சீதை வரலாறு
பத்மாட்சன் என்ற அரசன் பரதகண்டத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மகப்பேறு வேண்டி தவம் புரிந்தான். பத்மாட்சன் தவத்தின் பலனாக திருமால் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பூவுலகத்தில் எனக்கு திருமகள் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான். திருமால் ஒரு மாதுளம் கனியை பத்மாட்சனுக்கு கொடுத்து விட்டு மறைந்தார். அவன் மாதுளம் கனியை அரண்மனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பழம் பெரிதாக ஆரம்பித்தது. உடனே பழத்தை பிளந்தான் பத்மாட்சன். அதில் ஒரு பாதி வளம் நிறைந்த மாதுளம் முத்துக்களும் மற்றொரு பாதியில் குழந்தை இருப்பதை கண்டு பத்மாட்சன் மகிழ்ந்தான். பத்மாட்சன் அப்பெண்ணுக்கு பதுமை என்று பெயர் சூட்டினான். பதுமை என்றால் சிலை என்று பொருள். சில வருடங்கள் கழிந்தது. பதுமைக்கு திருமண வயது எட்டியது. பத்மாட்சன் தன் மகளுக்கு சுயம்வரம் வைத்தான். சுயம்வரத்துக்கு 56 சிற்றரசர்ககள் வந்தார்கள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் இருந்த மன்னர்களைப் பார்த்து வேந்தர்களே விண்ணில் உள்ள நீலநிறத்தை யார் தன் உடம்பில் பூசிக்கொள்கிறானோ அவர்தான் என் மகளுக்கு மாலை போட வேண்டும் இது என் மகளின் விருப்பமாகும் என்றான். இது முடியாத காரியம் என்பதால் தங்களுக்குள் வில் வாள் போட்டி அல்லது அறிவு திறன் தொடர்பான போட்டிகள் வைக்கும்படி கூறினார்கள். பத்மாட்சன் மறுக்கவே அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்மாட்சன் மீது போர் தொடுத்து அரண்மனைக்கு நெருப்பு வைத்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள அங்கு உள்ள நெருப்பில் விழுந்து தன்னை மறைத்துக்கொண்டாள். போரில் அனைவரையும் பத்மாட்சன் வெற்றி பெற்றான்.
சில நாட்கள் கழித்து நெருப்பில் இருந்து பதுமை வெளியே வந்தாள். தான் வளர்ந்த அரண்மனை தன்னால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு கலங்கினாள். தன்னால் உண்டான அழிவிற்கு பரிகாரம் வேண்டி திருமாலை வேண்டி தவமிருந்தாள். அப்போது அங்கு வானவீதியிலே சென்று கொண்டிருந்த ராவணன் பதுமையை பார்த்து காதல் கொண்டான். பதுமையை தனக்கு திருமணம் செய்து தருமாறு பத்மாட்சனிடம் கேட்டான். வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான். இதனால் கோபமுற்ற ராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். ராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் தன்னை மீண்டும் நெருப்புக்குள் மறைந்துக்கொண்டாள். இதனால் கோவம் கொண்ட ராவணன் தீயை அணைத்து அதற்கடியில் தோண்டிப் பார்த்தான்.
அங்கு ஒரு பெரிய மாணிக்க கல்லை கண்டு எடுத்தான். அதனை மண்டோதரிக்கு தரலாம் என்று பெட்டியில் வைத்துக் கொண்டான். மண்டோதரி உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி பெட்டியை திறந்தான். அப்பெட்டியில் பசுமை குழந்தை வடிவில் இருந்தாள். அப்போது பேசிய குழந்தை ராவணனே என் தந்தையை கொன்ற உன்னை அழிக்காமல் விடமாட்டேன். அதற்கானகாலம் விரைவில் வரும் காத்திரு என்றது.
இதனை கண்ட ராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி பல வகையான வடிவம் எடுக்கிறாள் என்று கூறி அவளை கொன்றுவிட ராவணன் வாளை ஓங்கினான். மண்டோதரி கணவனின் கரத்தைப் பற்றி தடுத்தாள். இந்த குழந்தையை வெட்ட வேண்டாம். பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாகயும் மாறி தங்களை கொன்றுவிடுவாள். இக்குழந்தையை பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலையில் விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் வைத்துவிட்டான்.