ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 325

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

நல்விதமாய் மென்மேலும் இறை வழி அற வழி தொண்டுகள் ஒற்றுமையோடு செய்ய நல்லாசிகள். ஒவ்வொரு மனிதனின் விதியானது மிக மிக நுட்பமானது. அதையெல்லாம் சராசரி மனிதப் பார்வையால் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் மிக மிக கடினமப்பா. இதுபோல் மனிதன் எண்ணிடலாம் கையிலே தனம் (பணம்) இருந்து உடலிலே வலு இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்று. அதுபோல் ஸ்தல யாத்திரை கூட ஒவ்வொரு மனிதனின் கர்ம பாவத்தை பொறுத்துதான் நிகழும். திட்டமிடுவதோ முயற்சி செய்வதோ தவறல்ல. ஆனால் அதனையும் தாண்டி இறைவனின் கருணையும் கடாட்சமும் ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் உள்ள ஒன்பதாம் இடத்திற்கு உரிய கிரகம் அதிபதி அதை சார்ந்த பாவங்கள் இவையெல்லாம் ஒத்துழைக்கும் தருணத்தில்தான் ஒருவனுக்கு புண்ணிய ஸ்தல யாத்திரைகள் நிகழும். இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா? குறிப்பிட்ட ஸ்தலத்திற்கோ வேறு ஸ்தலத்திற்கோ வேறு பணியின் காரணமாகக் கூட ஒரு மனிதன் செல்லலாம். அங்குள்ள ஆலயத்தின் வாசலில் கூட அவன் நிற்க வேண்டியிருக்கும். ஆனால் உள்ளே செல்வதற்கு உண்டான மன நிலையோ சூழலோ அத்தருணம் அவனுக்கு நிகழாது. ஆனால் அந்த ஆலயத்தையே எண்ணாமல் வேறு ஏதோ ஒரு சிந்தனையில் வேறு எங்கோ செல்லும் போது திசை மாறி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் ஒரு மனிதனின் விதிப்படி நிகழும். ஏதோ ஆலய தரிசனம் என்றாலோ ஸ்தல தரிசனம் என்றாலோ மிக எளிமையான ஒரு விஷயம் சரியாக திட்டமிட்டாலே போதும் என்று ஒரு மனிதன் எண்ணி விடக்கூடாது. சரியான முறையில் திட்டமிடவும் வேண்டும். இறைவனின் அனுக்ரகமும் வேண்டும்.

இறைவன் அருளாலே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே பல்வேறு கருத்துக்களைக் கூறும் பொழுது அந்தக் கருத்தின் ஓட்டத்திலே அதன் முன் கூறிய கருத்தும் அதனோடு இழைந்தோடி வருகின்ற கருத்தும் அந்தக் கருத்தை ஒட்டி பின்னால் நாங்கள் கூறுகின்ற கருத்தும் மனிதனுக்கு புரியா விட்டால் மத்தியில் கூறிய விஷயத்தை மட்டும் புரிந்து கொண்டு தவறான முடிவுக்கு வரவேண்டிய ஒரு நிலைமை வரும். அதனால்தான் இந்த சுவடியை ஓதுகின்ற ஆதிகாலத்தில் இருந்தே யாங்கள் (சித்தர்கள்) தெள்ளத் தெளிவாக பல விஷயங்களைக் கூறுகிறோம். குறிப்பாக பரிபூரண சரணாகதி தத்துவம் இறைவன் மீது எந்த விதமான ஐயமும் குழப்பமும் இல்லாமல் இறை திருவடியை சதாசர்வ காலமும் எண்ணி தம் கடமையை ஆற்றுதல் அதோடு மனித நேயத்தை மறந்து விட்டு பக்தி செலுத்துகின்ற முறையை நாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே மனித நேயத்தோடு அறப்பணிகளோடு அற சிந்தனையோடு கடமையை நேர்மையோடு செய்து கொண்டே செய்கின்ற இறை வழிபாட்டிலே பூரணத்துவம் கட்டாயம் கிட்டும். இறைவன் அருளும் கிட்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 324

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனதை வலுவாக்குதலே இந்த உலகிலே முதல் பணியாக மனிதனுக்கு இருக்க வேண்டும். வேண்டுமே வெறும் புலன் இன்பமும் அல்லது அதனைத் தாண்டிய எந்த இன்பமும் ஒரு மனிதனுக்குத் தொடர்ந்து அமைந்தால் அதன் பிறகு சிறு கவலையும் சிறு பிரச்சினையும் அவனை சாய்த்து விடும். மாறாக மாறி மாறி துன்பங்களும் கஷ்டங்களும் ஒரு மனிதனை தாக்க தாக்க சில காலத்தில் இவற்றையே பயிற்சியாக இவன் மேற்கொள்ள மேற்கொள்ள மனம் உறுதி பெற்று ஒரு கட்டத்திலே மிகப் பெரிய துன்பம் வரும் போது கூட அவன் ஆடாது அசையாது புயலுக்கு நாணல் ஈடு கொடுப்பது போல ஈடு கொடுத்து விடுவான். எனவே மனதை செம்மைப் படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படையாகும். அடித்தளம் ஆகும். மனமது செம்மையாக செம்மையாக யாதொரு பிரச்சினையும் எவ்வித மனிதனுக்கும் இல்லையப்பா. எனவே நிதானம் தெளிவு தெளிந்த சிந்தனை எந்த நிலையிலும் பதட்டமில்லாது முடிவு எடுக்கும் திறன் ஒன்றின் அதிக பட்ச விளைவு என்ன? என்று முன் கூட்டியே சிந்தித்து அதற்கு ஏற்றாற்போல் மனதை தயாராக வைத்துக் கொள்வது எதுவும் நடக்கலாம் எந்த சூழ்நிலையும் வரலாம் என்று ஒரு எதிர்பார்ப்போடு வாழுகின்ற முறை. இது போன்று சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் பிரச்சினைகள் இல்லை.

பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையைத் தா என்று கேட்பது சிறப்பல்ல. கேட்டாலும் இறை அதை யாருக்கும் வழங்காது. ஏனென்றால் அவ்விதமான அமைப்பு யாருக்கும் இல்லை. தெளிந்த ஞானியும் அல்லது ஞானம் அற்ற மனிதனுக்கும்தான் பிரச்சினை இல்லாதது போல் ஒரு வாழ்க்கை இருக்கும். காரணம் தெளியாத மனிதனுக்கு எதுவும் புரிவதில்லை. தெளிந்த ஞானியோ அனைத்திலுமே தேறி விட்டதால் அவனுக்கு எதுவும் பிரச்சினையாத் தோன்றாது. இந்தக் கருத்தை உன்னிப்பாக கவனித்து மனதிலே ஊன்றிக் கொண்டு விட்டால் மனிதனுக்கு எக்காலத்திலும் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் துன்பம் என்பது இல்லை. ஒரு மனிதன் உடல் எடுத்ததற்கு மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப் போகிறதே என்று எந்த மனிதனையும் நாம் வாளாய் (சும்மா) இருக்க சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனம்தான் ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால் ஒன்று மாற்றி ஒன்று அவன் மன விருப்பத்திற்கு மாறாக நடக்கும் போது மிகவும் விரக்தியுற்று சோர்வுற்று தன்னிலையை மறந்து மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே ஒரு மனிதன் பதட்டம் குழப்பம் இல்லாமல் எதனையும் நிதானமாக மூன்றாவது பார்வை கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பார்க்க பார்க்க அவனுக்கு அனைத்துமே தெளிவாகி விடும். அனைத்துமே சிக்கல் அற்றதாகி விடும். இந்தக் கருத்தை மனதில் பதியவைத்தால் என்றும் எக்காலமும் நலமாகும்.

எம்மை நாடும் மனிதர்கள் இன்னும் இன்னும் பக்குவப்பட வேண்டும். இந்தக் கருத்துக்களை உள் வாங்கி வாங்கி அவரவர்கள் சுய ஆய்வு செய்து சித்தர்கள் யாங்களே கூறினாலும் கூட அவற்றிலே மெய்ப்பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்று ஆய்ந்து ஆய்ந்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனம் செம்மையாக வேண்டும். மனம் உயர வேண்டும். மனம் விரிவடைய வேண்டும். மனம் ஆழமாக இருக்க வேண்டும். மனம் மணக்கின்ற மனமாக வேண்டும். அப்பேற்ப்பட்ட மனதிலேதான் இறை வந்து அமரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 323

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பிரார்த்தனைகளும் தர்மங்களும் பலன் தரவில்லை என்றால் குறை அதனை செய்கின்ற மாந்தனிடம் (மனிதனிடம்) உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அறியுங்கால் முன்ஜென்ம வினையின் தாக்கம் அதிகம் உண்டு. அது குறித்து அவன் செய்யும் பிரார்த்தனைகளின் அளவு போதவில்லை தர்மங்களின் அளவு போதவில்லை என்பது பொருளாம். அல்லது இன்னும் சில காலம் கழித்து கிட்டப்போகும் நன்மைக்கு முன்னரே சில தீமைகள் போல் தோன்றுகின்ற நன்மைகளும் தீமைகளாய் மாற்றி இறை தருகின்றது என்பது பொருளாகும். எது எங்ஙனம் ஆயினும் இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும் அவனவன் மன நிலையைப் பொறுத்தே அமைவது ஆகுமப்பா. அப்பனே இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும் பொழுதே அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்குங்கால் யாதொரு தொல்லையும் இல்லை. விளம்புங்கால் நிதம் நிதம் ஆயிரம் ஆயிரம் விபத்துக்கள் நிதம் நிதம் ஆயிரம் கஷ்டங்கள். விளம்புவோம். நிதம் நிதம் எத்தனையோ மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். வரியுங்கால் அதனை எல்லாம் எண்ணி அந்தப் பிரச்சினைகளை சாராத மனிதன் என்றாவது கலங்கி இருக்கிறானா? கவலைப்படுகிறானா? இல்லை. அதனை போலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கு துன்பங்கள் வரும்போது மட்டும் கலங்குகின்ற நிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். வேண்டுமே மன உறுதி பெற உறுதி பெற எந்த பிரச்சனையும் பிரச்சினையாகத் தோன்றாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 322

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மனிதர்களை எதற்காக சித்தர்கள் நடமாட விட வேண்டும்? கட்டுப்படுத்தக் கூடாதா? என்ற ஐயம் பலருக்கு இருந்தாலும் கூட இந்த உலகிலே இறை நாமத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள். இன்னும் பல்வேறு நிலைகளில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எனவே இவையெல்லாம் உலக இயக்கத்திற்கு கர்மக் கழிவிற்கு கர்ம பாவங்களின் பரிவர்த்தனைக்கு என்று இறைவனால் அந்தந்த மனிதனின் பூர்வீக வினைகளால் கொடுக்கப் படுவதாகும். எனவே உலகம் இயங்குவதற்கு எல்லா வகையான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களும் கர்மக் கழிவிற்காக தேவைப்படுகிறார்கள். எங்ஙனம் மின் சக்தியானது முழுமையாக பயன்பட வேண்டுமென்றால் அதற்கு நேர் மற்றும் எதிர் விளைவுகளைக் கொண்ட இருமுனை இணைப்பு தேவைப்படுகிறதோ அது போலத்தான் இந்த உலகிலே நல்லோரும் தீயோரும் இருக்கிறார்கள். ஒரு நல்லவனை ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால் நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு அது போக தீயவனிடம் இருக்கக் கூடிய சிறிதளவு புண்ணியத்தை அவன் நல்லவனுக்குத் தருகிறான் என்பதே பொருள். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு இந்த உலகில் அனைத்தையும் பார்க்கப் பழகி விட்டால் அனைத்தும் மிக எளிதாக மிக நீதியாகத் தோன்றும்.

தெய்வ சாந்நித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தை பொறுத்தது அல்ல. எனவே எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல் வைராக்கியம் கொண்டு மனதைத் தெளிவாக வைத்து மனதை பக்தியிலே ஆழ்த்தி மனதை பரிபூரண சரணாகதியிலே வைத்து வேறு உலக சிந்தனை ஏதும் எழா வண்ணம் இறையை இல்லத்தில் இருந்து பூஜித்தாலும் அது நல்ல உள்ளத்தில் இருந்து வரும் பூஜையாக இருக்குங்கால் இறைவனின் அருளும் இறைவனின் சாந்நித்யம் கிட்டும் அப்பா. இதுபோல நிலையிலே இறைவனின் அருளாசி நிச்சயம் நிச்சயம் நிச்சயம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 321

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நாடிகளை (ஜீவநாடி) நம்பி வாழ்கின்றார்கள் பலர். சாதாரண மனிதர்கள் நாடிகளை நாடும் தருணம் நாடிகளில் வருகின்ற கருத்துக்கள் பல தருணம் மெய்யாகி விடுகிறது. பல வேளைகளில் பொய்யாகி விடுகிறது. பொய்யாகும் போது மனிதனுக்கு சோர்வும் விரக்தியும் சினமும் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு மனிதன் நம்மை ஏமாற்றிவிட்டான். சித்தர்கள் நாமத்தை வைத்து பொய்யாக வாக்கு உரைத்து நம் தனத்தையும் நம் காலத்தையும் வீணாக்கி விட்டான் என்ற சினம் பலருக்கும் வருவது இயல்புதான். இது குறித்து பலருக்கும் யாம் கூறுவது என்னவென்றால் எவன் ஒருவன் ஏமாறுகிறானோ அவன் யாரையோ முன் ஜென்மத்தில் ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருளாகும். எந்த வகையில் ஏமாறுகிறானோ அந்த வகையில் பிறரை ஏமாற்றி இருக்கிறான் என்பது பொருள்.

இன்னொன்று ஒருவனின் முன் ஜென்ம பாவங்களையெல்லாம் ஒருவன் கழிக்க வேண்டும் என்றால் அவன் முழுக்க முழுக்க துன்பங்களை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதில்லை. அவன் நேர்மையாக ஈட்டிய பொருளை அவன் அறியாமல் எவனொருவன் அவனை வஞ்சித்து ஏமாற்றி விடுகிறானோ அப்படி அவன் இழந்த பொருள் மூலம் அவனின் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் மெல்ல மெல்ல குறைகிறது. எனவே நாங்கள் அடிக்கடி கூறுவது போல ஏமாற்றம் என்பதே இந்த உலகில் ஏதுமில்லை. விழிப்புணர்வோடு வாழட்டும். உள்ளத் தெளிவோடு வாழட்டும். அறிவு தெளிவோடு வாழட்டும். ஆனாலும் அதனையும் தாண்டி ஒரு சக மனதினால் ஒரு சக அமைப்பால் ஏமாற்றப்படுகிறான் என்றால் இதுபோல் அங்கு ஏமாற்றுவது என்பது அவனின் முன் ஜென்ம பாவங்களை. எனவே ஏமாறுவது என்பது ஒரு வகையான பாவக்கழிவு என்று எடுத்துக் கொண்டு விட்டால் உலகில் ஏமாற்றம் குறித்து எந்த நிலையிலும் யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 320

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதெனில் இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே முக்காலத்தையும் உணரக் கூடிய எம்மால் (அகத்திய மாமுனிவர்) வருகின்ற மனிதரின் கடந்த காலங்கள் நிகழ் காலங்கள் எதிர் காலங்கள் சம்பவங்கள் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள் அனைத்தையும் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலும். இங்கு வருகின்ற மனிதர்கள் ஐயப்படுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஒரு பொழுதும் சினம் கொள்வதில்லை. ஏன் என்றால் சித்தர்களின் நாமத்தை வைத்து மனிதர்களை ஏமாற்றுகின்ற கூட்டமும் இங்கு இருப்பதால் சித்தர்களை நம்புகின்ற அனைவருமே சித்தர்கள் நாமத்தை வைத்து ஓதும் வாக்குகள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுபோல் நிலையிலே இதுபோல் வாக்கை நம்ப வேண்டும் என்றால் வருகின்ற மனிதன் மனம் விரும்பும் வண்ணம் அவனுடைய மனம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எதாவது உரைத்தால்தான் நம்ப இயலும் என்பது சராசரி மனிதனின் சிந்தனை. மனிதர்கள் இவ்வாறு எண்ணிக் கொண்டு வருவதைக் குறித்து எமக்கு எவ்விதமான சினமோ அல்லது வருத்தமோ இல்லை. ஆனாலும் கூட ஒரு மனிதன் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கிறானா? அதைப் போலத்தான் மகான்களும். இன்னும் புரிவது போல கூறுவது என்றால் ஒரு மனிதன் தன் மனைவியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு. சகோதரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தாயிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு தந்தையிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு பிள்ளைகளிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு சக ஊழியர்களிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு. மேலதிகாரியிடம் நடந்து கொள்கின்ற முறை வேறு.

ஒரே மனிதன்தான். ஒரே விதமான குணங்கள் கொண்டவன்தான். ஆனால் இடம் பார்த்து சூழல் பார்த்து உறவு நிலை பார்த்து மனிதர்கள் பழகுவது போல நாங்கள் ஞானிகள் என்றாலும் இந்த இடத்தில் இந்த ஜீவ அருள் ஓலையிலே எமை நாடுகின்ற மனிதன் எம்முன்னே அமரும் போது அவனுக்கு யாது உரைக்க வேண்டும்? என்று இறை எமக்கு கட்டளை இடுகிறதோ அதைத்தான் யாம் உரைக்கிறோம். யாம் (அகத்திய மாமுனிவர்) உணர்ந்ததை எல்லாம் யாம் ஞான திருஷ்டியில் பார்த்ததை எல்லாம் உரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னொன்று இந்த சுவடியை ஓதுகின்ற மனிதனின் புண்ணிய பலன் இங்கு பார்க்க வருகின்ற மனிதரின் புண்ணிய பலன் அவனின் பரந்த பக்தி நிலை அவன் செய்து வரும் தர்மகாரியங்கள் இவற்றை வைத்துதான் எமது வாக்கின் போக்கு இருக்குமே தவிர உரைப்பது சித்தர்கள் தான் என்று நம்பும் வண்ணம் வாக்கை உரைத்தால்தான் நாங்கள் நம்புவோம் என்று மனிதர்கள் வந்ததற்காக நாங்கள் எதனையும் கூறிவிட இயலாது.

ஓப்பீடு

துறவி ஒருவரின் புகழ் நாடெங்கும் பரவியதைக் கண்ட மன்னர் ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டது. தன் அமைச்சரிடம் எனக்கு சேவை செய்ய ஆயிரமாயிரம் பணியாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் ஏதுமில்லாத துறவிக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு கிடைக்கவில்லை ஏன் எப்படி? என கேட்டார்.

அமைச்சர் மன்னரிடம் இன்றே நாம் துறவியை சந்தித்து அவரது புகழுக்கான் காரணத்தை அறிந்து கொள்வோமே என்றார். இருவரும் துறவியைச் சந்தித்தனர். சுவாமி என் மனதில் ஒரு சந்தேகம் என வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார் மன்னர். உடனே துறவி மன்னா வானில் பிரகாசிக்கிறதே அது என்ன? என்று கை காட்டினார். நிலா என்றார் மன்னர். தென்றலில் அசைந்தாடும் மலரைக் காட்டி இது என்ன என கேட்டார். ரோஜாப்பூ என்றார் மன்னர். இந்த பூ எப்போதாவது நிலவைப் பார்த்து அதைப் போல ஒளி வீச முடியவில்லையே என்று வருந்தியிருக்கிறதா? அல்லது நிலா மலர் போல மணம் வீச முடியவில்லையே என எண்ணியதுண்டா? யாரையும் யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை இயற்கையின் படைப்பில் உயர்வு தாழ்வு இல்லை ஒவ்வொருவர்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. உன்னைப்போல் என்னால் வாளெடுத்து என்னால் சண்டை போடமுடியாதே என்றார் துறவி. மன்னருக்கு தன் சந்தேகம் தீர்ந்து அறிவுக் கண் திறந்தது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 319

அகத்தியர் மாமுனிவரின் பொது வாக்கு:

விதி கர்மா பாவம் புண்ணியம் இறை நவகிரகம் நாள் நட்சத்திரம் வாக்கு இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பார்க்குங்கால் இறை நம்பிக்கை இல்லாத எத்தனையோ மனிதர்கள் தாங்கள் மேற்கொண்ட தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறை வழிபாடும் இல்லாமல் நல்ல எண்ணங்களும் இல்லாத சில மனிதர்கள் தொழிலில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? ஈடுபாடு. ஒரு தொழிலை எப்படி செய்ய வேண்டும்? என்று மனிதனுக்கு மனிதன் வித்தியாசமான கருத்துக்கள் உண்டு. இவைகளில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. இது ஒரு புறமிருக்க ஒரு மனிதன் சுய தொழில் செய்வதாகக் கொள்வோம். அவன் அந்தத் தொழில் குறித்த ஞானத்தை குறைந்த பட்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் தொழில் பற்றிய மாறுதல்களை அவன் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவனாக இருந்தாலும் திறமை இல்லாது போனால் அந்தத் தொழில் அவனை கைவிட்டு விடும். தொழில் திறமையோடு தசத்திலே (தொழிலேயே) ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தசம் பற்றிய நுணுக்கங்களையும் நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த தசத்திலே (தொழிலிலே) நாம் அமர்ந்திருக்கிறோமோ அந்த தசத்தை (தொழிலை) நாடி வரும் மாந்தன் (மனிதன்) திருப்தி அடையா விட்டால் அதிலே வெற்றி பெற முடியாது. இதோடு தசத்தின் (தொழிலின்) தேவை வரும் சமயம் அந்த மனிதன் விரும்பும் வண்ணம் தசத்தின் (தொழிலின்) தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

வருகின்ற மாந்தன் (மனிதன்) அரைகுறை அறிவோடுதான் வருவான். எரிச்சல் மூட்டுவதாகத்தான் வினவுவான். நீ பொறுமை காக்க வேண்டும். எனவே ஈடுபடும் தொழில் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். தொழிலை மாற்ற மாட்டேன். கவனத்தையும் சிதற விடுவேன் என்றால் அதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈடுபாடு இல்லாமல் செய்யக் கூடிய எந்த செயலும் சிறப்பை பெறாது. குறையில்லாத மனிதனைக் காண்பது என்பது மிக மிகக் கடினம். எனவே நம்மிடம் கூடுமானவரை குறையில்லாமல் பார்த்துக் கொண்டு எதிராளிகளைக் கவர்ந்திழுக்கும் கலையைக் கற்றுக் கொண்டு தொழில் செய்ய முற்பட்டால் வெற்றி உண்டாகும்.

ஏழை பணக்காரன்

ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுப்பதற்காக ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தான். காட்டிற்குள் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச் சென்றான் அரசன். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன். கண் விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அரசன் முனிவரே நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன் என்றான். அதற்கு முனிவர் எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல் என்றார். திடுக்கிட்ட அரசன் நான் ஏற்கனவே பணக்காரன். என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் உங்களுக்கு கொடுத்தேன். இதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு முனிவர் அரசனே உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். ஒரு நாடு இருக்கும் போது இன்னோரு நாடு உனக்கு தேவைப் படுகிறது. அது போல் எத்தனை சால்வைகள் இருந்தாலும் இதுவும் உனக்கு தேவைப்படும் என்றார். அரசன் பதில் பேச முடியாமல் விழித்தான். முனிவர் தொடர்ந்தார். தேவை உடையவனே ஏழை அவனுக்கே பொருட்கள் தேவை. உனக்கு தேவை இருப்பதினால் நீயே இதனை எடுத்துச் செல். நான் தேவை இல்லாதவன் ஆகவே நானே பணக்காரன் ஆகவே எனக்கு வேண்டாம் என்று கண்ணை மூடி மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு நாடு திரும்பினான்.