மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -14

கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என்னை அழிக்க இயலும். நான் ஆயுதம் தாங்கி இருக்கும்போது கிருஷ்ணரால் மட்டுமே அழிக்க இயலும். ஆனால் அர்ஜுனனுக்கு என் ஆயுதம் செயலற்று இருக்கின்ற பொழுது தான் என்னை கொல்ல இயலும். இறைவன் அருளால் நான் அளப்பரிய ஆற்றல் படைத்தவனாக இருக்கின்றேன். நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ ஆயுதம் இல்லாதவரோடோ பெண்களிடமோ பேடுவுடனோ போரிட மாட்டேன். பெண்பால் ஒருத்தி நான் ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது என்னை எதிர்த்து வந்தால் அப்போது என் ஆயுதங்கள் பயனற்றுப் போகும். இதுவே என் போர் திறமையை பற்றிய மர்மம். அர்ஜுனன் இதை பயன்படுத்திக் கொள்வாயாக என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காசிராஜன் தனது குமாரிகளின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற கொண்ட மூன்று ராஜகுமாரிகளை பலாத்காரமாக நான் தூக்கி கொண்டு போய் விட்டேன். நம்முடைய குரு வம்சத்திற்கு அவர்களை மகாராணியாக அமைப்பது என் நோக்கமாக இருந்தது. அவர்கள் மூவரில் மூத்தவளாகிய அம்பா சால்வ மன்னனை மணந்து கொள்ள தீர்மானத்திருப்பதாக விஷயத்தை எடுத்துரைத்தாள். ஆகையால் அவளை தக்க பாதுகாப்புடன் சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்தேன்.
ஆனால் வேற்றுவனால் கொண்டு செல்லப்பட்ட பெண்ணை அம்மன்னன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

தனக்கு நேர்ந்த கதியை தெரிவிக்க அவள் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்து அவளுடைய வாழ்க்கையை பாழடித்துவிட்டதாக என் மீது குற்றம் சாட்டினாள். என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த அவள் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து என்னை யுத்தத்தில் அழிப்பதற்கான வரத்தை கேட்டு பெற்றாள். சென்ற ஜென்மத்தில் அவளுக்கு அதற்கான யுத்தகாலம் வராத காரணத்தினால் என்னை அழிக்க இந்த ஜென்மத்தில் துருபத மன்னனின் மகளாக பிறப்பெடுத்தாள். பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறி சிகண்டி என்ற பெயரில் பேடுவானாள்

இந்த ஒன்பது நாள் யுத்தத்தில் சிகண்டியை நேருக்கு நேர் சந்திக்காமல் நான் சமாளித்து வந்தேன். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு. சிகண்டியின் முன் என் ஆயுதங்கள் பலனன்றி போய்விடும். அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய். வெற்றி கிட்டும் என்றார். நீங்கள் அனைவரும் உங்கள் ராஜ்யத்தை மீட்டெடுத்து அமைதியாக வாழ்ந்து இருப்பீர்களாக என்று ஆசீர்வாதம் வழங்கினார். பீஷ்மர் வழங்கிய ஆசீர்வாதங்களை பாண்டவர்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள். தம்மை தோற்கடிப்பதற்கான ரகசியத்தை அவர் வெளியிட்டது பாண்டவர்களுக்கு புதியதொரு உற்சாகத்தை உண்டு பண்ணியது. தனது முடிவு நெருங்கி விட்டதை பீஷ்மர் உணர்ந்து மகிழ்ந்தார். அம்பாவின் சாப விமோசனம் கிடைக்க போகும் பீஷ்மரை மனதார வாழ்த்தி மெல்லிய புன்னகை பூத்தார் கிருஷ்ணர். அந்த புன்கையின் அர்த்தம் பீஷ்மருக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே அன்று புரிந்திருந்தது. பீஷ்மர் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். அடுத்தநாள் பீஷ்மரிடம் சிகண்டியை முன்னிறுத்த கிருஷ்ணர் திட்டம் வகுத்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.