ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 491

கேள்வி: ஆலய சிலாரூபங்களை தூய்மைப்படுத்தும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தினால் தெய்வங்களுக்கு வலிக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் எதைப் பயன்படுத்தி சிலாரூபங்களை தூய்மைப்படுத்துவது?

இறைவனின் கருணையால் யாங்கள் இயம்புகிறோம். இறைவனின் சிலாரூபங்களை சேதப்படுத்துவதாலோ அல்லது மனித பார்வையிலே அவமானப் படுத்துவதாலோ அல்லது அதனை கூரான ஆயுதங்களால் சுத்தப்படுத்துவதாலோ வலிக்கிறது என்பதை விட மனிதர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுதுதான் இறைவனுக்கு அதிகமாக வலிக்கிறது. எனவே மனிதர்கள் தன்னை திருத்திக் கொண்டு நல்லவனாக உயர்ந்த குணங்களைக் கொண்டவனாக வாழ்ந்துவிட்டு தன்னை தூற்றினாலும் கூட இறைவன் முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இருந்த போதிலும் கூட அற்புதமான சிலாரூபங்கள் பல்வேறு பக்தர்களுக்கு இறைவனாகவே காட்சி தருவதால் அதனை கையாளும் போது கவனம் வேண்டும்.கூர்மையான ஆயுதங்களை தவிர்ப்பது நல்விதமான வேறு முறைகளை கையாள்வது நல்ல பலனை நல்கும். இதுபோல் நல்விதமாய் சாத்வீகமான பொருள்களை பயன்படுத்தி சுத்தி செய்கின்ற முறைகள் இருக்கின்றன. மூலிகை சாறினை பயன்படுத்தலாம். உயர்வான முறையிலே தயிரை எடுத்து அதோடு அரிசி மாவினையும் கடலை பருப்பை மாவாக்கி அதனையும் பச்சைப் பயிறை மாவாக்கி அதனையும் சேர்த்து நல்விதமாக சிலாரூபங்கள் முழுவதும் தேய்த்து தூய்மையான பருத்தி துணி கொண்டு அதனை மென்மையாக தேய்த்து சுத்தி செய்யலாம். அரசக்கனியின் சாற்றைக்கொண்டு சுத்தி செய்யலாம். இது போன்ற சில முறைகளை கையாள்வது சிறப்பு.

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூவத்தான் என்ற பெயர் மருவி சங்கிலிப் பூதத்தான் ஆகியது. இதுவே பிற்காலத்தில் குழந்தைகள் பயப்படும் பூதம் என்று பெயர் வந்தது. இவர்கள் யார் என்றால் இறைவனின் அருகிலேயே இருக்கும் சிவ கணங்கள் ஆவார்கள். சிவ கணங்கள் தவறு செய்யும் போது அல்லது சாபத்தினால் பூமிக்கு அனுப்பப்படும்போது அவை பூதங்களாகி விடுகின்றன. இவர்களது வேலை தீயவர் கயவர் நயவஞ்சகர் ஏமாற்றுபவர் பித்தலாட்டம் செய்பவர் கொள்ளையர் திருடர் கொலைகாரர் காமக்கொடூரர் எத்தர் என தர்மத்தை கடைபிடிக்காத அடுத்தவர்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்களை விழுங்கி இந்த பூதங்கள் தங்களின் பசியாற்றிக் கொள்ள வேண்டும். இந்த படத்தில் இருக்கும் சங்கிலி பூதத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் மரத்தேரில் உள்ளவர் ஆவார்.

அவதாரத்ரய அனுமான்

மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார். மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய அனுமான். அனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 490

கேள்வி: நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இறைவனை தாங்குகின்ற வாகனமாக தர்மமே நந்தியாக அவதாரம் செய்திருக்கிறது. எனவே அதுபோல் நந்தியின் திருக்கல்யாணம் என்பது மனிதர்களின் திருமண தோஷத்தை நீக்கக் கூடிய வகையிலே நடத்தப்படுவதாகும். இதற்குள் இன்னும் பல தத்துவார்த்த விளக்கங்கள் இருக்கின்றன. அங்கே தர்மம் வாழத் துவங்குகிறது. தர்மம் இறைவனை தாங்கி நிற்கிறது. இறைவனை தாங்குவது தர்மம்தான். எனவே அந்த இடத்திலே அதை நந்தியாக பாராமல் தர்மமாக பார்த்துவிட்டால் அந்த தர்மத்தை கடைபிடித்து எல்லோரும் வாழவேண்டும் என்பதின் உட்பொருள்தான் நந்தியெம்பெருமானின் திருமணம்.

நரசிம்ம அவதாரம்

விஷ்ணுவின் நான்காம் அவதாரமான சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் சிற்பக்காட்சி. இடம் பக்தபூர்தர்பார் சதுக்கம் நேபாளம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 489

கேள்வி: நரசிம்மர் சரபேஸ்வரர் – இந்த அவதாரங்கள் பற்றி:

பரம்பொருள் மஹாவிஷ்ணுவின் அவதாரம் நரசிம்மர். அந்த வழிமுறைகள் மனிதர்கள் அறிந்ததே. அதைப்போல முக்கண்ணனாகிய சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்று சரபர். எல்லாம் நடந்தது உண்மை. ஆனால் அதை மனிதர்கள் புரிந்துகொள்கின்ற விதத்தில்தான் குற்றம் இருக்கிறது. இரண்டையும் ஏட்டிக்குப் போட்டியாக குற்றமாக சண்டை சச்சரவாகப் பாராமல் எல்லாம் பரம்பொருளின் வடிவமாக பார்க்க நன்மை உண்டு. இதுபோல் நல்விதமாய் யாங்கள் கூறிய நாழிகை இதோடு பூர்த்தியடைகிறது. இருந்தாலும்கூட யாங்கள் இன்னும் நல்விதமாய் இரண்டரை நாழிகை வாக்கு ஓத இருக்கிறோம். எனவே இதுபோல் நல்விதமாய் மனிதர்கள் அயர்வு கண்டு அன்னம் ஏற்று பிறகு எம்முன் அமர சரியாக அமரும் காலத்திலிருந்து இரண்டரை நாழிகை யாங்கள் இறைவன் அருளால் வாக்கை ஓதுகிறோம். அனைவருக்கும் நல்லாசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 488

கேள்வி: நவ பிருந்தாவனப் பகுதியில் பாறைகள் சிறு சிறு கற்களாக உள்ளது பற்றி:

இது குறித்து நீண்ட விளக்கம் கூறவேண்டும். இருந்தாலும் இறை சாந்நித்யம் மிக்க இடங்களில் அதுவும் ஒன்று. அனாச்சாரம் செய்யாமல் ஆர்பாட்டம் இல்லாமல் அங்கு சென்று வணங்கினால் நன்மை உண்டு. அங்கு இன்றும் பல ரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நவ பிருந்தாவனம் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

நவ பிருந்தாவனம்

ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனேகுந்தி பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின் படகு பயணம். துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும் தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவபிருந்தாவனம் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. ஆஞ்சநேயர் சிறுவயதில் இந்த மலையை தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மாலை தாவி விளையாடிய இடம் ஆகையால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்ல முடியும். துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது. அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். துங்கபத்திராவின் நடுவே பள்ளிகொண்ட அரங்கநாதர் கோவில் அனுமன் கோவில் மற்றும் ஒன்பது மகான்கள் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜெய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 6. ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராம தீர்த்தர் 8. ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது இந்தக் குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.

அவதாரத்ரய ஹனுமான்

மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனத்திற்கு யாரும் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.

64. சமணரைக் கழுவேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் அறுபத்தி நான்காவது படலமாகும்.

ஒரு சமயம் கடற்கரையின் அருகே இருந்த பட்டினம் ஒன்றில் வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இறைவனின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அவ்வணிகருக்கு தங்கையின் மகன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கே தன்னுடைய மகளை மணம்முடிக்க இருப்பதாக வணிகர் கூறி வந்தார். சிறிது காலம் கழித்து வணிகரும் அவருடைய மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள். ஆதலால் அவ்வணிகரின் மகள் தனித்து விடப்பட்டாள். வணிகர் மறைந்த சேதியானது வணிகரின் மருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் மாமனின் ஊரினை அடைந்தான். சில நாட்கள் கழித்து மாமன் மகளையும் மாமனின் பொருட்களையும் எடுத்துக் கொண்டு என்னுடைய மாமன் மகளை உறவினர்கள் முன்னிலையில் மதுரையில் மணந்து கொள்வேன் என்று கூறி அழைத்துச் சென்றான். திருப்புறம்பியத்தை அடைந்த போது திருக்கோவிலின் அருகில் இருந்த வன்னி மரத்தின் அடியில் உணவு சமைத்து உண்டு உறங்கும் போது கொடிய நஞ்சுள்ள பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது. அவன் மாண்டான். தாய் தந்தையரை இழந்து அனாதையாகி நின்ற போது ஆதரவளித்தவன் மாண்டதைக் கண்ட இளம்பெண் கதறினாள். இளம்பெண்ணின் கதறலைக் கேட்டு அங்குதங்கியிருந்த திருஞானசம்பந்தர் அவளிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். அப்பெண்ணும் தனக்கு நடந்தவைகளைக் கூறினாள்.

திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் மீது இரக்கம் கொண்டு இறைவனார் மீது பதிகங்கள் பாடி மனமுருக வழிபட்டார். இறைவனாரும் அப்பெண்ணின் துன்பத்தைப் போக்க அவ்வணிகனை உயிர்ப்பித்தார். அவ்வணிகனிடம் திருஞானசம்பந்தர் இப்பெண்ணை இங்கேயே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். எம் உறவினர்களும் சாட்சிகளும் இல்லாது எவ்வாறு இவளை மணம் முடிப்பேன்? என்று கேட்டான். அதற்கு திருஞானசம்பந்தர் இங்குள்ள வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சிகளாகும். உன் மாமனின் விருப்பப்படி இவளை நீ மணந்து கொள் என்று கூறினார். அதற்கு உடன்பட்ட வணிகன் வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு அவளை மணம் முடித்து மதுரைக்கு அழைத்துச் சென்றான். அவ்வணிகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. வணிகன் தன் இரு மனைவியருடனும் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் வணிகருக்கு இரு மனைவிகளின் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தது. அந்த சண்டை இருபெண்களுக்கு இடையே வாக்கு வாதத்தில் முடிந்தது. அப்போது மூத்தவள் இளையவளிடம் நீ என்னுடைய கணவனை அநியாயமாக திருமணம் செய்து விட்டாய்? யாரை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தாய்? என்று கேட்டாள். அதற்கு இளையவள் எங்களுடைய திருமணத்திற்கு வன்னி கிணறு லிங்கம் ஆகியவை சாட்சியாக இருந்தன என்று கூறினாள். உன்னுடைய சாட்சிகளை மதுரைக்கு அழைத்து வந்தால்தான் உன்னுடைய திருமணத்தை முறையானதாகக் கூறமுடியும் என்று கூறினாள். இதனைக் கேட்டதும் இளையவள் தன்னுடைய திருமணத்தின் சாட்சிகளை எவ்வாறு மதுரைக்கு அழைத்து வர இயலும் என்று எண்ணினாள். பின்னர் தனக்கு ஏற்பட்ட துயரத்தை போக்குமாறு வேண்டி சொக்கநாதரை மனமுருக வழிபட்டாள்.

இறைவனாரும் அவளின் துயரத்தை நீக்கும் பொருட்டு திருகோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் திருமணத்தின் சாட்சிகளான வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை தோன்றச் செய்தார். இதனைக் கண்டதும் மதுரை மக்கள் அதிசயித்தனர். இளையவள் இறைவனாரின் கருணை எண்ணி ஆனந்தம் கொண்டாள். தன்னுடைய திருமண சாட்சிகளை மதுரைக்கு வரவழைத்ததை மூத்தவளுக்கு காண்பித்தாள். அதனைக் கண்ட மூத்தவள் தன்னுடைய தவறினை உணர்ந்தாள். விவரம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த வணிகன் மூத்தவளிடம் கோபம் காட்டி அவளை விரட்டினான். இளையவள் அவனை சமாதானம் செய்து இருவரும் ஒற்றுமையுடன் வாழ உறுதி கொள்வதாகக் கூறினாள். பின்னர் அனைவரும் இனிது வாழ்ந்திருந்தனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

உறுதியான மனதால் இறைவனை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 487

கேள்வி: திருவேங்கட மலையில் மீதமிருக்கும் இரண்டு மலைகளின் பெருமைகளைப் பற்றி:

இந்த அண்டசராசரங்களில் பெருமை உடைய பொருள் எது இல்லை? என்று சொல். எல்லாமே பெருமை உடையதுதான். ஏன்? மனிதன்கூட குழந்தையாக இருக்கும் போது பெருமைக்குரிய குழந்தையாகத்தான் இருக்கிறான். வளர வளர வஞ்சகங்கள் வளர்கின்றன. இறைவனின் படைப்பில் எல்லாம் உயர்ந்ததுதான் எல்லாம் மிக மிக சிறந்ததுதான். ஒன்று உயர்வு ஒன்று தாழ்வு என்பது அல்ல. இருந்தாலும் இன்னவன் கூறுகின்ற மலை தன்னிலே இன்னமும் பலவிதமான மகரிஷிகள் ரிஷிகள் சித்தர்கள் நல்விதமான தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். திருமலை பகுதியிலே வாய்ப்பு இருப்பவர்களுக்கு தும்புரு மகரிஷி தரிசனம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். எனவே இதுபோல் ரிஷிகளை பார்க்க வேண்டும் என எண்ணுபவர்கள் நாங்கள் கூறுகின்ற வழி முறையை பின்பற்றி இது போன்ற மலைகளிலே மனமொன்றி தவம் செய்து அனாச்சாரம் செய்யாமல் சென்று வந்தால் அவர்களின் அருள் ஏதாவது ஒரு வகையில் கிட்டும்.