தொண்டு

ஒரு பெரிய அரசர் இருந்தார். அவருக்கு ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு ஆகையால் தினந்தோறும் கோவிலுக்கு செல்வார். வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். கோவிலுக்கு வெளியில் ஒரு சந்நியாசி தியானத்தில் அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட அரசர் அவரிடம் சென்று வணங்கி நின்றார். சந்நியாசியும் ஆசிர்வாதம் செய்தார். அரசர் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த சால்வை ஒன்றை சன்னியாசிக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் காலையில் அரசர் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்றிருந்தார். அப்போது தெருவில் ஒரு பிச்சைக்காரன் சென்று கொண்டிருந்தான். அவனை பார்த்த அரசர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சன்யாசியிடம் கொடுத்த அந்த விலை உயர்ந்த சால்வையை இப்போது அந்த பிச்சைகாரன் வைத்திருந்தான். அரசர் உடனே காவலர்களை அனுப்பி அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச் சொன்னார். அவனிடம் இந்த போர்வை எப்படி வந்தது என்று விசாரிச்சார். கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி கொடுத்தார் என்று சொன்னான். உடனே அந்த சன்யாசியை அழைத்து வர உத்தர விட்டார். சன்யாசியிடம் ஏன் பிச்சைக்காரனிடம் இந்த சால்வையை கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு சன்யாசி இவன் இரவில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது உடையும் கிழிந்திருந்தது. ஆகவே எனக்கு தேவைப்படுவதை விட இவனுக்குத்தான் தேவை என்று கொடுத்து விட்டேன் என்றார். இந்த பதிலைக் கேட்ட பிச்சைக்காரன் சன்யாசியின் அன்பில் பூரித்து மகிழ்ச்சியில் சிரித்தான். இதனைக் கண்ட அரசர் கோபமடைந்து இது மிகவும் விலை உயர்ந்த சால்வை அரசர்களுக்கு என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது. அதை உங்களுக்கு கொடுத்தேன். இந்த சால்வையை அவனிடம் கொடுத்தது என்னை அவமதிப்பு செய்வது போல் உள்ளது. ஆகவே உங்களையும் உங்களுடன் இந்த பிச்சைக்காரனையும் சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்று சொல்லி விட்டு அரண்மனைக்குள் சென்று விட்டார். காவலாளிகள் இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அன்றிரவு அரசர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் மன்னர் அந்த கோவிலுக்கு போகிறார். ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார். அங்கே கடவுள் குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார். அரசர் கடவுளே என்ன ஆச்சு உனக்கு என்றார்? அதற்கு கடவுள் குளிர் அதிகமாக இருக்கிறது என்றார். உடனே அரசர் தன்னிடமிருந்த விலை உயர்ந்த சால்வையை எடுத்துக் கொண்டு கடவுளை நெருங்கினார். கடவுள் பயத்தில் கத்தினார் என்ன அது? உன்னுடைய சால்வையா? வேண்டாம் வேண்டாம் என்றார். அரசர் கடவுளே இதை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? நான் என்ன பாவம் செய்தேன்? என்று பயத்துடன் நின்றார். அதற்கு கடவுள் நேற்று ஒரு சால்வையை எனக்கு கொடுத்தனுப்பினாய். அதை கொண்டு வந்தவனையும் பெற்றுக் கொண்டவனையும் சிறையில் அடைத்து விட்டாய். இப்போது எனக்கும் சால்வை கொடுக்கிறாய். நாளை என்னையும் சிறையில் அடைத்து விடுவாய் ஆகவே வேண்டாம் என்றார். அரசர் அதிர்ச்சியில் விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓடிப்போய் அவரே சிறையின் கதவுகளை திறந்து விட்டார். சன்யாசியின் கால்களில் விழுந்தார். சுவாமி நான் அறியாமல் செய்து விட்டேன் தாங்கள் ஒரு மகான் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அரசரே துன்பப் படுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு அதை புரிந்து கொள் என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் சன்யாசி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 309

கேள்வி: காஞ்சிபுரம் அத்திவரதர் பற்றி

நீர் தொடர்பான கண்டங்கள் விலகி விடும். சந்திர தோஷங்கள் இருந்தால் விலகிவிடும். மேலும் சந்திரனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

கேள்வி: கோடி ஹத்தி பெருமாள் பற்றி (அருள்மிகு மகாலட்சுமி சமேத வான்முட்டி பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறை.)

ஹத்தி தோஷம் நீக்கக்கூடிய ஸ்தலம். முற்பிறவியில் கொலை அல்லது கொலைக்கு சமமான பாவங்கள் செய்த மனிதர்கள் எல்லாம் இங்கு உழவார பணியும் மற்ற தொண்டுகளும் செய்தால் அந்த பாவங்கள் எல்லாம் விலகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 308

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒருவனை பார்த்து எதிர் காலத்தில் உனக்கு இருதயத்தில் குறைபாடு வருமப்பா. எனவே இன்றில் இருந்தே தக்க உடற்பயிற்சி செய்து அன்ன ஆகாரத்தில் கவனமாக இருந்து நிறைய தர்மங்களை செய்து நிறைய பூஜைகளை செய்து வா என்றால் நல்ல வேளை கூறினார்களே என்று எடுத்துக் கொள்ளாமல் எனக்கு இருதயத்தில் பாதிப்பா? எனக்கு இருதயத்தில் பாதிப்பு வந்துவிடுமா என்று அவன் அன்றில் இருந்தே அச்சப்பட துவங்கினால் இது போன்ற வாக்கை ஏன் கூறினோம் என்றுதான் மகான்களுக்கும் இருக்கும். எனவே எதிர் காலத்தை தெரிந்து கொண்டு எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று அறிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதன் ஜோதிடம் அருள் வாக்கு போன்றவற்றை பார்க்கிறான். ஆனால் அவன் எதிர்காலம் அவன் எண்ணுவது போல் ஆக்கப்பூர்வமாக இருந்து விட்டால் பாதகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மனிதர்களுக்கு அப்படி இல்லாத போது எதை குறை கூறுவது. அப்படி எதிர்காலத்தை பற்றி கூறி அச்சுறுத்துவதை விட எதிர் காலத்தில் வரக்கூடிய விதி வழியாக எதிர் காலத்தில் வரக்கூடிய ஆபத்துக்களை எல்லாம் மாற்றுவதற்கு அல்லது அந்த துன்பங்களை எல்லாம் தாங்குவதற்கு மன வலிமை அதிகரிக்கும் வண்ணம் பிரார்த்தனைகளையும் தர்மங்களையும் எம்மை (அகத்திய மாமுனிவர்) நாடும் மனிதர்களுக்கு கூறினால் அதை அவன் கவனமாக பின்பற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம் எதிர்காலம் என்பது சிறப்பாகவே இருக்கும். எனவே யாம்(அகத்திய மாமுனிவர்) கூறுவது என்னவென்றால் எம்மை நாடும் தருணம் எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால் இறுதியில் இறைவன் அருளால் பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சுலோகம் -173

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-11

அர்ஜூனா எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ நானும் அவர்களை அதற்கேற்பவே அணுகுகிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் ஏதெனும் ஒரு வகையில் என்னுடைய வழியை பின்பற்றுகிறார்கள். அப்படி பின்பற்றும் பக்தர்கள் இந்த உலகத்தில் உள்ள என்னுடைய பல ரூபங்களை தாயாக தந்தையாக குருவாக தெய்வமாக நண்பனாக காதலனாக குழந்தையாக என்று பல வகைகளிலும் பல்வேறு பாவனைகளிலும் என்னை வழிபடுகிறார்கள். அவர்களது சிரத்தைகளுக்கு ஏற்ப அவர்களது பாவனைகளுக்கு ஏற்ப அவர்களை அணுகி அவர்களுக்கு அருள்புரிகிறேன்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 307

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

எம்மை நாடுகின்ற ஒரு மனிதன் சரியான பணி இல்லை என்று வருவதாக கொள்வோம். அவனுக்கு நாங்கள் இன்னும் நூறு தினங்களில் அல்லது இந்த பௌர்ணமிக்கு பின் பணி அமைந்து விடும் என்று கூறுவதாகக் கொள்வோம். இங்கே சித்தர் கூறிய வாக்கு பொய்க்க கூடாது என்று தான் கேட்பவனும் சுற்றி உள்ளவர்களும் எண்ணுவார்கள். உண்மைதான் சித்தன் வாக்கு பொய்க்காது என்பது உண்மைதான். ஆனால் அங்கே நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மை கூறிய வாக்கின் பின்னர் உள்ள கர்ம வினைகளின் தன்மை கூறப்பட்ட மனிதனின் கர்ம வினைகளின் தன்மை நடப்புகால பிறவியில் அவன் நடந்து கொள்கின்ற விதம் இவற்றையெல்லாம் அனுசரித்து பார்க்கும் போது விதி என்பது எந்த அளவிற்கு நெகிழ்ந்து தரும் என்று கூறி விடலாம்.

ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெற்று ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவிலே சேர்ந்து பயில வேண்டும் என்று எண்ணுகிறான். அவனுக்கு அந்த தகுதி இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவனால் அதை கற்க முடியாமல் போகும் பொழுது இன்னொரு மனிதன் அவனுக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு நீ விரும்பும் கல்வி நிறுவனத்தில் நான் உன்னை சேர்த்து விடுகிறேன் என்று கூறும் பொழுது அந்த கல்வி நிறுவனம் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி அவனை சேர்த்துக் கொள்கிறது. காரணம் முற்றிலும் தகுதியான ஒருவனுக்கு தான் அந்த மனிதன் சிபாரிசு செய்திருக்கிறான் என்ற அளவிலே. ஆனால் தேர்விலே வெற்றி பெறாத ஒருவனோ அல்லது தேர்விலே குறைவான மதிப்பெண் பெற்ற ஒருவனோ இப்படி ஆசை பட்டால் என்ன செய்ய இயலும்? முயற்சி செய்கிறேன் சொல்லி இருக்கிறேன் முயற்சி செய்கிறேன் என்று அவனுக்கு ஆறுதல் கூறலாமே அல்லாமல் அவன் விரும்புகின்ற வழியிலே கல்வி கற்பது என்பது இயலாது. இங்கே அந்தப் பொறுப்பு எடுத்துக் கொண்ட மனிதன் ஆரம்பத்தில் பொறுமையாய் இரு சொல்லி இருக்கிறேன் பார்க்கலாம் என்று கூறி கூறி பின்னர் ஒரு தருணத்தில் இல்லையப்பா நீ விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காது வேறு ஒரு பிரிவு கிடைக்கும் அதிலே உன் கவனத்தை செலுத்து என்று கூறுவதை போலத்தான் நாங்களும் பல்வேறு தருணங்களில் உரைக்க வேண்டி இருக்கிறது. இந்த வித்தியாசத்தையும் நாங்கள் கூறுகின்ற வாக்கின் தன்மையையும் ஆய்ந்து பகுத்து புரிந்து ஏற்றுக் கொள்வது என்பதும் ஒரு மனிதனின் பக்குவம் மனோபலம் கர்ம வினைகள் தான் தீர்மானிக்கிறது. அது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது மனிதர்களுக்கு இல்லை என்பதால் தான் யாமும் பொட்டில் அடித்தாற்போல் கூறாமல் மேலெழுந்த வாரியாகவே கூறிக்கொண்டு செல்கிறோம்.

சுலோகம் -172

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-10

விருப்பத்தையும் அச்சத்தையும் கோபத்தையும் அறவே அற்றவர்களையும் வேறெதிலும் நாட்டமில்லாமல் என்னிடமே பிரேமையுடன் ஒன்றியவர்களும் என்னையே புகலாகக் கொண்டவர்களுமான பலரும் மேற்கூறிய ஞானம் என்னும் தவத்தினால் தூயவர்களாகி என் இயல்பை அடைத்திருக்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலக வாழ்க்கையில் விருப்பம் பயம் கோபம் ஆகிய குணங்களை விட்டொழித்து இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எதிலும் விருப்பமில்லாமல் அன்புடன் என்னிடம் சரணாகதி அடைந்த பலரும் சுலோகம் 171 ல் சொல்லப்பட்டபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்ளும் ஞானத்தை தவத்தினால் அடைந்து தூயவர்களாகி எனது இயல்பை பெற்று இருக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 306

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளால் உரைப்பது யாதென்றால் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்குமாம். இதை தான் நாங்கள் எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு பல காலம் வித வித விதமான வார்த்தைகளின் மூலம் இயம்பிக்கொண்டு இருக்கிறோம். பல்வேறு தருணங்களில் யாம் இந்த ஜீவ அருள் ஓலையிலே மௌனம் காக்கிறோம் என்றால் எத்தனையோ விதமான தெய்வீக சூட்சும காரணங்கள் உண்டப்பா. யாம் பல்வேறு விஷயங்களை நிழல் பட விளக்கம் தந்தாலும் அதனை புரிந்து கொள்ளும் தன்மை மாந்தர்களுக்கு இல்லை. ஆயினும் அறிந்தோ அறியாமலோ அதாவது நூற்றுக்கு நூறு விழுக்காடு நல்லவர்களோ அல்லது நூற்றுக்கு நூறு விழுக்காடு எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கை பின்பற்றுகிறார்களோ இல்லையோ இதனை நாடாத அல்லது நாடியும் நம்பாத மாந்தர்களை விட ஏதோ ஒன்று இருக்கிறது என்று நம்பி எம் பின்னே வருகின்ற மனிதர்களுக்கு யாம் இறைவன் அருளால் கூடுமானவரை கடுமையான விதியை மாற்றி அப்படி வருகின்ற மனிதர்களுக்கு நலம் செய்வது என்பது எமது தலையாய கடமையாக இருந்து வருகிறது. ஆயினும்கூட அப்படி நடப்பது என்பது ஏதோ விழி மூடி விழி திறப்பதற்குள் நடந்து விட வேண்டுமென்று மாந்தர்கள் எண்ணுகிறார்கள்.

குழந்தைகள் அல்லது குழந்தை போன்றவர்களின் எதிர்பார்ப்பு இயல்பு அப்படி தான் இருக்கும் என்பதால் அதை கூட நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. ஆனால் அப்படி எதையாவது நடத்தினால் அதன் விளைவு மிகவும் கடுமையாக இருக்கும் என்றால் நாங்களே அதனை நடத்தாமல் சற்றே மாற்றி மாற்றி நடத்திக்கொண்டு வருவோம். சுருக்கமாக கூறப் போனால் எம் வழியே வருகின்ற மனிதர்கள் திடம் கொண்டு வைராக்கியம் கொண்டு தர்ம வழியிலும் சத்திய வழியிலும் இறை பக்தி வழியிலும் மிக நன்றாக செல்ல செல்ல நாங்களே ஒன்றை கூறி அதனை தேவையான தருணத்தில் நடத்தாமல் மாற்றுவோம். யாம் ஒன்றை கூறாமல் அல்லது நடவாதப்பா என்று கூறி நடத்தியும் காட்டுவோம். இந்த இரண்டிற்கும் பல்வேறு விதமான கர்ம வினை சூட்சும நுணுக்கங்கள் உண்டு. அதை ஒருவிதமாக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் தான் புரியும்.

சுலோகம் -171

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-9

அர்ஜூனா என்னுடைய பிறப்பும் செயலும் தெய்வீகமானவை. அப்பழுக்கற்றவை. உலகியலுக்கு அப்பாற்பட்டவை. இவ்விதம் எவன் தத்துவரீதியாக அறிந்து கொள்கிறானோ அவன் உடலைத் துறந்து மறுபடியும் பிறவி எடுப்பதில்லை. என்னை அடைந்து விடுகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா பிறப்பு உள்ளது போன்று தோன்றும் எனது உருவத்திலும் நேர்மையாக இருப்பவர்களை காக்கும் எனது செயலிலும் இந்த உலகிற்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்து தனது பாவங்களை அதிகரித்து கொள்பவர்களை அழிக்கும் எனது செயலிலும் எவன் உள்ளது உள்ளபடி எனது தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்கிறானோ அவனுக்கு பிறப்பு என்பது இல்லை. அவன் என்னை வந்து அடைந்து விடுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 305

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

முக்தி குறித்தும் முக்தி போன்ற ஒரு உயர்நிலை குறித்தும் அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு யோக நிலை குறித்தெல்லாம் மனிதர்கள் எம்போன்ற ஞானிகளை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவது இயல்பு என்றாலும் கூட யாங்கள் (சித்தர்கள்) எதையெல்லாம் முதலில் கூறுகிறோமோ அதையெல்லாம் பூர்த்தி செய்யாத நிலையில் மனம் மேல் ஏறாத நிலையில் மனம் பக்குவம் பரிபக்குவம் பரிபரிபக்குவம் அடையாத நிலையில் எத்தனை யோக வித்தைகளை யாங்கள் எடுத்துக் கூறினாலும் அது வெறும் செவியாறலாக இருக்குமே தவிர அதை உள்வாங்கி ஒருவன் நடை முறைப்படுத்த இயலாது. எனவே சுருக்கமாக இங்குள்ள ஒவ்வொரு சேய்களுக்கும் (பிள்ளைகளுக்கும்) நாங்கள் கூறுவது என்னவென்றால் பிரச்சனை எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். கர்ம தாக்கம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். சினத்தை விட்டு தன்முனைப்பை விட்டு சாத்வீக எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தன்னை அமைதியாக்கி இயன்ற வழிபாடு இயன்ற தர்மம் இயன்ற தொண்டு என்று தொடர வாழ்க்கை நன்றாகவே ஒவ்வொரு சேய்களுக்கும் இருக்கும். இதுபோல இன்னும் எதிர்காலத்தில் விதி அமைப்பு உள்ள சேய்களுக்கு யாம் சோழ தேசத்திலே இறைவன் அருளால் வாக்கினை இயம்புவோம். அது காலம் இன்னும் பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து இதுபோல வாக்குகளை கேட்பது மட்டும் அல்லாது தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயல்வதே சிறப்பாகும். ஆகுமப்பா இதுபோல வாக்கினை கேட்டு நடப்பதெல்லாம் விதியென்றால் எதற்கு சித்தர்களை நாட வேண்டும்? நடப்பது விதியாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என்று எண்ணலாம்.

விதி கடுமையாக இருக்குங்கால் விதி வாயிலாக வருகின்ற துன்பம் தாங்க முடியாத நிலையில் இருக்கின்ற மனிதர்களுக்கு அதனை எவ்வாறு தாங்கிக் கொள்வது? அதனை எப்படி தகர்த்து எறிவது? என்றுதான் யாங்கள் (சித்தர்கள்) பொது வாக்கிலும் அல்லது தனிப்பட்ட வாக்கிலும் வழிகாட்டுகிறோம். சற்றே சிந்தித்தால் அந்த வழிமுறை ஒவ்வொரு சேயின் மனதிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புரியும். ஆனாலும் குழப்பமும் வேதனையும் சினமும் இவற்றோடு போராடும் மனிதனுக்கு யாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற நல் உபதேசம் சட்டென்று புரியாமல் போய் விடுகிறது. இதனை நன்றாக மனதிலே பதிய வைத்தால் வாழ்வு சுபமாக செல்லும். காலம் அரவு காலம் என்பதால் இதுபோல யாங்கள் இறைவனருளால் வாக்கினை பூர்த்தி செய்கிறோம். வாய்ப்பு உள்ள சேய்கள் தொடரட்டும் பிரம்ம நாழிகை வாக்கிற்கு. வாய்ப்பு இல்லாதவர்களுக்கு எமது வாக்கு வேறு வகையில் கருவி மூலம் வந்து சேரும் என்பதால் அனைவரும் மூத்தோனை (விநாகயரை) வணங்கி அவரவர் கடமையாற்றலாம் ஆசிகள் சுபம்.

சுலோகம் -170

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-8

சாதுக்களை கடைத் தெற்றுவதற்காகவும் பாவச் செயல்களை செய்கிறவர்களை அழிப்பதற்காகவும் தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும் யான் யுகம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை அனுபவித்துக் கொண்டு இறைவனை சென்று அடைய வேண்டும் என்று நேர்வழியில் செல்பவர்களுக்கு துன்பம் ஏதும் நேராதபடி சரியான வழியை காண்பித்து அவர்கள் இறைவனடி சேர்வதற்காகவும் பாவச் செயல்களை செய்கின்றவர்கள் மேலும் பாவம் சேர்த்துக் கொள்ளாதபடி அவர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அனைவரும் தர்மத்தை கடைபிடிக்க செய்வதற்காகவே யுகம் தோறும் நான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.