ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 239

கேள்வி: முருகனின் தரிசனம் வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அது எப்போது நடக்கும்?

முருகனின் தரிசனம் வேண்டுமென்றால் யானை துரத்த வேண்டும். யானை துரத்தினால் முருகனின் தரிசனம் கிடைக்கும். இதுதான் யாம் அன்று கண்டது. இருந்த போதிலும் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று முன்பு எம்மிடம் பலரும் பலமுறை வினவியிருக்கிறார்கள். யாங்கள் அப்பொழுது கூறிய வாக்கையே இப்பொழுதும் கூறுகிறோம். இறையைத் தரி இறை சிக்கலாம். தரி சிக்கலாம். எனவே உள்ளத்தில் இறைவனை இடையறாது தரித்தால் இறையைத் தரிசிக்கலாம். மனம் இறையைத் தவிர வேறு எதனையும் எண்ணாத நிலை வருகின்ற சூழல் வரும் வரை இறை தரிசனம் என்பது கடுமையான போல மனிதனுக்குத் தெரியும். ஆனால் மனிதன் இறைவனை நோக்கி செல்வதே லோகாய விஷயங்களுக்குத்தான். இறைவா எனக்கு அது வேண்டும் இறைவா எனக்கு இது வேண்டும் என்று அது வேண்டும் இது வேண்டும் என்ற வேண்டாத எண்ணம் கொண்டு எதுவும் வேண்டாம் நீ மட்டும்தான் வேண்டும் என்று வேண்டுகின்ற எண்ணத்தோடு இறையை நோக்கி சென்றால் அக்கணமே இறை தரிசனம் நிச்சயம்.

கேள்வி: தமிழகம் முழுவதும் தொழிலில் ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலை மாற அருளாசி வேண்டும்:

இறைவனின் கருணையாலே பொதுவாக சமுதாய குறைபாடுகள் நீங்குவதற்கு அவ்வப்போது அன்பர்கள் வாய்ப்புள்ள இடத்திலே ஒன்று கூடி கூட்டு வழிபாடுகள் செய்வது ஒன்றுதான் எளிய வழியாகும். அதனைத் தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் குறைபாடுகள் மெல்ல மெல்ல நீங்கும்.

சுலோகம் -131

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-12

வேள்வியினை ஏற்றுக் கொண்ட தேவதைகள் உங்களுக்கு கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாக கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறை செயல்களாக எண்ணி செய்து கொண்டிருக்கும் வேள்விகளை ஏற்றுக் கொண்ட இஷ்ட தெய்வம் இந்த உலகத்தில் அனுபவிக்க தேவையான போகங்களான பொன் பொருள் வேலை குடும்பம் மகிழ்ச்சி என்று அனைத்தையும் கேட்காமலேயே வழங்குவார்கள். இந்த போகங்களை அனுபவிப்பவர்கள் இதுவும் இறை செயல் என்று எண்ணாமல் தன்னால் வந்தது என்ற எண்ணத்தில் அனுபவிப்பவன் திருடன் ஆவான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

துர்கா கோவில்

கர்நாடகாவில் உள்ள ஐஹோலில் அமைந்துள்ளது. அய்கொளெ என்றும் அழைக்கப்படுகிறது. ஐயவோளே மற்றும் ஐயபுரா என்ற பெயர்கள் இருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில். 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சாளுக்கியர்களின் வம்சத்தால் கட்டப்பட்டது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் பெயர் இடம் பெற்றுள்ளதால் இதன் காலம் 733-746 க்கு இடைப்பட்டதாக இருக்க கூடும் என வரையறுக்கின்றனர். இது ஐஹோளில் சைவம் வைணவம் சக்தி மற்றும் வேத தெய்வங்களின் கலைப்படைப்புகளை சித்தரிக்கும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டுள்ளது. கிழக்குப் பார்த்து கட்டப்பட்ட இக்கோவில் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பின்பக்கத்தின் வெளிச் சுவரும் உட்சுவரும் அரைவட்ட வடிவில் அமைந்து தூங்கும் யானையின் பிருஷ்டம் போல காணப்படுகின்றன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 238

கேள்வி: ஆப்பூர் மலையில் சுதர்சன ஹோமம் நடத்த ஆசி வேண்டும். அந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் பற்றி:

இறைவனின் கருணையைக் கொண்டு முன்னரே முன்னரே இச்சுவடி வந்த பொழுதிலேயே யாம் அருளாணையிட சில சேய்கள் மூன்று தினங்கள் அங்கு அமர்ந்து சகல விதமான யாகங்களையும் செய்து பூர்த்தி கண்டார்கள். பிறகு மீண்டும் ஒருவன் வந்தும் யாகம் செய்திருக்கிறான். எனவே தக்க காலத்தில் மீண்டும் அங்கு இறைவனருளால் யாகம் நடைபெறும். இறைவன் கருணையாலே அந்த பரம்பொருள் மஹாவிஷ்ணுவாக வெங்கடேசப் பெருமாளாக அருளுகிற அம்மலையிலே இன்னும் 60 க்கும் குறையாத சித்த பெருமக்கள் அரூபமாக தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி நிறைமதி காலங்களிலே வழிபாடு செய்ய இதனை தக்க அன்பர்கள் உணரலாம் ஆசிகள்.

கேள்வி: நாராயணா என்று கூற வேண்டுமா? அல்லது ஓம் நமோ நாராயணா என்று கூற வேண்டுமா?

ஓம் நமோ நாராயணாய நாராயணாய அல்லது மகாவிஷ்ணுவே சரணம் என்று எப்படி கூறுவது? என்பதை விட எந்த மனோபாவத்தில் ஒரு மனிதன் கூறுகிறான் என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே வார்த்தைகளில் பிழையில்லாமல் இருக்க வேண்டும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மனதிலும் வேறு சிந்தனைகள் இல்லாமல் உச்சரித்தால் அதுதான் மந்திரம். அப்படி உச்சரிக்கின்ற ஒரு நிலை வரும் வரை ஒரு மனிதன் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எனவே இதில் எத்தனை அட்சரம்? என்பதை விட அவன் திறம் எத்தனை? என்பதையே இறை பார்க்கும்.

கர்லா குகைக் கோயில்

பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது. இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160ல் எழுப்பினார். இக்குகைக் கோயில் கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. பசால்ட் பாறையை அகற்றி இதுவரை கட்டப்பட்ட பிரமாண்டமான குகைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 148 அடி நீளமும் 46 அடி உயரமும் உடையது. நுழைவாயிலில் சிங்க சிற்பங்களால் முடிசூட்டப்பட்ட இரண்டு 50 அடி உயரமான தூண்கள் உள்ளன. வளாகத்தில் பிரதான பிரார்த்தனை மண்டபம் உள்ளது. கர்லா குகைகளின் குடைவரைக் கோயில்களின் வளாகம் ஒளியும் காற்றும் புகும்படியான கற்களால் ஆன ஜன்னல்கள் கொண்டுள்ளது.

இதன் முதன்மைக் குகையில் கிமு முதல் நூற்றாண்டில் பிக்குகள் பிரார்த்தனை செய்ய 14 மீட்டர் உயரம் 45 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிங்கம் யானை போன்ற விலங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. பிக்குகள் தங்குவதற்கான இடங்கள் இக்குகை வளாகத்தில் குடையப்பட்டுள்ளது. குகைகள் வளைவுகளுடன் கூடிய நுழைவு வாயில்கள் கொண்டது. இங்குள்ள தூண்களில் இக்குடைவரைக் குகைகளை எழுப்பதற்கு நன்கொடை தந்தவர்களின் பெயர்கள் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்டுள்ளது. குகையின் வெளிமுகப்பில் உள்ள மரச்சிற்ப வளைவுகளில் சிக்கலான விவரங்கள் உள்ளன. குகையின் மையப்பகுதியில் உள்ள பெரிய லாட வடிவ தோரணத்தில் அழகிய பூவணி வேலைபாடுகள் கொண்டுள்ளது. மூடிய கல் முகப்பிற்கும் தோரணத்திற்கும் இடையே அசோகத் தூண் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை தேக்கி வைத்து குடிப்பதற்கு பாறையை குடைந்து கிணறு போன்று வெட்டப்பட்டுள்ளது.

இவ்விகாரை 15 மீட்டர் உயரமுள்ள இரண்டு பெருந்தூபிகளுடன் இருந்தது. அதில் ஒன்று சிதிலமைடந்துள்ளது. நன்குள்ள வேறு ஒரு தூபியில் மும்பைப் பகுதியின் கோலி இன மக்கள் வணங்கும் தெய்வமான இக்வீராவின் சிற்பம் காணப்படுகிறது. ஒரு பெரிய குதிரைவாலி வளைவில் அமைக்கப்பட்ட சூரியன் சாளரத்தில் ஒளிரும் ஒளி அற்புதமாக பரவுகிறது. சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரு காலத்தில் ஓவியங்களும் இருந்தன.

சுலோகம் -130

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-11

இந்த வேள்வியினால் அந்த தேவர்களை ஆராதிக்கக் கடவீர்கள். அந்த தேவர்கள் உங்களை கருதக் கடவார்கள். இவ்வாறு பரஸ்பரம் பாவனை செய்வதினால் நீங்கள் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -129 இல் உள்ளபடி செய்கின்ற செயல்கள் அனைத்தையும் பரம் பொருளான இறைவனுக்கு அல்லது உங்கள் விருப்ப தெய்வத்திற்கோ அர்பணித்து அந்த செயலின் விளையும் ஏற்படும் நன்மை தீமைகளை அனைத்தையும் இறை செயலாக எண்ணிக் கொண்டு இருந்தால் இதுவே ஒரு வேள்வியாகும். இதன் வழியாகவே இறைவனை (இஷ்ட தெய்வம்) நீங்கள் ஆராதனை செய்தவர்கள் ஆவீர்கள். உங்களது ஆராதனைகளை பரம் பொருளான இறைவன் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் உங்களது ஆராதனைகளை ஏற்றுக் கொண்டு நன்மைகளை அளிப்பார்கள். இந்த முறைப்படி வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தால் உயர்ந்த நலத்தை அடைவது மட்டுமின்றி மோட்சத்தையும் அடையலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 237

கேள்வி: அஷ்டாவக்ரரைப் பற்றி:

இறைவனின் கருணையால் உடல் அதாவது தேகம் (உடல்) எட்டு விதமாகத் திரிந்து பார்ப்பதற்கு அவலட்சண தோற்றத்தோடு தன்னை இருக்குமாறு இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப்பெரிய ரிஷி அந்த அஷ்டாவக்ர ரிஷியாகும். பலரும் அவரைப் பார்த்து பரிகாசம்(நிந்தனை) செய்த பொழுது மெளனமாக அதனை அவர் எதிர்கொண்டார். அந்த மகான் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் தான் உணர்ந்ததை தான் அடைந்ததை தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வர வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால் சிக்கல் எங்கே இருக்கிறது? மாயையும் அறியாமையும் விடாத வரை ஒரே கணத்தில் உயர்ந்த நிலை எந்தவொரு ஆத்மாவிற்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல் எதும் தேவையில்லை. அந்த அஷ்டாவக்ரரின் முறைகளைக் கடைபிடித்தால் மேலேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால் அதைக் கண்டு உணர்ந்து கேட்டு புரிந்து கொள்வதற்காக ஒரு ஆத்மாவிற்கு கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே? எனவே அப்படியொரு நுழைவாயில் இருப்பவனுக்குதான் இந்த உபதேசம் உண்மையாக மெய்யாக புரியுமப்பா. இல்லையென்றால் வெறும் செவியாடல்களாக எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறானல்லவா? என்ன வாசித்தாலும் அவையெல்லாம் வெறும் ஏட்டோடு செவியோடு என்று வைத்து விட்டு நடைமுறை என்று வரும் பொழுது மிக மிக மிக மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே? அதை விடாத வரை எந்தவொரு ஆத்மாவும் மேலேறுவது கடினம். எனவே உன்னதமான உயர்ந்த அஷ்டாவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து குறிப்பாக குருவாரம் விரதமிருந்து அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால் கனவிலோ நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய இறைவனருளால் காத்திருக்கிறார்.

கேள்வி: கனவிலே லிங்கம் தோன்றினால் என்ன பலன்?

நல்ல சகுனம் தானப்பா. தொடர்ந்து இறை காட்சிகளைக் கனவில் பார்ப்பதும் எதிர்பாராத இடத்திலே இறைவன் ஊர்வலத்தைப் பார்ப்பதும் சுப சகுனம். தோஷங்கள் குறைவதற்கு நல்லதொரு வாய்ப்பை இறைவனே தந்திருக்கிறார் என்று பொருள்.

பரசுராமேசுவரர் கோவில்

ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கிபி 7 ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டை ஆண்ட சைலோத்பவ வம்ச மன்னர்கள் சிவபெருமானுக்காக அர்பணித்த கோவில் இது. இக்கோவில் மணற்கற்களால் கட்டப்பட்டதாகும். பரசுராமர் இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமான் அருளைப் பெற்றதால் இக்கோவிலுக்கு பரசுராமேசுவரர் கோவில் எனப்பெயர் பெற்றது. சகஸ்ரலிங்கம் என்று சொல்லப்படும் ஒரே லிங்க திருமேனியில் செதுக்கப்பட்ட ஆயிரம் சிறு லிங்கங்கள் கொண்ட லிங்கம் கோவிலின் வெளியே உள்ளது. 40.25 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரங்கள் பல விமானங்களுடன் உள்ளது. கோவில் கோபுரத்தில் பிராம்மி மகேசுவரி கௌமாரி நாராயணி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. மகிசாசூரனை வதைத்த ஆறு கைகள் கொண்ட மகிசாசூரமர்தினியின் சிற்பம் உள்ளது. பிள்ளையார் மற்றும் வீரபத்திரர் சிற்பங்களுக்கு இடையே சப்தகன்னியர் சிற்பங்கள் உள்ளது. கோவில் சுவர்களில் எட்டு கைகள் கொண்ட நாட்டியமாடும் அர்த்தநாரீஸ்வரர் கங்கா தேவி யமன் மற்றும் யாமியின் சிற்பங்கள் உள்ளது. கோவிலின் தெற்குச் சுவரில் விஷ்ணு இந்திரன் சூரியன் மற்றும் மயில் வாகனத்துடன் கூடிய முருகன் போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளது. கையிலை மலையை தூக்கிய ராவணனுக்கு அருளும் சிவபெருமான் பார்வதி சிற்பம் மற்றும் தாண்டவமாடும் நடராசர் சிற்பங்களும் உள்ளது. கோவில் மண்டபத் தூண்களில் பூக்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது. கோவில் கோபுரத்தில் நாகர்கள் மற்றும் நாகினிகளின் சிற்பங்கள் உள்ளது. கிபி 11 – 12ம் நூற்றாண்டில் இசுலாமிய மன்னர்களின் படையினரால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. 1903 இல் இக்கோவில் மறுசீரமைத்துக் கட்டப்பட்டது.