ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 304

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு யாங்கள் (சித்தர்கள்) மீண்டும் கூறுவது யாதென்றால் முன்னரே வாக்கறிந்த சேய்கள் அதனை மீண்டும் நாங்கள் வாக்கினை கூறும் வரை பின்பற்றி வந்தால் அதுவே இறைவன் அருளை பெற்றுத் தரும். புதிதாக வந்துள்ள சேய்கள் அதுபோல இயன்ற இறை வழிபாடும் இயன்ற தொண்டும் இயன்ற தர்மமும் செய்து வந்தால் அது நலத்தை சேர்க்கும். தொடர்ந்து இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் சில ஆத்மாக்களின் பாவ கர்மாக்களை இறைவன் அருளால் குறைப்பதற்கென்று பல்வேறு அறப்பணிகளை யாம் (அகத்திய மாமுனிவர்) அருளாணையிட்டு செய்து வந்தாலும் கூட பலருக்கும் விதி வசத்தால் அதில் ஆர்வம் இல்லை என்பதை யாங்கள் (சித்தர்கள்) அறிவோம். வேறு எளிய வார்த்தையில் கூற வேண்டும் என்றால் ஜீவ அருள் ஓலையை பின்பற்ற வேண்டுமென்றால் சராசரி மனித சிந்தனை கடுகளவும் கூட ஒத்து வராது. அதிக அளவு பெருந்தன்மை ஒவ்வொரு சேயிடமும் யாங்கள் (சித்தர்கள்) எதிர்பார்க்கிறோம். எம்மிடம் அமரும் போது மட்டும் பணிவு எம்மிடம் அமரும் போது மட்டும் பக்தி இருந்தால் போதாது. அல்லும் பகலும் 60 நாழிகையும் சாத்வீக குணத்தை வளர்த்துக் கொண்டு இறை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு கூடுமானவரை சத்தியத்தைப் பேசிக்கொண்டு எந்த விஷயத்திலும் மிகவும் கடுமையான சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் இல்லை எங்களால் அவ்வாறெல்லாம் முடியாது என்றால் அவர்கள் அவர்கள் விதி வழியில் அவர்கள் அவர்கள் மதி செல்லட்டும் என்றுதான் நாங்கள் (சித்தர்கள்) வாக்கினைக் கூற வேண்டியிருக்கிறது.

எனவே வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து தொண்டினை புரிந்து வந்தாலே இதுபோல் எம்மை நாடினாலும் நாடாவிட்டாலும் பாவத்தின் தாக்கம் குறையத்தான் செய்யும். ஆயினும் கூட தர்மத்தின் நுட்பங்களையெல்லாம் ஒரே கணத்தில் எடுத்து இயம்புவது கடினம். எடுத்து இயம்பினாலும் மனிதர்கள் புரிந்து கொள்வது கடினம். மனிதர்கள் பார்வையில் தர்மமாக எவையெல்லாம் காணப்படுகிறதோ அவையெல்லாம் எமது பார்வையில் தர்மமாக இருக்குமென்று கூறுவது இயலாது. இதுபோல் நிலையிலே மீண்டும் மீண்டும் எம்மொத்த சேய்களுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது இதுபோல் தர்மகாரியங்களில் தம்மை பிணைத்துக் கொள்வதும் தொடர்ந்து சுயநலம் விட்டு தன்முனைப்பு விட்டு சினம் விட்டு யார் மனதையும் புண்படுத்தாமல் இறைவனை எண்ணி தொடர்ந்து நேர்மையான வழியில் ஈட்டிய பொருளையெல்லாம் தக்க ஏழைகளுக்கும் வேறுவகையான சத்காரியங்களுக்கும் செலவிட்டால் பூர்வீக தோஷங்கள் பாவங்கள் படிப்படியாகக் குறைந்து இறையருளை உணரக்கூடிய ஒரு மனநிலை வரும் என்பதை இத்தருணம் யாம் (அகத்திய மாமுனிவர்) இறைவன் அருளைக்கொண்டு இயம்புகிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 303

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இப்பொழுது அரவு பொழுதாகும். இருந்த போதிலும் சில வாக்குகளை யாம் (அகத்திய மாமுனிவர்) கூறி பூர்த்தியினை இத்தருணம் செய்கின்றோம். இறைவன் அருளால் மீண்டும் பிரம்ம முகூர்த்த காலத்திலே இந்த உலகியல் வழக்கப்படி நாளை என்றும் எமது (அகத்திய மாமுனிவர்) வழக்கப்படி இன்று என்றும் வைத்துக் கொண்டால் நாளைய பொழுது பிரம்ம முகூர்த்தம் துவங்கி பிரம்ம முகூர்த்தம் பூர்த்தி வரை பொது வாக்கினை இறைவன் அருளால் இயம்ப இருக்கின்றோம். வாய்ப்பு உள்ள சேய்கள் (பிள்ளைகள்) இருக்கட்டும். பயணம் துவங்க உள்ள சேய்கள் மூத்தோனை (விநாயகரை) வணங்கி பயணம் துவங்கலாம். இதுபோல் நிலையிலே இறைவன் அருளாலே யாம் கால காலம் கூறி வருவது எம்முன்னே யார் அமர்ந்தாலும் இதுபோல பரிபூரண சரணாகதியான பக்தியும் இறை வழிபாடும் சத்தியமும் தர்மமும்தான். இதனையே விதவிதமான வார்த்தைகளில் யாங்கள் (சித்தர்கள்) எமை நோக்கி வருகின்ற மனிதர்களின் மனோ நிலைக்கு ஏற்ப இயம்பிக் கொண்டே இருக்கின்றோம். இதனை ஏற்கவும் ஏற்றுப் பின்பற்றுவும் கூட ஒருவரின் ஜாதகத்தில் விதிக்க இருக்க வேண்டும் என்று யாம் உணர்ந்தாலும் தொடர்ந்து நல்விஷயங்களைக் கூறிக்கொண்டே இருந்தால் இறைவன் கருணையினால் ஆத்மாவில் பதிந்து இப்பிறவி இல்லா விட்டாலும் அடுத்தடுத்த பிறவிகளில் நல்விஷயங்களை அந்த ஆத்மா புரிந்து பின்பற்றி மேலேறி வரட்டும் என்பதுதான் எம்போன்ற மகான்களின் நோக்கமாகும்.

ஆகுமே இதுபோல் ஜீவ அருள் ஓலையிலே கூறுகின்ற கருத்துக்களையெல்லாம் எல்லா மனிதர்களாலும் அப்படியே உள்வாங்கி ஜீரணித்துக் கொள்ள இயலாது என்று யாம் அறிந்தாலும் பொதுவில் யாங்கள் கூறிக்கொண்டே செல்வதால் இங்கு வந்து வாக்கு அறியாமலேயே பலரும் ஏற்று நடப்பவரும் உண்டு. நடவாமல் போகின்ற மாந்தர்களும் (மனிதர்களும்) உண்டு. அனைத்தும் விதிப்பயன் என்று நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் மௌனமாக பார்வையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறைவன் கருணையைக் கொண்டு சேய்களுக்கு நல்லாசிகளைக் கூறுகின்ற இத்தருணம் தொடர்ந்து எங்கள் வாழ்விலே பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாக்கினை தர வேண்டும் என்று பலரும் வினா எழுப்புகின்ற இத்தருணத்தில் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இயம்புகின்றோம். தொடர்ந்து இறை வழிபாடும் தர்மத்தையும் கடைபிடித்தால் எத்தனை கடுமையான கர்ம வினையென்றாலும் கட்டாயம் படிப்படியாக குறையத்தான் செய்யும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 302

கேள்வி: தென்மேற்கு பருவ மழை பரவலாக அதிகரிக்க வேண்டும். மேட்டூர் அணை விரைவில் நிரப்ப வேண்டும்:

பருவ நிலைகள் மாற்றங்கள் அடைந்து மனித சமுதாயத்திற்கு எதிராக இருக்கிறது என்றாலே அதாவது அதிக மழை அல்லது அறவே மழையற்றுப் போதல். அனல் அதிகமாக அடித்தல் அல்லது வெயிலோன் அடிக்காமல் போதல். காற்று இல்லாத நிலை அல்லது அதிக சூறை காற்று. இதனால் மனிதன் வாழ முடியாமல் போய் விடுகிறது. தர்மம் எங்கே குறைகிறதோ அங்கே இயற்கை தன் சீற்றத்தைக் காட்டும். எனவே மனிதர்கள் கூட்டாக சேர்ந்து நல்ல சத்சங்கமாக கூட்டுப் பிரார்த்தனை செய்வதும் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான செல்வத்தை தக்க மனிதர்களுக்கு தாராளமாக பகிர்ந்து கொடுக்கக்கூடிய நிலை வரும் வரை இது போன்ற இயற்கை சீற்றங்கள் தொடரத்தான் செய்யும்.

கேள்வி: இறைவனை மோகினி அவதாரத்தில் எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்? மோகினி அவதாரத்திற்குண்டான ஸ்லோகம் கூறியருள வேண்டும்:

மகாவிஷ்ணுவை எந்த ஆலயத்திலேயே வணங்கினாலும் மோகினி ரூபமாகவும் பார்த்து வணங்கலாம். அதுபோல் நிலையிலே மகாவிஷ்ணுவிற்குரிய அனைத்து வழிபாடுகளும் அனைத்து மந்திரங்களும் இதுபோல் அவதாரத்திற்கும் பொருந்துமப்பா.

சுலோகம் -169

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-7

பரதகுலத் தென்றலே எப்போதெல்லாம் தர்மத்திற்கு குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் தர்மம் எப்போது குறைந்து அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அப்போது தர்மத்தை காப்பதற்காக நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 301

கேள்வி: கோதண்ட ராமரின் கோதண்டத்திற்கு மாலை போடுவதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாக இறை அல்லது நிலையோடு இருக்கின்ற ஏனைய உப பொருள்களுக்கும் இறைத்தன்மை வந்துவிடுகிறது என்பது மெய்தான். அதனால்தான் இறைவனின் வாகனங்கள் கூட பக்திக்குரிய வழிபாட்டுக்குரிய விஷயமாகப் போற்றப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவிடம் இருக்கக்கூடிய சங்கும் சக்கரமும் கூட அஃறிணைப் பொருள்களாக இல்லாமல் அதுவும் உயர் தெய்வ கடாக்ஷம் பெற்ற தெய்வீகமாகவே போற்றப்படுகிறது. அதேப் போலதான் இந்த கோதண்டமும். அது இறைவனின் கையிலே ஸ்ரீராமபிரானின் கரத்திலே இருப்பதால் அதுவும் தெய்வாம்சம் பெற்றதாகவே போற்றப்படுகிறது. எப்படி பகை குறைவதற்கு பகை கடிதலும் சத்ரு சம்ஹார யாகமும் எம்மால் உபதேசம் செய்யப்படுகின்றதோ அதைப் போல இங்கு ராமரையும் அந்த ராமரின் கரத்தில் இருக்கக் கூடிய வில்லையும் வழிபாடு செய்வதால் பகையைக் குறைத்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

கேள்வி: சிராத்தத்தில் 96 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. மஹாவ்யதிபாதம் பற்றி சொல்லுங்கள்:

பின்னர் விளக்கமாகக் கூறுகிறோம். 96 அல்ல. 108 க்கும் மேலான வகைகள் உண்டப்பா. எல்லாவற்றையும் எல்லா மனிதர்களாலும் பின்பற்ற முடியாது. ஒரு எளிய பூஜை ஒரு எளிய தர்ப்பணத்தை செய்து ஒரு ஆவினத்திற்காவது (பசு) வயிறார உணவைத் தரலாம். ஏதும் இல்லாதவர்கள் சிறிய உயிரினங்களுக்கு உணவினைத் தரலாம்.

சுலோகம் -168

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-6

நான் பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும் இருந்தும் கூட எல்லா உயிரினங்களுக்கும் ஈஸ்வரனாக இருந்தும் கூட என்னுடைய பிரகிருதியை வசப்படுத்திக் கொண்டு என்னுடைய யோகமாயையினால் வெளிப்படுகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எனக்கு ஆசைகளோ கர்மங்களோ எதுவும் இல்லை. ஆகையால் எனக்கு பிறப்பு என்பதும் அழிவு என்பதும் எப்போதும் இல்லை. ஆனாலும் மனிதர்களுடைய கண்ணுக்கு பிறப்பது போலவும் இறப்பது போலவும் தோன்றுகிறேன். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருந்தும் கூட சாதாரண மனிதனைப் போலவே காட்சி அளிக்கிறேன். நான் இந்த உலகத்தில் பல வடிவங்களில் அவதாரம் செய்யும் போது மனிதர்கள் தான் பிறப்பதாகவும் அவதார நோக்கம் முடிவடைந்ததும் நான் இறப்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகின் அவதாரம் செய்து உலக நன்மைக்காக நான் செய்யும் லீலைகளை மனிதர்கள் பார்த்து அதிசயம் செய்கிறேன் என்று தான் எண்ணுகிறார்களே தவிர உலக நன்மைக்காக இதனை செய்கிறேன் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் நான் யோகமாயை என்னும் திரையில் ஒளிந்து கொண்டு வெளிப்படுகிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 300

கேள்வி: அற்புதம் நின்ற கற்பகக் களிறே என்ற பொருள்?

இதுபோல் நல்விதமாய் மூத்தோனின் லீலைகளும் மூத்தோனின் தோற்றமும் மூத்தோன் வழிபாட்டால் கிடைக்கக் கூடிய அனைத்து விளைவுகளும் அற்புதத்தில் அடங்கும் என்பதின் சுருக்கமே இதுபோல் வாக்கியமாகும்.

கேள்வி: கோட்சார பலன்களை அறிந்து கொள்ள லக்ன பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா? அல்லது சந்திர பாவத்திலிருந்து பார்க்க வேண்டுமா?

இரண்டிலிருந்தும் பார்க்க வேண்டுமப்பா. இருந்தாலும் கூட அடிப்படை ஜாதகம் வலுவானது. அதை பிரதிபலிக்கக் கூடியது திசா புத்தி அந்தர சூட்சுமம். அதன் பிறகுதான் கோட்சார பலன்கள்.

கேள்வி: கோச்சாரத்தில் சனியும் செவ்வாயும் துலாத்தில் சேர்ந்திருக்கிறார்கள். தீய விஷயங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

முருகப்பெருமான் வழிபாட்டில் கவனம் செலுத்துவதும் நவகிரக அபிஷேகம் செய்வதும் ஏற்புடையதாகும்.

சுலோகம் -167

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-5

கிருஷ்ணர் பதில் சொல்கிறார். எதிரிகளை வாட்டும் அர்ஜூனா எனக்கும் உனக்கும் பல பிறவிகள் கழிந்து விட்டது. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா நீயும் நானும் இப்போது தான் பிறந்திருக்கிறோம் என்று எண்ணாதே. இதற்கு முன்பு பல முறை பிறந்திருக்கிறோம். அவை அனைத்தையும் நீ அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் அறிந்து வைத்திருக்கிறேன். நீ அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் உனது அறிந்து கொள்ளும் தன்மையானது இந்த உலகத்தில் உள்ள பந்தங்களுடனும் பற்றுக்களுடனும் தர்மம் மற்றும் அதர்மங்களால் சூழப்பட்டு மாயையில் நீ சிக்கி இருப்பதினால் அறிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நான் எப்படி அறிந்து வைத்திருக்கிறேன் என்றால் எந்த விதமான பந்தங்கள் பற்றுக்கள் இல்லாமல் இந்த உலகத்தில் ஒட்டாமலும் மாயையில் சிக்காமலும் எனது ஞானம் தடைபடாமல் இருப்பதால் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 299

கேள்வி: ஸ்ரீரங்கத்திலே சுக்ரவார கிருஷ்ணன் சன்னிதி இருக்கிறது. அதன் தாத்பர்யம் என்ன?

பொதுவாகவே அரங்க ஸ்தலம் (பெருமாள் ஆலயம்) என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்தில் சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் முழுவதுமே சுக்கிரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதுபோல் நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்கிர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.

கேள்வி: சக்கரத்தாழ்வாரின் பின் பக்கம் நரசிம்மரை பிரதிஷ்டை செய்வதன் தாத்பரியம் என்ன?

மகாவிஷ்ணுவும் மகாவிஷ்ணுவுடன் இருக்கக்கூடிய சங்கும் சக்ரமும் இணை பிரியாதவை என்பதை ஒரு குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான். இதுபோல் முற்காலத்திலே எங்கு சுதர்சனத்தை பிரதிஷ்டை செய்தாலும் அதன் பின்னால் மகாவிஷ்ணுவின் வடிவத்தை பிரதிஷ்டை செய்வதாக ஒரு ஐதீகம் இருந்தது. அது சுதர்சனம் என்பது தீமையை அழிக்கக் கூடிய பகையை வெல்லக் கூடிய ஒரு அம்சமாக இருப்பதால் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரை பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் இருந்தது. எப்படியும் உப தெய்வங்களை வணங்குவதோடு பிரதான தெய்வத்தையும் வணங்குவதே சிறப்பு என்ற அடிப்படையிலேயே இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சுதர்சன பகவானை வணங்கினாலும் மகாவிஷ்ணுவை வணங்கினாலும் பலன் ஒன்றுதான்.

சுலோகம் -166

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-4

அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். உங்களுடைய பிறப்பு அண்மையில் நிகழ்ந்தது. சூரியனுடைய படைப்பு வெகுகாலத்திற்கு முன்பு கல்பத்தின் ஆதியிலேயே நிகழ்ந்தது. நீங்கள் கல்பத்தின் ஆதியில் சூரியனுக்கு இந்த யோகத்தை கூறினீர்கள் என்ற இந்த விஷயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனனுக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த யோகத்தை கிருஷ்ணர் சுலோகம் 163 இல் சூரியனுக்கு சொன்னேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட அர்ஜூனன் நீங்கள் பிறந்து சில காலம் தான் ஆகிறது. ஆனால் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு உபதேசித்துள்ளதாக சொல்கிறீர்கள். இக்காலத்தில் பிறந்த தாங்கள் உலகம் படைக்கப்பட்ட போது தோன்றிய சூரியனுக்கு சொன்னீர்கள் என்பதை நான் எப்படி புரிந்து கொள்வது என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.