பிராகசமூர்த்தியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த நீரை மூன்று மனைவிகளுக்கும் கொடுக்குமாறு சிருங்கரிஷி தசரதரிடம் கட்டளையிட்டார். தசரதர் கலசத்தில் இருந்த அமிர்தத்தில் பாதியை முதல் மனைவி கௌசலைக்கும் மீதி இருந்த பாதியை கைகேயி, சுமத்ரைக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்தார். மூவரும் அருந்திய பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறிதளவு அமிர்தத்தை மீண்டும் கௌசலைக்கு கொடுத்தார். அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது. யாகத்தில் ஈடுபட்ட அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரையும் அனுப்பிவைத்தார். தசரதர் வசிஷ்டரையும் சிருங்கரிஷியையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கழித்து மகாராணிகள் மூவரும் கருத்தரித்தனர். அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி கடக ராசியில் புனர்பூச நடசத்திரத்தன்று கௌசலைக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமத்ரா தேவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்குவனன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிராகசிப்பது போல முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்கன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.