ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர். இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.

  1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு. இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்த்தால் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின் வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
  2. நீ சத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை சரணடைந்தால் அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி (நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள்) போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
  3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுக விடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
  4. பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
  5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்துவிடு. பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே. பிரம்மமும் பூர்ணம். இந்த ஜகமும் பூரணம். பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகம் வந்த பின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு.

என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம் என ஆதிசங்கரர் அருளினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 541

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே இறைவன் என்ற மகாசக்தியிலிருந்து பிரிந்த துகள் தான் அனைவரும் என்று தத்துவார்த்தமாக கூறினாலும் கூட இறைவன் விளையாட்டாக இந்த உலகை படைத்ததாக சொல்லுவோம். அப்படி படைக்கும் பொழுது இப்படி வாழ வேண்டும். இப்படி வாழ கூடாது. இது தக்கது. இது தகாதது. இது நன்மையை தரக்கூடியது. இது தீமையை தரக்கூடியது என்றெல்லாம் நல்ல ஞானிகளையும் உடன் அனுப்பி போதனைகளையும் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இங்கு வந்த பிறகு ஆத்மாக்கள் வெறும் லோகாய இச்சைக்குள் சிக்கி தவறுகளையும் பாவங்களையும் செய்து கொண்டேதான் போகிறது. இது எங்ஙனம்? என்றால் ஒரு மகா பெரிய ஞானி யோகி இருப்பதாக கொள்வோம். அந்த ஞானியின் போதனைகளை கேட்டு பலரும் மனம் திருந்தி நல்ல வழியில் வருவதாக கொள்வோம். ஆனால் அந்த ஞானியின் பிள்ளை அவ்வாறு இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே? ஞானியின் பிள்ளை அசட்டுத்தனமாக மூடத்தனமாக தவறுகளை செய்யக்கூடிய பிள்ளையாக பலருக்கும் இருப்பது போலத்தான். இறைவன் படைப்பாக இருந்தாலும் இறைவனைப் போல உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் வாழும் சூழலை மாயையால் மனிதன் உண்டாக்கி கொள்கிறான். ஆனால் இறைவன் தான் இந்த உயிர்கள் எல்லாம் படைத்தார் என்பதற்கு குழந்தைகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் வஞ்சகம் இல்லை. சூழ்ச்சி இல்லை. சூது இல்லை. வாது இல்லை. அது இறைவனின் நகலாக இருக்கிறது. அது பிறகு வளர வளர ஏற்கனவே வளர்ந்த குழந்தை அனைத்தையும் அந்த குழந்தைக்கு சொல்லி தந்து விடுகிறது.

நல்லதை தொடர்ந்து செய் என்று எண்ணிதான் இறைவனை இறைவன் உயிர்களை படைத்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் அப்படி செய்தால் உடனடியாக நன்மைகள் ஏற்பட போவதில்லை. லோகாய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நான் சுயநலவாதியாகத்தான் வாழ்வேன் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த தீர்மானமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இறைவன் நல்ல எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்து இருக்கிறார். இறைவன் மனிதனை இப்படி ஒரு மாயையில் தவிக்க விட்டதாக தத்துவார்த்த ரீதியில் புலம்பலாமே தவிர இந்த குற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதர்களை காரணம். ஏனென்றால் சிந்திக்கும் ஆற்றலை தந்து தான் உயிர்களை இறைவன் உலாவை விட்டிருக்கிறார். வெளியூருக்கு செல்லும் மைந்தனுக்கு போக வர செலவுக்கும் உணவு அங்காடிக்கு உண்டான செலவுக்கும் சத்திரத்தில் தங்குவதற்கு உண்டான செலவுக்கும் தனம் தந்து அந்த தனம் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் வேறுவிதமான ஏற்பாடுகளையும் செய்து தான் தந்தை அனுப்புகிறார். ஆனால் பிள்ளையோ அதனை கேட்காமல் தவறான வழியில் சென்றால் அனுப்பிய தந்தையின் குற்றமா? தவறான வழியில் சென்ற பிள்ளையின் குற்றமா?

சிரஞ்சீவி என்றால் என்ன அர்த்தம்?

மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை சிரஞ்சீவி ஆவார்கள். அஸ்வத்தாமன் மகாபலி வியாசர் அனுமன் விபீஷணன் கிருபாச்சாரி பரசுராமன் மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பல யுகங்களாக தங்களின் உடலுடனே தங்கள் ஆன்மாவுடன் இந்த உலகத்தில் தற்போதும் உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். தகுதி பெற்றவர்களுக்கே தங்களை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள். இந்த சிரஞ்சீவிகளில் முக்கியமானவர் மார்கண்டேயன். இவரை காப்பாற்ற வேண்டி சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று? இதன் பின்னணியில் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.

மார்கண்டேயனுக்கு இளம் வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்டு மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்டு முனிவர் அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர் பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக என்று பணித்தார். மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த போது மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற அவர்களும் தீர்க்கா யுஷ்மான் பவ என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்து கொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். பிரம்மாவிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கி விடுகிறார்.

மார்க்கண்டேயன் இப்படித் தான் பார்க்கும் ஞானிகள் அனைவரிடமும் ஆசி பெற்றான். அவர்கள் அனைவரது ஆசியும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றி விடுகிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ஞானிகளின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.

பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது தீய விதியை மாற்றி நன்மையை கொடுத்து காக்கும் அரண் போல் இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 540

கேள்வி: ஸ்ரீராமஜெயம் எழுதி வந்தால் கனவிலே இறை ரூபங்கள் தோன்றுகிறது இது குறித்து:

இறைவனின் அருளால் கனவிலே எந்த இறை ரூபத்தை பார்த்தாலும் அதை சுப சகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால்தான் இப்படி தோன்றும் என்பதில்லை. எந்த இறை நாமத்தை உள்ளார்ந்த அன்போடு ஜெபித்துக் கொண்டிருந்தாலும் நல்ல சகுனங்கள் தோன்றும். சொப்பனத்தில் இறைவனை காட்சியை ஆலயத்தை இன்னும் இது போன்ற விஷயங்களை காண்பது பாவ கர்மாக்கள் குறைவதற்குண்டான சூழல்கள் ஏற்படப் போகிறது என்பதை பொருளாகும்.

வினாச காலே விபரீத புத்தி

வினாச காலே விபரீத புத்தி இதன் பொருள் அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்பதாகும். இதற்கு உதாரணம்

அனுமான் இலங்கை நகரை தீக்கிரையாக்கி விட்டு சென்ற பின் ராவணனுக்கு கவலை அதிகரித்தது. தனது அமைச்சர்களை கூட்டி ஆலோசனை நடத்தினான். கும்ப கர்ணனும் விபீஷணனும் ராவணது செயலை கண்டித்தனர். கும்ப கர்ணன் பேசும்போது சீதையை அபகரித்து வருவதற்கு முன்பு செய்திருக்க வேண்டிய ஆலோசனையை இப்போது செய்வதில் என்ன லாபம்? என்றான்.

விபீஷணர் ராமர் நமது ராஜ்யத்தை அழிக்கும் முன்பு சீதையை ராமரிடம் திருப்பி அனுப்பி விடுவதே நலம் என்றார்.

சினம் கொண்ட ராவணன் குலத்தை கெடுக்க வந்த கோடாரிக்காம்பே. நீ என் கண் முன் நில்லாதே இங்கிருந்து ஓடி விடு என்றான். விபீஷணனும் நான் உன் நலனை உத்தேசித்து பேசிய பேச்சு உனக்கு பிடிக்கவில்லை. வினாச காலே விபரீத புத்தி என்பது போல அழிவு ஒருவனை நெருங்கும் போது அவனது அறிவு வேலை செய்வதில்லை என்று கூறி அவையை விட்டு வெளியேறி ராமரை சரண் அடைந்தான்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நாம் கவனமாக இருந்தாலும் விபரீத புத்தி வந்து நம்மைக் கெடுத்து விடும். ஆகவே

எண்ணத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள் ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள் ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள் ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 539

கேள்வி: கச்சியப்பர் இயற்றிய ஐங்கரன் பாடலுக்கு விளக்கம் தர வேண்டும்:

திகட சக்கர செம்முகன் ஐந்துளான்
சகட சக்கர தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்

முதல் அடி: திகட சக்கர செம்முகன் ஐந்துளான்

திகட சக்கரம் என்கிற வார்த்தை திகழ் சக்கரம் என்று இருக்கக் கூடியது. அந்த வெண்பாவின் இலக்கணத்திற்காக திகட சக்கரம் என்று திரிந்திருக்கிறது. தொல்காப்பியத்தில் இந்த குறிப்பு இல்லை என்பதால் இதனை ஏற்க இயலாது என்று புலவர்கள் வாதிட இதுபோல் அந்த சொல்லை யான் பிரயோகப்படுத்தவில்லை என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் இறைவன் அருளால் கந்த புராணத்தை இயற்றும் சமயம் ஒவ்வொரு தினமும் ஓலையிலே எழுதி எழுதி அதனை இறைவன் திருவடியில் வைத்து விட்டு சென்று விடுவார். இறைவன் அந்த இரவு முழுவதும் தம் அருட்பார்வையால் அதனை திருத்தி திருத்தி மறுதினம் அதனை கச்சியப்பரிடம் ஒப்படைப்பார். எனவே இறைவனே ஒப்பு நோக்கிய நூல் கந்தபுராணம் என்பதால் மேல் சொன்ன அந்த சொல் நான் சொல்லவில்லை எனக்கு இறைவனே உணர்த்தியது என்று கச்சியப்ப சிவாச்சாரியார் கூற அதனை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலே முருகனே தமிழ் புலவன் வடிவிலே வந்து திகட சக்கரம் என்கின்ற பதம் திகழ் சக்கரம் தசம் எனப்படும் பத்து அதாவது பத்து கரமாக திகழக்கூடிய ஐங்கரனை வணங்கி துவங்குகிறேன் என்பது போன்ற பொருளும் இந்த திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று வணங்கக்கூடிய விநாயகரை குறிக்கக்கூடிய சொல்தான். இதற்கு ஆதாரம் வீரசோழியம் என்ற இலக்கண நூலில் இருக்கிறது என்று உதாரணத்தையும் கூறி முருகப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

2 ஆம் அடி: சகட சக்கர தாமரை நாயகன்

தாமரை நாயகன் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும் யார் என்று. மகாவிஷ்ணுவை குறிக்கிறது. இதுபோல் இந்த மகாவிஷ்ணுவின் கையிலே இருக்கக் கூடிய சகடை சுதர்சனத்தை இது குறிக்கிறது. இந்த சுதர்சனம் ஒருமுறை மகாவிஷ்ணுவின் கையில் இருந்து விநாயகரின் திருவருளால் திருக்குறிப்பால் உள்ளே ஈர்க்கப்பட்டு விட்டது. அப்பொழுது அந்த சுதர்சனத்தை மீண்டும் பெறுவதற்காக விநாயகரின் முன்னால் அவரை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு த்விப்பி கரணம் (இதனை தோப்புக்கணம் என்று கூறக்கூடாதப்பா) த்விப்பி கரணம் என்பதுதான் சரியான வார்த்தை பிரயோகம். திவி என்றால் இரண்டு என்று பொருள். இரண்டு காரணம் அதாவது இரண்டு காதுகளை மாறி வைத்து அந்த முட்டிகளை முழுமையாக செய்வது. (இப்போதெல்லாம் ஆலயத்தில் அரைகுறையாக செய்கிறார்கள்) அற்புதமான ஒரு யோகாசனம். காதுகளின் மடல்களில் உள்ள ரத்த நாளங்களெல்லாம் நன்றாக தூண்டி விடப்பட்டு காது மடல்களில் தான் நினைவாற்றலும் நன்றாக கல்வி கற்க உதவுகிற உந்து சக்தியும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காதிலே சரியான இடம் பார்த்து துளையிடும் பழக்கம் ஏற்பட்டது. அதுபோல் பழக்கத்தினால் பின்னால் நல்ல அறிவு வரட்டுமே என்று அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல சரியான இடம் மாறி தவறான இடத்திலே துளையிடுவதால்தான் இது முறையாக யாருக்கும் சித்தியாகவில்லை. எனவே இரண்டு காதுகளையும் மாறி மாறி இடது கைகளால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பற்றி இழுக்கும் பொழுது கட்டாயம் ஒருவகையான யோகாசன பயிற்சி அவனையும் அறியாமல் மனிதனுக்கு கிட்டுகிறது. இது மருத்துவம் யோகாசனம் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். இது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி விநாயகரை மகிழ்விக்கும் பொருட்டு மகாவிஷ்ணு செய்ய அந்த ஒரு செயலைதான் இந்த சொற்றொடர் குறிக்கிறது.

3 வது அடி: அகட சக்கர விண்மணி யாவுறை

இப்பொழுது வினாவலாம் வார்த்தைக்காக பரம்பொருள் ஒன்று என்றாலும் மகாவிஷ்ணு பெரிய நிலையில் இருக்க விநாயகரைப் பார்த்து அவர் ஏன் கூத்தாட வேண்டும்? என்று இப்பொழுதெல்லாம் வீட்டிலே பெரியவர்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் தானும் குழந்தையாக மாறி விளையாடுவது போல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அந்த திகழ் சக்கரம் கொண்ட விநாயகப் பெருமான் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை எடுத்து வைத்துக் கொண்ட விநாயகப் பெருமானை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு கூத்தாடி அகடங்களையெல்லாம் செய்து விநாயகர் பெருமானை மகிழ்வித்து மீண்டும் சுதர்சன சக்கரத்தை பெற்று அந்த ஒரு பெருமை கொண்ட விநாயகப் பெருமானை அந்த மூல முதல்வனை வணங்கி யாம் இந்த புராணத்தை துவங்குகிறேன் என்பதுதான் இதன் அடிப்படையான கருத்தாகும்.

4 ஆம் அடி: விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்

இதுபோல் இந்த விநாயகன் முன்னாள் விகடகவி போல ஒரு விதூஷகனைப் போல சக்கரத்தை கையில் கொண்ட மகாவிஷ்ணு கூத்தாடிய நிலையே அப்படி கூத்தாடி பெற்ற அந்த விநாயகரின் பெருமையை என்னவென்று கூறுவது? அப்பேற்ப்பட்ட விநாயகரை வணங்கி இதுபோல் கந்தபுராணத்தை துவங்குகிறேன் என்பதே பொருளாகும்.

ஆனாலும் கூட இதுபோல் புராண நுணுக்கத்தில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதுபோல் கந்தபுராணத்தை எழுத முனைந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பாலாரை முன்வைத்துக் கூட துவங்கியிருப்பார். பொதுவாக பாலாறு என்பது சதா சர்வ காலமும் காவிரி போல் நீர் பெருக்கி ஓடக்கூடியது அல்ல. வருடத்தில் சில நாட்கள் மட்டும்தான் நீர் இருக்கக் கூடிய ஒரு நதி. இப்படி எத்தனையோ நதிகள் இருக்கின்றன. எப்பொழுதுமே வெள்ளம் பெருகக்கூடிய கங்கையை காவிரியை நர்மதையை பாடாமல் பாலாறை முன்வைத்து பாடியதில் கூட நுணுக்கம் இருக்கிறது. தாய்மாருக்கு குழந்தை பெற்ற பிறகு குழந்தை பேறுக்கு பிறகு குழந்தைக்கு வேண்டிய அமுதம் சுரக்கும். தேவையான பொழுது அமுதம் சுரப்பது போல தேவையான பொழுது மக்களுக்கு நீரை வழங்குவதால்தான் அந்த நதிக்கு பாலாறு என்று நாமமே இருக்கிறது. பால் எப்பொழுதுமே சுரக்காது. தேவையான பொழுது சுரக்கும். ஆனால் இன்றைய நிலை வேறு. கர்ம வசத்தால் பாலாறு பாழாறு என்கிற நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 538

அகத்திய மாமுனிவர் பொது வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல் நலம் எண்ணி நலம் உறைத்து நலம் செய்ய நலமே நிகழும். ஒவ்வொரு மாந்தரின் வாழ்விலும் என்பதை யாம் எமை நாடும் மாந்தர்களுக்கு எப்பொழுதுமே கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மாந்தர்கள் அறியாமையாலும் புரிதல் இன்மையாலும் என்ன எண்ணுகிறார்கள்? என்றால் எமக்கு தத்துவார்த்தம் வேண்டாம். எமக்கு போதனைகள் வேண்டாம். நாங்கள் வந்து அமர்ந்த உடனேயே இதுபோல் வாழ்வியல் பிரச்சனைகள் இருக்கிறது அது இத்தனை நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்று சித்தர்கள் கூற வேண்டும். அதேபோல் பிரச்சினைகள் தீர வேண்டும். அப்படி தீர்ந்தால் ஓலையை நம்புவோம். சித்தர்களை நம்புவோம் என்று. ஆனாலும் கூட விதியானது அத்தனை எளிதாக மாறிவிடாது. ஒருவேளை மனிதர்கள் ஆசைப்படுவது போல நாங்கள் இறையிடம் மன்றாடி சட்டென்று ஒருவரின் கடுமையான விதியை மாற்றினால் ஏற்கனவே பழக்கப்பட்ட துன்பம் சென்று விதி புதியதாக ஒரு துன்பத்தை தரும். அப்போது அந்த மனிதன் எண்ணுவான் இந்த துன்பத்திற்கு அந்த துன்பமே பாதகம் இல்லை என்று. எனவே தான் படிப்படியாக மனிதன் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று இன்பமும் மகிழ்ச்சியும் சாந்தியும் நிலவக்கூடிய ஒரு வாழ்வை பெற வேண்டும். அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த ஜீவ அருள் ஓலையில் நாம் அடிக்கடி இயம்பிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஞான நிலையில் இருந்து கூற சிஷ்யர்கள் எழுதிய ஓலையின் தன்மை வேறு. யாமே இறைவனருளால் நேரடியாக ஓதுகின்ற இந்த ஓலையின் தன்மை வேறு என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டு விட்டால் குழப்பங்களும் விரக்தியும் தளர்வும் ஏற்படாது. எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறோம். மனதை தளரவிடாமல் தினமும் செய்கின்ற வழிபாடு. சோர்ந்து போகாமல் வாழ்கின்ற தன்மை. திடமான மனம் தர்மங்கள் சத்தியம் இவற்றை கடை பிடித்தால் கட்டாயம் நன்மைகள் ஒவ்வொரு மனிதனையும் தொடரும்.

சுக்ரீஸ்வரர் கோயில்

மூலவர் சுக்ரீஸ்வரர் மற்றும் மிளகேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். சுக்ரீஸ்வரர் லிங்கம் 31.5 அடி உயரம் கொண்டதாகும். 28 ஆக விதிகளை கணக்கிட்டு 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வலதுபுறம் ஆவுடை நாயகி தனி சன்னிதியில் அருள்புரிகிறாள். தலமரம் வில்வமரம் மற்றும் மாமரம். ஊர் திருப்பூர். புராண பெயர் முகுந்தாபுரிபட்டணம். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர் தட்சிணா மூர்த்தி சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் பைரவர் சன்னதியும் கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. பஞ்ச லிங்க கோவிலில் மூலவராக அக்னி லிங்கமாகவும் நீர் நிலம் காற்று லிங்கங்கள் மூன்றும் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. மற்றொன்று ஆகாச லிங்கம் கண்ணுக்கு தெரியாது. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது என்று தல வரலாற்றில் குறிப்படப்பட்டுள்ளது. யாக அம்மன் தனியாக அருள் பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில் தெற்கு வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல் மூலவரை நேரடியாக எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல் மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.

கோயில் கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தில் சூரிய ஒளி இறைவன் மேல் விழுவதற்கேற்ப மூன்று துவாரங்கள் இருந்துள்ளது. தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் வேளையில் சுவாமி சிலையின் நெற்றியில் சரியாக சூரிய ஓளி விழும் அற்புதம் முன்பு நடந்து வந்தது. கோயில் பாதுகாப்பு நலன்கருதி தற்போது துவாரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. கருவறைக்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் சனீஸ்வரர் அருகருகே வீற்றிருக்கின்றனர். நான்கு புறத்திலும் சிவன் அமர்ந்த நிலையில் முழு உருவமாக வீற்றிருக்கிறார். சிவனுக்கு மேல் சிவபெருமானின் சிரசு இருப்பது போன்ற அமைப்புடன் கோபுர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பேரூர் கோவிலுக்கு அடுத்து சிறப்பான வேலைப் பாடுகளுடன் சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன் குளம் கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி தெப்பக்குளம் உள்ளது.

கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இருக்காது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மாட்டின் காதையும் கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின் தவறுக்கு பிராயசித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான் எனவும் பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும் மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. நவக்கிரகத்தில் ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் சனீஸ்வரர். இவர் இங்கு சிவனை நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

கோயில் வழியாக பாசிப் பயறுகளை கொண்டு சென்ற வணிகர் ஒருவரிடம் உன் வண்டியில் என்ன கொண்டு செல்கிறாய் என்று மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்டுள்ளார். இவரிடம் ஏன் கூற வேண்டும் என மறைக்க நினைத்த வணிகர் அனைத்தும் மிளகு என கூறியுள்ளார். பொய் கூறியதால் வண்டி மூட்டையில் இருந்த 100 பயறு மூட்டையும் மிளகாக மாற்றிவிட்டார் சிவபெருமான். விற்பனைக்கு கொண்டு சென்ற போது அதிர்ச்சியடைந்த வியாபாரி ஏன்? இப்படி நடந்தது என வியந்து யோசித்துள்ளார். வழியில் ஒருவர் கேட்டாரே என நினைத்த போது கண்முன் தோன்றிய சிவபெருமான் நான்தான் கேட்டது என கூறியுள்ளார். மீண்டும் என் கோயிலுக்கு வந்து நீ மிளகு வைத்து பூஜிக்க வேண்டும் என கூறியுள்ளார். வந்த வழி இடம் தெரியாது என வியாபாரி கூறினார். நீ வந்த வழியில் வாகனத்தை திருப்பு வண்டி மாடு வந்து நிற்குமிடம் என் ஆலயம் என சிவபெருமான் கூறியுள்ளார். கோயிலுக்கு வந்த வியாபாரி மிளகு வைத்து வழிபட்டவுடன் வண்டியில் இருந்த மிளகு பாசிப்பயறாக மாறி விட்டது.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில் சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும் 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில் காவல் தெய்வமாகவும் 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனால் வணங்கப்பட்டும் 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில் இந்திரனின் வாகனமான ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது எனவும் 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட கலியுகத்தில் தேவர்களாலும் அரசர்களாலும் வணங்கப்பட்டு நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும் அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோயில் இருக்கும் இடம் அன்றைய அரசாங்கத்தால் (சர்க்காரால்) வழங்கப்பட்ட இடம் என்பதால் சர்க்கார் பெரியபாளையம் என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் அக்ரஹார பெரியபாளையம் உள்ளது. கோயில் கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று கோயிலில் இருந்து வெளியேற வசதியுடன் இருந்துள்ளது. பின்னாளில் அவை மூடப்பட்டு விட்டது. வியக்க தகுந்த கோபுர அமைப்பு மற்றும் கல்வெட்டுகள் உள்ளதால் கடந்த 1956 ம் ஆண்டு இக்கோயிலை மத்திய அரசின் கலாச்சார அமைப்புடன் இணைந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கையகப்படுத்தி பராமரிப்பு செய்து வருகிறது. தொல்லியில்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீண்டும் கோவிலை புனரமைக்கும் வகையில் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதற்காக ஆய்வு செய்ய கோவில் கற்களை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும் இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் பூமியில் இறங்காமல் கட்டியபடியேயும் வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும் 9 கொங்கு பாண்டியர்களுக்கும் ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது. கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவள நாட்டைச் சேர்ந்த முகுந்தனூர் என்றும் சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். வீரராஜேந்திரன் காலத்து கல்வெட்டில் விழா பூஜை அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியர் காலத்து கல்வெட்டில் சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள் குளம் ஏரி வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியரின் இன்னொரு கல்வெட்டில் நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி சூரலூர் கிராம சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம் பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது. 15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய உடையார் தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் திருவிழா செலவுகளைச் சமாளிக்க 64 வணிகர் சங்கங்கள் பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. (பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வட்டெழுத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்). பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும் இங்குள்ள சில சிற்பங்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த சிவ லிங்கத்தை அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் வைப்புதலமாக சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 537

கேள்வி: மனிதன் செய்யும் சிறு தவறுக்கு கூட பெரிய அளவில் தண்டனை கிடைக்கும் எனும் பொழுது ஒருவன் செய்யும் சிறு புண்ணியமும் பன்மடங்காக பெருகுமா?

இறைவன் அருளால் தெரியாமல் பாவம் செய்தாலும் தெரிந்து பாவம் செய்தாலும் விளைவு ஒன்றுதான். சிறு பாவமும் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்காக சிறு புண்ணியம் பெரிய அளவில் நன்மையை தரும் என்று நாங்கள் கூறுவதற்கில்லை. ஒருவேளை அப்படி கூறுவதாக கொண்டால் மனிதன் என்ன செய்வான்? எப்பொழுதுமே சிறிய புண்ணியங்களை தான் செய்ய துவங்குவான். இன்னொன்று புண்ணியம் என்பது செய்கின்ற மனிதனின் மனதை பொறுத்துதான். அளவை பொருத்ததில்லை. ஒரு கோடி தனத்தை ஒருவனிடம் தந்து விட்டு உள்ளத்திலே வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இவனுக்கு எல்லாம் செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்துவிட்டதே? இவனுக்கெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? இவன் என் கண்ணில் படாமல் இருந்திருக்கக் கூடாதா? இவன் இல்லாமல் ஒழிந்து போகக்கூடாதா? இந்த தனத்தை எதற்காக தரவேண்டும்? என்று உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஒரு கோடி தனம் தந்தாலும் பலனில்லை. ஆனால் உளமாற ஒரு சிறு தனத்தை தந்தாலும் அது மலை போன்ற புண்ணியமாக பெருகும். அடுத்தது செய்கின்ற அந்த நாழிகை. தக்க காலத்தில் தக்க சூழலில் தக்க நேரத்தில் செய்யப்படுகின்ற உதவியை மிகப்பெரிய உதவியாகும். இதைத்தான் வள்ளுவன் காலத்தினால் செய்த உதவி என்று கூறி இருக்கிறான். இதுபோல் உதவி அல்லது புண்ணியம் என்பது செய்கின்ற அளவைவிட செய்கின்ற உள்ளத்தை பொறுத்தது. பெறக்கூடிய மனிதனின் தேவையையும் மனதையும் வாழ்வியல் சூழலையும் பொறுத்ததாகும்.

அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் துறவி மற்றும் கவிஞர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். இருவரும் சிவநெறிப்படி மகளை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கைநெறி ஆகியது. அவர் தனது இளமைப் பருவத்தை வழிபாட்டில் கழித்தார். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. மாறாக ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார். இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அக்கா மகாதேவி சிறு வயதிலேயே கவிதைகளை எழுதுவார். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பார். ஸ்ரீ சைலம் என்னும் ஊரைப் பற்றியும் அங்கு உறையும் இறைவன் சென்ன மல்லிகார்ச்சுனனைப் பற்றி கேள்விப்பட்டார். பின்பு சென்ன மல்லிகார்ஜுனாவை அதிகம் ஆராதித்துக் கொண்டே இருப்பார். பிறந்ததில் இருந்து இவரின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் பெரிய பெண்ணாகும் வரை வளர்ந்ததாக தெரிகின்றது. அக்கா மகாதேவி சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும் அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

அக்கா மகாதேவி பெரிய பெண்ணானதும் அவருடைய பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த தனவந்தர் ஒருவர் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

அந்நாளில் அவ்வூரையாண்ட கெளசிகன் என்ற மன்னன் உலாப் போகும்போது அக்கா மகாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி மணம் செய்து கொள்ள விரும்பினான். அரசனிடம் இந்த உடம்பு மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பாத்திரம். எலும்புகளினால் செய்யப்பட்ட ஒரு பெட்டி. இது சீழ் மற்றும் துர்நாற்றம் கொண்டது. இதை ஏன் விரும்புகிறீர்கள் இறைவனை நினையுங்கள் என்று அறிவுறை கூறினாள். இதனை கண்டு கொள்ளாத அரசன் அவள் மணத்துக்கு ஒப்புக் கொள்ளாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்று மிரட்டினான். அதனால் சில நிபந்ததனைகளுடன் அக்கா மகாதேவி அரசனை மணக்க ஒப்புக் கொண்டார். தம் வழிபட்டுக்குத் தடை விதிக்கக் கூடாதென்றும் தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வேன். அதன் பின் உங்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று நிபந்தனை விதித்தாள். அரசன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள திருமணம் நிறைவேறியது. ஆனால் அக்கட்டுப்பாட்டின்படி அரசனால் நடக்க முடியவில்லை. எனவே அக்கா மகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறினார். கெளசிகன் தொட்ட ஆடைகளையும் களைந்துவிட்டு கூந்தல் உடலினை மறைக்கக் கலியாண நகரம் சேர்ந்தார். வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். பசவண்ணர் முதலிய வீரசைவ அடியார்கள் உள்ள அனுபவ மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகாதேவி நிர்வாணமாக வந்தபோது ​​​​அவளை மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று மிகவும் சந்தேகத்துடன் வரவேற்றார்கள். அப்போதைய வீரசைவத்தின் தலைவரான அல்லாமா பிரபு இளமை மலரும் பெண்ணே ஏன் இங்கு வந்தாய்? உங்கள் பெற்றோரைப்பற்றி அல்லது கணவரைப்பற்றி சொல். இல்லையென்றால் இங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு போய்விடுங்கள் என்றார். மகாதேவி பதிலளித்தாள். இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் என்று எனக்கு கணவனாக சேர்ந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான். அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார். லிங்கமான சிவனே மணமகனாகியது. நானோ அங்கு மணமகள் ஆனேன். ஆகவே என் கணவர் சென்ன மல்லிகார்ஜுனா. அவரை தவிர எனக்கு இந்த உலகில் வேறு எந்த உறவும் இல்லை என்றார். அல்லாமா பிரபு அவளை நீண்ட நேரம் விசாரித்து பின்பு சன்யாசி என்று ஒப்புக் கொண்டார். உடல் தோற்றத்தில் இவள் பெண் ஆனால் இவளின் மனம் கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து வீரசைவர்களும் மகாதேவியின் பெருமையை அறிவித்தார். அல்லாமா பிரபுவின் வழிகாட்டுதலின் கீழ் அக்கா மகாதேவி தனது தவங்களை தொடர்ந்தார். அங்கு உள்ள சன்யாசிகளுடன் தம் இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்கா மகாதேவியின் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா சென்ன பசவண்ணா அல்லமா பிரபு கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். அக்கா மகாதேவி தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது. ஆனால் தன்னுடைய ஆத்மாவும் தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார். ஒரு முறை அக்கா மகாதேவி ஒரு கூட்டத்தில் அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர். மகாதேவி என்ற பெயர் பின்பு அக்கா மகாதேவி என்று அழைக்கப்பட்டார். வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட பெரும் கவிகளான பசவன்னா சென்னா பசவன்னா கின்னாரி பொம்மையா சித்தாராமைய்யா அல்லமாபிரபு தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக் கொண்டார்.

அக்கா மகாதேவி சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்தார். கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது.

அக்கா மகாதேவி 12 ஆம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்த வண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு தனிமையிலேயே இருந்தார். அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார். அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்துள்ளார். அவர் 400 க்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

சென்ன மல்லிகார்ஜுனா பற்றிய அவரின் கவிதை:

அம்மா கேள் நான் அவரை நேசிக்கின்றேன்
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்
அவருக்கு இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
அவருக்கு ஜாதியோ பேதமோ ஒன்றும் இல்லை
அவர் எங்கும் நிறைந்தவர் உருவமற்றவர் மாறாதவர்
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்
இந்த உலகில் உள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்ன மல்லிகார்ஜுனா மட்டுமே.

பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும் குளங்களும் உள்ளன
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார்.

தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது

இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ள போது
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ள போது
நீ உன்னிடம் உள்ள எதை நீ அவரிடம் மறைக்க நினைக்கின்றாய்.

பட்டு மற்றும் நகைகளின் மினுமினுப்பின் கீழ் என்னை என்ன மறைக்க விரும்புகிறீர்கள்?
முட்டாள்கள் நான் மல்லிகைப் பெருமானின் காலை ஒளியை உடையாக உடுத்தும் போது ​என்னால் வெட்கப்பட முடியாது.

இறைவனை அடைய எண்ணம் கொண்டவர்களுக்கு இவரின் அறிவுரைகள்:

அகந்தை கூடாது. பசிக்கும் போது பிச்சை எடுத்து உண்ண வேண்டும். ஏரி குளங்களில் உள்ள நீரைக் குடித்துக் கோயில்களில் படுத்து உறங்க வேண்டும். மாயை உலகம் என்ற வடிவத்தில் எல்லோரையும் மயக்குகிறது. இதிலிருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும். குருவே உய்யும் நெறி காட்டுவார்.

வீரசைவர்களால் 20000 க்கும் மேற்பட்ட கவிததைகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 300 அக்கா மகாதேவி இயற்றியுள்ளார். இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.