காலசம்ஹாரர்

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 690

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனுக்கு உகந்த இடம் ஒவ்வொரு மனிதனின் மனம்தான். அந்த மனம் சுத்தமாக பரிசுத்தமாக நேர்மையாக நீதியாக சத்திய நெறியில் தர்ம நெறியில் இருந்தால் எந்த இடத்திலும் இறைவன் அருள் மனிதனுக்கு உண்டு. ஒருவன் சுகமாக இருக்க வேண்டுமென்றால் பிறர் சுகத்தை கெடுக்கக்கூடாது. ஒருவன் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் பிறர் நிம்மதியை கெடுக்கக்கூடாது. ஒருவன் பிறரின் வார்த்தைகளால் காயப்படக்கூடாது என்றால் பிறரை வார்த்தைகளால் காயப்படுத்ததாமல் இருக்கவேண்டும். எனவே இதையெல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு நீ உன் பக்தி வழியில் தொடர்ந்து செல்லச் செல்ல உன் வாழ்க்கையிலும் நிம்மதி வரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 689

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பெயர் புகழ் இதற்காக ஒரு மனிதன் உள்ளதை மறைத்துப் பேசுவான். ஏன் என்றால் உள்ளதை உள்ளபடி கூறினால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? யார் ஒத்துக் கொள்வார்கள்? பொய் கூறினால் தான் இந்த கலிகாலத்திலே வெற்றி கொள்ள முடியும். தம்மை மதிப்பார்கள். மெய்யைக் கூறினால் பிரச்சினைதான் வரும் என்று எண்ணிக்கொண்டு மனிதன் மெய்யை மறைத்து பொய்யைக் கூறுகின்ற வழக்கத்துக்கு வந்திருக்கிறான்.

ஆபத்தில்லாத யாருக்கும் எந்தவிதமான தற்காலத்திலும் பிற்காலத்திலும் பாதிப்பை தராத பொய்யை வேண்டுமானால் ஒருமனிதன் வேடிக்கையாக கூறலாம். ஆனால் தீய விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே ஒரு மனிதன் பொய் கூறினால் கடுமையான பிரம்மஹத்தி தோஷத்தையே அவன் நுகரவேண்டி வரும். ஒரு உயிரை கொன்றால் தான் பிரம்மஹத்தி தோஷம் என்பதல்ல. வெறும் வார்த்தையால் பிறரை வதைத்தாலும் பிறரை நம்ப வைத்து ஏமாற்றினாலும் ஹத்தி தோஷம் பிடிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு மனிதனை பயமுறுத்துவதற்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ நாங்கள் கூறவில்லை. ஒரு மகான் முன் அமரும் பொழுது எதிர்காலம் இவ்வாறு இருக்கும் அவ்வாறு இருக்கும். நீ நன்றாக வருவாய் நிறைய தானம் செல்வம் சேரும். நிறைய பெயர் புகழ் வரும் என்று வழக்கத்திற்கு ஏற்ப கூறாமல் இப்படி கூறுகிறோம் என்றால் ஒரு மனிதன் என்ன சேர்த்தாலும் சிரஸிற்கு மேல் மரணம் எனும் கத்தி தொங்கி கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

தெய்வங்கள்

வராஹர் விநாயகர் திரிமூர்த்தி மகிஷாசுரமர்த்தினி நரசிம்மர். தனியாக மண்டபம் போல் அமைப்பில் சிவலிங்கம். அனைத்து தெய்வங்களும் ஒரே மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடம் பாமினி குகைக்கோயில் கர்நாடகா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 688

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மிகப் பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிதமான கருணையால் தன் ஆன்மாவை ஓரே சமயத்தில் பல்நூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் இருக்கிறார்கள். பலராமர் பரசுராமர் கிருஷ்ணர் இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 687

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

தீய செயல்களை முயற்சி செய்து வெற்றி பெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை. புண்ணியமே வரும். எனவே நல்ல விஷயங்களை ஒவ்வொரு மனிதனும் போராடி செய்ய முயல வேண்டும். முடியவில்லை என்றாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 686

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மகாசக்தி மகா பரம்பொருள் தன்னுடைய பரிபூரண அனுக்கிரகத்தை எதன் மீது முழுமையாக செலுத்துகிறதோ அது எப்பொழுதுமே உயர்ந்ததுதான். எல்லா நல்ல விஷயங்கள் மீதும் எல்லா நல்ல உள்ளங்கள் மீதும் இறைவனின் அனுக்கிரகம் என்றும் இருக்கிறது. எனவே நல்ல உள்ளங்கள் அனைத்தும் திருவண்ணாமலையே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் கயிலேயே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் அறுபடைவீடே நல்ல உள்ளங்கள் அனைத்தும் இங்குள்ள புனித தலங்களும் ஒன்றேயாம்.