வீரபாகுவைக் கண்டதும் பத்மாசுரன் அகோரமாக சிரித்தான். அடேய் நீயா அன்று நீ தானே எனது அவைக்கு தூதனாக வந்தவன் அன்றே உன்னைக் கொன்றிருப்பேன். நீயோ மாய வடிவில் தப்பி விட்டாய். இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று அந்த சிறுவனுக்கு தூதனாக வந்தாய். இப்போது எனக்கு தூதனாக மாறிவிடு அந்த சிறுவனை என்னிடம் சரணடையச் சொல். என் தகுதிக்கு நீ என்னோடு போட்டியிட லாயக்கில்லாதவன். அப்படியே ஓடிப்போய் விடு என்றான். வீரபாகு எக்காளமாகச் சிரித்தான். அடேய் அசுரா நான் நினைத்தால் இக்கணமே உன் தலையைக் கொய்து விடுவேன். அன்று முருகன் என்னைத் தூதனாக அனுப்பினார். இன்று உன்னோடு போர்புரிய அனுப்பியுள்ளார். எடு வில்லை முடிந்தால் தோற்கடித்துப் பார் என சொல்லி விட்டு வில்லை எடுத்தான். சூரன் வீரபாகுவை மிகச் சாதாரண கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியமாக நின்றான். வீரபாகு பல அம்புகளை அவன் மீது எய்தான். அவை சூரனின் இரும்பு உடல் மீது பட்டு வளைந்து நொறுங்கியதே தவிர சிறு சிராய்ப்புக் காயத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. எனவே யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் என சக்தி மிக்க அஸ்திரங்களை எய்து பார்த்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான். பத்மாசுரனின் இந்த அபரிமித சக்தியை எண்ணி வீரபாகு வியப்படைந்தான்.
சிவனின் அருள் பெற்றவனை அழிப்பது என்றால் சாதாரண காரியமா அது மட்டுமல்ல அவனை அழிக்கும் சக்தியாகவும் சிவனே முருகனாக அவதாரமெடுத்துள்ள போது வேறு யாரால் அவனைச் சாய்க்க முடியும். வீரபாகு மனம் தளரவில்லை. தன்னிடமிருந்த ஒரே அஸ்திரமான பாசுபத அஸ்திரத்தை எய்தான். பாசுபதாஸ்திரம் பல பாம்புகளை உள்ளடக்கியது. அது விஷத்தைக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று கடித்துக் கொண்ட பாம்புகள் மாய்ந்தன. அந்த அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. இதைப் பயன்படுத்திக் கொண்ட சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து விட்டான். வீரபாகு மீதுபட்ட அம்புகள் அவனை மயக்கமடையச் செய்தன. வீரபாகு களத்தில் விழுந்த பிறகு பூதகணங்கள் அசுரர்களுடன் கடுமையாக மோதினர். பூவுலகில் பிறந்தவன் மனிதனாயினும் சரி அசுரனாயினும் சரி அவனது மரணத்துக்கு எந்த நேரம் குறிக்கப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அவனை யாராலும் வெல்ல இயலாது. இங்கே சிவனின் அம்சமான முருகன் பத்மாசுரனின் முன் எமனாக வந்து நின்றான். பத்மாசுரா என் வீரர்களை வெற்றி கண்டுவிட்டதாக மமதை கொள்ளாதே. இதோ நான் இருக்கிறேன். உன் படையைச் சந்திக்க இதோ எனது பெரும் படை இருக்கிறது. வீணாக அழிந்து விடாதே. என்னிடம் சரணடைந்து விடு என முழக்கமிட்டார் முருகன். சூரன் சிரித்தான். இங்கே வந்து உன் படை தவிடு பொடியாகி விட்டது. கிரவுஞ்சன் என்ற சிறுவனையும் தாரகன் என்ற எனது தம்பியான கோழையையும் ஜெயித்து விட்ட ஆணவத்தில் என்னையும் சாதரணமாக கருதாதே. நான் உன்னை ஒரே பாணத்தில் கொன்று விடுவேன். சிறுவன் என்பதால் உயிர்ப்பிச்சை தருகிறேன் ஓடிப் போய் விடு என முருகனை எச்சரித்தான்.
முருகப்பெருமான் அவனுக்கு புத்தி கற்பிக்க நினைத்தார். பல்வேறு ஆயுதங்கள் இருதரப்பிலும் பரிமாறப்பட்டன. உக்கிரமான போர் நடந்தது. முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி விட்டார். ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே என சூரன் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான். இந்நிலையில் அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் முருகன். அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. சூரனின் நிலை கண்டு அவனது படைகள் சற்றும் தளராமல் முருகனின் படையினருடன் போரிட்டனர். போர்க்களத்தில் நின்றபடி சூரன் யோசித்தான். இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல இவனை அழிப்பதென்றால் சற்று கடினமானது தான். மீண்டும் நம் ஊருக்குள் சென்று பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும் என்றபடியே அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன். சூரன் ஓடிப்போனதை அறிந்து தேவர்கள் முருகனைக் கொண்டாடினர்.
முருகா தாங்கள் நினைத்திருந்தால் வேலாயுதத்தை எறிந்து அந்த சூரனை நொடியில் அழித்திருக்க முடியும். ஆனாலும் தாங்கள் எங்கள் மீது கிருபை செய்யவில்லை. சூரனால் நாங்கள் இன்னும் வேதனைப்பட வேண்டும் என்பது விதிபோலும் சூரன் மாயத்தால் மறைந்திருந்தாலும் தாங்கள் இந்த வேலை அனுப்பினால் அவன் எங்கிருந்தாலும் தாக்கி அழித்து விடும். கருணைக் கடவுளான முருகன் அவர்களிடம் எதிரிகளாக இருந்தாலும் ஆயுதமற்றவனைக் கொன்றோம் என்ற அவச்சொல் நமக்கு வரக்கூடாது. அது மட்டுமல்ல அவன் மீது கொண்ட கருணையால் தான் அவனை நான் அனுப்பி விட்டேன். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருந்தாமல் திரும்பி வந்தால் அவனை அழிப்பதில் தவறில்லை. சூரன் திருந்த மாட்டான் என்பது நானும் அறிந்ததே மீண்டும் அவன் வருவான். அப்போது அவனை நிச்சயம் நான் விடமாட்டேன். நீங்கள் அமைதியாய் இருங்கள் என்றார். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இந்த நேரத்தில் வடிவேல் முருகன் போர்க்களத்தில் மயங்கியும் இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள் படையினரை தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர். அரண்மனைக்குள் புகுந்த பத்மாசுரன் மீண்டும் முருகனை அழிப்பது பற்றிய ஆலோசனையில் ஆழ்ந்தான்.