இந்திரப்பிரஸ்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சபா மண்டபத்தை பார்வையிட்ட பிரமுகர்களில் மிக முக்கியமானவர் நாரத மகரிஷி. அவர் மூவுலகையும் சென்று பார்த்தவர். விண்ணுலகம் ஆகட்டும் மண்ணுலகம் ஆகட்டும் எங்குமே இதற்கு ஈடான சபா மண்டபத்தை தான் பார்த்ததில்லை என்று அவர் யுதிஷ்டிரனிடம் கூறினார். இத்தகைய மண்டபம் ஒன்றை அமைத்த பிறகு அதில் ராஜசூய யாக்ஞம் நடத்துவது தான் பொருத்தம் என்று வேந்தனாகிய யுதிஷ்டிரனிடம் அவர் தெரிவித்தார். ராஜசூய யாக்ஞம் நடத்துவதின் வாயிலாக யுதிஷ்டிரன் அரசர்களுக்கெல்லாம் அரசன் ஆவான். பல பிரமுகர்களும் நாரதரின் கருத்தை ஆமோதித்தனர். ஆனால் சாந்தமூர்த்தியாகிய யுதிஷ்டிரன் அனைவரும் சொல்லும் இந்த கருத்தில் ஊக்கம் செலுத்தவில்லை. இதைப்பற்றி தான் கிருஷ்ணனோடு கலந்து பேசுவதாகவும் கிருஷ்ணன் கருத்துப் படியே நடந்து கொள்ளப்போவதாகவும் யுதிஷ்டிரன் அனைவரிடமும் தெரிவித்தார்.
கிருஷ்ணன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணனும் விரைவில் இந்திரப்பிரஸ்தம் வந்து சேர்ந்தான். பாண்டவர்களுக்கு எப்பொழுதும் உதவியாக இருந்த கிருஷ்ணனிடம் ராஜசூய யாக்ஞம் நடத்துவதைப் பற்றிய முக்கிய பிரமுகர்கள் கூறிய கருத்து சொல்லப்பட்டது. அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் பாராளும் அனைத்து அரசர்களும் ஒத்துக் கொண்டால்தான் ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும். மகத நாட்டு அரசனாகிய ஜராசந்தன் நமக்கு எதிரி. உன்னை சக்கரவர்த்தியாக அவன் அங்கீகரிக்க மாட்டான். விருஷ்ணியர்களுக்கு தொல்லை கொடுப்பதே அவனுடைய பொழுது போக்கு. அவனுடைய தொல்லைகளால் விருஷ்ணியர்கள் மதுராவை காலி செய்து விட்டு துவாரகையில் குடியேறி இருக்கிறார்கள். எண்பத்து ஆறு அரசர்களை அவன் சிறை பிடித்து வைத்திருக்கின்றான். இன்னும் 14 பேரை சிறை பிடிப்பது அவனது திட்டம். பிறகு அரசர்கள் நூறு பேரை பலி கொடுப்பது அவனுடைய திட்டம். அத்தகைய கொடூர அரசனை கொன்றால் மட்டுதே ராஜசூய யாக்ஞம் சாத்தியமாகும் என்று கிருஷ்ணன் தெரிவித்தான்.
அரசர்களுக்கெல்லாம் அரசனாக சக்கரவர்த்தியாக இருந்து ஏகாதிபத்தியம் செலுத்துவதற்கு தனக்கு சிறிதேனும் எண்ணமில்லை என்று யுதிஷ்டிரன் தன்னுடைய எண்ணத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தான். தான் அமைதியாக நாடாளுவதும் மற்றவர்களை அமைதியாக நாடாள விட்டு விடுவதும் என்னுடைய குறிக்கோள் என்று கூறினார். அதற்கு பீமன் இந்த சோம்பலை நான் வெறுக்கின்றேன். கொடியவர்களை வென்றாக வேண்டும். என்னுடைய உடல் வலிமையும் கிருஷ்ணனுடைய அறிவோம் அர்ஜுனனுடைய திறமையும் ஒன்று கூடினால் ஜராசந்தனை வெல்ல முடியும் என்றான். பீமனுடைய கருத்தை அர்ஜுனனும் ஆமோதித்தான். திறமையை முறையாக கையாள விட்டால் அது வீணாக போகிறது. வல்லவன் ஒருவன் ஏனோதானோவென்று வாழ்ந்திருப்பது முறையாகாது. ஜராசந்தனுடைய ஆக்கிரமிப்பை அடக்குவது நம்முடைய கடமையாகும் என்று அர்ஜுனன் தெரிவித்தான். இறுதியாக கிருஷ்ணன் ஜராசந்தன் கொல்லப்பட வேண்டியவன். அவன் கொல்லப்பட்டால் தவறு ஏதும் செய்யாத 86 சிற்றரசர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப் படுவார்கள் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் கூறினார்.