ராமாயணம் பால காண்டம் பகுதி -5

ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் எல்லாவிதமான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான்கு குழந்தைகளும் கல்வியுடன் யானை குதிரை தேர் பயிற்சிகளுடன் வில் பயிற்சியும் வசிஷ்டரிடம் பயின்றார்கள். ராமனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் பிரியாமல் காடு மலை நதி என எங்கு சென்றாலும் சேர்ந்தே இருந்தார்கள். அதுபோலவே பரதனும் சத்ருக்கனனும் சேர்ந்தே இருந்தார்கள். இக்காரணத்தால் மக்கள் அனைவரும் ராம லட்சுமணன் என்றும் பரதன் சத்ருக்கனன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். நால்வரும் கௌசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் பாகுபாடு பார்க்காமல் தங்கள் தாய்போல இஷ்ட தெய்வம் போல் வணங்கி வந்தார்கள். ராமர் தம்பிகள் மூவரிடமும் தந்தைக்கு நிகராக நடந்து கொண்டார். தம்பிகள் மூவரும் ராமனை தந்தைக்கு நிகராகயாகவே கருதி மரியாதை செய்தார்கள். ராமருக்கு 12 வயது முற்றுப்பெற்றது.

ஒருநாள் அரசவையில் தசரதர் இருக்கும் போது விசுவாமித்ர மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தசரதர் அவருக்கு ஏற்ற சிம்மாசனத்தில் அமர வைத்து மரியாதை செய்து வணங்கினார். ராஜ்யத்தில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் ஆணையிடுங்கள் அதனை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கூறினார். அதற்கு விஸ்வாமித்ரர் உலக நன்மைக்காக உத்தமயாகம் ஒன்று செய்யப்போகின்றேன். யாகத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு பாழ்படுத்த மாரீசன் சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தவவலிமையால் அவர்களை என்னால் சுலபமாக அழிக்க முடியும் ஆனால் மேலான லட்சியம் ஒன்றின் காரணமாக என் தவவலிமையால் அவர்களை அழித்து தவவலிமையை இழக்க விரும்பவில்லை. யாகம் செய்யும் போது காவல் காக்க போர் வீரன் ஓருவன் தேவைப்படுகிறான். சாமான்ய வீரனால் காவல் காக்க முடியாது. யாகம் முடியும் வரை 10 நாட்கள் உன்னுடைய புதல்வர்களில் ராமனை அனுப்பிவைப்பாயாக ராமனுக்கு ஒன்றும் நேராதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதனை கேட்ட தசரதர் நிலைகுழைந்து போனார். சிறிது நேரம் அமைதியான அவர் தடுமாற்றத்துடன் விஸ்வாமித்ரருக்கு பதில் கூறினார்.

ராமர் மிகவும் சிறியவன். ராமனுக்கு போர் செய்த அனுபவம் ஒன்றும் இல்லை. பாலகனான அவன் அரக்கர்களை எவ்வாறு எதிர்க்க இயலும். ஆகவே நானே தங்களுடன் வந்து யாகம் முடியும் வரை காவல் காத்து அரக்கர்களை அழிக்கின்றேன் என்றார். இதனை கேட்ட வசிஷ்டர் இந்திரனுக்கு நீ உதவி செய்வதற்காக அசுரர்களை அழித்து அவர்களை வெற்றி கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த அரக்கர்களை அழிக்க உன்னால் இயலாது தசரதா. இது ராமானால் மட்டுமே முடியும். உன்னுடைய புதல்வர்களுக்கு வரும் பெருமைகளையும் சிறப்புகளையும் தடுத்துவிடாதே. விஸ்வாமித்ரருடன் உன் புதல்வர்களை அனுப்புவை அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.