விஸ்வாமித்ரர் வேள்வியை ஆரம்பித்தார். இதனைக் கண்டு அச்சமடைந்த இந்திரன் விஸ்வாமித்திரர் முன்பாக வந்து நின்றான். அவனைக் கண்டு கொள்ளாமல் விஸ்வாமித்ரர் தன் வேள்வியை செய்து கொண்டு இருந்தார். விஸ்வாமித்ரரே தங்களின் புதிய சொர்க்கம் உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். புதிய சொர்க்கத்தால் பல்வேறு குழப்பங்கள் உருவாகும் என்றான். அதற்கு விஸ்வாமித்ரர் திரிசங்கு மானுட உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்புகின்றான். நானில்லாத வேளையில் என் குடும்பத்துக்கு உணவளித்து காப்பாற்றிய அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை ஆகவே நீ அவனை சொர்க்கத்தில் அனுமதி இல்லையென்றால் புதிய சொர்க்கத்தை உருவாக்குவேன் என்று விஸ்வாமித்திரர் தனது தவ வலிமையை பயன்படுத்தி திரிசங்குவிற்காக என்றே புது சொர்க்கத்தை படைத்துவிட்டார். திரிசங்கு தான் செய்த தவறினால் வசிஷ்ட மகரிஷியால் சாபம் பெற்றவன். அவனுடைய பாவங்கள் தீராமல் அவன் சொர்க்கம் வர முடியாது என்றும் புதிய சொர்க்கம் வேண்டாம் என்றும் இந்திரன் கேட்டுக்கொண்டார்.
விஸ்வாமித்திரர் இந்திரனிடம் திருசங்குவிடம் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். அதன்படி புதிய சொர்க்கத்தையும் படைத்துவிட்டேன். சொர்க்கத்திற்கான அனைத்து அம்சங்களும் அங்கு இருந்தாலும் இப்போது தலைகீழாக தொங்கும் திரிசங்கு அங்கும் தலைகீழாகவே இருந்து தனித்தே வாழ்வான். தலைகீழாக தனித்து இருப்பவனால் சொர்க்கமாக இருந்தாலும் பலகாலம் தொடர்ந்து வாழ முடியாது. அதனால் சில நாட்களில் திரிசங்குவிற்கு பூலோக ஆசைகள் தோன்றும். அப்போது அவன் மீண்டும் பூமியில் பிறந்துவிடுவான். அப்போது இந்த சொர்க்கம் மறைந்துவிடும் என்று இந்திரனை சமரசம் செய்தார் விஸ்வாமித்ரர். பிரம்மரிஷி பட்டம் பெற்றாலும் முதல் முறையாக மேனகையிடம் தனது தவ வலிமையை இழந்த விஸ்வாமித்ரர் இரண்டாவது முறை தவம் செய்து பெற்ற தவவலிமையை இப்போது தனது அதிகார ஆணவத்தினால் புதிய சொர்க்கத்தை உருவாக்கியதில் தவ வலிமைகள் அனைத்தையும் இழந்து விட்டார். வசிஷ்டர் தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று மீண்டும் தவம் செய்து தவவலிமை பெற்றார்.
வசிஷ்டர் தன்னை பிரம்பரிஷி என்று ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கின்ற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார் விஸ்வாமித்ரர். வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து தன் கணவர் வசிஷ்டரிடம் விஸ்வாமித்திரரை பிரம்மரிஷி என்று கூறி விடும்படி ஆலோசனை வழங்கினாள். வசிஷ்ட மகரிஷி அருந்ததியிடம் நான் விஸ்வாமித்திரரின் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் பயந்துவிடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே அவரை பிரம்மரிஷி என்று மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார். வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் சத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர் விஸ்வாமித்திரரை ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். விஸ்வாமித்திரரின் வாழ்க்கை முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர் தான் இயற்றினார். இப்போது அவர் முழுமையடைந்த பிரம்மரிஷியாக உலக நன்மைக்காக வேள்விகள் செய்து கொண்டு தற்போது இங்கே இருக்கிறார் என்று விஸ்வாமித்ரரின் வாழ்க்கை வரலாற்றை ராமரிடம் சொல்லி முடித்தார் சதாநந்தர்.