பரா முதல் குழந்தை வரை

பரா முதல் குழந்தை வரை

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரா எனும் அசையா சக்தியிலிருந்து
பரை எனும் அசையும் சக்தி தோன்றி
அந்த பராபரையிலிருந்து சிவம் தோன்றி
சிவத்தில் சக்தி தோன்றி
சக்தியில் நாதம் (ஒலி) தோன்றி
நாதத்தில் விந்து (ஒளி) தோன்றி
விந்துவில் சதாசிவம் தோன்றி
சதாசிவத்தில் மகேஸ்வரன் தோன்றி
மகேஸ்வரனில் ருத்திரன் தோன்றி
ருத்திரனில் விஷ்ணு தோன்றி
விஷ்ணுவில் பிரம்மா தோன்றி
பிரம்மாவில் ஆகாயம் தோன்றி
ஆகாயத்தில் வாயு தோன்றி
வாயுவில் அக்னி தோன்றி
அக்னியில் நீர் தோன்றி
நீரில் நிலம் தோன்றி
நிலத்தில் அன்னம் தோன்றி
அன்னத்தில் உயிர்சக்தி தோன்றி
உயிர்சக்தியில் உதிரம் தோன்றி
உதிரத்தில் மாமிசம் தோன்றி
மாமிசத்தில் மேதை (அறிவு) தோன்றி
மேதையில் அஸ்தி (எலும்பு) தோன்றி
அஸ்தியில் மச்சை (எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை) தோன்றி
மச்சையில் சுக்கிலம் தோன்றி
சுக்கிலத்தில் சுரோணிதம் தோன்றியது.
சுக்கிலமானது சுரோணிதத்துடன் கலந்து ஜலமயமாகிப் பின்
ஏழாம் தினத்தில் குமிழியாகி
முப்பதாம் நாள் உதிரம் திரண்டு பிண்டமாகி
அறுபதாம் நாள் அப்பிண்டத்திற்கு சிரசு உண்டாகி
தொண்ணூறாம் நாள் பிண்டம் திரண்டு மூட்டு கை கால்கள் உண்டாகி
நூற்று இருபதாம் நாள் தண்டமாய் நரம்பு நாடி உண்டாகி
நூற்றி ஐம்பதாம் நாள் ஒன்பது துவாரங்களும் உண்டாகி
இருநூற்றுப் பத்தாம் நாள் பிராணன் உண்டாகிக் கருவை சூழ்ந்து புரளும்
இருநூற்று நாற்பதாம் நாள் மற்ற அவயங்கள் உண்டாகி
தாயுண்ட அன்ன சாரத்தை தொப்புள் வழியாக உண்டு பிள்ளையினுடைய உடல் வளர்ந்து தாயுடன் தோன்றி உயிருடன் ஆடும்.
இருநூற்றி எழுபதாம் நாள் தலை முதல் கால் வரை ரோமத் துவாரம் உண்டாகி அறிவுக் கண் திறந்து
முன்னூறாவது நாள் மலை மேலிருந்து தலைகீழாய் விழுவது போல் நிறைந்த பிண்டமாய் அபானனின் பலத்தினாலே பூமியில் பிறக்கும் குழந்தை.

சுலோகம் -14

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #14

இதற்குப் பிறகு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட உயர்ந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் தெய்வீகமான சங்குகளை முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட அர்ஜூனனின் தேர் ஏன் உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது?

சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடம் இருந்த 100 திவ்வியமான வெள்ளை குதிரைகளில் இருந்து நான்கு குதிரைகளை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த குதிரைகள் பூமியிலும் வானகத்திலும் சொர்க்க லோகத்திலும் செல்லக்கூடியவை. அர்ஜூனன் காண்டவ வனத்தை எரித்த போது அதில் திருப்தி அடைந்த அக்னி தேவன் இந்த ரதத்தை அர்ஜூனனுக்கு கொடுத்திருந்தான். இந்த தேரின் கொடியில் யுத்தம் முடியும் வரை அனுமனை அமர்ந்திருக்குமாறு கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேரின் கொடியில் அனுமனும் அமர்ந்திருந்தார். கந்தர்வன் கொடுத்த தேவலோகத்து குதிரைகளுடன் அக்னி தேவன் கொடுத்த தேவலோகத்து தேரின் கொடியில் அனுமன் அமர்ந்திருக்கிறார். அந்தத் தேரில் கிருஷ்ணர் சாரதியாக அமர்ந்திருப்பதால் உயர்ந்த தேர் என்று சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்குகளை ஏன் முழங்கினார்கள்?

பாண்டவர்களும் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணரும் அர்ஜூனனும் சங்கை முழங்கினார்கள். கிருஷ்ணரும் அர்ஜூனனும் ஊதிய சங்கு ஏன் தெய்வீகமானது என்று சொல்லப்படுவதற்கான காரணத்தை அடுத்த சுலோகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: முன்பு ஒரு நாளில் அக்னி தேவன் அர்ஜூனனுக்கு கொடுத்த தேரைப் பற்றி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான் துரியோதனன். அதற்கு பதில் அளித்த சஞ்சயன் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தத் தேர் மிகவும் விசாலமானது. தேரில் இருக்கும் கொடி மின்னல் போல் மின்னும். ஆகாயத்தில் வர்ண ஜாலங்கள் மிளிர்வது போல் அந்தக் கொடி மிளிரும். ஒரு யோசனை தூரத்திற்கு இருக்கும். இத்தனை தூரத்தில் இருந்தாலும் எவ்வளவு உயரமான மரங்களாக இருந்தாலும் இந்தக் கொடியை தொட முடியாத உயரத்தில் இருக்கும். இத்தனை பெரிய கொடியாக இருந்தாலும் இந்தக் கொடி பளு இல்லாமல் தங்கு தடை இல்லாமல் பறக்கும் என்று கூறினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 41

கேள்வி: பசு பதி பாசம் பற்றி?

பசுவாகிய இந்த ஆன்மாக்கள் பதியாகிய இறைவனை விட்டு விட்டு பாசம் எனும் உலகியல் சுகத்தினுள்ளே மூழ்கி விடுகிறது. இந்த இரண்டிற்கும் பொதுவாக இருப்பவர் பதி இறைவன். பொதுவான இறையை நாடாமல் அந்த இறையின் படைப்பான அந்த படைப்புகளிலே இந்த பசு நாட்டம் கொள்வதால்தான் இத்தனை துன்பங்களும் அனாச்சாரங்களும் ஆன்மாவிற்கு ஏற்படுகிறது. இந்த ஆன்மாவின் கண்ணை மறைப்பது எது? மாயை. மாயை வைத்து கொண்டிருப்பது விதி. விதியை யார் இயக்குவது இறைவன். இறை எந்த அடிப்படையில் இயக்குகிறது? அந்த ஆன்மாவின் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அப்பொழுது அந்த ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பாவத்தை குறைத்து புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும். இப்படி வாழ்ந்தால் அது பதியை தாண்டி பாசத்திற்கு போகாமல் பாசம் என்றாலே வழுக்கும் என்று புரிந்து கொண்டு பதியுடன் மட்டுமே அது இருக்கும்.

கேள்வி: இறைவனுக்கு என்று பிரியமான விஷயம் ஏதேனும் உண்டா?

வில்வத்தால் எமக்கு ஆராதனை செய்வது எமக்கு பிரியம் என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். வில்வத்தை ஏற்றுக் கொள் என்றால் மனிதன் உண்ண மாட்டான். ஆனால் அதையே பிரசாதம் என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல அன்போடு எதைக் கொடுத்தாலும் அதை இறை ஏற்றுக் கொள்ளும். எனவே பக்தி அன்போடு செய்யப்படும் செயலை அல்ல அந்த செயலுக்குள் ஔிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று வேறு மார்க்கத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நெய் தீபத்திற்கு பதிலாக வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலர் மலர்களைப் போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமல்ல தன் உள்ளத்தைத் தவிர.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 40

கேள்வி: அய்யனே பெரும்பாலும் கோவில்கள் என்றால் ஒரு மகானோ ஒரு சித்தரோ அங்கு இருப்பார்கள் அவர்களால் தான் அந்த கோவிலுக்கு சக்தி இருக்கிறது என்று கூறுகிறார்களே அது உண்மைதானா?

பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமையா அல்லது பெற்றோர்களால் பிள்ளைக்கு பெருமையா? எனவே சித்தர்களால் ஒரு ஆலயம் வளம் பெருகிறது என்பது சித்தர்களின் தொண்டை வைத்து கூறலாமே தவிர பிரதானம் சித்தர்கள் மகான்கள் நாங்கள் தான் என்று கூறவில்லை. இறைவனின் அருளும் இறைவனின் கருத்தும் இறைவனின் கடாட்சம் தான் எப்பொழுதுமே முக்கியமே தவிர எம் போன்ற மகான்கள் இறைவனின் அருளை உயர்த்துகிறார்கள் என்று கூறுவதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்கவில்லை. ஏனென்றால் நான் பிறந்து பத்து ஆண்டுகள் கழித்து தான் என் தாய் பிறந்தாள் என்று கூறினால் எப்படி நகைப்புக்கு (சிரிப்புக்கு) உள்ளாகுமோ அதைப் போல்தான் சித்தர்களாலும் ஞானிகளாலும் தான் ஒரு ஆலயம் உயர்வு பெறுகிறது என்று கூறுகின்ற கூற்றை நாங்கள் ஏற்போம். அந்த கருத்தை ஏற்றால் இந்த கருத்தையும் ஏற்கலாம்.

கேள்வி: ஒருவருக்கு தர்மசிந்தனை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பெற்றவர்களுக்கு தர்ம சிந்தனை இல்லை. அந்த மகன் தன்னைப் பெற்றவர்களை மீறி தர்மத்தை செய்கின்றான். இதனால் அவன் தன் பெற்றோர்களை மதிக்கவில்லை. அவர்கள் மனதை காயப்படுத்துகிறான். இந்த செயலில் மகனின் தர்மத்திற்கு கனம் (பலன்) அதிகமா? அல்லது பெற்றவர்களை காயப்படுத்திய பாவத்திற்கு கனம் (பலன்) அதிகமா?

பிரகலாதனின் பக்தி அவன் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தையின் போக்கு பிரகலாதனுக்கு பிடிக்கவில்லை. தந்தை என்ற உறவில் பிரகலாதன் மதிப்பை வைத்திருந்தான். ஆனால் தந்தையின் கருத்தில் பிரகலாதனுக்கு மதிப்பு இல்லை. எனவே தாய்க்கும் தந்தைக்கும் ஆற்ற வேண்டிய கடமை கொடுக்க வேண்டிய மரியாதை மைந்தன் (மகன்) கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுடைய கருத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை இந்த கருத்து நல்லவற்றிற்கு சத்தியத்திற்கு அறத்திற்கு இறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. எனவே இந்த நிலையிலே தாய்க்கும் தந்தைக்கும் தன் பிள்ளை தாராளமாக தர்மம் செய்வது பிடிக்கவில்லை என்றால் அந்த மைந்தன் (மகன்) ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தர்மத்தை செய்யலாம். அதே சமயம் தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சுலோகம் -13

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #13

இதற்குப் பிறகு சங்குகள் பேரிகைகள் தம்பட்டங்கள் பறைகள் கொம்பு முதலிய வாத்தியங்கள் ஒன்றாக முழங்கின. இந்த சத்தம் மிகவும் பயங்கரமானதாக இருந்தது.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: வாத்தியங்கள் பலவும் ஒரே நேரத்தில் ஏன் முழங்கியது?

கௌரவர்கள் யுத்தத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கும் வகையில் பீஷ்மர் சங்கை முழங்கியதும் கௌரவப் படைவீரர்கள் தங்களுக்குரிய வாத்தியங்களில் ஒலி எழுப்பி தங்களது உற்சாகத்தை தெரிவித்ததால் அனைத்து வாத்தியங்களும் ஒரே நேரத்தில் முழங்கியது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வாத்திய சத்தங்கள் ஏன் பயங்கரமானதாக இருந்தது?

கௌரவ படைகளில் 11 அக்ரோணி படைகள் இருந்தன ஓர் அக்ரோணி படை என்பது 21870 தேர்கள். 21870 யானைப்படை வீரர்கள். 65610 குதிரைப்படை வீரர்கள். 109350 காலாட் படை வீரர்கள் இருப்பார்கள். மொத்தம் 24,05,700 படை வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு படைகளிலும் உள்ள வீரர்களில் யுத்தத்தின் போது அனைவரையும் உற்சாகப்படுத்தவும் வாத்தியத்தில் இருந்து வரும் ஒலியின் மூலமாக படைத்தலைவர்களிடம் இருந்து வரும் செய்திகளை வீரர்களுக்கு சொல்லவும் வாத்தியக் கருவிகளில் இருந்து ஒலி எழுப்புபவர்கள் பலர் இருப்பார்கள். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஒலி எழுப்பியதால் அதில் இருந்து வந்த சத்தம் ஆகாயத்தில் எதிரொலித்ததால் பயங்கரமானதாக இருந்தது.

சுலோகம் -12

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #12

கீர்த்தி மிக்கவரும் கௌரவர்களில் முதியவருமாகிய பாட்டனார் பீஷ்மர் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் வகையில் சிங்கத்தின் சத்தத்தைப் போல் கர்ஜனை செய்து சங்கை முழங்கினார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: பீஷ்மர் கீர்த்திமிக்கவர் என்றும் முதியவர் என்றும் ஏன் அழைக்கப்படுகிறார்?

தனது பிரம்மச்சரிய விரதத்தாலும் வலிமையினாலும் பீஷ்மர் மிகவும் புகழ் பெற்றார் ஆகையால் கீர்த்திமிக்கவர் என்றும் கௌரவர்களில் பாஹ்லீகரைத் தவிர மற்றவர்கள் அனைவரைக் காட்டிலும் வயதானவர் ஆகையால் முதியவர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீஷ்மர் சிங்கத்தைப் போல கர்ஜனை செய்து துரியோதனனுக்கு ஏன் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்?

பீஷ்மர் பாட்டனார் என்ற முறையில் பாண்டவர்கள் கௌரவர்கள் இருதரப்பினருக்கும் ஒரே விதமான உறவுமுறை கொண்டவர். இருதரப்பினர் மீதும் ஒரே விதமான எண்ணங்களை கொண்டவர். ஆனால் யுத்த களத்தில் துரியோதனன் பாண்டவர்களின் படைகளைக் கண்டு திகைத்து கவலைப்படுவதையும் அதனை மறைக்க துரோணரிடம் சென்று தன் படைகளில் உள்ளவர்களைப் பற்றி பெருமை பேசுவதையும் படைகளில் உள்ள வீரர்களை உற்சாகப்படுத்துவதையும் கண்டார். கௌரவர்களின் பிரதான தளபதி என்ற முறையில் துரியோதனனை திருப்திப்படுத்த எண்ணி சிங்கத்தின் கர்ஜனையைப் போல கர்ஜனை செய்து துரியோதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பீஷ்மர் சங்கை ஏன் முழங்கினார்?

கெளரவர்கள் யுத்தத்திற்கு தயாராகி விட்டதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் சங்கை முழங்கினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 39

கேள்வி: பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற பரிகாரம் சொல்லுங்கள்?

தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றால் அவன் அங்கேயே தோற்றுவிட்டான் என்றுதான் பொருள் அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தோற்று விட்டதாக பொருள். கல்வியை கற்றுக் கொள்ள பயம் எதற்கு? புதிதான ஒரு விஷயத்தை மனிதன் அனுதினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறான். குழந்தை எப்படி கற்றுக் கொள்கிறது? ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறது? யாராவது ஆசான் வந்து போதிக்கிறானா? ஏன்? கூர்த்த கவனம் வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை. பரிபூரண கவனம். தன் செவியில் என்ன விழுகிறது? என்பதை சரியாக கிரகித்துக் கொள்கிறது குழந்தை. குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான். அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொள்ள தெரிந்து கொண்டு அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறோம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை. மாணவர்கள் தொடர்பான குறைகள் ஒருபுறமிருக்கட்டும். யாரும் சொல்லித் தராமலேயே ஒரு கலைக்காட்சியை (சினிமா) மாணவன் சென்று பார்க்கிறான். யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களை புரிந்து கொள்கிறான். ஆனால் பாடத்திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் ஏன் அதை புரிந்து கொள்ள முடியவில்லை? இங்கே சிந்திக்க வேண்டும். புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை. என்னதான் எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதிநிலை.

இதற்கு பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும் அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும் எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். சிறுவர்கள் அயர்வு (சோர்வு) காலத்திலே வாகனத்தை (புதிய வாகனம்) கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். யாரும் சொல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்? அதன்மீது உள்ள ஒரு ஈர்ப்பு. அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை போதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.

கேள்வி: எனக்கு பின்னாடி ஒரு பெண் தெய்வம் இருப்பதாக ஒரு பெரியவர் சொன்னார். அந்த தெய்வம் யார்?

உன் மனைவி தானப்பா.

சுலோகம் -11

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #11

அனைத்து போர் முனைகளிலும் நீங்கள் அனைவரும் உங்களுடைய இடங்களில் இருந்து நான்கு பக்கங்களிலும் சுற்றி நின்று பீஷ்மருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: பீஷ்மர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் திறமையுள்ளவர் இருப்பினும் அனைவரும் அவரை நான்கு பக்கமும் சுற்றி நின்று பாதுகாக்கும் படி தூரியோதனன் ஏன் கூறினான்?

பீஷ்மர் பெண்களை எதிர்த்து ஆயுதம் எடுத்து போர் புரியமாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார். பாண்டவர்களின் படையில் துருபதனின் மகனான சிகண்டி இருந்தான். இவன் முதலில் பெண்ணாக இருந்து பின்பு ஆணாக மாறியவன். அவனே முன் பிறவியில் அம்பாவாக இருந்தவள். இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். பீஷ்மரால் சூழ்நிலை காரணமாக துன்பத்திற்கு ஆளாகி அவரைப் பழி வாங்க விரும்புகிறாள். இதனால் கடும் தவம் இருந்து பீஷ்மர் இறக்க தான் காரணமாக இருக்க வேண்டும் என வரம் பெற்றாள். அவளே மறுபிறவியில் துருபதனின் மகளாக சிகண்டினி என்ற பெயருடன் பிறக்கிறாள். அவள் பிறக்கும் போது அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது. அதன்படியே போர் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு ஒரு இளவரசனைப் போல் வளர்க்கப்படுகின்றாள். ஒரு யட்சன் அவளை பாலின மாற்றம் செய்து ஆணாக மாற்றுகிறான். அதனால் சிகண்டினி சிகண்டி என்ற பெயர் பெற்று ஆணாக மாறினான். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சிகண்டி பற்றி அறிந்த பீஷ்மர் சிகண்டி ஒரு ஆணாக இருந்தாலும் பிறப்பால் ஒரு பெண் என்பதால் அவனை ஒரு பெண்ணாகவே நான் மதிக்கிறேன். ஆகையால் யுத்த களத்தில் சிகண்டி என் எதிரில் வந்தால் அவன் மீது நான் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்ய மாட்டேன் மேலும் நான் இறப்பதற்கு அவனே காரணமாக இருக்க வேண்டும் என்று வரம் வாங்கி இருப்பதால் என் முன்னால் அவன் வந்தால் என்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் செயல் இழந்து போகும் என்று சொல்லி இருந்தார். இதன் காரணமாக தன் படையில் உள்ள அனைத்து மகாரதர்களிடமும் நீங்கள் யுத்த களத்தில் எந்த முனையில் இருந்து யுத்தம் செய்தாலும் அங்கேயே திடமாக இருந்து யுத்தம் செய்யுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை கடந்து சிகண்டி பீஷ்மரின் அருகில் செல்ல முயன்றால் அவனை அங்கேயே தடுத்து நிறுத்தி விரட்டி அடியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் சிகண்டியை பீஷ்மரின் அருகில் விட்டு விடாதீர்கள் என்று துரியோதனன் என்றான். சிகண்டியிடம் இருந்து பீஷ்மரை நாம் காப்பாற்றி விட்டால் பீஷ்மர் நமக்கு எளிதாக வெற்றி தேடிக் கொடுத்து விடுவார் என்று துரியோதனன் எண்ணியிருந்தான். அதன் காரணமாகவே பீஷ்மரை அனைவரும் சேர்ந்து பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 38

கேள்வி: திருநல்லூர் காளி பற்றி? (கும்பகோணம் அருகில்)

நீ நல்லூர் அன்னையை தரிசித்தபொழுது அன்னையின் திருமேனியை அலங்கரித்த தூசின் வண்ணம் என்ன? (பதில் – நீலம்).

உக்கிர அன்னையின் மேனியில் எந்த வண்ணம் உள்ள ஆடை இருக்கிறதோ அஃதாெப்ப அவர்கள் எண்ணும் காரியத்திற்கு ஆசிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். குருதி (சிகப்பு) வண்ணத்திலே ஆடை அணிந்திருந்தால் எதிரிகள் வீழ்வார்கள். பசுமை வண்ணம் அணிந்து இருந்தால் மறுமலர்ச்சி ஏற்படும். நீலம் அணிந்து இருந்தால் பொருளாதார சிக்கல் மற்றும் ராகு தோஷம் குறையும்.

கேள்வி: காசி விஸ்வநாதர் கோவிலில் செய்யப்பட்ட அபிஷேகத்தை இறைவன் ஏற்றுக் கொண்டாரா?

ஆசிகளப்பா. ஒவ்வொரு வழிபாட்டையும் செய்து விட்டு அதை இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா என்று கேட்பது எப்படி இருக்கிறது என்றால் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதி விட்டு தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம் எனக்கு எந்த அளவிற்கு மதிப்பெண் போடப்போகிறாய் போட்டிருக்கிறாய் என்று கேட்டால் அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும். ஆக உன் கடமையை உறுதியாக தெளிவாக செய்து கொண்டே போ. இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே. வெற்றி இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்வதற்கு ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா. இது உனக்கு மட்டுமல்ல. இது போன்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் இந்த பதில் பொருந்துமப்பா.

கேள்வி: ரமணர் (மகரிஷி) தன் தாய்க்கு முக்தி அடைய வழி செய்ததாக கூறப்படுகிறது பற்றி?

ஆதிசங்கரரும் அவ்வாறுதான் செய்து இருக்கிறார். என்றால் அந்த (தாயின்) ஆத்மா முன்னரே பக்குவப்பட்டு ஆதிசங்கரர் போன்ற புண்ணியவானை பிள்ளையாகப் பெற அது (தாயின் ஆத்மா) விரிவாக்கம் பெற்று அந்த (தாயின்) ஆத்மா இப்பிறவியைக் கூடுதலாகப் பெற்று வந்திருக்கிறது. எனவே கடந்த பிறவிலேயே அடைய வேண்டிய முக்தியை அந்த ஆத்மா (தாயின் ஆத்மா) தள்ளித்தான் அடைந்திருக்கிறது.

சுலோகம் -10

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #10

பாட்டனார் பீஷ்மரால் காக்கப்படும் நமது படைகளை பாண்டவர்களால் எந்த விதத்திலும் வெல்ல முடியாது. பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை நாம் எளிதில் வெல்லலாம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: தன் படைகளை பாண்டவர்களால் வெல்ல முடியாது என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

கௌரவர்கள் தங்களின் படைக்கு சேனாதிபதியாக பீஷ்மரை நியமித்திருந்தார்கள். பரசுராமரே வந்தாலும் அவரை எதிர்க்க கூடிய வல்லமை பெற்றவர் பீஷ்மர். அடுத்து பாண்டவர்களின் படைகளில் உள்ள மகாரதர்களின் எண்ணிக்கையை விட கௌரவர்களின் படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்து பாண்டவ படைகளை விட 4 அக்ரோணிப் படைகள் அதிகமாக உள்ளது என்ற காரணத்தினால் கௌரவ படைகளை வெல்ல முடியாது என்று நம்பினான். வீரர்களின் எண்ணிக்கை மற்றும் படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாம் என்று துரியோதனன் நம்பினான். அதனாலேயே யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தனது தந்திரத்தினால் பல அரசர்களையும் வீரர்களையும் தனது பக்கம் சேர்த்துக் கொண்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

பாண்டவர்களின் படைக்கு சேனாதிபதியாக திருஷ்டத்யும்னனையும் படைகளை காப்பதற்கு பீமனை காப்பாளனாக நியமித்திருந்தார்கள். பீமன் உடல் வலிமை பெற்றிருந்தாலும் பீஷ்மரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாதவன். படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை குறைவாகவும் படைகளும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருந்த காரணத்தால் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று நம்பினான். பாண்டவர்கள் யுத்தத்தை வெல்வதற்கு கிருஷ்ணரையும் தங்களின் தவ வலிமையையும் நம்பினார்கள்.