பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.
பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.
சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது என்று கங்கையின் வரலாற்றை ராமருக்கு விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார். மிதிலை நகரம் தூரத்தில் தென்பட்டது. மிதிலை நகரத்திற்கு முன்பு ஒரு ஆசிரமம் தென்பட்டது மிகவும் பழமையாகவும் யாரும் இல்லாததைப்போலவும் தென்பட்ட ஆசிரமம் ஓர் காலத்தில் சிறப்பானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. ஆசிரமத்தின் அருகில் ஓரு கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை ராமர் கண்டார். குருவே இது மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது இது யாருடைய ஆசிரமம் இது. இந்த ஆசிரமத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் தாங்கள் கூறுங்கள் என்று கேட்டார்.