லட்சுமணன்

லட்சுமணன் தனது வலது கரத்திதை சுக்ரீவனின் தோள்களில் வைத்திருக்கிறார். மற்றோரு கையில் கோதண்டத்துடன் இருக்கிறார். பாதங்களில் காலணி அணிந்திருக்கிறார். இடம் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில் தூத்துக்குடி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 400

கேள்வி: இராமர் இராமேஸ்வரத்தில் வழிபட்டதினால் அங்கு திலயாகம் போன்றவற்றை செய்ய சொல்கிறீர்கள். இராமர் வேறு புண்ணிய நதிக்கரைகளிலும் வழிபாடு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட இடங்களிலும் நாங்கள் திலயாகம் போன்றவற்றை செய்யலாமா?

தெய்வ சமுத்திர கோட்டம் எனப்படும் இராமேஸ்வரத்தில் மட்டும்தான் இதுபோல் திலயாகமோ தர்ப்பணமோ முன்னோர்களுக்கு உண்டான சாந்தி பூஜையோ செய்ய வேண்டும் என்பதல்ல. ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். மனிதர்கள் அறிந்ததுதான். மனித நாகரீகம் வளர்ந்ததே நதிக்கரையோரங்கள் கடலோரங்களில்தான். மனிதனுக்கு நீர் அவசியம். அந்த நீரை எங்கிருந்தாலும் கொண்டு வந்து சேர்க்கின்ற ஒரு சூழல் இன்று இருக்கிறது. ஆனால் அன்று இல்லை. நீரை ஒட்டிதான் நகரங்களும் நாடுகளும் வளர்ந்து வந்தன. இதுபோல் நிலையிலே மெல்ல மெல்ல பரிணாம மாற்றம் அடைந்த மனிதன் வேறுவிதமான வசதிகளையெல்லாம் பெற்ற பிறகு வேறுவிதமான வாழ்க்கை முறைக்கு சென்று விட்டான். எனவே எம்மைப் பொருத்தவரை ஆத்மார்த்தமாக மலைகளில் அமர்ந்து தில தர்ப்பணம் செய்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்வார். இல்லத்தில் அமர்ந்து செய்தாலும் ஏற்றுக் கொள்வார் அதல்ல பிரச்சினை. அடுத்ததாக இராமபிரான் வந்து அமர்ந்து பூஜை செய்ததால் சிறப்புதான் என்றாலும் அதற்காக மட்டும் யாங்கள் கூறவில்லை.

இதைத் தாண்டி ஒரு மனிதன் இல்லத்தில் அமர்ந்து பூஜை செய்து முன்வினை பாவங்களை போக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு மனோதிடமோ புண்ணிய பலமோ இல்லாத நிலையிலே தூர தூர இடங்களுக்கு தன் தனத்தை செலவழித்து சென்று அங்குள்ள மனிதர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இதுபோல் ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தும் பொழுது அதனால் அவனுடைய பாவங்கள் குறையட்டும் என்றுதான் யாங்கள் கூறுகிறோம். ஒன்று தீர்த்தம் புனிதமானது. அடுத்து ஆழி புனிதமானது. அதுபோல் அங்குள்ள இராமேஸ்வர தெய்வம் புனிதமானது தெய்வ சாந்நித்யமானது. அங்கு இருக்கின்ற மனிதர்கள் பல தவறுகள் செய்யலாம். ஆனால் தெய்வ சாந்நித்யம் என்பது உயர்ந்தது. அதனாலும் அங்கு செய்ய அருளாணை இடுகிறோம். திருவெண்காட்டிலும் செய்யலாம். கோடியக்கரையிலும் செய்யலாம். பூம்புகாரிலும் செய்யலாம் தவறொன்றுமில்லை. காசிதான் உயர்ந்தது இராமேஸ்வரம்தான் உயர்ந்தது என்று நாங்கள் கூற வரவில்லை. வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் அங்கு செய்யலாம். மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் புனித நதியை புனித நதியாக மதிக்கின்ற மனிதர்கள் அந்த புனித நதியை நன்றாக பராமரித்து அந்த நதிக்கரையிலேயே நல்லவிதமாக பூஜைகளை செய்தால் கட்டாயம் நற்பலன் ஏற்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 399

கேள்வி: சமீபகாலமாக ஆலயங்களில் தீப்பற்றி விடுகிறது. மேலும் சிலைகள் திருடப்படுகின்றன. இதற்கு தீர்வு காண எந்த ஆலயம் சென்று வழிபடுவது ?

ஆலயம் தீப்பற்றி எரிவது மட்டும்தான் மனிதர்களுக்கு தெரிகிறது. பல ஆலயங்களில் இறைவனே பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறார். மனிதர்களின் செயலைப் பார்த்து அவர் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறார். இவையெல்லாம் ஏதோ இறைவனின் சீற்றமோ கோபமோ என்பது அல்ல. இதைவிட மோசமாக மனித சமுதாயம் நடந்து கொள்ளும் பொழுதெல்லாம் அமைதியாகத்தானே இறைவன் இருக்கிறார்? எனவே இதை இயல்பான விஷயமாக எடுத்துக் கொண்டால் போதும். எதையும் கவனமாக கையாள மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 398

கேள்வி: ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களும் இறைவனின் மூன்று கண்கள் என்று சொல்லியிருக்கிறார் அது பற்றி:

இதுபோல் நல்விதமாய் அந்த தீர்த்தங்கள் உண்மையில் இறைவன் அருளுக்கு பாத்திரமான தீர்த்தங்கள்தான். ஆனால் தீர்த்தங்களை பரிசுத்தமாக நல்விதமாக பக்தியோடு பராமரித்தால் அவைகள் இறைவன் அருளைத் தரும். இல்லையென்றால் தோஷத்தைதான் தரும். இறைவனை வணங்க முடியாதவர்கள் நன்றாக கவனிக்க வேண்டும் ஆலயம் சென்று இறைவனை வணங்க வாய்ப்பில்லாதவர்கள் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலே இறைவன் அருள் கிட்டும். இப்படியெல்லாம் மனிதர்கள் சூழ்ச்சி செய்வார்கள் என்றுதான் மகான்கள் தீர்த்தம் என்ற ஒன்றை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த தீர்த்தத்திலும் இன்னவன் இறங்கக்கூடாது இன்ன ஜாதியில் பிறந்தவன் இறங்கக் கூடாது என்று மனிதன் கண்டுபிடித்தான். எத்தனையோ போராடியும் அவன் திருந்தவில்லை என்றுதான் த்வஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தை வைத்தார்கள். கொடிமரத்தை தொட்டு வணங்கினால் போதுமென்று. அதிலும் பல கொடிமரங்கள் அங்கே பழுதுபட்டுவிட்டன. எனவே வெறும் இராஜ கோபுரத்தை பார்த்து பரிபூரண பக்தியோடு வணங்கினால்கூட பலன் உண்டு. ஆனால் அனாச்சாரம் இல்லாத ஆலயமும் நிர்வாகமும் அங்கு செல்லக்கூடிய மனிதர்களின் தூய பக்தியும்தான் இறைவன் அருளை பெற்றுத்தரும்.

இறைவனின் கருணையைக் கொண்டு விதவிதமான பிரார்த்தனைகளை செய்து கர்மவினைகளை நீக்கிக் கொள்கின்ற ஸ்தலத்திலே இதுபோல் இந்த இடத்திலே சந்திரனின் பரிபூரண பலன் கிட்டாதவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலம். குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்பக் கூடியவர்கள் சென்று வணங்கக்கூடிய ஸ்தலங்களில் ஒன்று.

திருவெண்காடு தலத்தைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

இறைவனை எளிமையாக சென்று அடையும் வழி

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார் ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?

புதிய சீடன் – இறைவனை அறிவதும் அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம் என்றான்.

குரு – சரி இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ? இல்லை ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன். என்றான் நல்லது உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே.

குரு – இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ளவும் அடையவும் உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய் அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான் இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தானம் தர்மம் ஆகிய செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும் போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில் இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 397

கேள்வி: சிவன் சொத்து குல நாசம் இது பற்றி:

இறைவன் அருளால் யாங்கள் கூறவருவது யாதென்றால் சிவன் சொத்து குல நாசம் என்றால் விஷ்ணு சொத்தை எடுக்கலாமா? என்று ஒருவன் கேட்பான். உண்மையான விஷம் எது தெரியுமா? அவனுடைய நேர்மையான உழைப்பில் வராத அனைத்துமே விஷம்தான். இப்படி விஷமான பல விஷயங்களை மனிதன் தனக்குள்ளே சேர்த்து வைத்திருப்பதால்தான் இத்தனை பிரச்சினைகளும் துன்பங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. தான் சேர்த்தது மட்டுமல்லாமல் தன் வாரிசுகளுக்கும் அந்த விஷத்தை அவன் அனுப்பி வைக்கிறான். இந்த விஷம் நீங்க வேண்டுமென்றால் அந்த விஷத்தை கண்டத்தில் அடக்கியவனை சென்று பார். எப்பொழுது பார்க்க வேண்டும்? அந்த விஷம் எப்பொழுது அவன் கண்டத்தில் தங்கியதோ அந்த காலத்தில் பார் என்று பிரதோஷம் என்ற ஒரு காலத்தை குறிப்பிட்டு தினமும் அந்திப்பொழுதிலே சென்று (அதிகாலை பிரம்ம முகூர்த்தம்தான் பலருக்கு கயப்பாக இருக்கிறது) பார் என்றால் அதையும் பார்க்க மறுக்கிறான்.

இதுபோல் பிறரின் சொத்து எதுவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வது என்பது தீங்கான விஷயம்தான் பாவமான விஷயம்தான். ஆனாலும் காலகாலம் மனிதன் அந்த தவறை செய்து கொண்டுதான் இருக்கிறான். இறைவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஏன் இறைவன் இதை வேடிக்கை பார்க்கிறார்? இறைவன் ஏன் இதையெல்லாம் தடுக்கக்கூடாது? என்று கேட்டால் இறைவனை பொருத்தவரை மனித பாவங்கள் தன்னிடம் வராமல் இருந்தால் போதும் என்று எண்ணுகிறார். உதாரணமாக ஒருவனுக்கு கடுமையான பிணி வந்துவிட்டது. முடிந்தவரை போராடுகிறான். விதவிதமான மருந்துகளை ஏற்கிறான். மருத்துவனை பார்க்கிறான். நோய் நீங்கவில்லை. நோயால் அவஸ்தை வந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்வது? இறுதியாக இறைவனை நோக்கி வேண்டுகிறான். இறைவா இந்த நோயின் கடுமையை என்னால் தாங்கமுடியவில்லை. வலி உயிர் போகிறது இந்த நோயிலிருந்து என்னை காப்பாற்று. என் சொத்தில் பகுதியை உன் ஆலயத்திற்கு எழுதிவைக்கிறேன் என்று அவன் அறிந்த ஆன்மீகம் அவனுக்கு போதிக்கப்பட்ட வகையில் வேண்டுகிறான். ஏதோ அவன் வினைப்பயன் நோய் தீர்ந்து விடுகிறது. உடனடியாக அவன் சொத்தின் ஒரு பகுதியை ஆலயத்திற்கு எழுதி வைக்கிறான். அது சொத்து அல்ல அந்த நோய்தான் சொத்தாக உரு மாறி சென்றிருக்கிறது. இவையெல்லாம் யாருக்குத் தெரியும்? ஞானத்தன்மையுள்ள மனிதனுக்கு தெரியும். சராசரி மனிதனுக்கு இது புரியாது.

ஆலயத்தில் இறைவனிடம் பூஜை செய்தாலும் இறைவனைப் பற்றிய எந்தவிதமான ஞானமும் இல்லாமல் இருக்கக்கூடிய மனிதர்கள்தான் அதிகம். எனவே ஆலயத்தில் பூஜை செய்கின்ற மனிதனாகட்டும் ஊழியம் செய்கின்ற மனிதனாகட்டும் ஆலயத்தை நிர்வாகம் செய்கின்ற அதிகாரியாகட்டும் அனைவரும் சராசரி மனிதர்களே. என்ன எண்ணுகிறான்? இத்தனை சொத்தும் இந்த ஆலயத்திற்கு எதற்கு? என்று. ஏதாவது ஒரு குறுக்கு வழியை கையாண்டு அதனை எடுத்து அனைவரும் பங்குபோட்டுக் கொள்கிறார்கள். எதை பங்குபோட்டுக் கொள்கிறார்கள்? அந்த மனிதனுக்கு வந்த வியாதியை பங்குபோட்டுக் கொள்கிறார்கள். இப்பொழுது இந்த வியாதி எங்கு செல்லும்? இறைவன் தாங்கிக் கொள்வார் என்று எழுதி வைத்தால் இறைவனிடம் செல்லவே மனிதன் அனுமதிப்பதில்லை. அந்தப் பாவத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று தானாக முன்வந்து வாங்கிக் கொள்கிறான். இறைவன் ஏனப்பா தடுக்கப்போகிறார்? தனக்கு வரவேண்டிய பாவத்தை தான் பெற்ற பிள்ளை வாங்கிக் கொள்கிறதே? அடடா இவன் அல்லவா என் பிள்ளை என்று மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விடுகிறார்.

ஆகையினால் இதுபோல் ஒவ்வொரு ஆலயம் மட்டுமல்ல பொதுவான விஷயங்களில் தவறு செய்கின்ற அனைவருமே பாவத்தை சேர்க்க வேண்டும் என பிறவி எடுத்தவர்கள். இவர்கள் உணர வேண்டும் என்றால் பல்வேறு மிருகங்களாக பிறந்து பல்வேறு இன்னல்களை அடைந்து பாவங்களை குறைத்துவிட்டு பிறகு மீண்டும் மனிதப் பிறவியாக பிறந்து முதலில் இருந்து வரவேண்டும். என்ன எடுத்து சொன்னாலும் கேட்கப் போவதில்லை. ஒரு சிலருக்கு இறைவன் அருள் இருந்தால் அந்திம காலத்தில் ஏதோ ஓரளவு திருந்துவார்கள். எனவே காலகாலம் இது நடந்தது நடந்து கொண்டிருக்கிறது இன்னமும் நடக்கும்.

கருடபகவான்

அமிர்த கலசத்திற்காக கருடபகவான் நாகர்களுடன் சண்டையிடும் காட்சி கருட விஷ்ணு கெஞ்சனா பண்பாட்டு பூங்காவில் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 396

கேள்வி: ஒரு குடும்பத்தில் தலைப் பிள்ளைக்கு பாவங்களும் மற்ற பிள்ளைகளுக்கு சொத்தும் சேரும் என்று கூறப்படுவது பற்றி:

இதுபோல் கருத்தை யாங்கள் ஏற்கவில்லையப்பா. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் அவர்கள் செய்த பாவங்களும் அவர்கள் பிறந்த குடும்பத்தின் வம்சாவழி பாவங்களும் கட்டாயம் போய் சேரத்தான் செய்யும். ஒரு குடும்பத்திலே பிறக்கும் குழந்தையின் ஆத்மா பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள் அதிகமாகவும் புண்ணியம் குறைவாக இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குடும்பத்தின் பாவங்களும் அந்தக் குழந்தைக்கு சேரும் பொழுது அது அதிகமாக துன்பமடைகிறது. அதே குடும்பத்தில் வேறு சில காரணங்களுக்காக இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் அதிகமாகவும் பாவங்கள் குறைவாகவும் இருக்கின்ற தருணத்திலே அந்த பூர்வ ஜென்ம புண்ணியங்களின் விளைவாக அந்தக் குடும்பத்தின் சாபங்களும் தோஷங்களும் அந்தக் குழந்தையை குறைவாகவே தாக்குகிறது அவ்வளவே.

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறுவது யாதென்றால் நல்விதமாய் எல்லா ஆலயங்களுக்கும் எம் சேய்கள் சென்று இயன்ற வழிபாடுகள் செய்க. இல்லத்திலும் வழிபாடு செய்க. இதுபோல் குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட பெருமை இருக்கிறது என்று மனிதன் எழுதி விட்டாலே அங்கு கூட்டம் அதிகமாகி விடுகிறது. யாங்கள் கூறிவிட்டால் இன்னும் அதிகமாக செல்வார்கள். எனவே எம்மைப் பொருத்தவரை எம் வழியில் வருகின்ற சேய்களுக்கு எல்லா ஆலயங்களும் ஒன்றுதான். அதுபோல் இன்னவன் குறிப்பிட்ட ஆலயமும் சிறப்புதான். குறிப்பாக கடுமையான மன உளைச்சலில் இருக்கின்ற பெண்கள் சென்று வழிபட்டு அவர்கள் கர்ம வினையை தணித்துக் கொள்ளலாம். அதற்காக ஆண்கள் செல்லக் கூடாது என்று பொருளல்ல. ஆண்களின் பாவகர்மாவும் குறைகின்ற இடம். குறிப்பாக இன்னவன் கேட்டதால் யாங்கள் கூறினோம். இதோடு மட்டுமல்லாமல் பாழ்பட்ட ஆலயங்களிலே இறைவன் அருள் இல்லையென்று தவறான கருத்து இருக்கிறது. ஆத்மார்த்தமான பூஜைகள் செய்து எந்த இடத்தில் அழைத்தாலும் இறைவன் அருள் உண்டு. எம் வழியில் வருகின்ற சேய்கள் பலரும் சென்று வணங்கக் கூடிய ஆலயத்தை நோக்கி செல்வதைவிட (அங்கும் செல்லட்டும்) பலரும் செல்லாத ஆலயமாக தேர்ந்து எடுத்து சென்று அந்த ஆலயத்தை நன்றாக பராமரிக்க உதவுவது ஏற்புடையது ஆகும்.

இதுபோல் வழிமுறையை தொடர்ந்து பின்பற்றி இறையருளை பெறுவதோடு தொடர்ந்து இறையருளை பெறுவதற்குண்டான சத்தியத்தை கடைபிடிப்பதும் தர்மத்தை கடைபிடிப்பதும் எத்தனை இன்னல்கள் துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் மன உறுதியோடு அதனை எதிர்கொண்டு தொடர்ந்து எம் வழியில் எம் பார்வையில் நல்ல சேய்களாக வாழ முயற்சி செய்ய இறைவன் அருளால் நல்லாசிகள் கூறுகிறோம். மீண்டும் இறைவன் அருளால் இதுபோல் பொது வாக்கினை கூறும் வரை அனைவரும் இறைவன் வழியிலே மனம் தடுமாறாது வர மீண்டும் மீண்டும் நல்லாசிகளைக் கூறுகிறோம். ஆசிகள் ஆசிகள் பூரண ஆசிகள்.