ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 168

கேள்வி: சோற்றுக் கற்றாழை பற்றி:

அதிக குளிர்ச்சியான பொருள் என்றால் அது சீதளம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. இதற்கு சரியான மருத்துவ ஆதாரம் இல்லையப்பா. இந்த சோற்றுக் கற்றாழை வயிற்றுப் புண் தொண்டைப் புண் ஆற்றும். இது ஒரு அற்புதமான மூலிகை. இதன் சாற்றை பருகுவதால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது. எல்லா வயதினரும் குறைந்த அளவு இதைப் பருகலாம்.

கேள்வி: ஐயனே உங்களை தரிசிக்கும் ஆவல் அதிகமாக உள்ளது. விரைவில் தரிசனம் தர வேண்டும்?

இறைவனை உள்ளத்தில் தரி. யாம் ஒரு வேளை உனக்கு சிக்கலாம்.

கேள்வி: நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை?

இறைவன் சிந்தனையை உள்ளத்தில் வைத்துக் கொள். தரி என்றால் என்ன? விபூதியை தரி என்றால் விபூதியை தரித்து கொள் என்று பொருள். ஆடையை தரி என்றால் ஆடையை அணிந்து கொள் என்று பொருள். இறையை தரி என்றால் இறை சிந்தனை மற்றும் இறைவனுக்கு பிடித்த செயல்களை செய் என்று பொருள். அதனால் இறைவனை உள்ளத்தில் தரி. அப்போது யாம் சிக்கலாம் தரி யாம் சிக்கலாம் தரிசிக்கலாம்.

கேள்வி: அருணகிரிநாதரின் அக்கா ஆதியை பற்றி:

உத்தமமான பெண்மணி. அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது. வெளியில் தெரிந்த புண்ணியவதிகளும் புண்ணியவான்களும் குறைவு. வெளியில் தெரியாத மகான்களும் ஞானிகளும் அதிகம்.

ஆப்பூர் மலை

ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் உயர்ந்த மலைப் பகுதியில் தான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறார். பெருமாள் சுமார் ஐந்தடி உயரத்தில் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். பெருமாளை பக்தர்கள் ஆப்பூரார் என்றும் அழைக்கின்றனர். இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று பெருமாளுக்கான திருமஞ்சனத்துக்கு தங்கு தடையின்றி மூலிகை கலந்த தனிச்சுவையுடன் சுரந்து கொண்டிருக்கிறது. ஒரு பிராகரம் மற்றும் முன் மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சந்நிதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பெரிய திருவடியான கருடாழ்வார் கருவறைக்கு முன்னால் பெருமாளை நோக்கி கும்பிட்டப்படி மேற்கு நோக்கி காணப்படுகிறார். மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள் மற்றும் அஷ்ட ல‌ட்சுமிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம் காணப்படுகின்றன. இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நிதி கிடையாது. இங்கு பெருமாளும் லட்சுமியும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதாலும் பெருமாள் லட்சுமியின் சொருபமாகவே இருந்து மகா லட்சுமியை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெருமாளுக்கு புடவையை தவிர வேறு எந்த வஸ்திரங்களும் சாற்றப்படுவதில்லை. அதனால் தான் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற பெயர் வந்தது. அகத்திய முனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வலப்புறம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆப்பூர் கிராமம். இங்குதான் மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி அமைந்திருக்கிறது இந்தப் பெருமாள் கோயில். பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை ஔஷதகிரி எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பியுள்ளன. சுமார் எண்ணூறு வருடத்தில் இருந்து ஆயிரம் வரை பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒளஷதகிரி அதாவது மூலிகை மலை இதன் அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவனுக்கு ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற பெயரும் உண்டு. இந்த இருமலைகளும் ஒன்றோடொன்று வரலாற்று தொடர்புடையதாக விளங்குகிறது.

ராமாயணத்தில் இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன் கண் கலங்கினார். ராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால் குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஔஷதகிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால் இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணம்.

மலைப் பாதை துவங்கும் இடத்தில் இருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல் விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 508 படிகள் இம்மலையில் உள்ளது. ஔஷதகிரியின் உச்சியில் ஸ்ரீநித்ய கல்யாண பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் மூலிகைக் காற்றின் வாசம் பரவசமூட்டும். பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெருமாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட மகரிஷிகளும் இந்த மலையில் தங்கி இருந்து தவம் செய்து பேறு பெற்றுள்ளார்கள். பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம் ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 169

கேள்வி: அஷ்டமா சித்து விளையாட்டுகள் பற்றி:

மெய்ஞானத்தை நோக்கி செல்கின்ற மனிதனுக்கு நீ கூறுகின்ற அஷ்டமா சித்துக்கள் சர்வ சாதாரணமாக கிட்டும். ஆனால் சித்துக்கள் கிட்டிய பிறகு அதிலே லயித்து மனிதன் ஞானத்தை விட்டு விடுகிறான். எனவே நீ ஞானத்தை நோக்கி செல். வேறு எண்ணங்கள் தேவையில்லை.

கானகம் (காடு) செல். நீரில் இரு. நெருப்பில் இரு. ஒற்றை பாதத்தில் நில். ஆகாயத்தில் தவம் செய் என்றா நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்? மனம் தளராத பிரார்த்தனையைத் தான் செய்யச் சொல்கிறோம். என்றாலும் இவை எல்லாவற்றையும் விட மிகக்கடினம் ஒன்று இருக்கிறது. மிகப்பெரிய நீரோட்டத்தின் உள்ளே சென்று மூச்சை விடாமல் தவம் செய்யும் முறையும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்தால்தான் முக்தி என்றால் யாராவது செய்வார்களா? இந்த கஷ்டங்கள் எல்லாம் லோகாய வாழ்க்கையிலேயே மனிதனுக்கு கழிந்து விடுகிறது என்பதை புரிந்து கொள்.

கேள்வி: காரைக்கால் அம்மையார் பற்றி:

எல்லா உயிரினங்களுக்கும் தாய் தந்தை என்றால் முக்கண்ணனை (சிவபெருமான்) காட்டுவார்கள். ஆனால் பாதத்தை வைக்க அஞ்சி சிரத்தை (தலையை) வைத்து நடந்து வந்த அவளைப் பார்த்து என் அம்மையே என்று பகர்ந்தார் இறைவன் என்றால் அவரின் பெருமையை யாம் என்னடா பகர்வது?

கேள்வி: திருநாவுக்கரசரின் அக்கா திலகவதியைப் பற்றி:

முன்னர் உரைத்த பெண்மணியையும் (அருணகிரிநாதரின் அக்கா ஆதியை உத்தமமான பெண்மணி என்றும் அவளுக்கு மோட்சம் அப்பொழுதே தரப்பட்டது என்றும் குருநாதர் கூறியிருந்தார்). இவளையும் நிலுவையில் (தராசில்) நிறுத்தினால் எடை ஒன்றாகவே இருக்கும்.

சுலோகம் -96

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-49

சம நிலையில் உள்ள மனதுடன் கூடிய யோகம் என்பதை விடப் பயன் கருதிச் செய்யப்படும் கர்மம் மிகவும் தாழ்ந்தது. ஆகவே அர்ஜூனா சமமான புத்தியில் தஞ்சம் அடைவாய். பலன் மூலம் உந்தப்பட்டு கர்மம் செய்பவர்கள் பரிதாபப்பட வேண்டியவர்களே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

வெற்றி தோல்வி மற்றும் மகிழ்ச்சி துயரம் என்று எதுவும் இல்லாமல் சமமான மனநிலையில் செய்யப்படும் செயலானது மிகவும் உயர்ந்தது. பலனை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்கள் மிகவும் தாழ்வானது. ஆகவே அர்ஜூனா சமமான மனநிலையில் எப்போதும் இருந்து செயல்களைச் செய். பலனை எதிர்பார்த்து செயல்களை செய்பவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பலனை அனுபவிக்க வேண்டி பிறப்பெடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் அவர்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டியவர்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 268 ஸ்ரீசைலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 268 வது தேவாரத்தலம் ஸ்ரீசைலம். புராணபெயர் திருப்பருப்பதம். மூலவர் மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் ஸ்ரீ ப்ரம்மராம்பிகை தேவி, ப்ரமராம்பாள், பருப்பநாயகி. தீர்த்தம் பாலாநதி. தலமரம் மருத மரம், திரிபலா மரம். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். நந்திதேவர் அவதரித்த தலம். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம். மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும் அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜுனர் எனப்படுகிறார். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால் மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் ஆந்திரா கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் இக்கோயில் மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன. நான்கு பக்கமும் கோபுர வாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் என அழைக்கப்படுகிறது. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677 ல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரம் கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. கருவறை மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் உள்ளார். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் உள்ளது. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. ஸ்ரீசைலம் மலையிலிருந்து 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹாவிஷ்ணு விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் யார் இல்லாதவர்கள் என ஸ்ரீ சைலத்தில் உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவருக்கு சாட்சி கணபதி என பெயர்.

சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த இந்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும் கங்கையில் 2000 முறை குளிப்பதாலும் நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும் காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறது தலபுராணம். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என தலவரலாறு உள்ளது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

வேதாந்திகள், பரமயோகிகள், சித்தர்கள், மகாதவசிகள் இருக்கும் இக்கோவிலுக்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்றவகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது. மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். ஸ்ரீமல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் அளித்து கடமை உணர்வை போதித்து பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும் தியான மண்டபத்தையும் உருவாக்கினார். இந்த கோபுரம் சிவாஜி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். சிவாஜியால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தந்தையே கலங்காதீர்கள் நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன் நந்தியை தன் வாகனமாக்கியதுடன் அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்று பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இம்மலை தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். பர்வதமலை ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று.

சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி கௌசிக அரசனை வீரசைவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு அவனை சந்திக்கச் சென்றாள். அரசனின் தவறான செய்கையால் மனம் நொந்து தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள் அக்கமஹா தேவி. ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்கமஹா தேவியின் திருவுருவச் சிலை உள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குல குருவான ரேவணசித்தர் ஒரு நாரத்தம் பழத்தைக் கொடுத்து சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா எனப் பெயரிட்டனர். அச்சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித் தன் பெயர் மல்லையா என்றும் தான் மிகவும் பசியோடு இருப்பதாக கூறவே ஸித்தப்பா ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி இவரே மல்லையா என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்த போது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது. பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம் அளித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விட்டார்கள். சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி அஞ்சாதே உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக என்று அருளினார். வீட்டிற்குள் சென்ற கேசப்பா பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு திருவருளை வியந்தவனாக அடியார்களுக்கு அன்னம் அளித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம் அடிகேச்வரம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன் ஒரு கயிற்றைக் கொடுத்து அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் அருகில் கயிற்றைக் கண்ட சிற்பி அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது ஒரு நந்தி பாறைகளிடையே சிக்கவே திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம் அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம் துரியோதனனின் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும் அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை கூறினார். கிருஷ்ணர் ஆலோசனைப்படி அர்ஜூனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ஜூனன் தபம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ஜூனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ஜூனன் கண்விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது யார் என்பது பற்றி சண்டை வந்துவிட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். சிவபெருமானை வில்லால் அடிக்க அர்ஜூனன் வில் ஒடிந்தது. பின்பு சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார். அர்ஜூனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டு தமக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டார். அர்ஜூனனின் தம்முடன் போர் செய்து வில்லாற்றல் அபிவிருத்தி அடைவதற்காகவும் தனுர் வேதத்தை அர்ச்சுனனுக்கு போதிப்பதற்காகவும் வேடனாக வந்ததாக சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸதிரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அர்ஜூனன் தவம் செய்த இடம் இங்கே உள்ளது.

படிக்கட்டுப்பக்கம் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ச்சுனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர். கிருதாயுகத்தில் இரணியனும் திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும் ஆதிசங்கரரும் பூஜைகள் செய்துள்ளனர். ஆதிசங்கரர் இங்கு தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதினார்.

ஸ்ரீசைலத்தைப் பல நூல்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம் இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி ஆகியவை இத்தலத்தின் மகிமையைக் கூறும் நூல்களாகும். ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான சிகரத்தைத் தரிசித்தபடியே மல்லிகார்ஜுனரைத் தியானிப்பார்கள். இங்கிருந்தபடியே ராமபிரான் மல்லிகார்ஜுனரைத் தரிசித்துள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருப்பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும் சுந்தரர் திருப்பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகிறது. தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

108 திவ்யதேசத்தில் 76 வது திருவட்டாறு

ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவானது. பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கடல்வாய்த் தீர்த்தம் வாட்டாறு ராமதீர்த்தம் விமானங்கள் அஷ்டாங்க விமானம் அஷ்டாஷர விமானம். பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.

கோவிலின் 5 கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு அதன் மேல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் 6 நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்ப்பக்கிரகத்தின் உள்ளே மூலவரின் மீது படும். கோவிலில் ஊர்த்துவ தாண்டவம் வேணுகோபாலர் மன்மதர் மற்றும் ரதி தம்பதியர் லட்சுமணன் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் உள்ளது. இந்தக் கோவிலின் அமைப்பு மற்றும் கட்டிடக்கலையை ஒரு மாதிரியாகக் கொண்டே திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு நேர் எதிரிலேயே ஆற்றின் அருகாமையில் இன்னும் ஒரு சிறிய இறைவன் லக்ஷ்மி நரசிம்ஹனை வழிபடும் கோவிலும் நிலைகொண்டுள்ளது.

கோவிலின் பிரதான வாயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருளுகிறார். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனி உள்ளது. பெருமாளின் நாபியில் தாமரையோ பிரம்மனோ கிடையாது. இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது. கருவறையில் கருடன் சூரியன் பஞ்சாயுத புருஷர்கள் மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும் புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம். இத்தலம் சேரநாட்டு முறையில் மரத்தால் ஆன தூண்கள் கதவுகள் மற்றும் கூரைகளுடன் கட்டப்பட்டு உள்ளது. கருவறைக்கு முன் உள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் 3 அடி உயரத்துடன் ஒற்றைக் கல்லினால் எழுப்பப்பட்டது ஆகும். அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமன் கொண்ட பாறையாகும். கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டுவதற்கு வீரரவி ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தை யாரும் தொடக் கூடாது என்பது தொன்மரபு. கோவிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கேந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலை இருபுறமும் உள்ளது. பலிபீட மண்டபத்தின் இருபுறமும் ஒற்றைக் கல்லிலான பல கலைவடிவங்கள் உள்ளன. இவற்றுள் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் இசையில் மயங்கி தாய்மாறிப் பால் குடிக்கும் விலங்கினக் குட்டிகளின் சிலையும் ஒன்று.

பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும் தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் வட்டாறு என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பரசுராமனுக்கும் சந்திரனுக்கும் பகவான் தரிசனம் கொடுத்த கோயில். நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இக்கோவிலில் உள்ள கொடிக்கம்பத்தில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் அரசர்களைப் பற்றிய குறிப்பும் அவர்களின் ஆட்சிக்காலமும் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி செய்தவர்கள்

குலசேகரப்பெருமாள் – கி.பி. 644-659
வீரமார்த்தாண்டவர்மா – கி.பி. 510-519
வீரகேரளவர்மா – கி.பி. 519-550
செம்பலாதித்த வர்மா – கி.பி. 612-645
உன்னி கேரள வர்மா – கி.பி. 734-753

108 திவ்யதேசத்தில் 64 வது சோளிங்கர்

திருமாலுக்கு ஆழ்வார்கள் மங்களாசனம் பாடிய திவ்ய தேசம் கோவில்களில் 64 வது இக்கோவிலாகும். சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம். புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழ சிம்மபுரம் என அழைக்கப்பட்டது.

சோளிங்கர் மலையில் 750 அடி உயரத்தில் 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலை குன்றின் மீது 200 அடி நீளம் 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர் கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 406 ஏறிக் கடக்க வேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார். ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவார். எனவே இங்கு தாயார் பெருமாள் பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோவிலில் வைகாசை ஆகமம் முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. யோகநரசிம்மருக்கும் தாயாருக்கும் வெள்ளிக் கிழமை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். யோக ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வார்கள். ஆனால் இங்கு கருவரையில் மூலவர் மட்டுமே அருள் பாலிக்கிறார். உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் மற்றும் சுதாவல்லி தாயார் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உற்சவர் பக்தவத்ஸல பெருமாள் பக்தர்களை அன்போடு அரவணைத்துச் செல்வதால் பக்தவத்ஸலன் எனப்படுகிறார். உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவர் ஆகையால் பக்தோசிதப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். நாயக்கர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.

ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து ராமரை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். இதனை கண்ட ராமர் அனுமனிடம் நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக என அருளினார். அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

வட மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்த இந்திரத்துய்மன் என்ற அரசர் கடுமையான கோபம் கொண்டவர். எதற்கு எடுத்தாலும் இவருடைய வாய் பேசாது. அவர் கையில் இருக்கும் போர்வாள் தான் பேசும். இப்படி சினம் கொண்ட அரசர் ஸ்ரீ நரசிம்மரின் தீவிர பக்தர். அரசர் இந்திரத்துய்மன் நரசிம்மரை வணங்குவதால் நரசிம்மரை போல் கோபம் அதிகம் ஏற்படுகிறது. அதனால் அரசரை ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க சொல்லலாம் என்று அமைச்சர்களுக்குள் பேசி அதை பக்குவமாக அரசருக்கு எடுத்து சொல்ல ஒரு அமைச்சர் மன்னரிடம் சென்றார். அரசரிடம் சென்ற அமைச்சர் நரசிம்மரை வணங்கினால் வீரம் கிடைக்கும். அது போலவே ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கினால் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையானது முக்கியமானது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை தரக் கூடியவர் ஸ்ரீயோக நரசிம்மர் என்ற அமைச்சரின் பேச்சு அரசருக்கு ஸ்ரீயோக நரசிம்மரை வணங்க வேண்டும் என்ற மன மாற்றத்தை தந்தது. ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்க தொடங்கினார் இந்திரத்துய்மன். ஒரு நாள் அரசர் காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றார். மான் ஒன்று பொன்னை போன்று ஜொலித்தது. அதை கண்ட அரசர் அந்த மானை தன் அரண்மனைக்கு அழைத்து செல்ல விரும்பி மானை பிடிக்க நினைத்தார். ஆனால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. பொன் மான் மன்னருக்கு விளையாட்டு காட்டியது. இதனால் சோர்வடைந்த மன்னர் ஒர் இடத்தில் களைப்பாக அமர்ந்தார். அப்போது அந்த பொன் மான் மன்னர் கண் முன்னே ஒரு ஜோதியாக மாறி ஆஞ்சநேயனாக காட்சி கொடுத்து நான் என்றும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கூறி மறைந்தார். யோக நரசிம்மரின் அருளால்தான் தமக்கு அஞ்சனேயர் ஆசி கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொண்ட அரசர் மகிழ்ந்து அனுமனுக்கு அதே இடத்தில் கோயில் கட்டினார். பிற்காலத்தில் வந்த சோழர்கள் அங்கு கற்கோவிலாகக் கட்டனார்கள்.

இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக வரலாறு சொல்லப் படுகிறது.

நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும். பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். விஸ்வாமித்திரர் இம்மலையில் ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரம் நரசிம்மரை துதித்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். இந்த ஆலயத்தில் ஒரு நாழிகை நேரம் இருந்தாலே அனைத்து துன்பமும் விலகும். இங்கு ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கியிருந்து நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என புராண நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப் பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார். இங்கு தானம் தர்மம் செய்வது கயிலையில் தானம் தர்மம் செய்வதற்கு சமமானது. இந்தக்குளத்தில் நீராடினால் பிரம்மதோஷம் கூட நீங்கும் என்று புராண நூல்கள் குறிப்பிடுகிறது. பராங்குச சோழனால் இக்கோவில் கட்டப்பட்டது. வடமொழியில் பிரம்மகைவர்த்த புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய வரலாறுகள் உள்ளது. நம்மாழ்வார் பேயாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந்நாத முனிகளும் மணவாள மாமுணியும் ராமானுஜரும் திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சீரணி நாகபூசணி அம்மன்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள சீரணியில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகம் ஒன்றைத் தன்னுடைய திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள்.

சீரணி நாகபூசணி கோவில் உள்ள இந்த இடத்தில் அக்காலத்தில் சாத்திரம் தெரிந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் நாகபூஷணியம்மை இயந்திரம் வைத்துப் பூசை செய்து சாத்திரம் சொல்லி வந்தார். அவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம் இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை இராமுத்தர்க்கு பிடிக்காத காரணத்தினாலும் இயந்திரம் இரவில் கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார் இராமுத்தர். ஒருநாள் இராமுத்தர் நன்றாய் மதுபானம் அருந்தி விட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் போட்டுச் சென்று விட்டார். நாகபூஷணி அம்மன் இங்குள்ள அன்பர்கள் பலரின் கனவிற் தோன்றி நான் நயினை நாகபூஷணி எனக்கு கோவில் கட்டுங்கள் என்று காட்சியளித்தாள். பலர் நாங்கள் வறியவர்கள் தாயே எங்களால் எவ்வாறு இயலும் என அன்பர்கள் கூறி வருந்தினார்கள்.

சீரணி நாகபூசணி அம்மன் பக்தனாகிய முருகேசபிள்ளை என்பவரின் கனவிலே பல முறை வெளிப்பட்டு தன் திருவருள் தன்மைகளைக் காட்டியருளினாள். ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு இவ்விடத்திலே எம்மை வைத்து வழிபட்டு வருவாயாக என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி தன் கனவில் வருவதை பிறருக்குச் சொல்லாமல் தம்முள்ளே வழிபட்டு வந்தார். 1896 ம் ஆண்டு விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்று இரவு தேவி கனவிலே வெளிப்பட்டு உனக்குச் சொன்னவைகளை நீ உண்மை என்று நம்பினாய். அதன் உண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா என்று கூறியருளினாள். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த வறண்ட பட்டு போன மரமாகத் தோன்றியது. அதையுணர்ந்த அவர் அதில் இளநீர் குரும்பைகள் இல்லையே தாயே. இல்லாத இளநீரை நான் எப்படி தருவது என்றார். அதற்கு அன்னை நீ மரத்தின் அருகிலே சென்று பார். தேவையானது தோன்றும் என அருளினாள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார். தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில இளநீரைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மனும் அதிக தாகமுடையார் போலப் பருகினாள். பின்னர் அவரை நோக்கி அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார் இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்திற்கு பிறகு பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு விரும்பிய சித்திகளை எல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களை எல்லாம் காணிக்கையாக கொடுத்து வழிபடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கு. கோவில் பூர்த்தியாகுவதற்கு யாம் அருள் செய்வோம் வேலையை தொடங்கு தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும் நாடு நலம்பெறும் வாழ்வு வளம் பெறும் என்றாள். மேலும் உனது மனம் புனிதமாகும் வகையில் ஒரு மந்திரமும் உபதேசம் செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தாள்.

சீரணி நாகபூசணி அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்தை மறுநாள் காலையில் தொண்டிப் பார்த்தார். அங்கு ஒரு சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். 1896ம் ஆண்டு ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே பூஜையை தொடங்கி காலம் தவறாமல் பூஜித்து செய்து வந்தார். நான்கு திசைகளிள் இருந்தும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து நாகபூஷணியம்மையை வழிபட்டார்கள். இவ்வரலாறு குறித்தும் குட்டம் காசம் ஈளை முதலான கன்ம நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டு தங்களது நோய்கள் தீர்த்துக் கொண்டார்கள். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் செய்து பிள்ளைச் செல்வம் பெற்றார்கள். மேலும் அம்பாளின் அருட்செயல்கள் பற்றிப் பல கர்ண பரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன. சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962 அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.

சீரணி நாகபூசணி அம்மன் கோவில் கோபுரம் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. 1951 1965 1983 ஆம் ஆண்டுகளில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவது நயினை நாகபூஷணியம்மை மற்றும் சீரணி நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 267 திருக்கோகர்ணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 267 வது தேவாரத்தலம் திருக்கோகர்ணம். மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர். இங்கு இறைவன் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கமாக சுயம்பு லிங்கமாக கொட்டை பாக்கு அளவு பாணமாக அருளுகிறார். இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இவருக்கு பூஜை செய்துள்ளார். அம்பாள் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். தீர்த்தம் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. இந்த மூன்று தீர்த்தம் போக 30 தீர்த்தங்கள் உள்ளது. தலமரம் சரக்கொன்றை. இங்கு உள்ள ஆத்ம லிங்கத்திற்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடையார் மீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள். இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.

தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் உள்ளார். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம்ம காபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதற்கு சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என பெயர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் சிவலிங்கபாணம் உள்ளது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் துவிபுஜ விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பது போல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்று புராண வரலாறு கூறுகிறது. கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும் அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும் அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்பாளே இங்கு நதியாக இருக்கின்றார்.

இக்கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில் கிரிவலம் செல்வார்கள் ஆனால் இங்கே நதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியாது. இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும் என்கிறது தலபுராணம். முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால் அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி இறைவா தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள் என கூறினாள்.

பூமாதேவியின் வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து பூமாதேவியே நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் ருத்ரயோனி என்றும் அதற்கு காரணமான நீ கோ (பசு) என்றும் உனது காது கர்ணம் என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் கோகர்ணம் ஆனது. எனவே இத்தலத்தை காது துவார தலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதாள உலகில் இருந்து வெளியில் வந்த ருத்ரன் பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்து பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ருத்ரனே பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும் என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் ருத்ரபூமி ஆனது.

ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அந்த இடம் வைவாஷிக பர்வதம் (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை தாமிர கவுரி ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக கயிலை மலை வந்து சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம் ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால் தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன் ராவணா நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது என கூறி அனுப்பியிருந்தார்.

இரவணனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு ராவணன் சந்தியா வந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து கணபதியை அழைத்து நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம் லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல் என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் சூழ்ந்தது ராவணன் சந்தியா வந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர்.

சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன் லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு மகாபலம் உடையவர் இந்த இறைவர் எனக் கூறி அந்த சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டி பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனினர். பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் தலையில் இப்போதும் இரவணன் குட்டிய பள்ளம் அடையாளமாக உள்ளது. பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

கச்சாலீஸ்வரர் கோயில்

மூலவர் கச்சாலீஸ்வரர் கச்சபேஸ்வரர். அம்பாள் அழகம்மை சௌந்தராம்பிகை. தலவிருட்சம் கல்யாண முருங்கை. தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம். இடம் சென்னை பாரிமுனை. அம்பாள் அழகம்பிகையின் சன்னதிக்கு இருபுறமும் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கச்சபேஸ்வரருக்கு முன்புறம் சிங்க வாகனத்தின் மீது ஐந்து முக ஹேரம்ப விநாயகர் காட்சி தருகிறார். இவருக்கு அருகில் சித்தியும் புத்தியும் நின்ற கோலத்தில் உள்ளனர். இங்கு 63 நாயன்மார்களுக்கும் தனி மண்டபம் உள்ளது. தத்தாத்ரேயர் துர்க்கை ஆதிசங்கரர் மூலகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளனர். கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன் தனது மனைவியர்களான உஷா பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள் 28 நட்சத்திரங்கள் 60 வருடங்கள் நான்கு யுகங்கள் அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். பாற்கடலை கடைந்த போது மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால் கச்சபேஸ்வரர் என்றும் கச்சாலீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கச்சபம் என்றால் ஆமை என பொருள். மூலவர் கச்சாலீஸ்வரர் 1. கூர்மாசனம் 2. அஷ்ட நாகாசனம் 3. சிம்மாசனம் 4. யுகாசனம் 5. கமலவிமல ஆசனம் என்ற ஐந்து ஆசனங்களின் மீது அமர்ந்துள்ளார். இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் ஐந்து முகங்களுடன் சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாக மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும் அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். கோவிந்தராஜ பெருமாள் தனி சன்னதியில் இருக்கிறார்.

ஆங்கிலேயர்களிடம் மொழி பெயர்ப்பாளராக இருந்த துபாஷி தலவாய் செட்டியார் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. என்ன செய்வேன் இறைவா என தவித்து நின்றார். ஆனால் மழையோ ஒரு வாரம் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய மேலும் ஒரு வாரம் பிடித்தது. துபாஷி தலவாய் செட்டியார் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். அதிசயமாக அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப் பட்டிருந்தன தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். இதனை அறிந்த துபாஷி தலவாய் செட்டியார் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பித்தார். பின் தன் துணைவியார் உதவியுடன் இங்கு 1725 இல் கோவில் கட்ட ஆரம்பித்து 3 ஆண்டுகளில் கட்டி முடித்தார் துபாஷி தலவாய் செட்டியார்.

சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயில் 1950ம் வருடம் தீக்கிரையான போது புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்ட போது இப்போது சபரிமலையில் உள்ள ஐயப்பனின் சிலை பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னைக்கு இக்கோவிலுக்குள் இந்தச் சிலையை இந்தக் கோயிலுக்கு பூஜைக்காக எடுத்து வந்தனர். பூஜை முடிந்ததும் சிலையை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பல காரணங்களால் தடங்கல் ஏற்பட்டு மூன்று நாட்கள் இங்கேயே சிலை இருந்தது. மூன்று நாட்களும் ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் நினைவாக இங்கு ஐயப்பனுக்கு தனிச்சன்னதி கட்டப்பட்டுள்ளது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் புதிய ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சென்னை நகரில் அமைந்த முதல் ஐயப்பன் சன்னதி இதுவே. சபரி மலையில் ஜோதி தரிசனத்தின் போது இங்கும் ஜோதி தரிசன விழா நடக்கிறது.