பாஞ்சசன்ய சங்கு

பாகல்பூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பங்க மாவட்டத்தில் மாந்தர் பர்பத் அமைந்துள்ளது. இங்கு உள்ள மலை 700 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலையைப் பற்றி புராணங்கள் மற்றும் மகாபாரதத்தில் பல கதைகள் உள்ளது. மலையின் நடுவில் நரசிம்மர் குகைக்கு அருகில் ஒரு சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் எப்போதும் வறண்டு போகாது. சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்பு நீர் வற்றி விடும். அப்போது இந்த குளத்தில் உள்ள சங்கை பார்க்கலாம். மீதி 364 நாட்கள் 70 லிருந்து 80 அடி தண்ணீருக்குள் இந்த சங்கு இருக்கும்.  இந்த ஒரு நாள் மட்டும் தண்ணீர் குறைந்து சங்கு வெளியே தெரியும் அடுத்த நாள் தண்ணீர் சேர்த்து குளம் நிரம்பி சங்கு மறைந்து விடும். இந்த பாஞ்சசன்ய சங்கு கடலை கடையும் போது கிடைத்த ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்தாக கூறப்படுகிறது. கி.பி 11 முதல் 12 ஆம் நூற்றாண்டு காலத்திய சிவன் காமதேனு மற்றும் வராகி ஆகியோரின் பல அரிய சிற்பங்கள் இந்த கோவில் இருக்கும் மலையைச் சுற்றி சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 382

கேள்வி: தர்மத்தில் எப்படி கர்ணனை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதோ அதைப் போல் பக்தியில் பிரகலாதன் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

பக்தியில் இடை எழுத்தை எடுத்து விட்டால் பதி என்று வரும். பதியை பக்தியோடு பார்ப்பது ஒரு நிலை ஒரு காலம். இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் பதியும் பத்தினியை அவ்வாறுதான் நோக்க வேண்டும். பதி பக்தி என்று பதிக்கும் பத்தினிக்கும் ஒரு உடன்பாடு சம நிலையில் வந்து விட்டால் அந்த பதிக்குள் இருக்கின்ற இறையும் பத்தினிக்குள் இருக்கின்ற இறைத் தன்மையும் ஒன்றுபட அங்கே மெய்யான பக்தி உணர்வு என்பது வெளிப்படும். ஆனால் எனக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் நீ பூர்த்தி செய்தால் என்னை அனுசரித்து நீ நடந்து கொண்டால் என் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் உன் செயல்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்று வெறும் புற செயலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதால் இங்கு உறவுகள் உறவுகளாக இல்லாமல் துறவுகளாக ஆகிவிட்டன. எனவே பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காது. எந்த நிலையிலும் எதனாலும் பாதிக்கப்படாது. பக்தி என்பது பூரணத்துவத்தை மட்டும் உணரக் கூடியது. பக்தி என்பது அழியாத அன்பு மற்றும் கருணையின் கலப்பாகும். எனவே பக்தியில் செயல் பார்க்கப்படுவதில்லை நோக்கம் மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஆழ்ந்த நோக்கம் புற மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் இறையால் புரிந்து கொள்ளப்படும். எனவே அதனால்தான் இறைக்கு முன்னால் வேடதாரிகள் தோற்று விடுகிறார்கள். வேடமிடாத மெய் பக்தர்கள் அங்கே வெற்றி பெறுகிறார்கள்.

பழமையான நவகிரகங்கள்

சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 381

நேற்று திருவாசகம் ஓதினோம்:

வாசகம் என்றால் அது கலைவாணி தொடர்புடைய விஷயம். திரு என்றால் அது மகாலக்ஷ்மி தொடர்புடைய விஷயம். இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது சிறப்பல்லவா ? அதனால்தான் அது சிறப்பாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த உலகிலே இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தே இருப்பதில்லை.

கனகாம்பரம் கறிவேப்பிலை

மகாமுனிவரான துர்வாசர் ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்ற போது திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார். திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில் பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்து கொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார். குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர். தேவர்களும் முனிவர்களும் சித்த புருஷர்களும் கலந்து கொண்ட திருமண விழாவில் மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும் அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன. எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கலகம் ஏற்படுத்தும் நாரதர் தன் பணியை ஆரம்பித்தார்.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர் பத்மாவதித் தாயாரிடம் சென்று திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவ்வளவுதான் திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும் கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.

இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும் திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும் பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 380

அகத்ததிய முனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இறை வழிபாட்டை மறவாது ஆழ்ந்து நுண்ணியமாய் தீவிரமாய் நுணுக்கமாய் எவ்வாறு லோகாய ஆசைகளை மனிதனை விட்டு பிரிக்க முடியவில்லையோ அதைப்போல மனித மனம் இறைவனின் திருவடி மீது ஒரு பிரிக்க முடியாத பற்றை வளர்த்துக் கொண்டால் ஒரு மாறாத அன்பை வளர்த்துக் கொண்டால் அதே ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கரை சேருகின்ற வழியாகும். ஆனால் ஞானியர்கள் இதனையும் தாண்டி ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த உயர்ந்த நிலையை நோக்கி செல்வது கடினம் என்பதால்தான் மனிதன் நடப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு ஊன்றுகோல் தேவை ஒரு பிடிமானம் தேவை என்பதுபோல இறைவனின் அருள் கருணை கல்யாண குணங்கள் ரூபம் இறைவன் இத்தன்மை கொண்டவர் போன்றவற்றை மனதிற்குள் எண்ணி அந்த நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளின் உயர் குணத்திற்குள் அந்த ஆத்மா ஐக்கியமாக முயல வேண்டும்.

இதை ஒவ்வொரு மனிதனும் கடுமையாக முயற்சி செய்து போராடித்தான் பெறவேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படாது என்பது எமக்கும் தெரியும். அது முடியாது என்பதால் முயற்சிக்காமல் இருக்கத் தேவையில்லை. எத்தனை முறை தோற்றாலும் தொடர்ந்து அந்த உயர்ந்த விஷயத்தை நோக்கி செல்வதில் தவறில்லை. தீய பின் விளைவுகள் இல்லாத ஒரே உறவு இறைவன்தான். நேற்றும் இன்றும் நாளையும் ஒரே நிலையில் எல்லா உயிர்களையும் சம அளவில் பார்க்கக் கூடியவர் பராமரிக்கக் கூடியவர். தன்னை உணர்ந்தாலும் உணரா விட்டாலும் உயிர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்பவர். உயிருக்கு உயிராய் இருக்கக் கூடியவர். அந்த உயிரையும் தாண்டி உணர்வுகளால் ஐக்கியப்பட்டு இருக்கக் கூடியவர். எப்பொழுதும் எங்கும் தீர்க்கமாய் திடமாய் ரூபமாய் அரூபமாய் நம்பிக்கையிலும் நம்பிக்கையின்மையிலும் அவர்தான் இருக்கிறார். அப்பேற்பட்ட அந்த உயர்ந்த இறைவனிடம் மனிதன் எந்த அடிப்படையில் தோற்று விடுகிறான் என்றால் லோகாய விஷயங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து பரம்பொருளை நோக்கி சென்று பழக்கப்பட்டு விட்ட மனிதனுக்கு ஒருவேளை அவன் எண்ணிய எண்ணம் அவன் விரும்புகின்ற விஷயம் கிட்டவில்லை என்றால் இறை நம்பிக்கை பொய்த்துப் போய் விடுகிறது.

எனவேதான் ஒரு மனிதனுக்கு இத்தகைய ஆசைகள் இருந்தாலும் கூட அவைகள் நடந்தாலும் சரி நடக்கா விட்டாலும் சரி இறைவா இன்னின்ன விஷயங்கள் எனக்குத் தேவை என்று என் சிற்றறிவுக்கு எட்டுகிறது. இவைகள் எல்லாம் கிடைத்தால் நான் சந்தோஷமாக வாழலாம் என்று எண்ணுகிறேன். இயன்றால் இதனைத் தந்து உதவு. இல்லையென்றால் எது கிடைத்தால் தடையற்ற சந்தோஷமோ திருப்தியோ தொடர் நிம்மதி எங்களுக்குக் கிட்டுமோ அதைத் தா என்று ஒரு வேண்டுகோளை வைக்கலாம். அதிலும் நுணுக்கமாய்ப் பார்த்தால் ஏதாவது வந்தால்தான் தந்தால்தான் நிம்மதி சந்தோஷம் என்றாலே அதற்கு ஒரு எல்லை வகுக்கப்பட்டு விடுகிறது. எனவே பெறுவதிலோ அல்லது வெளியிலிருந்து வருவதிலோ சந்தோஷமில்லை. ஒரு மனிதன் தன்னிடம் இருப்பதிலிருந்து எப்படியெல்லாம் இழக்கிறானோ தன்னை இழந்தால்தான் ஆனந்தம். தன் உணர்வு தான் என்ற நினைவு எப்பொழுது நூற்றுக்கு நூறு விழுக்காடு அற்றுப் போகிறதோ அப்பொழுதுதான் அவன் தூய நித்திய ஆனந்தத்தை பிரம்மானந்தத்தை உணர முடியும் நுகர முடியும்.

நான் அற்றுப் போன பிறகு அங்கு உணர்வதற்கு எது இருக்கிறது? நான் இருந்தால்தானே அந்த நான் எதையாவது உணர முடியும்? என்ற ஒரு வினா வைக்கலாம். உண்மைதான் நான் கடுகளவாவது இருந்தால்தான் உணரமுடியும். ஆனால் அப்படி உணரக் கூடியது என்றென்றும் தொடர்ந்து சந்தோஷமாக மட்டும் இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அது துக்கமாக துன்பமாக துயரமாக உளைச்சலாக விரும்பத்தகாத நிகழ்வாக இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவமான மனிதன் நான் என்ற உணர்வில் இருக்கலாம். இரண்டில் ஒன்று மட்டும்தான் வேண்டும். அதாவது துயரம் வேண்டாம் சந்தோஷம் வேண்டும் துக்கம் வேண்டாம் நிம்மதி வேண்டாம் என்று எந்த மனிதன் எண்ணுகிறானோ அப்பொழுது அவன் நான் அற்றுப் போக வேண்டும். நானில் இருக்கும்வரை அவன் நாணித்தான் வாழ வேண்டிய நிலைமை இருக்கும். எனவே நான் அற்றுப் போனால் அப்பொழுதுதான் நிரந்தர நிம்மதி. இல்லையென்றால் ஒரு மனிதன் தன்னுடைய நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் ஏதாவது ஒரு எல்லையை வகுத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கும்.

இது கிடைத்தால் ஆனந்தம் அது கிடைத்த பிறகு இன்னொன்று கிடைத்தால் ஆனந்தம் பிறகு கிடைத்தது நீடித்தால் ஆனந்தம். நான் எண்ணுவது போல என்னை சுற்றியுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் துக்கம். அப்படி நடந்தால் ஆனந்தம் ஒருமுறை நடந்து மறுமுறை நடக்கவில்லை என்றால் துக்கம். என்னுடைய உணர்வுகள் எந்த விதத்திலும் காயப்படாமல் இருக்க வேண்டும். என்னுடைய உடல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உடல் அவஸ்தை என்பதே இருத்தல் கூடாது. உணர்வுகள் எப்பொழுதும் ஒருவிதமான நல் உயர் சுக அனுபவத்தில் திளைத்திருக்க வேண்டும். அந்த அனுபவத்திற்கு குறுக்கே யாரும் வந்து விடக் கூடாது. நான் எந்த நிலையில் சிந்திக்கிறேனோ எந்த உச்சத்தில் இருந்து கொண்டு எதையும் பார்க்கிறேனோ என்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு மனிதன் எதை எண்ணினாலும் தோற்றுத்தான் போவான். நடப்பதையெல்லாம் இயல்பாகவே எடுத்துக் கொண்டு ஒரு பார்வையாளனாகவே பார்த்து கொண்டு உள்ளுக்குள் அவன் கரைந்து போய் விட்டால் அந்த பரம்பொருளோடு நீக்கமற இணைந்து விட்டால்தான் அவனுக்கு நிரந்தர சுகம் நிரந்தர நிம்மதி.

பிறகு தனக்குள் இருந்து தான் இன்னும் துடித்துக் கொண்டும் இருந்தால் அந்தத் தானில் ஏதாவது மிச்சம் மீதி இருக்கும் வரையிலும் அங்கு சந்தோஷமும் ஒருவேளை இருக்கலாம். துக்கமும் இருக்கலாம் அல்லது வேறு வகையில் கூறப்போனால் முட்டாள்தனமான அறியாமையில் தொடர்ந்து வாழக்கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம் அல்லது தெய்வீக அறிவின் உச்சத்தில் இருக்கக் கூடிய மனிதன் சந்தோஷமாக இருக்கலாம். அறியாமையால் கிடைக்கக்கூடிய சந்தோஷம் நீடிக்காது. தீய பின் விளைவுகளைத் தரும். நல்ல முறையிலே அறிவார்ந்த நிலையிலே மெய்யறிவை தெளிந்த தெய்வீக அறிவை பெற்ற பிறகு கிடைக்கக் கூடிய சந்தோஷம் நீடிப்பதாக இருக்கும். அதனையும் தாண்டி ஒரு நிரந்தர நிம்மதியும் சந்தோஷமும் பெற ஒருவனுக்கு அவன் என்ற உணர்வோ அவள் என்ற உணர்வோ அற்றுப்போக வேண்டும். அது அற்றுப் போகும் வரை அவனிடமும் அவளிடமும் எல்லாம் இருக்கும். எல்லா இருக்கின்ற அந்த நிலையிலே வாழ்விலே இவைகள் எல்லாம் வேண்டும் இவைகள் எல்லாம் வேண்டாம். எனக்கு தானியங்கள் வேண்டும் தவிடு வேண்டாம். எனக்கு நீர் வேண்டும் சேறு வேண்டாம். எனக்கு சுகந்த நறுமணமிக்க காற்று வேண்டும். ஆனால்
புயல் வேண்டாம். தேவையான அளவு நீர் வேண்டும். ஆனால் வெள்ளம் வேண்டாம் என்றால் அது சாத்தியமேயில்லை.

ஒவ்வொன்றின் உச்ச நிலையையும் அடுத்த நிலையையும் மனிதன் சந்தித்தே ஆக வேண்டும். இரண்டு தன்மையும் வேண்டாம் என்றுதான் ஒருவனால் இருக்க முடியுமே தவிர இரண்டில் ஒன்று என்பது இறை படைப்பில் எப்பொழுதுமே இல்லை. இரண்டையும் சமமாக பார்க்கின்ற பக்குவத்தைதான் மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணர்வை நோக்கி எமை நாடுகின்ற மனிதர்கள் மெல்ல மெல்ல வர இதுபோல் நல்விதமாய் முழுமதி தினம் தன்னிலே செவ்வாய்க்குரிய நட்சத்திரத்திலே இறைவன் திருவடியை வணங்கி யாம் அனைவருக்கும் நல்லாசி கூறுகிறோம்.

திருவொற்றியூர் வீரராகவ சுவாமிகள்

இவரது பூர்விகம் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு திகம்பரராக திரிந்தவர் இவர். சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும் விரட்டிய போதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் இவர். இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல் துறையினர் ஒருநாள் இவரைப் பிடித்துப் போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இரவு நேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்த போது சுவாமிகளின் உடல் பாகங்கள் தனித் தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது சுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது.

சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது. அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரை சுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவார். வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்த வீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய வேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார். 1964 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதி சதய நட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவை நீக்கிக் கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை, இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம் செய்யவும் பூஜை செய்யவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது. சுவாமிகளை தரிசிக்க திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 379

கேள்வி: சித்ரா பௌர்ணமிக்கும் சித்தர்களுக்கும் என்ன தொடர்பு ?

இறைவன் அருளாலே எதோடும் தொடர்பு வேண்டாம் என்றுதான் நாங்கள் சித்தர்களாக மாறியிருக்கிறோம்.

லலிதா சஹஸ்ரநாமம்

ஆதிசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும் சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க ஏன் இப்படி? என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர் தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும் அதனைச் சரி பார்க்காமல் தான் கொண்டு வந்து தந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்து கொண்ட சங்கரர் அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தார். சௌந்தர்ய லஹரி பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால் லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் செய்ய இயலவில்லை.

பிற்காலத்தில் ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்ற வரும் சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக் கொண்டாள் அம்பிகை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 378

கேள்வி: ஸ்ரீ இராமபிரான் பற்றி?

இறை கருணை கொண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறை கருணை கொண்டா ராம். அதனால் உலகை படைத்தா ராம்.
இன்பம் இது என காட்டித் தந்தா ராம்.
இன்பம் இது என காட்டித் தந்தா ராம்.
ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம்.
இன்பமிது என காட்டி தந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம் அதனால் உலகை படைத்தா ராம்.
இறை கருணை கொண்டா ராம். அதுபோல் இறை கருணை கொண்டதனால் அதுபோல் இறை கருணை கொண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள் வந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம். இதுபோல் ஒவ்வொரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம். இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவா ராம். துயரத்தில் தன்னை இணைத்து கொள்வா ராம். தொல்லை வரும் பொழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால் நடப்பா ராம். அவர் வருவா ராம். போவா ராம். இருப்பா ராம். என்றும் நல் அருளை தருவா ராம். ஆயினும் இதை உணர்ந்தவர் யார்? புரிந்தவர் யார்? இதுபோல் இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சொந்தம் என கொண்டவ ராம். அதனை தன் உள்ளே உள்ள கருத்தில் ஞானியர் கொண்டவ ராம்.

அதுபோல் கொண்டவ ராம். அதுபோல் கொண்டவ ராம் தன்னை கொண்டவளே அன்னை கொண்டவ ராம். தன்னை கொண்டவளே அன்னை. இயம்புங்கால் அவர் என்றும் இருப்பா ராம். அவர் இருந்து இருந்து உயிர்களை காப்பா ராம். காத்து காத்து ரட்சித்து அருள்வா ராம். அவர் என்றும் உயிர்களோடு பரிவாய் உறுதுணையாய் இருப்பா ராம். அவர் போவா ராம் வருவா ராம் என்று தோன்றினாலும் அவர் என்றென்றும் இருப்பா ராம். அவர் பக்தர்கள் நெஞ்சில் கிடப்பா ராம். அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம். இதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம். அவர் என்றும் உயர்ந்தா ராம். அவர் ஒரு பொழுதும் தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம். இதுபோல் இறை கருணை கொண்டா ராம். அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வொரு உள்ளமும் மகிழ்வில் ஆழுமாம்.

இறை கருணை கொண்டா ராம். இறை கருணை கொண்டா ராம். அதனால் அவர் வந்தா ராம். அதனால் பிள்ளை என பிறந்தா ராம். அதும் நாடு ஆள்வது தொல்லை என துறந்தா ராம். பிறகு வனம் சென்றா ராம். அதுபோல் அங்கு சிலரை கண்டா ராம். அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம். அதுபோல் அவர் தன் துணையை பிரிந்தா ராம். அங்கு அவர் கண்டா ராம். தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை அதுபோல் வாயுபுத்திரனை அவர் கண்டா ராம். தோழமை கொண்டா ராம். அதுபோல் அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம். அதுபோல் வாலியின் சோதரனை ஏற்றி வைத்தா ராம். அதனால் வாலியை மோட்சத்தில் இறக்கி வைத்தா ராம். அதுபோல் அவர் மனிதருக்கும் இறைக்கும் பாலம் என இருந்தா ராம். அதுபோல் மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம். அதுபோல் ஆழியை (கடலை) கடந்தா ராம். அதுபோல் ஆழிதாண்டி ஆழிதாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம் மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம்.

அதுபோல் சென்றா ராம் . அசுரர் தலை எடுத்தா ராம். அசுரர் தலை எடுத்தா ராம். அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை மீட்டா ராம். அந்த ஆத்மாவை அவர் மீண்டும் சோதித்து பார்த்தா ராம். மோட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம். ஆட்சியை தொடர்ந்தா ராம். பஞ்ச புலனெல்லாம் வித விதமாய் அலை கழிக்க ஆத்மா தன்னை அது தொலைக்க தொலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு சென்று தேட தேடி கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக் கொள்ள அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அதே இது. இதே அது என உணர்ந்தா ராம் உணர்ந்தா ராம். அவரெல்லாம் ராமர் வழி வந்தா ராம் வந்தா ராம். அதுபோல் அப்படி வருவோரெல்லாம் சிறந்தா ராம். சிறந்தா ராம். அதுபோல் சிறந்தோரெல்லாம் தொடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் உயர்ந்தா ராம்.

இறை கருணை கொண்டா ராம். அதனால் உயிர்கள் மீது அன்பு பொழிந்தா ராம். அவர் என்றென்றும் இருப்பா ராம். பக்தர்கள் உள்ளத்தில் கிடப்பா ராம். இது உணர்ந்தோரே உண்மையை உணர்ந்தோராம் ஏனையோர் எல்லாம் தாழ்ந்தோ ராம். எனவே தாழ்ந்தோ ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தோ ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் (மூச்சுக்காற்றோடு) ராம் ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தோ ராம் என்கிற நிலைக்கு வரும். இதுபோல் யாம் இறை அருளால் அதுபோல் உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறோம்.