13. கடல் சுவற வேல் விட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கடல் சுவற வேல் விட்ட படலம் நூலின் பதிமூன்றாவது படலமாகும்.

சுந்தரபாண்டியனார் தடாதகை ஆகியோரின் குமரனான முருக்கடவுளை ஒத்த உக்கிரபாண்டியன் மதுரையை சிறப்புற ஆட்சி செய்தார். மதுரையின் வளம் குன்றாது இருக்க உக்கிரபாண்டியன் 96 வேள்விகளைச் செய்து முடித்தார். இன்னும் நான்கு வேள்விகளைச் குறைவின்றி செய்து முடித்தால் உக்கிரபாண்டியனுக்கு இந்திரப்பதவி கிடைத்து விடும் என்று எண்ணி தேவர்களின் தலைவனான இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது பொறாமை கொண்டான். இந்திரனின் பொறாமையால் அவனுடைய மனதில் சூழ்ச்சி ஒன்று உருவானது. அதன்படி அவன் கடலரசனை அழைத்து மதுரையை அழிக்கும்படி கூறினான். கடலரசனும் இந்திரனின் பேச்சுக்கு உடன்பட்டு மதுரையை அழிப்பதாக இந்திரனுக்கு வாக்குறுதி அளித்தான். கடலரசன் இந்திரனுக்கு அளித்த வாக்குறுதிப்படி மதுரை அழிப்பதற்காக பெரும் சீற்றத்துடன் ஊழிக் காலத்தினை ஒத்த அழிவினை மதுரையில் உண்டாக்குவதற்காக பொங்கி எழுந்து மதுரையை நோக்கி வந்தான். கடலரசன் நள்ளிரவில் மதுரையின் கிழக்குப் பகுதியை அடைந்த போது சொக்கநாதர் உக்கிரபாண்டியனின் கனவில் சித்தர் வடிவில் தோன்றினார். பாண்டியனே உன்னுடைய மதுரை நகரினை அழிக்கும் பொருட்டு கடலானது பொங்கி எழுந்து வருகிறது. நீ உன்னுடைய வேல்படையை கடலின் மீது ஏவி அதனை வெற்றி பெற்று மதுரையைக் காப்பாயாக என்று எச்சரிக்கை வார்த்ததை கூறி மறைந்தார்.

சித்தரின் எச்சரிக்கை வார்த்தை கேட்டு கண் விழித்த உக்கிரபாண்டியன் தனது அமைச்சர்களோடு கலந்து ஆலோசித்து விரைந்து சென்று பேரொலியோடு வருகின்றன கடலினைப் பார்த்து வியந்து நின்றான். அப்போது பாண்டியனின் கனவில் வந்த சித்தமூர்த்தி நேரில் அவ்விடத்திற்கு வந்தார். பின் உக்கிரபாண்டியனை நோக்கி பாண்டியனே இனியும் காலம் தாழ்த்தாது உன்னிடம் உள்ள வேல் படையைக் கொண்டு பொங்கிவரும் கடலினை வெற்றி கொண்டு மதுரையை விரைந்து காப்பாய் என்று கூறினார். சித்தரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் உக்கிரபாண்டியன் தன்னிடம் இருந்த வேல் படையின் கூரியமுனை கடலில் படுமாறு வலஞ்சுழித்து வீசி எறிந்தான். கூரிய வேலின் நுனி கடலில் பட்டவுடன் கடலானது பேரோலியுடன் வற்றி வலிமை இழந்தது. உக்கிரபாண்டியனின் கணுக்கால் அளவுக்கு கடல் நீர் குறைந்தது. மதுரைக்கு கடலினால் வந்த பெரும் ஆபத்து விலகியது. உக்கிரபாண்டியனின் அருகில் நின்றிருந்த சித்தர் வைகைக் கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ப்பாய் என்று அருளினார். பின் வானத்தில் உமையம்மையோடு இடப வாகனத்தில் காட்சியருளினார். உக்கிரபாண்டியன் அவரைத் துதித்துப் போற்றினான். இறைவனார் திருக்கோவிலுள் ஜோதி வடிவில் புகுந்தருளினார். உக்கிரபாண்டியனும் இறைவனாரை திருகோவிலினுள் சென்று வழிபாடு செய்தான். பல விளை நிலங்களை திருகோவிலுக்கு சொந்தமாக்கிய உக்கிரபாண்டியன் மதுரையை இனிது ஆட்சி புரிந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமிழுக்கு கடைச் சங்கத்தை ஏற்படுத்தி அருளினார். மேலும் வஞ்சனை எண்ணம் கொண்டவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு தீயது செய்தால் தீய செயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 431

கேள்வி: பாடல்பெற்ற ஸ்தலங்களில் ஐந்தினை மயான ஸ்தலங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவற்றிற்கும் பொதுவாக வழிபடக்கூடிய ஸ்தலங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

இறைவனின் கருணையாலே இதுபோல் மனிதர்கள் ஒருவகையில் அச்சப் படக்கூடிய இடம் விரும்பாத இடம் என்று மயானத்தை கூறலாம். ஆனால் மயான அமைதி என்ற வார்த்தையை மனிதனே கூறுவான். ஏனென்றால் அங்கு செல்லுகின்ற மனிதர்கள் இயக்கமற்ற நிலையிலே ஏதும் செய்ய இயலாத நிலையிலே அமைதியடைந்து விடுகிறார்கள். ஒரு மனித உடல் தேவையற்ற நிலைக்கு ஆளான பிறகு அதாவது ஆத்மாவை விட்ட பிறகு அந்த உடல் சென்று அடங்கக் கூடிய இடத்திற்கும் மனிதன் உயிரோடு சென்று வழிபடக் கூடிய ஆலயத்திற்கும் ஒரேவிதமான பொருள் வரக் கூடிய மயானம் என்ற வார்த்தையை எதற்காக வைத்தார்கள்? மனிதன் சிந்திக்க வேண்டும். உயிர் இல்லாத பொழுது இந்த உடல் அடக்கத்தோடு இருப்பதைவிட உயிர் இருக்கும் பொழுதே அடக்கமாக இருப்பதற்குண்டான வழிமுறையை கற்றுத் தரக் கூடிய ஆலயங்களில் ஒன்றுதான் அந்த ஆலயம். மயானத்தில் ஆடாது அசையாது ஒரு இருக்கும் மனிதன் அதன் பிறகு அவன் எந்த பாவமும் செய்வதில்லை. அவனால் செய்ய முடிவதில்லை. உடலோடு இருக்கும் பொழுது எத்தனையோ பாவங்களையும் அனாச்சாரங்களையும் செய்கிறான்.

நன்மைகளையும் செய்கிறான் இல்லையென்று கூறவில்லை. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்றால் அந்த இடத்தில் ஞானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மயானத்தோடு தன்னை தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார் முக்கண்ணன். ஒன்றுமில்லை எல்லாம் மாயை என்பதை மனிதன் உணர வேண்டும் என்று. ஆனால் மனிதன் என்ன செய்கிறான்? அங்கும் சென்று மனிதன் தன் ஆதிக்கத்தை காட்டி இறைவனை பின்னே தள்ளி விடுகிறான். இது இன்ன பிரிவில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை. இது இன்ன ஜாதியில் பிறந்தவன் எரிக்கப்பட வேண்டிய மேடை என்றெல்லாம் பிரித்து வைக்கிறான். அதைத் தாண்டி இன்னொன்று செய்கிறான். ஒரு குழி தோண்டி இந்த உடலை மூடிவிட்டு ஒரு சிறு கட்டிடம் எழுப்பி அவன் படித்த பட்டங்களையெல்லாம் போட்டு வைக்கிறான். இதையெல்லாம் இறைவன் பார்த்து ஓ இவன் இந்தளவு படித்திருக்கிறானா? இவனை அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கப் போகிறாரா என்ன? மனிதனின் அறிவு வளரவே மறுக்கிறது என்பதுதான் எங்களின் ஆதங்கம். எத்தனை சொல்லித் தந்தாலும் நான் கீழேதான் இருப்பேன் என்பதுதான் மனிதனின் அறியாமை இருக்கட்டும்.

மனிதனின் அறியாமைதான் இந்த உலக இயக்கத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த உலகிலே அத்தனை பேரும் ஞானம் பெற்றுவிட்டால் இறைவனுக்கே அலுத்துவிடுமப்பா. மீண்டும் இன்னவனின் வினாவிற்கு வருகிறோம். அந்த மயானத்திலே ஒரு மனிதனுக்கு ஞானம் கிட்டும். நல்விதமான ஞானத்தை எத்தனையோ சித்தர்கள் மயானத்திலே அடைந்திருக்கிறார்கள். பிராந்தையார் எனும் சித்தனுக்கு ஞானம் மயானத்தில்தான் கிடைத்தது. மயானத்தில்தான் அவன் தவம் செய்து ஞானத்தை பெற்றான். அப்படியொரு ஞானம் மயானத்தில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு சில ஜாதக விதிகள் வேண்டும். எல்லோரும் அதற்காக மயானம் சென்று உயிரோடு இருக்கும் பொழுதே தியானம் செய்ய வேண்டாம்.

12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம் நூலின் பன்னிரண்டாவது படலமாகும்.

உக்கிரவர்மனின் திருமணத்திற்காக பெண் தேடுதல் நடைபெற்றது. மதுரையை அடுத்த மணவூரில் இருக்கும் அரசனான சோமசேகரனின் மகளான காந்திமதியை உக்கிரவர்மனுக்கு மணமகளாகத் தேர்வு செய்து திருமணம் முடிக்க இறைவனான சுந்தர பாண்டியரும் தடாகையும் கருதினர்கள். அன்றிரவு சோமசேகரனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் மதுரையை ஆண்டு வரும் சுந்தரபாண்டியனாரின் திருமகனான முருகனைப் போல் இருக்கும் உக்கிரவர்மனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக என்று கூறினார். இதனைக் கேட்ட சோமசேகரன் விழித்து எழுந்தான். இறைவனின் ஆணையை நிறைவேற்ற விடியலுக்காக காத்திருந்தான். பின் விடிந்ததும் நித்திய கடமைகளை முடித்து தன் சுற்றத்தார் மற்றும் மகளுடன் மதுரையை நோக்கிச் சென்றான். முந்தைய நாளில் முடிவு செய்தபடி அமைச்சர்கள் சுந்தரபாண்டியரின் உறவினர்களோடு மதுரையிலிருந்து மணவூரை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் எதிர்ப்பட்ட சோமசேகரனைக் கண்டு உன்னுடைய புதல்வியை முருகக்கடவுளைப் போன்ற உக்கிரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடுப்பாயாக என்று கேட்டனர். சோமசேகரனும் சொக்கநாதரின் கட்டளையும் அதுவே. ஆகையால்தான் என்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி வருகிறேன் என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான். அமைச்சர்கள் திருமணத்திற்கான சோமசேகரனின் சம்மதத்தை சுந்தரபாண்டியனாருக்கு தெரிவித்தனர்.

சோமசேகர மன்னன் காந்திமதி மற்றும் சுற்றத்தாரை அழைத்துக் கொண்டு சுந்தரபாண்டியனாரின் அமைச்சர்கள் மதுரையை அடைந்தனர். சோமசுந்தரரும் பெண் வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அரண்மனை ஒன்றில் தங்க வைத்தார். பின்னர் அமைச்சர்கள் அனைவரும் கூடி திருமணநாளை நிச்சயித்தனர். மற்ற அரசர்களுக்கு திருமண ஓலையை அனுப்பினர். மதுரை மக்களுக்கு திருமண முரசினை அறிவித்து திருமணச் சேதியை அறிவித்தனர். மதுரை மக்கள் உக்கிரவர்மனின் திருமணத்திற்காக வாழை மரங்கள் மற்றும் கமுகு மரங்களைக் கொண்டு தோரணங்கள் கட்டி தங்கள் வீட்டினையும் மதுரை நகரினையும் அழகுபடுத்தினர். உக்கிரவர்மனின் திருமணத்திற்கு மன்னர்கள் தேவர்கள் முனிவர்கள் தவசிகள் உள்ளிட்டோர் மதுரைக்கு வருகை தந்தனர். தேவர்களின் குருவான வியாழபகவானும் காந்திமதி சமுத்திரிகா லட்சணம் நிறைந்த‌ பெண் என்று பெருமையாகக் கூறினார். உக்கிரவர்மன் திருமண நாளன்று வைகை ஆற்றின் நீரில் நீராடி மணமகனாக அலங்காரம் செய்து கொண்டு மணமேடையை அடைந்தார். காந்திமதியையும் மணப்பெண்ணாக அலங்கரித்து உக்கிரவர்மனின் அருகில் அமரச் செய்தனர். சோமசேகரப் பாண்டியன் தனது பெண்ணை உக்கிரவர்மனுக்கு தாரை வார்த்து கொடுத்து பல பரிசுப் பொருட்களையும் வழங்கினான். இவ்வாறாக உக்கிரவர்மன் காந்திமதி திருமணம் இனிது நடைபெற்றது. அறுசுவை உணவுகள் திருமணத்திற்கு வருகை புரிந்தோர்களுக்கு திருமண விருந்தாக வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் சுந்தரபாண்டியனாரையும் தடாதகையையும் வணங்கி விடைபெற்றனர்.

ஒரு நாள் சுந்தரபாண்டியனார் உக்கிரவர்மனை அழைத்து மகனே உனக்கு இந்திரனும் கடல் அரசனும் பெரும் பகைவர்களாக வருவார்கள். இந்திரனால் ஆபத்து வரும்போது அவனுடைய முடி சிதறும் வண்ணம் இந்த வளையினைக் கொண்டு எறிவாயாக. கடலரசன் மதுரையை அழிக்க வரும் போது இந்த வேலை எறிந்து அவனைத் தடுப்பாயாக. மேருவின் செருக்கினை அழிக்க இந்த செண்டினால் அடிப்பாயாக என்று கூறி மூன்று படைக் கருவிகளை உக்கிரவர்மனுக்கு அருளினார். உக்கிரவர்மனும் தன் தந்தையை வணங்கி அப்படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டான். பின்னர் உக்கிரவர்மனுக்கு அரசனாக முடிசூட்டிய சுந்தரபாண்டியனார் வாய்மை வழியே நின்று சிறப்பான முறையில் ஆட்சி செய் என்று கூறி ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைந்தார். அன்றிலிருந்து உக்கிரவர்மன் உக்கிரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். பின்னர் சுந்தரபாண்டியனார் தன்னைச் சுற்றி இருந்த சிவகணங்களுக்கு முந்தைய வடிவத்தினைக் கொடுத்து தடாதகையுடன் மதுரை திருக்கோயிலினுள் சென்று சுந்தரேஸ்வரராகவும் மீனாட்சி அம்மனாகவும் எழுந்தருளினார்கள். உக்கிரபாண்டியனார் சிறப்புடன் ஆட்சி புரிந்து வந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பிள்ளைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து நல்ல குணங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்தை நல்வழியில் ஈட்டச் செய்து நல்ல மண வாழ்க்கையையும் அமைத்து தருவது பெற்றோரின் கடமை என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 430

தேவராய ஸ்வாமிகள் இயற்றிய சத்ருசம்ஹார வேல் பதிகம் பற்றி:

இறைவனின் கருணையாலே சத்ரு சம்ஹார த்ரிசதியை ஓது என்று யாங்கள் கூறுவோம். பலமான எதிர்ப்புகளும் எதிரிகளின் தொல்லையும் எங்கிருந்து வருகிறது? இவன் பாவ கர்மாவில் இருந்துதானே வருகிறது. எனவே பாவங்களை குறைத்துக் கொள்ள கூறப்படுகின்ற வழிபாடுகளில் இதும் ஒன்று. அதைப் போல இன்னவன் வினவிட்ட அன்னவன் (தேவராய ஸ்வாமிகள்) கூறிய அதும் நல்விதமான மாற்றத்தை மனித மனதிலே ஏற்படுத்தும். எதிர்ப்பு வெளியில் இருந்து வந்தாலும் இவன் மனம் பக்குவம் அடைந்து விட்டால் எதிர்ப்புகள் குறைந்து விடும். அதற்கு முதலில் இந்த வழிபாடு உதவும். மனம் சாந்தமடையத்தான் இந்த வழிபாடுகள். இதைப்போல சுதர்சன வழிபாட்டையும் செய்யலாம்.

பாம்பன் ஸ்வாமிகளின் இதுபோல் நல்விதமாய் பகை கடிதலையும் ஓதலாம். இவை அனைத்துமே மனித மனதை பக்குவப்படுத்தவும் மனம் பக்குவமடைய பக்குவமடைய அவனுக்கு வரும் எதிர்ப்பை மிக லாவகமாக எப்படி கையாள்வது? என்ற அறிவையும் இந்த வழிபாடு அவனுக்கு சொல்லித்தரும். எனவேதான் இந்த வழிபாட்டை யாங்கள் கூறுகிறோம். சிலர் எண்ணுவதுபோல இந்த வழிபாடுகளையெல்லாம் கூறினால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள். எதிரிகள் தோற்று ஓடி விடுவார்கள். எதிரிகள் எங்கோ பதுங்கி விடுவார்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு நல்ல மனிதனுக்கு முன்வினையின் பயனாக எதிரிகளும் எதிர்ப்பும் வந்தால் அதனை அந்த வினைகள் வழியாக சென்று தீர்த்துக் கொள்ள உதவக் கூடிய வழி முறைகளில் இதும் ஒன்று.

11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் நூலின் பதினொன்றாவது படலமாகும்.

இறைவனான சுந்தரபாண்டியனார் காஞ்சன மாலை மற்றும் மலயத்துவசனுக்கு வீடுபேற்றினை அளித்தார். இறைவியான தடாதகை பாண்டியவ வம்சத்தை தழைக்கச் செய்ய மகவு ஒன்றினை பெற விரும்பினார். இதனை அறிந்த சுந்தர பாண்டியனார் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தடாகையின் வயிற்றில் தோன்றச் செய்தார். அம்மையாரும் கர்ப்பவதியானார். தடாகையின் கர்ப்பம் குறித்து அறிந்த மதுரை மக்கள் தங்களின் எதிர்கால மன்னனின் வரவை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தடாகை கர்ப்பவதியானதைக் கொண்டாட மதுரை நகரமே திருவிழா பூண்டது. கர்ப்பவதியான தடாகைக்கு குங்குமப்பூ கலந்த பால் பழங்கள் உள்ளிட்ட அவர் விரும்பிய பொருட்களை எல்லாம் உண்ணக் கொடுத்தனர். ஆன்மீகக் கதைகள் பாடல்கள் போதனைகள் தத்துவங்கள் உள்ளிட்ட இறைசிந்தனை மிக்கவற்றை தடாகையைக் கேட்கச் செய்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு விழாவும் தடாகைக்கு நடத்தப்பட்டது.

கர்ப்பவதியான தடாகைக்கு திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாள் ஒன்றில் ஆண்மகவினைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்ததும் சுந்தரப்பாண்டியர் பொன்னும் மணியும் ஆடை ஆபரணங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் அள்ளி வழங்கினார். தடாகையின் குழந்தையைப் பார்க்க திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் மதுரைக்கு வந்து வாழ்த்துக்களை வணங்கினர். மதுரை மாநகர மக்கள் தங்களின் இளவரசரின் வரவினை எண்ணி மகிழ்ந்தனர். வீடுகள் தெருக்கள் உள்ளிட்டவைகளை அலங்கரித்து விழாக்கள் கொண்டாடினர். பின்னர் அக்குழந்தைக்கு உக்கிரவர்மன் எனப் பெயரிட்டனர். நான்காம் மாதத்தில் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆறாம் மாதத்தில் குழந்தைக்கு அன்னம் ஊட்டினர். பதின்மூன்றாம் மாதத்தில் மயிர்வினை முடித்தனர். தேவகுருவாகிய வியாழ பகவான் வேதம் முதலிய கலைகளையும் வில் பயிற்சியையும் வாள் பயிற்சியையும் யானை ஏற்றம் குதிரை ஏற்றம் முதலியவற்றை உக்கிரவர்மனுக்கு கற்பித்தார். பாசுபதப் படைப்பயிற்சி இறைவனான சுந்தர பாண்டியரே உக்கிரவர்மனுக்கு கற்றுக் கொடுத்தார். பல விதமான படைப் பயிற்சியையும் வீர விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்த உக்கிரவர்மன் காளைப்பருவத்தை அடைந்தார்.

அவர் காளைப்பருவத்தில் முப்பத்திரெண்டு இலட்சணங்களும் பொருந்தி சிறந்த நற்குணம் உடையவராக திகழ்ந்தார். மகனுடைய போர் திறனும் சாதுர்யத்தையும் கண்ட சுந்தரபாண்டியனார் இவன் பூமண்டலம் முழுவதும் அரசாள‌ வல்லவன் என்று எண்ணினார். உக்கிரவர்மனுக்கு திருமுடி சூட்டுவதா? மணம் முடிப்பதா? என தடாதகை பிராட்டியாரும் சுந்தரபாண்டியனாரும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்வது என்று முடிவு செய்து திருமணத்திற்கு பெண் பார்க்கத் தொடங்கினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் நல்லவைகளை பார்க்க வேண்டும் நல்லவைகளை கேட்க வேண்டும் அப்போது நல்ல குழந்தைகளைப் பெறலாம் என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 429

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

ஆழ்வார்களின் பாடல்கள் அனைத்துமே உயர்ந்ததப்பா. அத்தனையும் தீந்தமிழ் சுவை. ஆண்டாளின் அத்தனை பாடல்களுமே சிறப்பு அப்பா. அதிலே ஒன்றில்

வியாழன் உறங்கி வெள்ளி முளைத்தது என்ற சொற்றொடர் வரும்.

யோசித்து பார்க்க வேண்டும். குரு அஸ்தமனமானால் அங்கே சுக்கிரன் உதிக்கும். ஆக உலக ஞானம் தலை தூக்கி விட்டால் பர ஞானம் என்பது மறைந்து விடும். ஞானகுரு மறைந்த இடத்திலே உலக இச்சைகள் தலை தூக்கும் என்ற பொருளும் அதுபோல் குருவாகிய கிரகம் மறைய சுக்கிரன் மேலே எழுந்தது என்ற ஒரு பொருளும் உண்டு. குரு மறைய சுக்கிரன் தோன்ற வேண்டுமென்றால் எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இதை ஜோதிட கலைஞர்கள் கணித்துப் பார்த்தால் ஆண்டாளின் காலம் என்ன? என்பதை கண்டுபிடித்து விடலாம்.

10. மலையத்துவசன் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மலையத்துவசன் அழைத்த படலம் நூலின் பத்தாவது படலமாகும்.

சுந்தர பாண்டியனார் காஞ்சன மாலைக்காக ஏழு கடல்களை மதுரைக்கு வருவித்து கிணற்றில் இருக்கச் செய்தார். இச்செய்தியை இறைவியான தடாகை காஞ்சன மாலையிடம் தெரிவித்து அவரை கிணற்றில் இருக்கும் கடல் நீரில் நீராட அழைத்தார். தடாகையும் சுந்தர பாண்டியனாரும் கடல் நீர் இருக்கும் கிணற்றின் அருகே வந்து அமந்தனர். தடாகையின் அழைப்பினை ஏற்று காஞ்சன மாலை நீராட கிணற்றின் அருகே வந்து அங்கு கூடியிருந்த முனிவர்களிடம் கடலில் நீராடுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் காஞ்சன மாலையே கணவனுடைய கை மகனுடைய கை பசுவினது கன்றின் வால் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றினை கையினால் பற்றிக் கொண்டு தீர்த்தத்தில் நீராடுதலே முறை என்று கூறினர். முனிவர்கள் கூறியதைக் கேட்ட காஞ்சன மாலை எனக்கு தற்போது கணவனும் இல்லை. மகனும் இல்லை. நான் கன்றின் வாலினைப் பிடித்து கடலில் நீராடுவேன் என்று மனதிற்குள் எண்ணி வருத்தம் கொண்டாள். பின் தன்னுடைய மன வருத்தத்தினை தடாகையிடம் தெரிவித்து கன்றின் வாலினைப் பற்றிக் கொண்டு நீராடப் போவதைத் தெரிவித்தாள். தாயின் மன வருத்தத்தைக் கேட்ட தடாகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று நீங்கள் என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். தற்போது கடலில் நீராட கணவனும் மகனும் இல்லாத என் தாய் கன்றின் வாலினைப் பற்றி நீராடப் போவதாக கூறுகிறாள். தாங்கள் இதில் ஏதேனும் அவளுக்கு உதவ முடியுமா? என்று வருத்தத்துடன் கேட்டாள்.

தடாகை கூறியதைக் கேட்ட சுந்தரபாண்டியனார் மலயத்துவசனை மனதில் நினைத்தார். மலயத்துவசனும் அவ்விடத்திற்கு வருகை புரிந்தான். பின் பெண் பிள்ளையைப் பெற்றதால் நான் பெற்ற பயன் இது என்று கூறி உலகத்திற்கு இறைவனான சுந்தர பாண்டியனாரை வணங்க முற்பட்டான். இதனைக் கண்ட சுந்தர பாண்டியனார் தங்களுடைய மகளை மணந்ததால் நீங்கள் எனக்கு மாமன் முறை. மாமன் என்பவர் தந்தைக்கு சமமானவர். ஆதலால் என்னை நீங்கள் வணங்குதல் சரியில்லை. அன்பு நிறைந்த மனைவியோடு தீர்த்தத்தில் ஆழ்ந்து நீராடுங்கள் என்று கூறி மலயத்துவசனை ஆரத் தழுவினார். தன் தந்தையைக் கண்டு அன்பு கொண்ட தடாகை அன்பினால் மலயத்துவசனை கட்டி அணைத்துக் கொண்டாள். மலயத்துவசன் உன்னுடைய திருமணத்தை நான் காண இயலவில்லை. ஆனால் இன்று உங்களிருவரையும் கண்டு என் உள்ளம் பேரானந்தத்தில் திளைக்கிறது என்று கூறினான். காஞ்சன மாலையும் தன்னுடைய கணவனுக்கு அருகில் சென்று வணங்கி மலயத்துவசனின் கையினை பற்றிக் கொண்டு நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி கடலில் நீராடினாள். கடலில் நீராடி கரையேறிய காஞ்சன மாலையும் மலயத்துவசனும் இறைவனின் திருவருளால் பந்த பாசம் ஒழித்து மீண்டும் பிறவாமை என்னும் வீடுபேற்றினைப் பெற்றனர்.

சிவலோகத்தில் இருந்து வந்த தேவ விமானத்தில் அவ்விருவரும் ஏறினர். அங்கிருந்தோர் அரஅர என்று துதிக்க தேவ விமானம் மேலெழும்பி சிவலோகத்தை நோக்கிச் சென்றது. இதனைக் கண்ட தடாதகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று என்னுடைய தாய் ஒரு கடல் நீரில் நீராட விரும்பினார். ஆனால் தாங்கள் ஏழு கடலையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். பின் தந்தையையும் வரழைத்து தாய் தந்தையரை நீராடச் செய்து இறுதியில் சிவலோகப் பதவியையும் அளித்தீர்கள். இனி எனக்கு எந்தவித துன்பமும் ஏற்படப்போவதில்லை என்று கூறினார். சுந்தர பாண்டியனாரும் மீனாட்சியின் கருத்தினைக் கேட்டு மகிழ்ந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏழு கடல் பொய்கை தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு பிறவி இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மனைவியின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது கணவனின் கடமை என்பதை அனைவரும் உணர இந்த திருவிளையாடலை புரிந்து அனைவரும் அறியச் செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 428

கேள்வி: பெண் சித்தர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? குறிப்பாக ஆழ்வார்கள் நாயன்மார்களில் கூட பெண் சித்தர்கள் அதிகமாக இல்லையே?

இறைவனின் கருணையாலே கூறுகிறோம். பல பல பல லகரம் கோடி ஆண் சித்தர்களுக்கு ஒரேயொரு பெண் சித்தரே சமம். அப்படி எடுத்துக் கொள்ளலாமே? ஏன் எண்ணிக்கையில் அதிகம் குறைவு என பார்க்க வேண்டும்? ஏனென்றால் எல்லா ஆண் சித்தர்களையும் பெற்றுத் தருவது பெண்மைதானே? எனவே எல்லா நிலைகளிலும் இங்கே பெண் சித்தர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மனித பார்வையில் குறைவு போல் தோன்றுகிறது. வேறு வகையில் கூறப்போனால் சித்தர்களை உருவாக்குவதே பெண்கள்தான் அதாவது சக்திதான். எனவே இன்னொரு வகையில் கூறப்போனால் ஒரு துலாக்கோலிலே ஒரு பக்கம் அதிக அளவு பஞ்சினை பருத்தியினை வைப்போம். இன்னொரு பக்கம் நிறை கல்லை வைப்போம். எது அதிகமாக இருக்கும்? அங்கே பருத்தி எனப்படும் பஞ்சு மூட்டை மூட்டையாக இருக்கும். இந்த அளவு மூட்டைக்கு அதே அளவா எடை கல்லை வைப்பார்கள்? ஆனால் எடை கல் அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த பஞ்சு மூட்டையின் அளவை அது தீர்மானிக்கிறது அல்லவா? அதைப்போல ஒரேயொரு ஆண்டாள் போதும் அத்தனை ஆண் சித்தர்களையும் சமமாக கருதுவதற்கு. அதைப்போல் ஒரேயொரு ஔவையார் போதும் அனைத்து ஆண் சித்தர்களுக்கும் சமமாக. எனவே பெண் சித்தர்கள் இல்லையென்று கூறவே வேண்டாம்.

பல குடும்பங்களில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது இல்லற பெண் சித்தர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ சித்தர்கள் என்றால் சித்து வேலையும் அதிசயங்களையும் செய்தால்தான் சித்தர்கள் என்பது அல்ல. தன் குடும்பத்திற்காக தன்னை சேர்ந்தவர்களுக்காக ஏன்? பொது நலத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு யார் இருந்தாலும் சித்தர்களே. எனவே அப்படி நயத்தகு நாகரீகமாக நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற பல பெண் சித்தர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆண் சித்தர்களில் மனிதர்கள் அறிந்த சித்தர்கள் இந்த அளவு. அறியாத சித்தர்கள் கோடி கோடி என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 427

கேள்வி: நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர வழிபாடுகள் ஸ்தலங்கள் பற்றி:

எந்தப் பிணியாக இருந்தாலும் ஆற்றொண்ணாத கொடுநோயாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பாவத்தின் காரணமாக வருவதில்லை. ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலிதான் பல்வேறு விதமான துன்பங்கள் அதிலும் நோய் அதிலும் இன்னவன் குறிப்பிட்ட தந்தி தொடர்பான பிணி. இதுபோல் பிணி தீர ஒரு மனிதன் அவனால் இயன்ற வழிபாடுகளை இல்லத்திலும் எந்த ஆலயத்திலும் செய்யலாம். அடுத்து புதன் சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் சனி சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் இன்னவன் கூறிய நரம்பு தொடர்பான பிணிகள் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஏழை பிணியாளர்களுக்கு இயன்ற மருத்துவ உதவிகளை நல்விதமாய் அன்பாய் ஆதரவாய் தொடர்ந்து செய்ய இந்தப் பிணி மட்டுமல்லாமல் மற்ற பிணிகளும் கட்டுக்குள் வரும். குறிப்பாக கூற வேண்டுமென்றால் திருவெண்காடு சென்று வழிபாடு செய்வதும் பழனி சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்குவதும் இதுபோல் மதுரை அன்னை மீனாளை வணங்குவதும் (இன்னவன் கூறியதால் குறிப்பிட்ட ஸ்தலங்களை கூறியிருக்கிறோம்) இன்னும் சில ஸ்தலங்கள் சென்று வணங்குவதால் நரம்பு தொடர்பான பிணிகள் குறையும். எனவே நரம்பு தொடர்பான பிணிகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் இதுபோன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து பலன் அடையலாம். தீவிரமான வழிபாடு ஒரு பிணியை குறைக்கும். ஆனாலும் அந்தப் பிணியோடுதான் அந்தப் பிறவியில் அவன் கடைவரையில் வாழ வேண்டும் என்று பிரம்மன் விதி எழுதியிருந்தால் அதனை மாற்ற யாராலும் முடியாது.

9. ஏழுகடல் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஏழுகடல் அழைத்த படலம் நூலின் ஒன்பதாவது படலமாகும்.

இறைவன் சுந்தரபாண்டியனாராக மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார். பின் அவர் இறைவியான தடாகையின் தாயான காஞ்சன மாலை தங்கி இருந்த அரண்மனைக்கு வருகை தந்தார். காஞ்சன மாலையும் கௌதம முனிவரை வரவேற்று உபசரித்து அவரை தகுந்த ஆசனத்தில் அமர்த்தினாள். காஞ்சன மாலை கௌதம முனிவரிடம் தவத்தில் சிறந்தவரே என் மகளான தடாதகைக்கு சிறந்த முறையில் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆதலால் பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடையக் கூடிய வழியினை எனக்கு கூறுங்கள் என்று கேட்டாள். அதற்கு கௌதம முனிவரும் காஞ்சன மாலையே நீ செய்த தவத்தின் காரணமாக இறைவியை மகளாகவும் இறைவனையே மருமகனாகவும் பெற்று உள்ளாய். உனக்கு வழிகாட்டும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் வீடுபேற்றினை அடையக் கூடிய வழியை நீ கேட்டதால் உனக்கு நான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். அறங்கள் மூன்று வகைப்படும். அவை மன அறம். நா அறம். உடல் அறம். இவை மானதம் வாசிகம் காயகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று அறங்கள் செய்வதின் வழியாக வீடுபேற்றினை அடையலாம்.  

முதல் வழி: தர்மசிந்தனை. தருமமும் தானமும் செய்தல். பிற உயிர்களின் மீது இரக்கம் கொள்ளுதல். பொறுமை காத்தல். உண்மை பேசுதல். ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல். நேர்மை. இறைவனை தியானம் செய்தல். தூய்மை பக்தி ஆகியவைகளான மானதம் என்று சொல்லக் கூடிய மன அறம் ஆகும்.

2 வது வழி: மந்திரங்கள் உச்சரிப்பது. இறைவனின் துதிப் பாடல்களைப் பாடுதல். வேத நூல்களைப் படித்தல். மந்திரங்கள் சொல்லி யாகங்கள் செய்தல். திருக்கோவிலை வலம் வருதல். சுவைக்கு அடிமையாகாமல் இருப்பது. எவரையும் தூஷிக்காமல் இருத்தல் ஆகியவைகளான வாசிகம் என்னும் நா அறம் ஆகும்.

3 வது வழி: ஆலயங்களுக்கு சென்று வணங்குதல். ஆலயத் திருப்பணி செய்தல். தல யாத்திரை செல்லுதல். தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் உடல் அறம் ஆகும்.

இதில் உடனே பயனளிக்கக் கூடியது தீர்த்தமாடல் ஆகும். புலனடக்கமும் யாகமும் செய்த பலன் தீர்த்தமாடுதலில் கிடைக்கிறது. வினைகளின் காரணமாக பிறவி என்று ஒன்று இருந்தால் அடுத்தப் பிறவி பெருஞ் செல்வந்தனாக்கும். முற்பிறவிகளில் செய்த பாபங்கள் தொலையும். அத்தனை தீர்த்தங்களிலும் நீராடுவ தென்பது நடக்கக் கூடிய காரியமா? அதனால் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று கௌதம முனிவர் கூறிச் சென்றார்.

கௌதம முனிவரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட காஞ்சன மாலை கடலில் நீராட விருப்பம் கொண்டாள். ஆதலால் தன்னுடைய விருப்பத்தை தன் மகளான தடாகையிடம் கூறினாள். தடாகை சுந்தரபாண்டியனாரிடம் சென்று கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சன மாலை கடலில் சென்று நீராட விரும்புகிறாள். ஆனால் மதுரையிலோ கடல் இல்லை. இதற்கு தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். தடாகையின் கோரிக்கையை கேட்ட சுந்தரபாண்டியனார் தடாகை நீ கவலை கொள்ள வேண்டாம். உன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன் என்று கூறி ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார். ஏழு கடல்களும் இறைவனின் ஆணைப்படி ஆர்ப்பாரித்து மதுரையின் எழுந்தருளின. ஏழு கடல்களும் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் கடலின் பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர். கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல் கேட்ட மதுரை நகர மக்கள் நடுக்கி சுந்தரபாண்டியனாரிடம் சென்று அச்செய்தியைத் தெரிவித்தனர். சுந்தரபாண்டியனார் ஏழு கடல்களையும் மதுரையில் மீனாட்சி கோவின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார். ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளின. பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை.

மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்திற்கு எதிரே உள்ளது விட்டவாசல் தெரு. விட்டவாசல் தெரு வழியில் இடது பக்கம் ஏழு கடல் பொய்கையைப் பார்க்கலாம். இந்த தெருவானது எழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப் படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அனைவரும் வீடு பேறு அடைவதற்கு ஏழு கடல்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிணற்றில் அளித்து அருளினார். மேலும் கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.