திரௌபதியைப் பார்த்து கர்ணன் ஐந்து அடிமைகளின் மனைவியே என் நண்பன் துரியோதனனுக்கு அடிமையாவதில் உனக்கு அவ்வளவு அவசரமா? இந்த ஆட்டத்தில் உன் கைவளை குலுங்கும் ஓசையைக் கேட்க நான் ஆவலாய் இருக்கிறேன். கண்களில் கோபத்துடன் திரௌபதி கர்ணனை முகத்துக்கு நேரே பார்த்து அங்க நாட்டு முதல் அடிமையே ஐவருக்கு நான் அடிமையா இல்லை அவர்களுடன் நானும் அடிமையா என சூதாடித் தீர்மானிக்கப்படவில்லை. திரியோதனனின் மனைவி பானுமதியுடன் சூதாடி கைவளையோசை கேட்டு அடிமையான உன் புத்தி அப்படித்தான் பேசும் என்றாள். தன்னை அடிமை என்று அவள் கூறியதே கேட்டு துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டானே? உண்மையில் தான் துரியோதனனின் அடிமையா? தான் எந்த மூதாதையர் விட்டுச் சென்ற இராஜ்யத்தையும் ஆளவில்லை. எந்த மன்னனுடன் போர் புரிந்து வென்ற தேசத்தையும் ஆளவில்லை. துரியோதனன் கொடுத்த அரசு அங்க தேசத்து அரசன் என்ற அடிமைப் பட்டயம். திரௌபதி பார்வையில் நான் அடிமைதான். அவள் பார்வை தவறா? மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ கர்ணன் சுய சிந்தனையில் ஆழ்ந்தான்.
திரௌபதி இங்கு அமர்ந்து சூதாட மாட்டாள். கைகளாலும் பகடை உருட்டமாட்டாள். கால்களால் தான் உருட்டுவாள். நான் கைகளால் பகடையை தொடுவதில்லை என சத்தியம் செய்திருக்கிறேன் என்றாள். துரியோதனன் நீ காலால் ஆடினால் என்ன? கையினால் ஆடினால் என்ன? மாமா என் சார்பில் ஆடுவார். அதிகம் பேசாதே. ஆட்டத்தைத் துவக்கு என்றான் துரியோதனன். தன் கைவளை ஓசை ஏதும் எழக்கூடாது என்று கிருஷ்ணனால் வளர்ந்த வஸ்திரத்தினால் உடலோடு கைகளையும் சேர்த்து மூடிய நிலையில் நடந்து வருகிறாள். சட்டென தனது வலது காலை தூக்கி சூதாட்ட மேடையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த காய்களை வேகமாய் தட்டி விடுகிறாள். அது மன்னர் திருதராஷ்டிரர் வீற்றிருந்த சிம்மாசனத்தின் முதல் படியில் வேகமாய் மோதி கீழே விழுகிறது. திரௌபதியின் இச்செயல் பலரையும் துணுக்குறச் செய்கிறது. கர்ணன் இதை ஆட்சேபிக்கிறான். அடிமை மன்னரே சற்று அமருங்கள். இது எனக்கும் மாமா சகுனிக்கும் இடைப்பட்டது. நான் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் கூறட்டும். பிறகு அரசர் நீதி வழங்கட்டும். நான் செய்தது சரியென்றால் ஆமாம் அல்லது தவறென்றால் இல்லை என்று இரண்டில் ஒன்றாய் சகுனி அவர்கள் பதில் கூறட்டும். என் கேள்வி நான் ஒரு சிறுவண்டுக்கு மோட்சத்திற்க்கான பாதை காட்டினேன். இது உண்மைதானா? இல்லையா? பதில் கூறும் சகுனி அவர்களே என்றாள்.
சகுனி மிகவும் கலங்கிவிட்டான். ஆமாம் அல்லது இல்லை என்று கூற வேண்டிய கட்டாயம். ஒரு சிறுவண்டை அகஜ்ஜுவாலா என்னும் மரத்தில் செய்த பகடைக்காயில் வைத்திருப்பதை தெரிந்தே சொல்கிறாளா? தான் துரியோதனனுக்கும் கூட சொல்லாத இந்த ரகசியத்தை இவள் எப்படி அறிந்தாள்? இவள் பகடையை உதைத்த வேகத்தில் காயில் இருந்த சிறுவண்டு நிச்சம் இறந்து போயிருக்கும். அதைத்தான் இவள் மோட்சத்திற்கு வழி என்கிறாள். ஆமாம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லை என்று சொன்னால் பகடைக்காயை உடைத்து சிறுவண்டை இந்த சபையில் காட்டுவாள். தான் சங்கேதமாய் எண்களை சொல்லும் போது சங்கேத சொல்லுக்கு ஏற்ப அந்த வண்டு குதித்து விழும். அதனை கணக்கிட்டு தான் சொல்லும் எண்ணிக்கையை விழும்படி இதுவரை தான் செய்தது எல்லோருக்கும் தெரிந்துவிடும். இதில் தோற்றுவிட்டோம். இனி என்ன செய்வது? நொடியில் தீர்மானித்து சகுனி எழுந்து நின்று ஆமாம் என்று தலை கவிழ்ந்து குற்றவாளி போல் நின்றான்.
தொடரும்……………..