண்ணப்பம் வைத்தான். அருணகிரிநாதர் நாளை முருகனை அழைத்துப் பாடும் போது முருகனை உனது அன்பினால் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ய நினைத்த தேவி இதற்கு சம்மதித்தாள்.
அருணகிரிநாதர் அரசர் சொல்லி அனுப்பிய இடத்திற்கு வந்தார். அனைவரும் அங்கு கூடி விட்டார்கள். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவி தான் அழைத்ததும் வந்து விடுவாள். முதலில் அருணகிரிநாதரை முருகரின் தரிசனத்தை கிடைக்க செய்யுங்கள் என்றான். அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரிநாதர் முருகரை நினைத்து திருப்புகழ் பாடினார். முருகரை தேவி தன் அன்பானால் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆகையால் முருகர் தரிசனம் அங்கு கிடைக்கவில்லை. முருகர் ஏன் வரவில்லை என்று தன் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட அருணகிரிநாதர் சம்பாந்தாண்டானின் சூழ்ச்சியை அறிந்து கொண்டார். முருகனை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும் இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அருணகிரிநாதர் பக்திப் பரவசத்துடன் மனமுருகி மயிலை துதித்துப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம் மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அருணகிரிநாதரின் மகிமையை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இப்போது சம்பந்தாண்டானின் முறை வந்தது. சம்பந்தாண்டான் எவ்வளவோ முயற்சித்தும் தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.
அருணகிரிநாதர் தொடர்ந்து தல யாத்திரையாகத் தமிழ்நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்து அங்குள்ள முருகப் பெருமான் மேல் திருப்புகழ் பாக்களைப் பாடி வந்தார். வயலூருக்கு வருமாறு ஆணையிட்ட முருகனை வயலூர் சென்று தரிசித்தார். விராலிமலைக்கு வருமாறு கூறி வழியையும் காண்பித்தார். அத்தலத்தையும் அருணகிரிநாதர் சென்று வணங்கினார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருகி வழிபட்டபின் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் செல்லும் வழி காடாக இருந்ததால் மயில் அவருக்கு வழி காட்டியது. செந்திலாண்டவன் அவருக்கு நடராஜரைப் போல திருத்தாண்டவம் ஆடினார். ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் சுமார் 200 தலங்களைத் தரிசித்து வடநாடு ஈழநாடு முதலிய பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகனைத் தரிசித்தார்.
அருணகிரிநாதர் ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கும் போது இடையில் வந்த தென்பெண்ணையாற்றின் வளங்கொழிக்கும் நடுநாட்டில் சனியூர் என்ற ஊரில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் பெயர் வில்லிபுத்தூரார். இவர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். வியாச பாரதக் கதையை தமிழில் மணிப்பிரவாள நடையில் எழுதி பெரும் புகழ் பெற்றவர். வரபதியாட் கொண்டான் என்ற கொங்கு நாட்டு அரசனின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அரசர்க்குரிய அனைத்து மரியாதைகளுடன் வரகவி என்று மக்களால் போற்றப்பட்டவர் இப்படி தனக்கு ஏற்பட்ட புகழால் கல்விச் செருக்குண்ட வரகவி தம்மிடம் வாதுக்கு வருபவர்களை வென்று கவிபாடி காது அறுப்பார். இவர் அருணகிரியாரின் அருட்செயல்களைக் கேட்டு பொறாமை அடைந்தார். கவிஞர்களின் காதுகளை அறுக்கும் அடாத செயலைக் கேட்டறிந்த அருணகிரியார் வருத்தப்பட்டார். இச்செயல் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற கருணையினால் வில்லிபுத்தூராரை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மன்னர்கள் கூடிய பேரவையில் அருணகிரநாதருக்கும் வில்லியாருக்கும் பல்வேறு வகையான வாதங்கள் நடந்தன. ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் ஒருவர் பாட மற்றொருவர் பொருள் கூறவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. பொருள் சொல்ல முடியாதவர் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. முதலில் அருணகிநாதர் கந்தர் அந்தாதி என்ற பிரபந்தம் பாடினார். ஒவ்வொரு பாடலுக்கும் வில்லியார் பொருள் விளக்கம் கூறிவந்தார். 54-ஆம் பாடலகிய
திதத்தத்தத் தித்தக திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதிதித்த தேதுத்த தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாத திதேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே என்ற பாடலுக்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்தார். பாடல் முழுவதும் தகர வர்க்கத்தால் ஆனது இப்படி ஒரு பாடல் இருக்காது இது பொய் பாடல் என்று வில்லிபுத்தூரார் கூறினார். இது மெய்ப்பாடலே இப்பாடலின் விளக்கத்தை கற்றோர் ஏற்றுக் கொள்ளுமாறு அருணகிரிநாதர் எடுத்துரைத்தார். அரசவை அருணகிரியாரைப் பாராட்டியது. வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காதருக்கும் கருவியை அருணகிரியாரிடம் கொடுத்து தன் காதை அறுக்குமாறு செருக்கு அழிந்து பணிந்து நின்றார். கருணைமிகுந்த அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. இனி எங்கும் யாரையும் வாதுக்கு இழுத்து காதை அறுக்காதீர்கள். நன்று தமிழ்ப்பணி செய்வீர் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அன்று முதல் காதறுக்கும் தொழிலைக் கைவிட்டார் வில்லிபுத்தூரார். கருணைக்கு அருணகிரி என மக்களால் போற்றப்பட்ட அருணகிரிநாதர் மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார்.
அருணகிரிநாதரிடம் தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் அவரை பழி வாங்கத் துடித்தான். அந்த நேரத்திற்காக காத்திருந்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான் தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரிநாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன் தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலை பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான் சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை அரசனிடம் காண்பித்து அருணகிரிநாதர் இறந்து விட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான். அரசனும் உண்மை அறியாது அவ்வுடலைத் தகனம் செய்தான். பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது தேடினார். தன் உடல் அழிக்கப்பட்டதை கடவுள் செயலாகக் கருதினார்.
அருணகிரிநாதர் கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர் மன்னிடம் நான் இறைவனிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார் என்றார். அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாகவும் திருத்தணியில் உள்ள முருகன் கையில் அமர்ந்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது. திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது முருகரால் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் முருகர் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.
அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் எனச்சில ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. 1871 இல் வ.த. சுப்ரமணிய பிள்ளை ஒரு மாவட்ட நடுவராக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அதிகாலை பண்டாரம் ஒருவரால் ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர் திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை சுவடிகள் உள்ளிட்ட திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதி நூல்களாக வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு செங்கல்வராய பிள்ளையால் விளக்கம் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. திருப்புகழை மக்களிடையே பரவச் செய்தவர்களில் ஒருவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆவார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனார் திருமழிசை ஆழ்வார் முதலிய அடியார்கள் குறித்தும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.
அருணகிரிநாதர் இயற்றியவை
கந்தர் அந்தாதி 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் 108 பாடல்கள்
கந்தரனுபூதி 52 பாடல்கள்
திருப்புகழ் 1307 பாடல்கள்
திருவகுப்பு 25 பாடல்கள்
சேவல் விருத்தம் 11 பாடல்கள்
மயில் விருத்தம் 11 பாடல்கள்
வேல் விருத்தம் 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை
குதம்பை சித்தர்
குதம்பை என்ற ஆபரணத்தை காதில் அணிந்திருந்ததால் குதம்பை சித்தர் என்று பெயர் பெற்றார். பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர். குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆண்குழந்தையாக இருந்தாலும் இவரது அன்னை இவருக்கு பெண் குழந்தைகளுக்கு காதில் அணிவிப்பது போல் குதம்பை என்று சொல்லக்கூடிய ஒரு தொங்கட்டான் அணிவித்தாள். அந்த அணிகலனின் அழகால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகியது. குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். அவரை வணங்கி நின்ற குதம்பையரிடம் நீ சென்ற பிறவியில் உய்வடையும் பொருட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்த தவத்தை தொடர்ந்து செய்து இறைவனை அடைவதற்காகவே இப்பிறவியில் வந்திருக்கிறாய் என்றார். குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு தன்னை ஆசிர்வதித்து இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். யாருக்கு மாதவர் குரு அருளுபதேசம் செய்த பின் சென்ற பிறவியின் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய் என்றார்.
குதம்பை வீட்டிற்கு வந்தார். அவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது தாய் பெண் பார்த்து வைத்திருந்தார். தனது தாயிடம் உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால் ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ என்றார் குதம்பை. தாய்க்கு அதிர்ச்சி என்னடா சித்தன் போல் பேசுகிறாயே இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம் முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். பல வருட தவத்திற்கு பிறகு ஒரு நாள் இறைவனின் அசீரீரீ அவருக்கு கேட்டது.
குதம்பை உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்று குதம்பையாருக்கு வருணமந்திரத்தை உபதேசித்தார். குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.
குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன் சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. ஜீவ சமாதியின் மேல் விநாயகாரின் திருவுருவம் உள்ளது மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால் மழை பொழியும். ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை அகத்திய சந்தன விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம் தேவையில்லை என்று தனது கருத்தை சொல்கிறார்.
போகர்
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி வேறு செய்திகள் இல்லை. அகத்தியரின் சீடனாக இருந்தார். திருமூலரின் சீடரான நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவராகவும் இருந்தார். இவர் பதினெட்டு சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலையும் இமய மலையும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு இடமாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். போகர் வந்த சமயம் அவர் மகாசமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் இமய மலையில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் அந்த தவத்தின் முன்னால் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர் போகர் மீது பெரும் கனிவு கொண்டு அமிர்தமணிப்பழம் என்னும் தேவக்கனி மரம் ஒன்றை காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது நரைக்காது முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறினார்கள்.
போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய பசி தாகம் மூப்பு என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் போகர் ஏழாயிரம் போகர் நிகண்டு 17000 சூத்திரம் 700 யோகம் போன்றவை. நோயின்றி வாழ வைக்கும் பல அரிய குறிப்புகளை எழுதினார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர் அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் தம்பணா மந்திரம் எனப்படுகிறது அமிர்தத்துக்கு இணையான ஆதி ரசத்தையே இவர் கண்டறிந்தார். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குவதற்காக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.
போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள் குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார். போகர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
- போகர் – 12,000
- சப்த காண்டம் – 7000
- போகர் நிகண்டு – 1700
- போகர் வைத்தியம் – 1000
- போகர் சரக்கு வைப்பு – 800
- போகர் ஜெனன சாகரம் – 550
- போகர் கற்பம் – 360
- போகர் உபதேசம் – 150
- போகர் இரண விகடம் – 100
- போகர் ஞானசாராம்சம் – 100
- போகர் கற்ப சூத்திரம் – 54
- போகர் வைத்திய சூத்திரம் – 77
- போகர் மூப்பு சூத்திரம் – 51
- போகர் ஞான சூத்திரம் – 37
- போகர் அட்டாங்க யோகம் – 24
- போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் 1799 1800 ஆம் பாடலில் விமான தொழில் நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின் (steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் மாடலையும் குறிப்பிட்டிருக்கிறார்.
போகர் தான் உருவாக்கிய மரக்கப்பலில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். அதன்படி ஒரு மரக்கப்பல் 2400 அடி நீளம் 300 அடி அகலம் 300 அடி உயரம் 7 மாடிகள் 64 அறைகள் அவற்றிற்கு கிழக்கும் மேற்குமாய் வாயில்கள் தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள் ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள் இவற்றை சிந்தித்து பார்த்தால் ஒரு அரண்மனை போல் இருக்கும். இந்த கப்பல் நீராவியின் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தில் செய்திருக்கிறார். சீனாவில் இருந்தபோது அமைத்த அந்த கப்பலில் சீன மக்களையும் ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி ஏழு கடல்களையும் காண்பித்ததாக பல பாடல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். போகர் தனது மரக்கப்பலில் உலகைச் சுற்றிய அனுபவம் உலகுக்கும் பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின. நிலம் ஒரு பங்கு நீர் மூன்று பங்கு என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர். கடல் பயணத்தின் போது கடும் பாறையை பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.
போகர் தான் உருவாக்கிய விமானத்தில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். இதற்கு அவர் பட்டம் என்று பெயரிட்டிருக்கிறார். 30 அடி நீளம் 30 அடி அகலம் என சதுர பரப்பில் பட்டம் செய்தார். ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து பறக்க வைத்தார். காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளையும் வைத்து உருவான தொழில்நுட்பத்தில் பட்டம் செய்து பறக்கவிட்டார். மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார். போகர் இந்த பட்டத்தின் துணையுடன் சென்ற நாடுகள் அதன் வழியாக சித்தர்கள் அதிகமான பாடங்களை கற்றிருக்கிறார்கள். இதனைப் பற்றி சித்தர்கள் பாடல்கள் பல உள்ளன. பட்டம் தயாரிப்பதற்காகவே போகர் அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். அஸ்வினி மகரிஷி பஞ்சலோகத்தை உருக்கிச் செய்தவர். போகரின் பெருமைகளையும் திறமைகளையும் அஸ்வினி மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். இந்த பட்டம் பறக்கும் போது ஒளி பொருந்திய சிவரதம் போல் இருக்குமாம். இந்த வானரதம் தயாரித்த போகர் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.
தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்
தக்காண எண்ணாயிரம் காதமப்பா
வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு
வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா
கோடி பேர் சமாதிநிலை தன்னைக் கண்டேன்
கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்.
இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். போச்சா என்பவர் தென் அமெரிக்கா வந்து எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக எழுதி வைத்திருக்கிறார். சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் என்பவர் தன் வரலாற்று ஆய்வின் மூலம் அந்த போச்சா என்பவர் தான் போகர் என்கிறார். வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும் பலூனை போகர் கண்டுபிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் கூண்டு வித்தை. பாராசூட்டை கண்டு போகர் பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் குடை வித்தை.
போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். யார் நீ அந்தப்பக்கம் போ அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம் முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாசாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரையும் போகர் உருவாக்கினார். பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது.