தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 276 கிளியனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 276 வது தேவாரத்தலம் கிளியனூர். புராணபெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர். மூலவர் அகஸ்தீஸ்வரர், அக்ஞீசரம் உடையவர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கன்வ தீர்த்தம். தலமரம் வன்னிமரம். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275 வது தலமாகவும், கிளியனூர் அகஸ்தீஸ்வரர் 276 வது தலமாகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர். கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர் என்று பாடியுள்ளார். மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டில் இவ்வூர் கிளிஞனூர் எனவும் இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திருஅக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தியும் விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் கொடுக்கப்பட்டது தெரிய வருகிறது. இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறியலாம். திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 275 திருவிடைவாசல்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 275 வது தேவாரத்தலம் திருவிடைவாசல். புராணபெயர் திருவிடைவாய். மூலவர் புண்ணியகோடியப்பர், இடைவாய் நாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுகிறது. உற்சவர் திருவிடைவாயப்பர். அம்பாள் அபிராமி, உமை. தீர்த்தம் புண்ணியகோடி தீர்த்தம். தலமரம் கஸ்தூரி அரளி. தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275 வது தலமானது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.

கிழக்கு பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர். இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. அத்துடன் சிவனின் வாகனமாகவும் கொடியாகவும் விடை உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும் இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் திருஞானசம்பந்தர் தனது பாடலில் விடைவாயே என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

திருமந்திரம்

திருமந்திரம் வரலாறு
திருமந்திரம் பாடல்கள் விளக்கத்துடன்
திருமந்திரம் பாடல்கள் இசை வடிவில்
திருமூலர் வரலாறு
திருமூலர் வழிபாட்டு பாடல் வீடியோவுடன் kvnthirumoolar.com இந்த பக்கத்தின் வலைதளத்தில் பார்க்கலாம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 274 திருக்கயிலாயம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 274 வது தேவாரத்தலம் திருக்கயிலாயம் என்னும் திருநொடித்தான்மலை. மூலவர் பரமசிவன், கைலாயநாதர், இறைவனின் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார். அம்பாள் பார்வதிதேவி. இறைவி எல்லாத் திருநாமங்களும் உடையவளாக வீற்றிருக்கிறார். தீர்த்தம் மானசரோவரம் ஏரி, சிந்து முதலிய நதிகள். பிரம்மா தன் மனதிலிருந்து இந்த ஏரியை உருவாக்கியதால் மானசரோவர் என்ற பெயர் ஏற்பட்டது. சரோவர் என்றால் குளம் என்று பொருள். இந்த நதி பார்வதியின் அம்சமாக உள்ளது. இங்கிருந்தபடி தேவி சிவனை எப்போதும் பூஜிக்கின்றாள். இங்கு தான் கங்கை, சட்லெஜ், கர்னாலி, பிரம்மபுத்திரா, சிந்து ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. நீலநிறக் கடல் போல காட்சியளிக்கும் மானசரோவர் நதி. சக்தி பீடங்களில் அம்பிகையின் வலது முன்கை விழுந்த இடம். அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்து அருளும் தலம் ஆகையால் நொடித்தான்மலை (நொடித்தல் – அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.

புராணங்களில் இம்மலை வெள்ளிமலை என்று அழைக்கப்படுகிறது. இதன் தென்முகம் நீலக்கல் போலவும் கிழக்கு முகம் ஸ்படிகம் போல வெண்மையாகவும் மேற்கு முகம் சிவப்புக் கல் போலவும் வடக்குமுகம் தங்கம் போல பொன்நிறமாகவும் உள்ளது. கைலாய மலையின் வடக்குமுகம் வாம தேவமுக தரிசனம் என்றும், ஜடா முடியுடன் சிவ பெருமானின் முக்கண் உருவ தோற்றத்துடன் தெற்கு முகம் அகோர முக தரிசனம் என்றும், மேற்கு முகம் சத்யோஜாத முக தரிசனம் என்றும், கிழக்கு முக தரிசனம் தத்புருஷ முக தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் புனித தன்மையை ரிக்வேதம், ராமாயணம், உபநிஷதம், சிவபுராணம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. கயிலாய மலையைச் சுற்றி வருவதற்கு பரிக்ரமா என்று பெயர். இதன் சுற்றளவு 52 கி.மீ. ஆகும். மனிதர்களால் கட்டப்பட்ட கோயில் எதுவும் கயிலாயத்தில் இல்லை. கயிலாய மலை இயற்கையாக அமைந்த கோயில். இங்கு நூற்றுக்கணக்கான சிறு மலைகள் கோபுரம் போல உள்ளன. இவை 500 முதல் 1000 அடி உயரம் கொண்டவை. செங்குத்தாக அமைந்திருக்கும் இம்மலைகள் மீது ஏற முடியாது. சதுரம், வட்டம், முக்கோண வடிவில் உள்ளன. சிவன் நித்யவாசம் புரியும் கொலு மண்டபமான கயிலாயத்தில் சிவகணங்கள், தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், தேவதைகள் வீற்றிருப்பார்கள். எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றது.

இந்து மதம், புத்த மதம், சமண மதம், பொம்பா மதம் ஆகிய நான்கு மதத்தினருக்குப் புனிதத் தலமாக கைலாயமலை உள்ளது. இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது. இந்த மலை தொடர்களில் உற்பத்தியாகும் ராட்சதலம் ஏரியில் ராவணன் தவம் இருந்து வரம் பெற்றதாக ராவண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இம்மலையை இராவணன் பெயர்க்க முயன்ற போது இறைவன் தன் கால் விரலால் அழுத்த மலையின் கீழ் இராவணன் அகப்பட்டுத் தன் தவறை உணர்ந்து இறைவனை வழிபட்டு வரங்களும் மந்திர வாளும் பெற்ற தலம். இராவணன் திருக்கயிலை மலையை கட்டி இழுத்த அக்ஷ்ய வட கயிற்றின் தழும்பு இப்போதும் உள்ளது. இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும். 29 மைல் சுற்றளவு உடைய இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன. திருக்கயிலாயம் பனிமலையின் வடபக்கத்தில் மேற்கு திபெத் என்னும் நாட்டில் உள்ளது. பனிமலை முகட்டில் கடல்மட்டத்துக்கு மேல் 22980 அடி உயரத்தில் தென்திசை நோக்கித் திருக்கயிலை அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து கைலாஷ் 305 கி.மீ தூரமும் அல்மோராவிலிருநுது 405 கி.மீ தூரமும் ஆகும்.

காரைக்கால் அம்மையார் இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தை தனது காலால் மிதிக்க கூடாது என்று கைகளால் நடந்து திருக்கைலாயம் அடைந்தார். இவர் வருவதை அறிந்த இறைவன் அம்மையே வருக என்றழைத்து வேண்டும் வரம் கேள் என கூறினார். அதற்கு அம்மையார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறந்தால் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும் என மகிழ்ந்து பாடினார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தனது திருத்தாண்டவத்தை காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

உழவாரத் தொண்டு செய்த அப்பருக்கு தன்னுடைய இறுதிக் காலத்தில் திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் காண ஆவல் வந்தததும் வடநாட்டுக்கு கிளம்பினார். சென்னையில் திருமயிலை, திருவான்மியூர், திருக்காளத்தி, திருப்பருப்பதம் எல்லாம் கடந்து வடக்கே காசி வரை வந்து விட்டார். கூட வந்தவர்களால் முடியவில்லை. அப்பரின் மனமோ ஒடியவில்லை. அனைவருக்கும் விடைகொடுத்து விட்டு தான் மட்டும் தனியாகக் கயிலை யாத்திரைக்கு நடக்கத் தொடங்கி விட்டார். கால்களால் நடக்க முடியவில்லை. கைகளால் தவழ்ந்தார். அதுவும் முடியவில்லை உடலால் ஊர்ந்தார். அதுவும் முடியவில்லை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கயிலை நாதன் முனிவனாய் அப்பரிடம் வந்தார். மானிடர்கள் உடலோடு திருக்கயிலாயம் சென்று ஈசனைக் காண்பது மிகவும் அரிது அப்பரே. உங்கள் தொண்டே போதும் யாத்திரையைக் கைவிட்டு விடுங்கள். கயிலை அடிவாரத்தில் வாழும் முனிவன் நான் எனக்கே ஈசன் தரிசனம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்றார். அப்பர் என்ற அடியேனின் பெயர் என் அப்பனை தவிர உமக்கு எப்படித் தெரியும் என்று அப்பர் கேட்டார். சிக்கிக் கொண்டார் சிவபெருமான். அப்பரே நான் திரிகால ஞானி ஈசனே எம்மை உம்மிடம் அனுப்பி வைத்தார். இதோ சூலரிஷப முத்திரை இப்போதாவது நான் சொல்வதைக் கேளுங்கள் இதோ இந்தத் தூய ஏரியில் மூழ்குங்கள். பஞ்ச நதி க்ஷேத்திரம் என்னும் திருவையாற்றில் எழுவீர்கள். அது தட்சிண கைலாசம் ஆகும். அங்கு இறைவனை காண்பீர்கள் என்று கூறி மறைந்தார். அப்பர் மானசரோவரத்தில் மூழ்கினார். உடற் புண்கள் எல்லாம் மறைந்தன. உடல் சிவ மங்களமாய் மின்னியது வட மலையில் மூழ்கியவர் திருவையாற்றில் எழுந்தார். மும்மூர்த்திகளும் சூழ்ந்திருக்க தேவரும், மூவரும், ஏவரும் துதிக்க, நடன மாதர் நடங்கள் புரிய, கங்கை முதலான ஆறுகள் வணங்க, நந்தி தேவர் நிற்க மின்னிடும் வெள்ளிப் பனி மலையாய் அம்மையும் அப்பனும் அப்பருக்குத் திருக்கைலாய காட்சி அளித்தனர். அப்பர் பெருமான் கயிலாயத்தையும் அங்கு இறைவன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் கண்டு பாடல்கள் பாடினார்.

அப்பர் பெருமானின் அந்த பாடல்கள் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் என்று அழைக்கப்படுகிறது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார். இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது இறைவனை நினைந்து பதிகம் பாடியவாறே சென்றார். இப்பதிகம் வருண பகவானால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது. சேரமான் பெருமாள் நாயனார் திருக்கையாயத்தை பாடல்கள் பாடியுள்ளார் அந்த பாடல்கள் திருக்கயிலாய ஞானஉலா என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், காரைக்கால் அம்மையார் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 273 கேதார்நாத்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 273 வது தேவாரத்தலம் கேதார்நாத். மூலவர் கேதாரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கேதாரகவுரி. தீர்த்தம் உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம். இமயமலை அருகே மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோயில். இத்தலம் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. அம்பாள் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். இத்தலத்தில் சிவலிங்கம் ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறையாக சுயம்புவாகத் தோன்றியது. கேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத + ஹர + ஈஸ்வரர் என்றால் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள். கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள் நரநாராயண சிகரங்கள் பின்புறம் எழிலாக விளங்க இமய மலைப்பகுதியில் ஓங்கி உயர்ந்த ஒரு விமானத்துடன் கற்றளியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் வடகோடி இமயமலையில் நந்ததேவி சிகரத்தில் சுமார் 3583 மீட்டர் (11750 அடி) உயரத்தில் உள்ளது. பரிவார மூர்த்திகள் பைரவர், பிள்ளையார், நந்தி, பாண்டவர்கள், கண்ணன், ஆதிசங்கரர், மாருதி, ஈசாணிஸ்வரர், விஷ்ணு, கார்த்திகேயன், அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர்.

ஆதிசங்கரர் பிரசிஷ்டை செய்த ஸ்ரீ சக்கிரத்தில் திருக்கேதார ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன் கணேசர் மற்றும் ஸ்ரீசக்ர வடிவில் கௌரியன்னை ஆகிய மூவரும் ஒன்றாக காட்சி தருகின்றனர். இந்த ஸ்ரீ சக்கரத்தின் மேல் தலை வைத்து வணங்கலாம். இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது பொது ஜன தரிசனத்திற்காக திறப்பார்கள். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கோயில் திறந்திருக்கும். அதன் பின்னரே தீபாவளியை ஒட்டி கோயில் நடை அடைக்கப்படுகின்றது. பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். கேதார்நாத் திருக்கோயில் தீபாவளியை ஒட்டி கோயில் மூடப்படும் முன்னர் கோயிலுக்குள் மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படும். பின்னர் நடை மூடப்படும். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் பனிக்கட்டிகளை அகற்றி கோயிலை திறக்கும் பொழுது கோயிலில் உள்ள விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். இக்கோயில் இறைவனை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மனிதர்களும் பனி மூடியிருக்கும் காலத்தில் தேவர்கள் வழிபடுகின்றார்கள். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும் பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும் ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.

சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக்கொள்ளலாம். யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்கின்றனர். ஸ்ரீஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டில் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறியச் செய்தார். ஆதிசங்கரர் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக இறைவனடி அடைந்தார். தற்போது உள்ள கோவில் 8 ம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன. விஜய கொடியுடன் ஆதிசங்கரரின் தண்டம் இங்கு உள்ளது. ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார். இங்கு மலபாரை சார்ந்த லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். ஆதிசங்கரர் ஸ்தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது.

பண்டைய காலத்தில் நரநாரயணர்கள் இருவர் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர். அவர்கள் மீது பொறாமை கொண்ட மாற்று நாட்டரசன் படையெடுத்து வந்த போது அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான். அவர்கள் தங்கள் தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து தேவ கன்னிக்கு நல்லுரை கூறி சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர். கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர். பைரவர் காவல் தெய்வம் என்பதால் இங்கு அவருக்கு சன்னதி கிடையாது. வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலை பைரவர் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்கள். இக்கோவிலில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் பைரவர் கோவில் உள்ளது.

திருக்கேதாரத்தை சுற்றிலும் எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. இங்கு உள்ள ரேதஸ் குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன் என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும் இங்கிருந்து தான் இறைவன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் புராணவரலாறு உள்ளது. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார். துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள். எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது. இத்தலம் கேதாரீஸ்வரரின் தலத்திற்கு எதிரே உள்ளது.

இங்கு பாண்டவர்கள் பிறந்து வளர்ந்து சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் வரலாறு உள்ளது. இத்தலத்தில் அர்ஜூனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றான். இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. வைணவர்களான பாண்டவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டுள்ளனர். மகாபாரத போரில் பல்வேறு வீரர்களைக்கொன்று குவித்து வெற்றி பெற்ற பாண்டவர்கள் பாப விமோசனம் பெறுவதற்காக சிவபெருமானை வேண்டி வாரணாசி செல்கின்றனர். பின்னர் இமயமலையை நோக்கி வருகின்றனர். அப்போது இமயமலை காடுகளில் சிவபெருமானை தேடி பாண்டவர்கள் அலைகின்றனர். பின்னர் இளைப்பாறும் போது சிவபெருமான் அசரீரி வாயிலாக தான் மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ காட்சிதர முடியாது என்றும் முடிந்தால் தன்னை கண்டுபிடிங்கள் என்றும் சிவபெருமான் கூறி மறைந்தார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பின்னர் மிக உயரமான கேதார் சிகரத்தின் காடுகளில் திரிந்தபோது காட்டில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது.

பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பின்னர் அசரீரி மூலம் பஞ்ச பாண்டவர்கள் மோட்சம் பெற நேபாளில் உள்ள பசுபதி நாத்தில் பஞ்சமுகங்களுடன் காட்சியளிப்பதாகவும் கூறி மறைந்தார். பின்னர் பாண்டவர்கள் பசுபதிநாத்தில் சிவபெருமானை தரிசித்த பின்னர் கேதார்நாத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு கோயிலாக கட்டி உலகிற்கு அர்ப்பணித்தனர். தற்போதுள்ள கேதார்நாத் கோயில் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது. பின்னர் திரௌபதியுடன் பாண்டவர்கள் கேதார் தரிசனத்திற்கு பின்னர் இமயமலை வழியாக சொர்க்கம் நோக்கி சென்றனர் என்று வரலாறு கூறுகின்றது. பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மஹாபாரதப் போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் புராண வரலாறு உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால் பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி சிவபெருமானுக்கும் தனக்கும் இடைவெளி இருந்தால் தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால் பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்று விட்டார். இதனால் வருத்தம் கொண்ட உமையவள் கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று அம்பிகை கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத் தலத்தில் அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு கேதாரீஸ்வரர் விரதம் என்று பெயர்.

21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்களின் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன. கேதாரிஸ்வரரைப்பற்றி பாடிய தேவாரப் பாடல்கள் அனைத்தும் கேதார்நாத் கோயிலில் நம்மூர் கல்வெட்டுகளைப் போலவே தமிழில் கல்வெட்டுகளாக செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 272 திருஅநேகதங்காவதம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 272 வது தேவாரத்தலம் திருஅநேகதங்காவதம் என்னும் கௌரிகுண்டம். மூலவர் அநேகதங்காவதநாதர். இங்கு இறைவன் சுயம்பு மலையாக அருளுகிறார் அம்பாள் மனோன்மணி. தீர்த்தம் கௌரிதீர்த்தம். கௌரி என்னும் பெயரில் அம்பாள் இங்கு தவம் செய்துள்ளார். இங்கு கோயில் இல்லை. இமயமலையின் ஒரு பகுதியே வணங்கப்படுகிறது. திருக்கேதாரத்துக்கு செல்லும் வழியில் அலகந்தா பிண்டாரியுடன் விஷ்ணு கங்கை மந்தாகினியுடன் கூடும் இடம் இவ்விடம் ஆகும். ரிஷிகேசத்தில் இருந்து 84 கி.மீ. தூரம். பனி படர்ந்த பெரும் மலைப் பிரதேசம் ஆகும். திருஅநேகதங்காவதம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளது. அம்பாள், சந்திரன், சூரியன் வழிபட்டுள்ளனர். கௌரி என்னும் பெயரில் அம்பாள் இங்கு ஒற்றைக்காலில் தவம் செய்யும் சிற்பம் உள்ளது. காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே திருஞானசம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடியுள்ளார்.