ஒரு நாட்டின் மன்னனை சூதாட்டத்திற்கு அழைத்து சூதாடி ராஜ்ஜியம் ஒன்றை அபகரிப்பது ராஜ தர்மம் ஆகாது. எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு அரசனை எதிர்த்து மற்றொரு அரசன் போர் புரிந்து ராஜ்யத்தை வெல்லலாம். சூதாட்டத்தில் இழந்த ராஜ்யத்தை நாங்கள் போர் புரிந்து வெல்லப் போகிறோம். எங்களுடன் யுத்தத்திற்கு வாருங்கள் என்று யுதிஷ்டிரன் கூறி இருக்கலாம். ஆனால் சூதாட்டம் ஆடியதன் விளைவாக அவன் விவேகத்தை முழுவதுமாக இழந்து விட்டான்.
கபடமே வடிவெடுத்த சகுனியை துரியோதனன் ஆர்வத்துடன் கட்டித் தழுவினான். மாமா என்னுடைய வாழ்நாளில் இன்று தான் பெரும் மகிழ்வை காண்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த படியாக தன் தம்பி துச்சாதனனிடம் அந்த அடிமைப் பெண்ணாக திரௌபதியை சபைக்கு இழுத்து வரும்படி உத்தரவிட்டான். துரோபதியின் நீண்ட கூந்தலை தன் கையில் சுருட்டி பிடித்துக் கொண்டு அவளை இழுத்து வந்தான் துச்சாதனன். அவனுடைய முகத்தில் அப்போது மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது. அப்படி இழுத்து வரப்பட்ட திரௌபதி மன உறுதியுடன் அந்த சபையில் பேசினாள். பெண் ஒருத்தி மீது கை வைத்து அவளை அவமானப் படுத்துவதை மாண்புமிக்க இந்த சபை ஆமோதிக்கிறதா என்று கேட்டாள். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற குரு வம்சம் இன்றைக்கு கொடூர தன்மையில் மூழ்கிக் கிடந்தது.
என் கணவர் முதலில் சூதாட்டத்தில் தன்னை இழந்து விட்டு பிறகு என்னையும் பணயம் வைத்து தோற்று விட்டார் என்று கேள்விப்பட்டேன். தன்னை இழந்த பிறகு என்னை பணயம் வைக்க அவருக்கு உரிமை எது என்று கேட்டாள். அனைவரும் வாய்பொத்தி இருந்தனர். அங்கியிருந்த யுதிஷ்டிரனை பார்த்து நீங்கள் செய்த ராஜசூய யக்ஞத்துக்கு நிகரான செயலா இது? இச்செயல் போற்றத்தக்க செயலா என்று கேட்டாள். அவ்வேளையில் யுதிஷ்டிரனால் பேச இயலவில்லை. மௌனத்துடன் இருந்தான். பின்பு சபையில் இருந்தவர்களைப் பார்த்து பெரியப்பாவாகிய திருதராஷ்டிரன் சொல்லும் சொல்லுக்கு தன் கணவர் எப்போதும் அடிபணிந்து நடந்து கொள்கிறார். ஆனால் திருதராஷ்டிரரோ தன் தம்பியின் மைந்தர்களை அன்புடன் வரவேற்று சூதாட தூண்டினார். விளையாட்டில் அவருக்கு அனுபவம் போதாது. ஆனால் அதை ஆடுவதில் அவருக்கு விருப்பம் உண்டு. அவரிடம் இருந்த குறையை நீங்கள் பயன்படுத்தி உங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டீர்கள். இந்த சபையானது என் கணவரை ஏமாற்றி அவரிடம் இருக்கும் செல்வம் அனைத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டது. கொள்ளைக்காரர்கள் தர்மத்திலிருந்தும் சத்தியத்திலிருந்தும் பிசகுபவர்கள் ஆவார்கள். எனவே இங்கு குழுமி இருப்பவர்கள் தரத்தில் மிகவும் மட்டமானவர்கள். தான் அடிமையான பிறகு என்னை பணயம் வைக்க என் கணவனுக்கு உரிமை உண்டா?இச்சபையில் உள்ளவர்கள் யாராவது இந்த கேள்விக்கு விடை தருவீர்களா என்று கேட்டாள். சிறிது நேரம் சபையில் மௌனம் நிலவியது. பிறகு பீஷ்மர் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் தர்மத்தை விளக்குவது மிகக் கடினம். ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது. கணவன் ஒருவன் சுதந்திரமாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் மனைவி அவனுக்கு உரியவள் ஆகிறாள் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார்.