வியாசரின் அறிவுரைக்கு ஏற்ப யுதிஷ்டிரன் அர்ஜுனனை அரிய பெரிய செயலை செய்து முடிப்பதற்காக அவனை அனுப்பி வைத்தார். அர்ஜுனன் இமாலயத்தின் உட்பகுதியில் இருந்த இந்திரகிலம் என்னும் இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அங்கு இந்திரன் வயது முதிர்ந்த பிராமண வடிவத்தில் வந்து அர்ஜுனனிடம் மகாதேவனாகிய சிவனை நோக்கி கடும் தவம் புரியும் படி அறிவுறுத்தினார். அர்ஜுனன் புரிந்த தவம் மிகமிகக் கடினமானது. அவனுடைய கடினமான தவத்தின் போது கட்டுப்பாடின்றி காட்டுப் பன்றி ஒன்று அவன் மீது பாய்ந்தது. தன்னை காக்கும் பொருட்டு அம்பு ஒன்றை அவன் விலங்கின் மீது எய்தான்.
அதே வேளையில் வேடன் ஒருவன் தன் அம்பை அந்தப் பன்றியின் மீது எய்தான். வேட்டைக்காக வாய்ந்த பன்றியை தானே கொன்றதாக இருவரும் சண்டையிட்டனர். சண்டை பயங்கரமான விற்போராக வடிவெடுத்தது. அர்ஜுனன் அப்போராட்டத்தில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் அதை முன்னிட்டு அவனுடைய ஊக்கம் குறையவில்லை. சிவலிங்கம் ஒன்றை களிமண்ணால் செய்து வைத்துக் கொண்டு சிவபூஜை பண்ணினான். பூமாலை ஒன்று அந்த லிங்கத்திற்கு சாத்தினான். தான் வெற்றி அடைய வேண்டுமென்று சிவனாரிடம் முழு மனதுடன் பிரார்தனை பண்ணினான். இப்பொழுது புதிய ஆற்றல் பெற்றவனாக சண்டையில் மீண்டும் ஈடுபட ஆயுத்தமானான்.
அப்போது அவன் சிவலிங்கத்திற்கு சாத்திய பூமாலை அந்த வேடன் கழுத்தில் அணிந்திருந்தை கண்டு வேடனாக வந்தவன் யார் என்பதை அக்கணமே அர்ஜூனன் அறிந்துகொண்டான். சிவனார் தாமே வேடனாக வேடம் தாங்கி வந்து இருக்கிறார் என்று அறிந்து அடிபட்ட மரம் போல் வீழ்ந்து வணங்கினான். இறைவனார் அவனை வாரி எடுத்து தழுவிக்கொண்டார். இறைவன் புரிந்த செயல் விஜயனை உண்மை விஜயன் ஆகவே ஆக்கிவிட்டது வெற்றிவீரன் என்பது விஜயன் எனும் சொல்லின் பொருள். அர்ஜூனனுடைய வல்லமையை ஆராய்ச்சி செய்த பார்த்த பிறகே பாசுபத அஸ்திரத்தை சன்மானமாக அவனுக்கு சிவபெருமான் வழங்கினார். இறைவன் கொடுத்த அந்த ஆயுதத்தை அர்ஜுனன் பணிவோடு ஏற்றுக்கொண்டான் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த யமன் வருணன் மற்றும் தேவர்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்களையும் அர்ஜுனனுக்கு கொடுத்தார்கள்.
இந்திரனுடைய ஆணையின் படி அவனுடைய சாரதி மாதலி ரதவிமானத்தில் அங்கு வந்து இறங்கி அர்ஜுனனை அவனுடைய தந்தையின் தேவலோகத்திற்கு அழைத்தான். அர்ஜூனனும் அந்த அழைப்புக்கு இணங்கி ரதத்தில் ஏறிக்கொண்டான். ரதம் மேலே கிளம்பியது. பல நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி அமராவதி என்னும் இந்திரனுடைய அற்புதமான நகரத்தை ரதம் சென்றடைந்தது. தேவர்கள் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்று அவனுடைய தெய்வீக தந்தை இந்திரனிடம் அழைத்துச் சென்றனர். இந்திரன் தன்னுடைய மண்ணுலக மைந்தனை விண்ணுலகத்தில் தனக்கு சமமாக தன்னுடைய சிம்மாசனத்தில் தனக்கு பக்கத்தில் அமரச் செய்தான். மண்ணுலக மைந்தன் அழகிலும் விண்ணுலக நடைமுறையிலும் தன்னுடைய தந்தைக்கு நிகராக திகழ்ந்தான்.