ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 688

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மிகப் பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிதமான கருணையால் தன் ஆன்மாவை ஓரே சமயத்தில் பல்நூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் இருக்கிறார்கள். பலராமர் பரசுராமர் கிருஷ்ணர் இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 687

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

தீய செயல்களை முயற்சி செய்து வெற்றி பெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை. புண்ணியமே வரும். எனவே நல்ல விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் போராடி செய்ய முயல வேண்டும். முடியவில்லை என்றாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 686

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மகாசக்தி மகா பரம்பொருள் தன்னுடைய பரிபூரண அனுக்கிரகத்தை எதன் மீது முழுமையாக செலுத்துகிறதோ அது எப்பொழுதுமே உயர்ந்ததுதான். எல்லா நல்ல விஷயங்கள் மீதும் எல்லா நல்ல உள்ளங்கள் மீதும் இறைவனின் அனுக்கிரகம் என்றும் இருக்கிறது. எனவே நல்ல உள்ளங்கள் அனைத்தும் திருவண்ணாமலையே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் கயிலேயே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் அறுபடைவீடே நல்ல உள்ளங்கள் அனைத்தும் இங்குள்ள புனித தலங்களும் ஒன்றேயாம்.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 685

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறானோ அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கி விடுகிறான். இதிலிருந்து அவன் இறைவனை நோக்கி செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.

நான் என்ற தனித்தன்மை இல்லாத ஒழிந்து போன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 684

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உண்மையாகவே ஒரு மனிதன் மனஉளைச்சல் கொள்ள வேண்டியது அறிய வேண்டியதை விட்டுவிட்டு ஹரியை அறிய வேண்டியதை விட்டுவிட்டு அறியாதவற்றையெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறார்களே. இந்த அறியா சனங்களை எண்ணி உண்மையில் வேதனை கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மனிதன் மெய்யாக மன அழுத்தம் கொள்ள வேண்டியது மெய்ப் பொருளை அறியாமல் பொய்ப் பொருள் பின்னால் செல்கிறோமோ என்றுதான். ஆனால் அவனுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் பொய் பொருள் பின்னால் அழியக் கூடிய வாழ்க்கைக்கு பின்னால் சென்று கொண்டே அதனால் தன்னைத் தானே சுயa சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்வதும் ஒரு வகையான அறியாமை தான். அந்த அறியாமையை அவனுக்கு தருவது அவன் செய்த பாவ வினைகள் தான். அந்த வினைகளின் எதிரொலி தான் சுற்றி சுற்றி மனிதனை பலவீனப்படுத்துகிறது. இதற்கு மீண்டும் மீண்டும் வழியென்றால் இறைவனை நோக்கி செல்வதும் பக்தி செலுத்துவதும் தர்மம் செய்வதும். இது ஒன்றேத் தவிர வேறு வழி இல்லையப்பா.