ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 293

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒன்று உருவாகிறது என்றாலே பிறகு அது இல்லாமல் போய்விடும் என்ற பொருளும் உண்டு. சைவ சித்தாந்தத்தை நோக்கினால் தத்கர்ய வாதம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே இறை என்றும் எப்போதும் இருக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆத்மாவும் அப்படித்தான். இன்று நீ அன்று நான் எனவே இந்த தத்துவத்தினுள் ஒரு மனிதன் கால் பதித்துவிட்டால் அவனுக்கு காலம் இல்லை இடம் இல்லை உறவில்லை கர்மா இல்லை வேதனை இல்லை சோதனை இல்லை எதுவும் இல்லை. இப்பொழுது பார்க்கின்ற அனைத்தும் ஒரு மாயத் தோற்றம் என்பது அப்பொழுது புரியும். கேள்விகளே இல்லாத ஒரு நிலை ஏற்படும்.

மனிதர்களிடம் உள்ள குறைகளில் பெரும் குறை என்ன என்றால் பேசிக் கொண்டே இருப்பதுதான். மனிதர்கள் மௌனத்தைக் கடைபிடித்தால் பல கேள்விகளுக்கு பதில் உள்ளேயே தோன்றும். எனவே கூடுமானவரை பேசவேண்டிய நாழிகை தவிர வேறு நாழிகைகளில் மௌனமாக செயல்படுவது பேசினால் அர்த்தம் உள்ளதாகவும் பிறருக்கு ஆனந்தம் தரக்கூடியதாகவும் நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தேவையில்லாத அரசியல் நிகழ்வுகள் அசுர மனிதர்களைப் பற்றிப் பேசுவது இவையெல்லாம் மனித சக்தியை விரயமாக்கும். எனவே கூடுமானவரை மௌனமாக இருந்தால் சிக்கல்கள் யாருக்கும் எழாது.

சுலோகம் -163

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-1

முன்னுரை

ஞான என்றால் ஞான யோகம். கர்ம என்றால் கர்ம யோகம். சந்யாச என்றால் ஞான மார்க்கம். கிருஷ்ணர் தாம் அவதரித்த ரகசியத்தையும் கர்ம யோகத்தையும் சந்யாச யோகத்தையும் சொல்லி உண்மையான ஞானத்தைப் பற்றி விவரிக்கிறார். மேலும் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் கர்ம யோகத்தில் ஞான யோகமும் அடங்கியே உள்ளது என்பதையும் கர்ம யோகத்தின் தன்மைகள் பிரிவுகள் அதில் உள்ள ஞான யோகத்தின் முக்கியத்துவம் பற்றியும் இந்த பகுதியில் விவரிக்கிறார்.

சுலோகம் -163

இந்த அழிவற்ற யோகத்தை சூரியனுக்கு சொன்னேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுவுக்குச் சொன்னார். மனு தன் குமாரனான இஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா கர்ம யோகங்களை உனக்கு தொடர்ந்து சொல்லியிருக்கிறேன். நீ சண்டையிட வேண்டும் என்ற காரணத்திற்காக இதனை இப்போது சொல்லவில்லை. உலகம் படைக்கப்பட்ட போதே இந்த யோகத்தை சூரியனுக்கு சொல்லியிருக்கிறேன். சூரியன் தன் புதல்வனான வைவஸ்வத மனுக்கு சொல்லியிருக்கிறான். வைவஸ்வத மனு அவன் புதல்வனான இஷ்வாகு மன்னனுக்கு சொல்லியிருக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 292

கேள்வி: ஒரு அன்பர் வியாபாரம் சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு குருநாதரின் அருள்வாக்கு :

அன்னை மகாலட்சுமிக்கு உண்டான எல்லா வகையான பூஜைகளையும் இயன்ற போதெல்லாம் ஆலயத்திலோ இல்லத்திலோ செய்து கொள்ளலாம். இது பொதுவாக யாங்கள் (சித்தர்கள்) எம்மை நோக்கி கேட்கப்படும் வினாக்களுக்கு கூறுகின்ற பதில். இன்னொன்று தத்துவார்த்த விளக்கம் என்ன என்றால் ஒரு மாணவன் இருக்கிறான். அவன் ஒரு தேர்வு எழுதி பூர்த்தியடைந்து வந்தவுடன் இந்த இந்த தேர்வுகளிலே இன்ன குறைகள் நிகழ்ந்து விட்டன. எனவே எனக்கு மதிப்பெண் குறைந்து விடும். எனவே மதிப்பெண் கூடுதலாகப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறான். அந்த நிலையிலே தேர்வின் மதிப்பெண் பட்டியல் வருகிறது. பார்த்தால் மதிப்பெண் குறைந்து இருக்கிறது. இப்பொழுது இவன் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று வரும் வரையில் இவன் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? என்று கேட்டால் இவன் எதைக் கூறுவான்? அதிகமாக வரும் என்று தான் எதிர்பார்க்கின்ற மதிப்பெண்ணை கூற முடியுமா? அல்லது குறைந்த அளவு பெற்ற மதிப்பெண்ணை கூற முடியுமா?

இதைத்தான் பூஜைக்கும் புண்ணியத்திற்கு ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே பிறவிதோறும் பெற்று செய்து அனைத்தையும் நுகர்ந்து அது போக இப்பிறவிக்கு வந்துள்ள மனிதர்கள் ஒன்றை மட்டும்தான் எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். அது இல்லையே இது இல்லையே என்று எண்ணுவதை விட பிறவி இறைவன் சித்தர்கள் நவக்கிரகம் கர்மா போன்ற வார்த்தைகளை செவிமடுத்து ஓரளவு அந்த வழியில் வர இறைவன் அனுமதி தந்திருக்கிறார் என்றுதான் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமே தவிர இருக்கின்ற இந்த மதிப்பெண்ணுக்கு என்ன உண்டோ அதுதான். இதனையும் மீறி ஒருவன் பூஜைகள் செய்தால் அதற்குண்டான பலன் பின்னால்தான் கிட்டும்.

திருப்பதி கோவிலில் உள்ள கடப்பாரை

திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும் போது பிரதான வாசலின் நுழைவாயிலில் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை உள்ளது. திருப்பதி திருமலையின் தண்ணீர்த் தேவையைத் தீர்த்து வைக்கும் குளமான கோகர்ப்ப ஜலபாகம் என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது. இக்கடப்பாற்றை பெருமாளின் திருமேனியை ஸ்பரிசித்து இருக்கிறது.

திருமலையில் இன்றைக்கும் மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனத்தை முதலில் அமைத்தது அனந்தாழ்வான். அதன் நீர் தேவைக்கான குளத்தையும் ஏற்படுத்தியவர் இவர். ஏழுமலை ஆண்டவனுக்கு சேவை செய்யும் பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் திருமலைக்கு வந்து சேர்ந்து திருமலையில் நந்தவனம் அமைக்க ஆரம்பித்தார். மண் வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயர் நிலைக்கும்படி ராமாநுஜ நந்தவனம் என்று பெயர் வைத்தார். (இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.) கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவு செய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே இருந்த பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்ணை உயரமாக இட்டு குளத்தை ஆழப்படுத்தினார். குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார். மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டி விட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன் அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால் அனந்தாழ்வானோ நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக மறுத்து விட்டார். கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் தாயே நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப் பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை. கூடையை மாற்றிக் கொடுத்தாள். இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே என்று மனைவியைக் கேட்க சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் என்று பதில் சொல்லி சமாளித்தாள். சிறிது நேரம் சென்றதும் அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார்.

சிறுவன் சிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக் கொண்டிருந்தான். இதனால் கோபம் தலைக்கேற கையில் இருந்த கடப்பாரையால் சிறுவனை அடிக்க முற்பட்டார். கடப்பாறை சிறுவனின் கீழ்த்தாடையில் பட்டு ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில் அந்தச் சிறுவன் ஓடிப் போய் விட்டான். மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள் என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்து வந்தனர். பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். அவருக்கு மட்டும் தான் மண் சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள். சுவாமி என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன் என்னை மன்னித்தருள்க என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான். பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும் என்று அசரீரியாகக் கேட்டார். சரி ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது? என்று அர்ச்சகர்கள் குழம்பினர். சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்று விடும் என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

சுலோகம் -162

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-43

நீண்ட புஜங்களை உடையவனே இவ்விதம் புத்தியைக் காட்டிலும் ஆத்மா மிகவும் மேலானவன். நுண்ணியவன் பலமுள்ளவன் என்று அறிந்து புத்தியினால் மனதை வசப்படுத்தி காமம் என்ற வெற்றி கொள்ள முடியாத சத்ருவைக் கொன்று விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உன்னுடைய உறுதியான தோள்களை வைத்து எதிரியை வீழ்த்துவது போல் மேலான நுண்ணியவானான பலமுள்ள உன்னுடைய புத்தியை வைத்து கர்ம யோகத்தின் படி செய்யும் காரியங்களை பற்றில்லாமல் செய்து மனதை வசப்படுத்தி ஆசை என்ற வெற்றி கொள்ள முடியாத எதிரியை அழித்துவிடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 291

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எல்லோருமே தர்மம் என்பதை தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நிறைய தனம் இருந்தால்தான் தர்மம் செய்ய முடியும். எங்களுக்கு நிறைய தனத்தைக் கொடுத்தால் தர்மம் செய்ய மாட்டாமோ? என்று வினா எழுப்புகிறார்கள் மாந்தர்கள் (மனிதர்கள்). தனம் இருப்பவன் தனத்தைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். தனம் இல்லாதவன் பிறருக்கு உடல் உழைப்பைக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். உடலால் உழைக்க முடியவில்லை தனமுமில்லை என்பவர்கள் எண்ணங்களால் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளட்டும். மனதில் கொள்ள வேண்டும். எக்காலத்திலும் அதிகமதிகம் தனத்தை வைத்துக் கொண்டு இது பிற்காலத்தில் நமக்கு உதவும் நமது வாரிசுகளுக்கு உதவும். நாம் உடல் தளர்ந்து போய் விட்டால் இந்த தனத்தை வைத்துக் கொண்டுதானே வாழ வேண்டும்.

உழைக்கின்ற காலத்திலே நன்றாக உழைத்து சேர்த்துக் கொண்டால்தானே உழைக்க இயலாத காலத்திலே இந்த தனம் நமக்கு உதவும் என்றெல்லாம் மனிதன் குருட்டு வேதாந்தம் பேசி தனத்தை இறுகப் பிடித்துக் கொள்கிறான். உடலே தளர்ந்த பிறகு கையிலே தனம் இருந்தால் அந்த தனத்தை வைத்து ஒரு மனிதனை ஏவினால் அவன் உதவி செய்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆக எந்தெந்த வழியிலெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் தனத்தால் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வாக்காலும் செயலாலும் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமே சில தனவான்கள் ஆலயம் கட்டுவதற்கு லகரம் (லட்சம்) லகரமாக ஈவான் (கொடுப்பான்). தன்னிடம் வேலை பார்க்கும் ஒர் அடிமைக்கு ஏக தனம் கூட அதிகம் தரமாட்டான். இவன் இறைவனை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இறைவன் இவன் பக்கம் ஒரு போதும் திரும்பப் போவதில்லை உணர வேண்டும். ஒரு மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் கஷ்டங்களை தீர்க்க சக்தி இருந்தும் வசதி இருந்தும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவனால் இறையருளைப் பெற இயலாது. ஒருவனுக்கு அதிக செல்வம் ஒருவனுக்கு குறைந்த செல்வம் ஒருவனுக்கு செல்வமற்ற நிலை இவ்வாறு இருப்பதன் காரணம் இறைவனுக்கு எந்த பேதமுமில்லை. அவனவன் செய்த பாவ புண்ணியத்தின் பலன்தான் காரணம்.

புண்ணியத்தின் பலனாக கிடைத்த செல்வத்தை வைத்து மேலும் புண்ணியத்தை சேர்க்காமல் பாவத்தைச் சேர்த்துக் கொண்டால் பிறகு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் செல்வம் என்பது அவனுக்கு கிட்டாப் பொருளாக போய் விடும். அதை உணர்ந்து பலருக்கு கிடைக்காத வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. எத்தனையோ மாந்தன் (மனிதன்) நல்ல கல்வி கற்றும் பணியில்லாமல் அலையும் போது நமக்கு நல்ல பணியை இறைவன் தந்திருக்கிறான். அந்தப் பணியை செவ்வனே நேர்மையாக செய்து அதன் மூலம் கிடைக்கும் தனத்தை நமக்கும் பயன்படுத்திக் கொள்வோம். நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன்படுத்துவோம் என்ற எண்ணம் வேண்டும். அதனை விட்டு விட்டு இந்த தனம் எனக்காக இறைவன் தந்தது. நான் உழைத்து ஈட்டியது. இதை எதற்காக பிறருக்கு தர வேண்டும்? அவனவன் தலையெழுத்து விதி அவன் கஷ்டப்பட வேண்டும் என்று இருக்கிறது என்றெல்லாம் எண்ணி ஒருவன் சும்மாயிருந்தால் வாளாயிருந்தால் அவனுக்கு காலப் போக்கில் சேமிப்பு இருக்கும் வரை நல்ல வாய்ப்பு இருக்கும். அதன் பிறகு குறைந்து விடும். எனவே ஒரு மனிதன் இறை வழிபாடு செய்கிறானோ இல்லையோ தன்னுடைய உடலில் உள்ள அணுவில் எல்லாம் தர்ம சிந்தனை பரவும்படி செய்ய வேண்டும். வேண்டுமே தர்மத்தை செய் என்று சொல்லி செய்தால் கூட தர்மத்திற்கு ஒரு களங்கம்தான். ஒரு மனிதன் சுவாசிப்பது போல அன்னம் ஏற்பது போல செயல்களை செய்வது போல தர்மம் என்பது இயல்பாக இருக்க வேண்டும்.

சுலோகம் -161

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-42

புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை பலமுள்ளவே நுண்ணியமானவை. இந்த புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. எது புத்தியைக் காட்டிலும் மேலானதோ அதுவே ஆத்மா.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய புலன்கள் பலத்துடன் கண்களால் பார்க்கக் கூடிய உடலை தன் விருப்பத்திற்கு இழுத்துச் சென்று வழி நடத்திச் செல்கிறது. ஆகவே உடலை விட புலன்களே மேலானவை என்று பலர் கூறுவார்கள். இந்த புலன்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. இந்த மனதையும் புத்தியையும் சரியாக பயன்ப்படுத்தி ஆத்ம விசாரம் செய்தால் தமக்குள் இருக்கும் ஜீவாத்மாவான இறைவனை உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ஆத்மா அனைத்தையும் விட மேலானதாக இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 290

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஆதியந்த பராபரத்தின் திருவை சாட்சி. அன்பான மனோஹரியின் பாதம் சாட்சி. சோதி எனும் சுடர் ஒளியின் திருவடி சாட்சி. சொல்லொண்ணா ரகசியங்கள் அடங்கி நிற்கும் பரம்பொருள் சாட்சி. சாட்சியே மெய் சாட்சியே மூலம்தானப்பா. சாட்சிக்குத் தெரியாது இங்கு எக்காட்சியும் கிடையாதப்பா. சாற்றுங்கால் சாட்சியறியா காட்சி ஏதேனும் உண்டா? என்றால் ஏதும் இல்லை. காட்சிக்கும் தெரியும் எது மெய்யான மனசாட்சி என்று. சாட்சிக்கும் சாட்சியாய் நின்று காத்து அருளுகின்ற அந்த மெய் சாட்சியின் காட்சிதனை காண வேண்டும் என்பதையே மெய் நோக்கமாகக் கொள்ள வேண்டும். மாந்தரினம் (மனித இனம்) அதை விட்டு விட்டு தனம் தேடி அலைவதும் அதுபோல வாழ்வதும் அது வாழ்க்கையே மெய் என இருப்பதும்தான் கவலைக்குரிய சூழல் அப்பா. மற்றுமொரு வினா எழக்கூடும். இந்த நில உலகிலே மாந்தன் (மனிதன்) தனம் இல்லாமல் எப்படி வாழ்வது? அதுபோல வினாக்கள் கால காலம் இருப்பதுதான். மாந்தர்கள் (மனிதர்கள்) நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தனத்தை தேடாதே விட்டுவிடு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அழிகின்ற அந்த தனத்தை சேர்க்கிறேன் என்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் யாம் கூறுகிறோம்.

தனம் சேர்க்கிறேன் என்று எதாவது வழியிலே தனம் சேர்ந்தால் போதும் என்று பாவத்தை சேர்த்துக் கொண்டால் பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதே மெய்யாகும். ஆகுமப்பா ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ இல்லையோ எம்மை நம்புகிறானோ இல்லையோ எத்தனையோ பிரச்சினைகளை சிக்கல்களை எதிர்கொள்கிறான். உறவு சிக்கல் பண சிக்கல் ருண (கடன்) சிக்கல் பிணி சிக்கல் தச வழி (தொழில் வழி) சிக்கல்கள் பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம் மிகுந்த புண்ணியத்தை சத்தியத்தை பொறுமையை தர்மத்தை பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ ஏழையோ நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால் எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ பாவத்தை செய்தானோ அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும். ஆகுமே எத்தனைதான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனைதான் உபதேசம் செய்தாலும் கூட மாந்தன் (மனிதன்) செவியில் (காதில்) இவையெல்லாம் ஏறாது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். சுருக்கமாக சொல்லப் போனால் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் செய்யா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகுமப்பா.

சுலோகம் -160

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-41

ஆகவே அர்ஜூனா நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற பெரும் பாவியான இந்த காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்து விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆசைகள் ஐந்து புலன்களின் வழியாக மனிதனை மயக்கி ஞானத்தையும் அந்த ஞானத்தை அடைய வேண்டிய வழிமுறையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற முடியாதபடி தடுக்கிறது. ஆகவே எதனே செய்தாலும் பற்றில்லாமல் செய்து கர்ம யோகத்தில் ஈடுபட்டு முதலில் ஐந்து புலன்களை தன் வசப்படுத்த வேண்டும். அதன் வழியாக இந்த ஆசைகளை அழித்து விடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகத்தின் கடைபிடித்து ஆசைகளை அழித்து புலன்களை வசப்படுத்தி விட்டால் இறைவனை அடையக் கூடிய ஞானத்தையும் அந்த ஞானத்தை அடையகூடிய கூடிய வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 289

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரு மகானின் வழிகாட்டுதல் இருந்தாலும் ஏன்? ஆண்டவனே அருகில் இருந்தாலும் விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கட்டும். மனிதன் தன் கடமையை மனம் சோர்ந்து விடாமல் செய்து கொண்டே இருந்திட வேண்டும். கடமை என்றால் வெறும் லோகாய கடமை மட்டுமல்ல. பாவ புண்ணியம் என்ற கர்மக் கணக்கிலே பாவக் கணக்கு அதிகமாக பெற்றதனால் குழப்பமும் தெளிவுமாக வாழக்கூடிய நிலைமை கொண்ட மனிதர்கள் பாவங்களை குறைக்க எல்லா வழிகளையும் அன்றாடம் முயற்சி செய்திட வேண்டும். அது பிணியாக வாட்டி குறையலாம். அது கடினமென்றால் முன்னதாகவே கூடுமானவரை சிந்தித்து தேகத்தை பராமரிப்பது போல ஏழைப் பிணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தும் கூடுமானவரை பிணி அவஸ்தையை குறைக்க முயற்சி செய்யலாம். பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்து அதன் மூலம் சில பாவங்களை குறைக்கலாம். இப்படி ஒவ்வொரு முறையிலும் மனிதன் எல்லாவகையான தர்மங்களையும் எதிர்பார்ப்பு என்ற நிலை கடந்து செய்ய கட்டாயம் பாவவினைகள் குறையும். பாவ வினைகளின் அளவு குறைய குறையவே மனிதனுக்கு நல்விதமான இறை ஞானத் தெளிவு ஏற்படும். இது வருகிறது அல்லது வந்து கொண்டிருக்கிறது என்பதை மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது? என்றால் விதவிதமான அளவு கோல் மனிதப் பிறவியை பொறுத்து இருக்கிறது என்றாலும்கூட மீண்டும் பாவங்கள் செய்யத் தோன்றாத ஒரு நிலையும் அப்படி தவிர்க்க முடியாமல் செய்து விட்டால் பாடாய் படுத்துகின்ற நிலையும் அதனையும் தாண்டி மனமும் எண்ணங்களும் எப்பொழுதும் காற்றை விட லேசான எடையற்ற நிலையில் இருப்பதுபோல் தோன்றும்.

எது நிகழ்ந்தாலும் அதனால் மனம் பாதிக்கப்படாமல் ஒரு மூன்றாவது மனிதனுக்கு நிகழும் பொழுது பார்வையாளனாக இருந்து பார்க்கின்ற சராசரி மனிதனைப்போல தன்னுடைய தேகத்தையும் தன்னுடைய தேகம் எடுத்த பிறகு நடக்கின்ற வாழ்க்கை நிகழ்வுகளையும் பார்க்கின்ற நிலை ஏற்படும். எனவே இறை ஞானத்தெளிவு வராத வரையில் மனிதனுக்குள் எல்லாவகையான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும் செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும் அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற முறையான யோகப் பயிற்சியினாலும் அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும் கட்டாயம் பாவ வினைகள் குறைக்கின்ற வழிமுறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக்காட்டப்படலாம். அதனை உறுதியாக பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது மாந்தர்களின் கடமையாகும்.