பிரம்மன் முருகனைப் பற்றி ஏற்கனவே அறிவார். அவன் தன்னால் உருவாக்கப்பட்டவன் அல்ல சாட்சாத் பரமசிவனின் நேரடி வடிவம் என்பதை உணர்ந்தவராதலால் மிகவும் பவ்வியமாக முருகன் முன் கை கட்டி நின்றார். வணக்கம் சிவமைந்தரே தாங்கள் அழைத்த காரணம் என்ன என்றார். முருகன் பவ்வியமாக பேச ஆரம்பித்தான். பிரம்மனே நீர் எங்கிருந்து வருகின்றீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார், அதற்கு பிரம்மர் முருகா நான் பரமனைத் தரிசிக்க வந்தேன். என்னுலகம் சத்தியலோகம். அங்கிருந்து தான் என்படைப்புத் தொழிலை நடத்துகிறேன். இவ்வுலகத்தில் இயக்கத்துக்கு காரணமானவனே நான் தான் என்று பெருமையடித்துக் கொண்டார் பிரம்மன். அப்படியானால் நீங்கள் பெருமைக்குரியவர் தான். சரி எந்த அடிப்படையில் நீங்கள் உயிர்களைப் படைக்கின்றீர்கள் என நான் தெரிந்து கொள்ளலாமா என்று ஒன்று மறியாதவன் போல் கேட்டான் முருகன். சிறுபிள்ளையான உனக்கு அதெல்லாம் புரியாது முருகா நான் வரட்டுமா என்றார் பிரம்மா. முருகனுக்கு கோபம் வந்து விட்டது. சற்றே அவரை அதட்டி நிறுத்திய முருகன் நான் கேட்டதற்கு பதில் சொல்லி விட்டு புறப்படுங்கள். உங்கள் இஷ்டத்துக்கு வந்தீர்கள். உங்கள் இஷ்டத்துக்குப் போவதாகச் சொல்கின்றீர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்றதும் நடுங்கிவிட்டார் பிரம்மா.
உலகத்தையே கலக்கிய ஆட்டை அடக்கியவன் முருகன். நாமெல்லாம் அவன் முன் எம்மாத்திரம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு திரும்பவும் கை கட்டி நின்று, முருகப்பெருமானே எனையாளும் சிவ மைந்தனே படைப்பின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். படைப்புகள் ஓம் என்ற பிரணவத்தின் அடிப்படையில் அமைகின்றன என்றார். ஓம் என்று சொன்னீர்களே அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்தால் தானே நான் படைப்பின் ரகசியத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றான் முருகன். முருகா இது புரியவில்லையா உனக்கு ஓம் என்றால் பிரம்மன். அதாவது அந்த மந்திரத்துக்குரிய பொருளே நான் தான். நான் தான் எல்லாம் என்றார். இதைக்கேட்டு முருகன் ஏதும் சொல்லவில்லை. வீரபாகு ஓடி வந்தான். பிரம்மாவின் தலையில் ஓங்கிக் குட்டினான். பிரம்மா என்ன உளறுகிறாய். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாத நீ படைக்கும் தகுதியை இழந்தாய். போதாக்குறைக்கு பொய்யும் சொல்கிறாய். நான்கு தலைகள் இருந்தும் உமக்கு அறிவு மட்டும் இல்லவே இல்லை என்றவன் அவரை இழுத்துப் போய் சிறையில் அடைத்து விட்டான். பிரம்மனுடன் வந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பிரம்மாவை விடுவிக்க அவர்கள் நேராக சிவனிடம் ஓடினர்.
பிரம்ம லோகத்தினர் சொன்னதை சிவபெருமான் புன்னகையுடன் கேட்டார். நடந்ததை எல்லாம் நன்றாய் அறிந்த அந்த பரம்பொருள் இந்த உலகத்தை முருகனே படைத்துக் கொண்டிருப்பதை கண்டார். மகனின் அளப்பரிய அறிவாற்றலை நேரில் காணப் புறப்பட்டார் அவர். தன் குழந்தையின் சிருஷ்டியைப் பார்த்து பார்த்து பூரித்தார். வேலனை மார்போடு அணைத்து முத்த மழை பொழிந்தார். முருகா நீ செய்தது என்னவோ நியாயம் தான் அதற்காக உன்னை வயதில் பெரியவருக்கு மரியாதை தந்திருக்க வேண்டாமா பிரம்மனை விட்டு விடு என்றார். தந்தையே இதென்ன நீதி எனக்காக என் தம்பிகள் இணைந்து இந்த ஸ்கந்த கிரியை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவன் நான். உங்கள் லோகத்துக்கு வருபவர்கள். என்னையும் வணங்க வேண்டும் என்பது நீங்கள் வகுத்த நியதி. இதை மீறினார் பிரம்மா. அது மட்டுமல்ல ஒரு தொழிலைச் செய்பவன் அது பற்றி தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். படைப்புக்கு ஆதாரம் ஓம் என்ற பிரணவம். அதற்குரிய பொருளே அவருக்கு தெரியவில்லை. அப்படியிருக்க அந்த அஞ்ஞானி படைப்புத் தொழில் செய்ய அதிகாரமே இல்லையே. அதனால் அவரை சிறையில் அடைத்திருக்கிறேன். இது என் உள்நாட்டு விஷயம். இதில் தலையிடாதீர்கள் என்றான்.
சிவன் இது கேட்டு மகிழ்ந்தாலும் கோபமடைந்தார் போல் காட்டிக் கொண்டு முருகா பிரம்மனை விடுதலை செய் என்று சொல்வது உன் தந்தை. தகப்பனின் சொல்லை மீறுவது மகனுக்கு அழகல்ல என்றார். தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்த முருகன் அவரை விடுவித்து விட்டான். பிரம்மன் தலைகுனிந்து நின்றார். பிரம்மா கவலைப்படாதே ஓம் என்ற மந்திரத்தின் பொருளை இனியாவது அறிந்து கொள் தெரியாமல் ஒரு பணியைச் செய்யக் கூடாது என்ற முருகனின் வாதம் சரியே என்றார் சிவன். தேவர்கள் எல்லாம் பொருளைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அப்போது முருகன் சொன்னான் தந்தையே இது சாதாரண விஷயமல்ல மிகப்பெரிய ரகசியம் இதை உலகத்தினர் யாரும் அறியக் கூடாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும் என்பதை தாங்கள் தானே அறிவுறுத்தியிருக்கிறீர்கள். அந்தத் தகுதிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றான்.