சபையில் இருந்த அமைதியான சூழ்நிலையில் ஒருவன் அடிமைகளுக்கு அரச ரீதியில் உடையணிந்து இருப்பதற்கு உரிமை இல்லை என்றான். ஆகையால் அவர்கள் அணிந்திருந்த ராஜ உடைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்படி பறிமுதல் செய்த பொழுது பாண்டவர்கள் தாங்களே தங்கள் அணிந்திருந்த அரச உடைகளை கழற்றி கொடுத்து விட்டனர். அடிமைகளான பாண்டவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு நின்றனர். இக்காட்சியை கண்ட துரியோதனனுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூய யாக்ஞத்தில் யுதிஷ்டிரனின் ஆடம்பரத்தை பார்த்த பொழுது அவனுடைய உள்ளம் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது பாராளும் வேந்தனை இப்போது அடிமை நிலைக்கு இறக்கி வைத்து விட்டோம் என்று துரியோதனன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பாஞ்சாலத்தில் நிகழ்ந்த திரௌபதிக்கான சுயம்வரத்தில் வெல்ல துரியோதனனுக்கு இயலவில்லையே என்ற வருத்தம் அவருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.
இப்பொழுது சபை நடுவே வைத்து அவளை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அவள் அணிந்திருந்த ஆடையை எடுக்கும் படி தன் தம்பி துச்சாதனனை ஏவினான். துச்சாதனனும் அடாத செயலில் ஈடுபட மகிழ்வுடன் திரௌபதி அருகில் வந்தான். இதற்கு தடை சொல்ல கணவன்மார்களுக்கு உரிமை இல்லை. மற்றவர்களோ வெறுமனே அமைதியாக இருந்து விட்டார்கள். திரௌபதி கிருஷ்ணனிடம் தனக்கு கிருபை புரிய வேண்டும் என்று வேண்டி அவனிடம் அடைக்கலமானாள். கிருஷ்ணனிடம் அடைக்கலம் வருகின்றவர்களுக்கு ஆபத்பாந்தவன் எப்பொழுதும் துணை நிற்பான். இப்பொழுது அதிசய செயல் ஒன்று நிகழ்ந்தது. துச்சாதனன் திரௌபதியின் புடவை ஒன்றன் பின் ஒன்றாக உருவிக்கொண்டே இருந்தான். புதிய புடைவைகள் அவளிடம் ஒன்றன் பின் ஒன்றாக வடிவெடுத்து வந்து கொண்டே இருந்தன. துச்சாதனன் உருவிய புடவைகள் திரௌபதியின் உயரத்திற்கு ஒரு பெரிய குவியல் ஆகிவிட்டது.
திரௌபதி புதிய ஆடைகளுடன் மிளிர்ந்து கொண்டே இருந்தாள். ஆடைகளை வுருவி சலித்துப்போன பொல்லாத முர்கன் பெருமூச்சு வாங்கி உட்கார்ந்துவிட்டான். துச்சாதனன் இச்செயலில் திரௌபதியிடம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டான். ஆனாலும் அவன் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அடுத்தபடியாக துரியோதனன் வேண்டுமென்றே திரௌபதியை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணி தன்னுடைய இடது தொடையை காட்டினான். இதை கண்ட பீமன் மிகவும் கோபம் கொண்டு நீ காட்டுகின்ற உனது தொடையை யுத்தத்திலே நான் உடைத்து உன்னை கொல்வேன். இல்லாவிட்டால் பராக்கிரமே வடிவெடுத்து இருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். பின்பு அவன் துச்சாதனனை பார்த்து யுத்தத்திலே உன்னுடைய நெஞ்சைப் பிளந்து அதில் பீறிக்கொண்டு வருகின்ற ரத்தத்தை குடிப்பேன். இல்லாவிட்டால் பராக்கிரமமே வடிவேடுத்திருக்கின்ற என்னுடைய முன்னோர்கள் சென்று இருக்கின்ற சொர்க்கத்தில் நான் நுழைய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். அப்பொழுது கர்ணன் திரௌபதியை அந்தப்புரத்திற்கு இழுத்துச் சென்று அடிமைப் பெண் ஒருத்திக்கு பொருத்தமான உடைகளை கொடுத்து பணிவிடை பண்ண அவளை நியமிப்பாயாக என்று துச்சாதனை தூண்டினான்.