விதுரர் திருதராஷ்டிரனிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட துரியோதனன் விதுரரிடம் சென்று நீங்கள் எப்போதும் பாண்டவர்களுக்கு உரியவர் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு உணவளிக்கும் என்னிடத்தில் உங்களுக்கு நன்றி இல்லை. எப்பொழுதும் என்னை இகழ்ந்து பேசுவதே உங்களுக்குரிய தொழிலாக உள்ளது. கௌரவர்களாகிய எங்களை நீங்கள் வெறுக்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் நன்றாக இருக்கின்றோம். உங்களுடைய ஆதரவு பாண்டவர்களுக்கு இருந்தும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளாகப் போவார்கள். எதிர்காலத்தில் எங்களுக்கு வரும் அழிவை இப்பொழுதே நீங்கள் குறி சொல்கிறீர்கள். ஆனால் நீங்களும் பாண்டவர்கள் உட்பட அனைவரும் அழிவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கிடையில் இந்த மண்ணுலக வாழ்வை நன்கு பயன்படுத்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். தயவு செய்து எங்கள் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துரியோதனன் சூதாட்ட மேடைக்கு சென்றான்.
கபடம் நிறைந்த சகுனியால் பாண்டவர்களுடைய சொத்து முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. தோல்வி அடைந்த யுதிஷ்டிரனை கேலி செய்யும் பாங்கில் இன்னும் உன்னிடத்தில் பணயம் வைக்க ஏதேனும் உண்டா என்று சகுனி கேட்டான். அதன் பிறகு யுதிஷ்டிரன் ஆசையை மேலும் தூண்ட துரியோதனன் தாராளமான சலுகை ஒன்றை காட்டினான். இத்தனை நேரம் நீ பணயம் வைத்து இழந்த பொருள்கள் அனைத்தையும் நான் பணயமாக வைக்கிறேன் இதற்கு இணையாக நீ எதையும் வைக்க வேண்டியதில்லை. இப்பொழுது பகடையில் வெற்றி பெற்றால் இவையாவும் உனக்குச் சொந்தம் ஆகும் என்றான். மீண்டும் அவர்கள் விளையாடினார்கள். யுதிஷ்டிரன் மீண்டும் தோற்றுப் போனான்.
கௌரவர்கள் கொள்ளையடிக்க விரும்பிய பொருள்கள் அனைத்தும் சூதாட்டத்தின் மூலம் பெற்றுவிட்டார்கள். துரியோதனன் கூறிய ஆசை வார்த்தையால் மதியிழந்த யுதிஷ்டிரன் தன்னிடத்தில் இன்னும் ஏதோ பணயம் வைக்க பொருள் இருப்பதாக அவனுடைய உள்ளத்தில் தோன்றியது. தம்பிமார்கள் நால்வரும் அவனுக்குச் சொந்தம். ஆகவே சூதாட்ட வெறியினால் தூண்டப் பெற்று தம்பிமார்களையும் பணயம் வைத்தான். அதி விரைவில் அந்த நால்வரையும் சூதாட்டத்தில் இழந்தான். சூதாட்ட வெறியில் சுய அறிவை இழந்த யுதிஷ்டிரன் பிறகு தன்னையே பணயம் வைத்து அதிலும் தோற்றுப் போய் தன்னையும் கௌரவர்களிடம் இழந்தான். மானுடர்களை பணயம் வைப்பது யாராலும் கையாளப்படாத ஒரு நூதனமான முறையாக இருந்தது. கௌரவர்களே இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது யுதிஷ்டிரனை பார்த்து சகுனி திரௌபதியை ஏன் பணயம் வைக்கலாகாது என்று பரிகாசம் பண்ணினான். மூடத்தனமாக திரௌபதியையும் அவன் பணயம் வைத்து இழந்தான். இப்போது பாண்டவர்கள் அறவே கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது சுதந்திரத்தையும் இழந்து அவர்கள் கௌரவர்களுக்கு அடிமைகள் ஆகி விட்டார்கள்.