விஷ்ணுவின் நான்காம் அவதாரமான சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் சிற்பக்காட்சி. இடம் பக்தபூர்தர்பார் சதுக்கம் நேபாளம்.

விஷ்ணுவின் நான்காம் அவதாரமான சிங்கத்தின் தலையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்து தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யும் சிற்பக்காட்சி. இடம் பக்தபூர்தர்பார் சதுக்கம் நேபாளம்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நவபிருந்தாவனம் இருக்கும் ஆனேகுந்தி பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின் படகு பயணம். துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஒரு ரம்யமான தீவை போல் காட்சியளிக்கும் அழகும் தெய்வீகமும் நிறைந்த பகுதியாக இந்த நவபிருந்தாவனம் பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. ஆஞ்சநேயர் சிறுவயதில் இந்த மலையை தன் கதையால் அடித்து அடித்து விளையாடி மலைக்கு மாலை தாவி விளையாடிய இடம் ஆகையால் மலைகள் அனைத்தும் சிறுசிறு பாறை துகள்களாக காட்சியளிக்கின்றன. துங்கபத்ரா நதி அதிக ஆழம் கொண்டுள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் படகில்தான் நவ பிருந்தாவனம் செல்ல முடியும். துங்கபத்திரா நதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த மணற்திட்டு சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது. அதாவது 30 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஸ்ரீ ராகவேந்திரரின் குரு சுதீந்திர தீர்த்தர் முதலான 9 மகான்கள் துங்கபத்திரா நதிக்கரையின் நடுவே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். துங்கபத்திராவின் நடுவே பள்ளிகொண்ட அரங்கநாதர் கோவில் அனுமன் கோவில் மற்றும் ஒன்பது மகான்கள் 1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் 2. ஸ்ரீ ஜெய தீர்த்தர் 3. ஸ்ரீ கவீந்திர தீர்த்தர் 4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் 5. ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் 6. ஸ்ரீ ஸ்ரீனிவாச தீர்த்தர் 7. ஸ்ரீ ராம தீர்த்தர் 8. ஸ்ரீ சுசீந்திர தீர்த்தர் 9. ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.
நவபிருந்தாவனத்தில் முதன்மையாக ஸ்ரீ அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பெரிய பிராட்டியார் ஆதிசேஷனில் அமர்ந்து சேவை செய்யாமல் கீழே நின்று சேவை செய்யும் வண்ணம் அமைந்துள்ளது. இச்சன்னதியின் அருகே ஜாக்ரதை அனுமனின் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் அனுமன் இராவணனின் மகன் அக்ஷய குமாரனைத் தன் காலில் இட்டு வதம் செய்யும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இந்த இரண்டு சன்னதிகளுக்கு இடையில் ஒரு குகை உள்ளது இந்தக் குகையில் அமர்ந்து தியானம் செய்யலாம்.
அவதாரத்ரய ஹனுமான்
மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த ஹனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய ஹனுமான். ஹனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார். மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் போது நவபிருந்தாவனத்திற்கு யாரும் செல்ல முடியாது அப்போது ஆற்றின் இக்கரையிலிருந்தே கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் அறுபத்தி நான்காவது படலமாகும்.
ஒரு சமயம் கடற்கரையின் அருகே இருந்த பட்டினம் ஒன்றில் வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இறைவனின் அருளால் பெண் குழந்தை பிறந்தது. அவ்வணிகருக்கு தங்கையின் மகன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கே தன்னுடைய மகளை மணம்முடிக்க இருப்பதாக வணிகர் கூறி வந்தார். சிறிது காலம் கழித்து வணிகரும் அவருடைய மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள். ஆதலால் அவ்வணிகரின் மகள் தனித்து விடப்பட்டாள். வணிகர் மறைந்த சேதியானது வணிகரின் மருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவனும் மாமனின் ஊரினை அடைந்தான். சில நாட்கள் கழித்து மாமன் மகளையும் மாமனின் பொருட்களையும் எடுத்துக் கொண்டு என்னுடைய மாமன் மகளை உறவினர்கள் முன்னிலையில் மதுரையில் மணந்து கொள்வேன் என்று கூறி அழைத்துச் சென்றான். திருப்புறம்பியத்தை அடைந்த போது திருக்கோவிலின் அருகில் இருந்த வன்னி மரத்தின் அடியில் உணவு சமைத்து உண்டு உறங்கும் போது கொடிய நஞ்சுள்ள பாம்பு ஒன்று அவனைத் தீண்டியது. அவன் மாண்டான். தாய் தந்தையரை இழந்து அனாதையாகி நின்ற போது ஆதரவளித்தவன் மாண்டதைக் கண்ட இளம்பெண் கதறினாள். இளம்பெண்ணின் கதறலைக் கேட்டு அங்குதங்கியிருந்த திருஞானசம்பந்தர் அவளிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். அப்பெண்ணும் தனக்கு நடந்தவைகளைக் கூறினாள்.
திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் மீது இரக்கம் கொண்டு இறைவனார் மீது பதிகங்கள் பாடி மனமுருக வழிபட்டார். இறைவனாரும் அப்பெண்ணின் துன்பத்தைப் போக்க அவ்வணிகனை உயிர்ப்பித்தார். அவ்வணிகனிடம் திருஞானசம்பந்தர் இப்பெண்ணை இங்கேயே திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். எம் உறவினர்களும் சாட்சிகளும் இல்லாது எவ்வாறு இவளை மணம் முடிப்பேன்? என்று கேட்டான். அதற்கு திருஞானசம்பந்தர் இங்குள்ள வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சிகளாகும். உன் மாமனின் விருப்பப்படி இவளை நீ மணந்து கொள் என்று கூறினார். அதற்கு உடன்பட்ட வணிகன் வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு அவளை மணம் முடித்து மதுரைக்கு அழைத்துச் சென்றான். அவ்வணிகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. வணிகன் தன் இரு மனைவியருடனும் வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் வணிகருக்கு இரு மனைவிகளின் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கு இடையே சண்டை வந்தது. அந்த சண்டை இருபெண்களுக்கு இடையே வாக்கு வாதத்தில் முடிந்தது. அப்போது மூத்தவள் இளையவளிடம் நீ என்னுடைய கணவனை அநியாயமாக திருமணம் செய்து விட்டாய்? யாரை சாட்சியாகக் கொண்டு திருமணம் செய்தாய்? என்று கேட்டாள். அதற்கு இளையவள் எங்களுடைய திருமணத்திற்கு வன்னி கிணறு லிங்கம் ஆகியவை சாட்சியாக இருந்தன என்று கூறினாள். உன்னுடைய சாட்சிகளை மதுரைக்கு அழைத்து வந்தால்தான் உன்னுடைய திருமணத்தை முறையானதாகக் கூறமுடியும் என்று கூறினாள். இதனைக் கேட்டதும் இளையவள் தன்னுடைய திருமணத்தின் சாட்சிகளை எவ்வாறு மதுரைக்கு அழைத்து வர இயலும் என்று எண்ணினாள். பின்னர் தனக்கு ஏற்பட்ட துயரத்தை போக்குமாறு வேண்டி சொக்கநாதரை மனமுருக வழிபட்டாள்.
இறைவனாரும் அவளின் துயரத்தை நீக்கும் பொருட்டு திருகோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் திருமணத்தின் சாட்சிகளான வன்னி கிணறு லிங்கம் ஆகியவற்றை தோன்றச் செய்தார். இதனைக் கண்டதும் மதுரை மக்கள் அதிசயித்தனர். இளையவள் இறைவனாரின் கருணை எண்ணி ஆனந்தம் கொண்டாள். தன்னுடைய திருமண சாட்சிகளை மதுரைக்கு வரவழைத்ததை மூத்தவளுக்கு காண்பித்தாள். அதனைக் கண்ட மூத்தவள் தன்னுடைய தவறினை உணர்ந்தாள். விவரம் அறிந்து அவ்விடத்திற்கு வந்த வணிகன் மூத்தவளிடம் கோபம் காட்டி அவளை விரட்டினான். இளையவள் அவனை சமாதானம் செய்து இருவரும் ஒற்றுமையுடன் வாழ உறுதி கொள்வதாகக் கூறினாள். பின்னர் அனைவரும் இனிது வாழ்ந்திருந்தனர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
உறுதியான மனதால் இறைவனை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சமணரைக் கழுவேற்றிய படலம் அறுபத்தி மூன்றாவது படலமாகும்.
திருஞானசம்பந்தர் சொக்கநாதரின் திருவருளால் கூன்பாண்டியனின் வெப்புநோயையும் உடல் கூனினையும் போக்கியதைக் கண்டு மங்கையர்கரசியும் குலச்சிறையாரும் பெரிதும் மகிழ்ந்தனர். மதுரையில் மீண்டும் சைவத்தை தளிர்க்கச் செய்யுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். திருஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அவர்களிடம் கூறி திருக்கோவிலை அடைந்து இறைவனை மனமார வழிபட்டார். திருஞானசம்பந்தர் இறைவனாரிடம் ஐயனே பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க அருள்புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பாண்டியனின் வெப்புநோயை தீர்ப்பதில் தோல்வியுற்ற சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதிட்டு வெல்ல முடிவு செய்தனர். மன்னனிடம் இதனைத் தெரிவித்து அவரை வாதப்போருக்கு அழைத்தனர். மன்னனும் இதற்கு உடன்பட்டான். போட்டியின்படி மதுரை நகருக்கு வெளியே அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. சமணர்கள் தங்களின் பாடல்களை பனைஓலை சுவடியில் எழுதி குண்டத்தில் போட்டனர். திருஞானசம்பந்தரும் போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை அக்னியில் இட்டார்.
அக்னி குண்டம் எரிந்து முடிந்ததும் திருஞானசம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிகம் எரியாமல் புதுப்பொலிவுடன் இருந்தது. சமணர்களின் பாடல் தீயில் கருகியது. ஆனால் சமணர்கள் சமாதானம் அடையாமல் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர். அப்போது பாண்டியன் குறுக்கிட்டு வாதத்தில் தோற்றவர்கள் கழுவேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருவரும் ஒப்புக் கொண்டனர். வைகை ஆற்றில் சமணர்கள் பனை ஓலையில் எழுதிய தங்களின் பாடல்களை இட்டனர். அச்சுவடிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருஞானசம்பந்தர் தான் எழுதிய வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்ற பதிகத்தை ஆற்றில் போட்டார். திருஞானசம்பந்தரின் ஏடானது வைகை ஆற்று நீரினை எதிர்த்து கிழித்து சென்று சற்று தூரத்தில் மறைந்தது. இதனைக் கண்ட அரசர் சமணர்களிடம் திருஞானசம்பந்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சைவத்திற்கு மாறினால் கழுவில் ஏற வேண்டாம் என்றார். ஆனால் சமணர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தாங்களாகவே கழுவில் ஏறி தங்களின் உயிரினைத் துறந்தனர்.
ஏடு மறைந்த இடத்தில் வில்வமரத்தின் அடியில் இறைவனார் சுயம்புவாய் தோன்றி இருந்தார். அதனைக் கண்டதும் அங்கிருந்தோர் அனைவரும் அவரை வழிபட்டனர். திருஞானசம்பந்தர் அப்போது வன்னியமும் மத்தமும் என்ற பதிகத்தைப் பாடி இறைவனாரை வழிபட்டார். அப்போது ஒரு முதியவர் வடிவில் இறைவனார் அவ்விடத்திற்கு வந்து திருஞானசம்பந்தரிடம் ஏடுகளை தந்து மறைந்தருளினார். பின்னர் சுந்திரபாண்டியன் அவ்விடத்தில் திருகோவில் ஒன்றினைக் கட்டி சிலகாலம் தங்கியிருந்து இறைவனாரை வழிபட்டான். அவ்விடம் தற்போது திருவேடகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி மீண்டும் சோழ நாட்டிற்குச் சென்றார்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறையருளை யாராலும் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் அறுபத்தி இரண்டாவது படலமாகும்.
அரிமர்த்த பாண்டியனுக்குப் பின்னர் அவனுடைய வழித்தோன்றலாக நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். கூன்பாண்டியன் போர்த்திறத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினான். அவன் முதுகிலிருந்த கூன் காரணமாக அவனது பெயர் மறைந்து காரணப் பெயராலேயே அழைக்கப்பட்டான். மூவேந்தர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். சோழ அரசனின் மகளான மங்கையர்கரசியாரை மணந்திருந்தான். இவனுக்கு குலச்சிறையார் என்ற சிவனடியார் நல்ல ஆலோசனைகளைக் கூறும் மந்திரியாக அமைந்திருந்தார். கூன்பாண்டியன் காலத்தில் சமண சமயம் மதுரையில் பரவத் தொடங்கியது. அரசனும் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டு மக்களையும் சமண சமயத்தைப் பின்பற்றச் செய்தான். இதனால் மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் பெரிதும் வருந்தினர். சொக்கநாதரிடம் சைவம் மீண்டும் தழைக்க அருள்புரிய வேண்டினர். அப்போது ஒருநாள் சோழநாட்டில் இருந்து வந்த வேதியர் ஒருவரை மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் சந்தித்தனர். சோழநாட்டில் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர் பதிகங்கள் பாடி சைவ சமயத்தை பரவச் செய்த செய்தியை அவ்வேதியரின் மூலம் அறிந்தனர். மேலும் அவர் மதுரையம்பதிக்கு வந்து சொக்கநாதரை வழிபட திட்டமிட்டு இருப்பதையும் தெரிந்து கொண்டனர். உடனே ஆளுடைய பிள்ளையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு விரைந்து வருமாறும் சைவ சமயத்தை மதுரையில் மீண்டும் தழைக்க செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து ஓலை எழுதி வேதியரிடம் கொடுத்து அனுப்பினர்.
வேதியரும் திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்த திருஞானசம்பந்தரிடம் அவ்வோலையைக் கொடுத்தார். அப்போது திருநாவுக்கரசர் தற்போது கோளும் நாளும் நன்றாக இல்லை. ஆதலால் சிறிது காலம் தாழ்த்தி மதுரையம்பதிக்கு செல்லுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு திருஞானசம்பந்தர் நமசிவாய மந்திரத்தை சொல்லும் சிவனடியார்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்னும் பொருள் கொண்ட கோளறு பதிகத்தைப் பாடி மதுரையம்பதிக்கு விரைந்தார். அங்கு வாகீச முனிவரின் மடத்தில் தங்கி இருந்தார். திருஞானசம்பந்தரின் வரவினை அறிந்த சமணர்கள் அபிசார வேள்வியைத் தொடங்கி கொடிய தீப்பிழம்பினை தோற்றுவித்து திருஞானசம்பந்தரை அழிக்குமாறு ஏவிவிட்டனர். அத்தீயானது திருஞானசம்பந்தர் வாட்டியது. உடனே தன்னுடைய இந்நிலைக்கு காரணம் பாண்டியன் சமணர்களை ஆதரித்ததே. ஆகையால் இத்தீயின் வெப்பமானது பாண்டியனை சென்று அடையுமாறு திருஆலவாய் மேவிய என்னும் பதிகத்தைப் பாடினார். உடனே தீயின் வெப்பமானது வெப்பு நோயாக மாறி பாண்டியனைச் சென்றடைந்து அவனை வாட்டியது. வெப்பு நோயால் வருத்தம் கொண்ட பாண்டியன் சமணர்களை அழைத்து தனக்கு உண்டான இக்கொடிய நோயினை போக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். சமணர்களும் மயிற்பீலிகளைக் கொண்டு விசிறியும் நீரினைத் தெளித்தும் வெப்புநோயை தீர்க்க முற்பட்டனர். ஆனால் பாண்டியனின் வெப்புநோய் மேலும் அதிகரித்தது.
மங்கையர்கரசியார் திருஞானசம்பந்தர் ஒருவரே உங்களின் வெப்புநோயை தீர்க்க வல்லவர் என்று கூன்பாண்டியனிடம் தெரிவித்தார். வெப்புநோயால் பாதிப்படைந்த கூன்பாண்டியன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் அழைப்பினை ஏற்று அரசனின் இருப்பிடத்திற்கு வந்தார். அங்கிருந்த சமணர்கள் பாண்டியனது வலப்புறத்து நோயை திருஞானசம்பந்தரும் இடப்புறத்து நோயை தாங்களும் போக்குவதாக அறிவித்தனர். உடனே திருஞானசம்பந்தர் தன்னிடமிருந்த திருநீற்றினை எடுத்தார். அதனைக் கண்டதும் சமணர்கள் இது மாயநீறு என்று கூறினர். இதனைக் கேட்டதும் சொக்கநாதரின் திருமடப்பள்ளியிலிருந்து சாம்பலை எடுத்து வரச்சொல்லி திருநீற்றுப்பதிகம் பாடி அச்சாம்பலை திருநீறாகக் கருதி கூன்பாண்டியனின் வலப்புறத்தில் தேய்த்தார். பாண்டியனைப் பற்றி இருந்த வலப்பக்க வெப்பு நோய் நீங்கியது. சமணர்கள் தங்களிடம் உள்ள மருந்தை இடது பக்கம் தேய்த்தனர். இப்போது கூன் பாண்டியனின் நோய் இன்னும் அதிகமானது. உடனே கூன்பாண்டியன் தன்னுடைய இடப்பக்க நோயை போக்குமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தான். திருஞானசம்பந்தரும் இடபுறமும் திருநீற்றினைத் தடவியதும் வெப்பு நோய் நீங்கியதோடு கூனும் நீங்கியது. பேரழகுடன் திகழ்ந்த அப்பாண்டியன் சுந்திரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். சுந்தர பாண்டியனும் திருஞானசம்பந்தருக்கு தக்க உபசரணைகள் மரியாதைகள் செய்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக மடத்தில் சேர்த்தான். மீனாட்சி சுந்தரேசர் கோயிலுக்கு ஏராளமான பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் வாகனங்கள் வெகுமதியாகக் கொடுத்தான். சமணர்களை ஊரை விட்டே விரட்டிவிட்டான். சுந்தர பாண்டியன் பெரும் சிவபக்தனாக மாறினான். பாண்டியனும் பாண்டிய நாட்டு மக்களும் சைவசமயத்தைத் தழுவினர்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
சமண மதத்தில் உள்ள துஷ்டர்களை விரட்டியதையும் சைவத்தை நிலைநாட்டியதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.